!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Friday, June 26, 2026

மோடியின் `நீண்ட நாள் பிரதமர்` சாதனை?

இந்த அலப்பறை கொஞ்ச நாளாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. மோடிக்கு ஒரு தலைவராக, சில குறைகளைத் தவிர்த்து, நான் நல்ல மதிப்பெண் கொடுப்பேன். ஆனால், அந்த மதிப்பெண் எவ்வளவு என்பதில் ஒரு கணக்கு வேண்டாமா? 35 வாங்கினாலும் தேர்ச்சிதான், 90 வாங்கினாலும் தேர்ச்சிதான். எனவே, இங்கே மதிப்பெண் வழங்குவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன.

கிரிக்கெட் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், ஆஸ்திரேலியாவை எதிர்த்து ஜெயிப்பது சாதனை; ஆனால், போட்டியாளர் ஜிம்பாப்வேயாக இருந்தால்?

அந்தக் குழப்பம்தான் இங்கேயும் இருக்கிறது. தமிழ்நாட்டில் விஜய் ஜெயித்தது எப்படிச் சாதனை இல்லையோ, அதேபோல் மோடி ஆட்சியில் இருப்பதும் சாதனை இல்லை. இங்கே திறமையை விட அதிர்ஷ்டமே இவர்களுக்குக் கை கொடுத்திருக்கிறது என்பதுதான் நிஜம்.

ஆளும்கட்சியின் மீது மக்களுக்குக் கடும் அதிருப்தி இருக்கிறது. ஆண்ட கட்சியின் மீதான கோபத்தில் பல கட்சிகள் தேசிய அளவிலும் இருக்கின்றன. ஆனால், அவர்களால் மட்டும் அந்த ஆளும்கட்சியை வீழ்த்த முடியாது. அத்தகைய சூழ்நிலையில் ஒரு 'முகம்' அவர்களுக்குக் கிடைக்கும்போது, மக்கள் அந்த முகத்தின் பின்னால் அணிதிரள்கிறார்கள். இதுதான் டெல்லியில் நடந்தது; தமிழகத்திலும் அதுதான் நடந்து, மோடி மற்றும் விஜய் போன்ற நபர்களின் வெற்றியாக மாறுகிறது.

"முதல் வெற்றி வேண்டுமானால் அதிர்ஷ்டமாக இருக்கலாம், ஆனால் தொடர்ந்து மோடி ஜெயிப்பது சாதனை அல்லவா?" என்று கேட்டால், நிச்சயம் சாதனைதான். ஆனால், அங்கேயும் மோடிக்கு அதிர்ஷ்டம் இருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக அவருக்கு எதிரியாக டெல்லியில் ஒரு உதயநிதி இருக்கிறார்; அங்கே அவருக்கு ராகுல் காந்தி என்று பெயர். அவர் எல்லாவற்றையும் கற்றிருக்கிறார், அரசியலைத் தவிர! இப்படி ஒரு அதிர்ஷ்டம் மோடிக்கு இருக்கும்போது, அவர் இவ்வளவு காலம் பிரதமராக நீடிப்பதில் ஆச்சரியமில்லை.

இதில் ஒரு முரண்பாடு என்னவென்றால், ராகுல் காந்திக்கு அரசியல் தெரியவில்லை அல்லது புரியவில்லை என்பதுதான் குறை. ஆனால், அவர் பதவி ஆசை பிடித்தவராகவோ அல்லது ஊழல்வாதியாகவோ இருப்பார் என்று நான் நினைக்கவில்லை. இங்கே கலைஞர், ஸ்டாலின், உதயநிதி போன்றவர்கள் எல்லாம் ஓரளவுக்கு ஊழல் பின்னணி கொண்டவர்கள்.

எப்படி ராகுல் காந்தி போன்ற நபர்கள் எதிரியாக இருப்பதால் மோடி எளிதாக ஜெயிக்கிறாரோ, அதேபோல் உதயநிதி போன்றவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால், விஜயும் இன்னும் 15 ஆண்டுகள் முதலமைச்சராக ஆண்டு சாதனை படைப்பார்.

எனவே, சாதனை என்பது கடுமையான எதிரியோடு மோதி ஜெயிப்பது அல்லது ஒவ்வொரு தேர்தலிலும் புதிய எதிரியோடு மோதி ஜெயிப்பது ஆகும். மோடிக்குக் கடந்த 15 ஆண்டுகளாக ஒரே எதிரிதான். எனவே, நான் மோடியின் இந்த நீண்ட நாள் பிரதமர் பதவியைச் சாதனை வரிசையில் சேர்க்க மாட்டேன்.

இங்கே கூடுதல் செய்தி என்னவென்றால், இப்போதைக்கு ராகுல் காந்தியும் சரி, உதயநிதியும் சரி, தங்களின் திறமையின்மையை உணர்ந்து பிற தலைவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கப் போவதில்லை. இது மோடிக்கும் விஜய்க்கும் நல்ல செய்தி; ஆனால், நாட்டுக்கு இது கெட்ட செய்தி.

0 comments:

Post a Comment