!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Sunday, September 30, 2012

அமெரிக்கா -இந்தியா-ஜப்பான். இது அரசியல் கூட்டணி அல்ல

அமெரிக்கா

சமீபத்தில் வாஷிங்டன் போஸ்டில் ஒரு கட்டுரை படித்தேன். இந்தியா மீது நம்பிக்கை இழக்காதீர்கள் என்று தலைப்பு. கட்டுரையாளர் இந்தியா மீது அபார நம்பிக்கை வைத்திருக்கிறார்.

சமீபகாலமாக இந்தியா பொருளாதாரரீதியாக தடுமாறுகிறது. தினம் ஒரு ஊழல் என வெளிப்படுகிறது. அரசு முடிவெடுக்க முடியாமல் திணறுகிறது. இதையெல்லாம் தாண்டி 2030 ல் இந்தியாவும் பேசப்படும் என்று எழுதி இருக்கிறார். தற்போது சீனா எப்படி பேசப்படுகிறதோ அதேபோல் இந்தியாவும் பேசப்படுமாம்.

பேப்பரை பிரித்தாலே இந்தியா உருப்படுமா என்ற சந்தேகம் நமக்கு வருகிறது. ஆனால் வேறு ஒரு நாட்டை சேர்ந்தவர் இந்தியா மீது நம்பிக்கை வைத்திருக்கிறார். ஆச்சர்யம் + சந்தோசம்.

பிரச்சினை பின்னூட்டத்தில். இந்த கட்டுரைக்கு பதிலளித்த ஒருவர், வறுமை, ஜாதி உணர்வு, ஊழல் எதுவுமே இந்தியாவில் குறைந்தபாடில்லை. இதையெல்லாம் மறந்துவிட்டு இந்தியர்கள் இன்னும் தற்பெருமையில் சிக்கி இருக்கிறார்கள் என்று கிண்டலாக பதில் அளித்தார்.

இதற்கு என்ன பதிலளிப்பது?

இந்தியாவுடைய பிரச்சினைகள் வித்தியாசமானவை. எந்த ஒரு நாட்டோடும் ஒப்பிடமுடியாது. 4 பேரை அழைத்துகொண்டு காரில் போவதற்கும் 50 பேரோடு பஸ்ஸில் போவதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா? அதுபோலத்தான் இதுவும்.

அங்கே அந்த நாலுபேர் ஒரே சிந்தனையில் இருக்கலாம். காரை ஸ்டார்ட் செய்தவர்கள் வழியில் எங்கும் நிறுத்தாமல் போகலாம். ஆனால் பஸ்ஸில் அப்படி முடியுமா?

நாமோ 50 பேர் போகும் பஸ்ஸில் 120 பேரை அடைத்துக்கொண்டு போகிறோம். இதுவே மிகப்பெரிய வேகத்தடை.

இதில் வேகமாக போனால் ஒருவருக்கு பிடிக்காது. `ஏம்பா, வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா` என்று கத்துவார். நிதானமாக போனால், `இதுக்கு நாம்ப நடந்தே போயிருக்கலாம்` என்று ஒருவர் கிண்டல் பண்ணுவார். 

சிலருக்கு பஸ்ஸை நிறுத்தினால் பிடிக்காது. சிலருக்கோ 3 மணி நேரத்துக்கு ஒரு முறை ஏதாவது ஒரு இடத்தில் நிறுத்த வேண்டும். வயிற்றை நிரப்ப அல்லது காலி பண்ண.

இன்னும் எவ்வளவோ தலைவலிகள் இருக்கிறது. இப்படி எல்லோரையும் திருப்திபடுத்திகொண்டு, ஒரு காம்ப்ரமைஸ் பார்முலாவில் நாடு போனால் அங்கே வேகம் இருக்காதுதான். இது இயற்கையான குறை. 

இந்த அமெரிக்கருக்கு பதில் எழுதுவோமா என யோசித்தேன். யதார்த்தம் தடுத்தது. இந்தியா ஒரு வெளிப்படையான நாடு. இணையம் மற்றும் ஆங்கிலம் தெரிந்தால் போதும், இந்தியாவை புரிந்து கொள்ளலாம். ஆனால் அதை பார்க்க மறுப்பவர்களிடம் என்ன விவாதிப்பது?

இந்த கட்டுரையை படித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் இங்கேயும் ஒரு சிக்கல். ரொம்ப யோசித்து கடைசியில் இதற்கும் பதில் சொல்லவில்லை.

இந்தியா 

வெளிஊரில் ஒரு நண்பரின் வீட்டில் சாப்பிட நேர்ந்தது. கடலூருக்கு வந்தால் அவசியம் வரணும் என்று கண்டிஷன் போட்டேன். அவரும் வந்தார். ஓட்டலுக்கு அழைத்துப் போனேன். அவருக்கு புரியவில்லை. `வீட்டுக்கு கூட்டிகிட்டு போவீங்கன்னு...` என்று இழுத்தார். எனக்கு தர்மசங்கடமாகிவிட்டது.

என்னுடைய விருந்தாளி வாழ்கை என்னை அங்கே இங்கே என அலைகழித்து கடைசியில் அப்பா வீட்டில் போய் முடிந்தது. இங்கே யாராவது சாப்பிட கூப்பிட்டால்தான் நான் சாப்பிட போவேன். அந்த அளவுக்கு பட்டும்படாமல் இருந்தேன். தாய்வழி உறவினர்கள்  என்னை பார்க்க வந்தால் கடையோடு சரி. 

`நான் வீட்டுக்கு யாரையும் அழைத்துக்கொண்டு போவதில்லை` என்று சொல்லி, என் கதையை கொஞ்சம் சொன்னேன். நிச்சயம் அரை மணி நேரத்தில் ஒரு வாழ்கை முறையை மற்றவர்களுக்கு புரியவைக்க முடியாது.

அவருக்கு புரிந்ததோ இல்லையோ எனக்கு புரிந்துவிட்டது. இது தலைவலிதான். இப்படி ஓட்டலில் சாப்பாடு வாங்கி கொடுத்து எல்லோருக்கும் விளக்கம் சொல்ல முடியாது. எனவே பெரும்பாலான இடங்களில் சாப்பிடுவதை தவிர்த்தேன்.

இதில் டீ, காபி பிரச்சினை இல்லை. நான் அவர்கள் வீட்டில் சாப்பிட, அவர்கள் கடைக்கு வந்தால் நான் வாங்கி கொடுக்க, இங்கே கடன் சரியாகிவிடுகிறது. கடன்பட்டார் நெஞ்சம் போல் நான் கலங்க வேண்டியதில்லை.

அடுத்து நான் ஜெயிலுக்கு போய்விட, கடையை கடை ஊழியர்களிடமே ஒப்படைத்துவிட்டேன். அவர்கள் நீண்ட காலமாக வேலை பார்க்கிறார்கள். நான் ரிஸ்க் எடுக்க அவர்களுக்கு ஏன் பாதிப்பு. எனவே ஒப்படைத்துவிட்டேன். அது ஒரு பெரிய சொத்தும் கிடையாது. வியாபார மதிப்பு உண்டு.

என்னுடைய திட்டம் தோல்வி அடைந்து நான்   விடுதலை ஆன பிறகும், `நான் வரமாட்டேன், கடை உங்களுக்குதான்` என்று உறுதியாக சொல்லி விலகிவிட்டேன்.

எனவே தற்போது கடையும் இல்லாத நிலையில் மற்றவர்கள் வீட்டில் காபி சாப்பிடுவதையும் குறைத்துக் கொண்டேன்.

தற்போது நான் சித்தி வீட்டில். இங்கே ஒருவர் வந்தார். தூரத்து சொந்தம். எனக்கு சுத்தமாக பழக்கம் இல்லை. இருந்தாலும் வந்தவர் சம்பிரதாயத்துக்கு வீட்டுக்கு வாங்க என்று அழைத்தார். நான் போகவில்லை. மறுபடியும் ஒரு தடவை உரிமையோடு அழைத்தார். நான் `கடன் வேண்டாம்` என்று போகவில்லை.

அடுத்த முறை பார்க்க நேர்ந்தபோது, `நீங்களெல்லாம் பெரிய மனுஷங்க, எங்க வீட்டுகெல்லாம் வரமாட்டீங்க` என்றார். அவர் கூப்பிட்டு நான் அதை மதிக்கவில்லை என்ற கோவம் அதில் தெரிந்தது.

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவர்கள் வீட்டுக்கு போய் ஒரு கப் காப்பி குடிப்பதில் எனகொன்றும் பிரச்சினை இல்லை. மற்றவர்களை வீட்டுக்கு அழைக்கும் நிலையில் நான் இல்லாததால் இதை தவிர்க்கிறேன் என்பது அவருக்கு தெரியவில்லை. சொன்னால் புரிந்து கொள்வார். ஆனால் எத்தனை பேருக்கு விளக்கம் சொல்வது? எனவே பதில் சொல்லாமல் ஒதுங்கினேன். 

ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லி இருந்தேன். சில சமயம் நாம் எடுக்கும் முடிவுகள் நமக்கு சரி என பட்டாலும், மற்றவர்கள் பார்வையில் நாம் வில்லனாக தெரிவோம் என்று. இது அந்த வகை

ஜப்பான்

ஜப்பானும் இப்போது சிக்கலில். 2030குள் அணுஉலைகளை மூடப்போவதாக அரசு மேடைகளில் முழங்குகிறது. 

லோக்பாலை போல் இதுவும் தலைவலியில் முடியும் என்பதால், அந்த கொள்கையை சட்டமாக்காமல் வெறும் வார்த்தை ஜாலங்களோடு முடித்துக் கொண்டார்கள்.

மூடிய அணு உலைகளை திறக்க வேண்டும். இதுதான் ஜப்பானின் உடனடி கவலை. மக்கள் எதிர்க்கிறார்கள். அவர்களை உடன்பட வைக்க வேண்டுமென்றால், `நாளை (2030) முதல் குடிக்க மாட்டேன்` என்று சொல்லவேண்டும்.

வாய் வார்த்தையாக இதை சொல்வதில் ஜப்பானுக்கு பிரச்சினை இல்லை. சில ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் மறந்துவிடுவார்கள். அப்போது சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் முடிவெடுக்கலாம். சட்டமாக்கிவிட்டால் அது தலைவலி.

கிரீன் அவுஸ் எமிஷன் (தமிழ்?) அளவை குறைக்க வேண்டும். இந்த விஷயத்தில் க்யோடோ ப்ரொடோகால் என்ற சொற்பதமே உருவாகிவிட்டது. இப்படி இந்த விஷயத்தில் தலைகளாக இருந்தவர்கள் அதிலிருந்து பின் வாங்கினால், எல்லாம் குட்டிச் சுவராகிவிடும். உள்நாட்டு தலைவலிகளை உலகம் ஏற்காது. ஏற்கனவே சில நாடுகள் முனறிக் கொண்டிருகின்றன.  

இப்படி ஏதாவது நடக்கும் என்றுதான் கார்பன் ட்ரேடிங் முறையை கொண்டு வந்துவிட்டார்கள் (நல்ல ஐடியா இது). இதில் ஜப்பான் தனது கோட்டாவை எப்போதோ காலி பண்ணிவிட்டதால், பல நாடுகளிலிருந்து இந்த உபரி கோட்டாவை வாங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கே பணம் போகிறதே என்று  புலம்புகிறார்கள். அணு உலைகள் மூடப்பட்டால் இன்னும் அதிகமாக வாங்க வேண்டும். 

அடுத்த தலைவலி மின் கட்டணங்கள். இதில் மக்களை சமாளிக்கலாம். எல்லாம் உங்களாலத்தான் என்று பழியை அவர்கள் மீது போடலாம். ஆனால் தொழில்துறை? அது படுத்துவிடும். தொழிற்சாலைகள் மற்ற நாடுகளுக்கு இடம் மாறும். வேலைவாய்ப்பு பாதிக்க, மக்கள் பொங்கி எழுவார்கள்.

இன்னொரு தலைவலியும் இருக்கிறது. அணுமின்சாரத்தை பொறுத்தவரையில் ஜப்பானும், ஜெர்மனியும் முகத்தை திருப்பிக் கொண்டாலும், உலகம் இன்னும் அந்த பாதையில் போவதால், அந்த வியாபாரமும் போகும்.

உள் நாட்டில் வேண்டாம், வெளிநாட்டில் மட்டும் வியாபாரியாக இருப்போம் என்றால் அதற்கு அணு கொள்கையில் பட்டும் படாமல் இருக்கவேண்டும். 

அணுஉலைகளை மூடுவோம் என்று சட்டமியற்றிவிட்டால் அந்த வியாபார வாய்ப்பு கேள்விகுறி ஆகிவிடும். ஜப்பான் முதிர்ச்சி பெற்ற ஜனநாயக நாடு என்பதால், தனக்கு ஒரு கொள்கை மற்ற நாடுகளுக்கு ஒரு கொள்கை என செயல்பட முடியாது.

உலகம் முழுக்க அரசுகள் குழப்பத்தில். தீர்வுகள்தான் தெரியவில்லை. 

1 comments:

Anonymous said...

Yes. The last line is 100%. Every conuntry is now struggling to take stong decision.

Post a Comment