!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Saturday, April 25, 2026

ரிவால்வர் (விஜய்) ரீட்டா

வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. இனி கணக்குப் போட வேண்டியதுதான் மீதி. நாம் அந்த வேலையைப் பார்ப்போம்.

'ரிவால்வர் ரீட்டா' என்று ஒரு படம், கீர்த்தி சுரேஷ் நடித்த படம். அதில் ஒரு வில்லன் குடிபோதையில் தவறுதலாக கீர்த்தி வீட்டுக்கு வந்து இறந்து போவான். இறந்தவனுடைய தலைக்கு அவனுடைய எதிரி நல்ல விலை வைத்திருப்பான். அந்தத் தலைக்காக ஒரு கூலிப்படை, அவர்களுக்கு மேல் ஒரு ஒப்பந்ததாரர், அதற்கும் மேல் ஒரு விநியோகிஸ்தர் என அனைவரும் தேடுவார்கள்.

இறுதியில் கூலிப்படையைச் சேர்ந்த ஒருவனை மற்றொருவன் போட்டுத்தள்ள, அவனை வேறொருவன் போட்டுத்தள்ள, இன்னொரு ரவுடி இவன் கதையை முடிக்க, இடையில் காவல்துறை வர... அங்கே இன்ஸ்பெக்டரை வேறு ஒருவன் போட்டுத்தள்ள... யார் யாரை போட்டார்கள் என்பதே பெரிய குழப்பமாக இருக்கும். கடைசியில் கீர்த்தி சுரேஷ் வெற்றி பெற்றுவிடுவார்.

கிட்டத்தட்ட தமிழக அரசியல் களமும் அப்படித்தான் இருக்கிறது. இங்கே யாரோ ஒருவரின் காலை யாரோ வாரப்போகிறார்கள். காங்கிரஸ் திமுகவின் காலை வாரலாம் அல்லது அது தலைகீழாக நடக்கலாம். தேமுதிக கேட்டது கிடைத்துவிட்டதால் அவர்கள் விசுவாசமாக இருப்பார்கள். ஆனால் விசிக மற்றும் வேறு சிலர் தேமுதிகவின் காலை வார வாய்ப்புள்ளது.

இந்தப்பக்கம் பாஜக தொண்டர்கள் அதிமுக மீது கோபத்தில் இருக்கிறார்கள்; ஆனால் அதைவிட திமுக மீது கடுமையான வெறுப்பில் இருக்கிறார்கள். எனவே இங்கே பிஜேபி மற்றும் அதன் உள் கோஷ்டியான அண்ணாமலை ஆதரவாளர்களில் எவ்வளவு பேர் வாக்களிக்காமல் ஒதுங்கினார்கள் என்பதும் ஒரு கேள்விக்குறிதான். இப்படி ஆளாளுக்கு ஒருவர் காலை ஒருவர் வார, இறுதியில் அது விஜய்க்குச் சாதகமாகவும் அமையலாம்.

இன்னொரு கணக்கு; அது சற்று வித்தியாசமானது. இது காக்கா ஜோசியம்.

டிரம்பின் பழைய பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றைக் கவனித்தேன். ஒரு பெண் பத்திரிகையாளரிடம் "இப்போது நீங்கள் கேள்வி கேட்கலாம்" என்றார். அந்தப் பெண் ஒன்றரை வினாடிகள் யோசித்தார். அவ்வளவுதான், டிரம்பிற்கு கோபம் வந்துவிட்டது. "உங்கள் நேரம் முடிந்துவிட்டது" எனக் கூறிவிட்டுக் கிளம்பிவிட்டார். அந்தப் பெண் திகைத்து நின்றார்.

அதுதான் டிரம்ப். பத்திரிகையாளர்களைத் துச்சமாக மதிக்கிறார், ஆனாலும் அரசியலில் ஜெயிக்கிறார். இங்கே மோடியும் பத்திரிகையாளர்களை மதிப்பதே இல்லை; அவரும் ஜெயிக்கிறார். ஸ்டாலினும் அப்படித்தான்; அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுவதில்லை. ஆனாலும் முதல்வராகிவிட்டார். இதிலிருந்து என்ன தெரிகிறது? பத்திரிகையாளர்களை மதிக்காதவர்களே அரசியலில் ஜெயிக்கிறார்கள். அப்படியென்றால் விஜய்யும்....?

இதை அப்படியே தலைகீழாக பார்த்தாலும் அதே பதில்தான். யாரெல்லாம் பத்திரிகையாளர்களிடம் நெருக்கமாகப் பழகுகிறார்களோ, அவர்கள் அரசியலில் ஜெயிப்பதில்லை. வைகோ, திருமாவளவன், சீமான் எனப் பெரிய பட்டியலையே இதற்கு உதாரணமாக சொல்லலாம். அதாவது பத்திரிகையாளர்களுக்கு வாயை வளர்த்தவர்களை பிடிக்கிறது; அவர்களுக்கு முட்டுக்கொடுக்கிறார்கள். இருந்தாலும், அவர்கள் ஜெயிப்பதில்லை. இது ஒரு முரண்பாடு என்றாலும், இதுவே இன்றைய கள யதார்த்தம்.

இன்னொரு குருவி ஜோசியமும் இருக்கிறது. தமிழகத்தின் பெரும் தலைவர்கள் பலர் குடும்பம் அல்லது வாரிசுகள் இல்லாதவர்கள். பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா என அந்தப் பட்டியல் நீள்கிறது. ஜெயலலிதாவுக்கு பெண் வாரிசுகள் இருந்தும், அவர்களுக்குத் தேவையானதை மட்டுமே செய்தார்; பிரம்மாண்டமாகச் சொத்து சேர்க்கவில்லை.

இதையும் தலைகீழாக பார்த்தாலும் அதே கதைதான். குடும்பத்திற்காகவும், துணைவிக்காகவும் சொத்து சேர்த்தவர் கலைஞர். ஸ்டாலினும் அந்த வகையே. இவர்கள் 'விபத்து முதல்வர்கள்'.

ஒருமுறை ஆட்சியில் அமர்ந்து, அதன் பிறகு இரண்டாவது முறையும் தொடர்ந்து வெற்றி பெறுவதுதான் உண்மையான சாதனை. அந்தச் சாதனையை திமுக இதுவரை (தொடர்ச்சியாக) செய்யவில்லை. இந்த முறை அவர்களுக்கு அது கிடைக்குமா என்று தெரியவில்லை. இங்கேயும் குடும்பத்தை கவனிப்பவர்கள் அரசியலில், குறிப்பாக தமிழக அரசியலில், பிரகாசிக்க முடியவில்லை. இதுவும் முரண்பாடுதான், ஆனாலும் நிஜம்தான்.

இப்போது விஜய்யும் இந்தப் பட்டியலில் வருகிறார். அவரும் குடும்பத்தை கவனிக்காமல் இருப்பதால், அந்த அதிர்ஷ்டம் இவருக்கும் கிடைக்குமா?

இது வித்தியாசமான கணிப்பு என்றாலும், கவனிக்க வேண்டிய ஒன்று.

எனவே, விஜய் மேலே சொன்ன இந்த அதிர்ஷ்டங்களினால் ஜெயிப்பாரா, அல்லது மற்ற கட்சிகளின் உள்ளடி வேலை இவருக்கு சாதகமாக அமையுமா, அல்லது கணிசமான வாக்கு வங்கியோடு மட்டும் தன் அரசியல் பயணத்தைத் தொடர்வாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

எதுக்கும் விஜய்க்கு இப்பவே குட்மார்னிங் சொல்லி வைப்போம்.

0 comments:

Post a Comment