அதே கதைதான் இங்கேயும். கணவனும் மனைவியும் எப்படி வேறு வேறு இல்லையோ அதேபோல் பாஜகவும் அண்ணாமலையும் வேறு வேறு அல்ல. பாஜகவும் தமிழ்நாடு அரசியல் புரியாமல் அதே டீயை வேறு கிளாசில் கொடுக்கிறார்கள். இது பலிக்குமா என தெரியவில்லை.
டெல்லியில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜகவை இவர் திட்டமாட்டார். தமிழ்நாட்டில் பிராமண எதிர்ப்பு இன்னும் கடுமையாக இருக்கிறது. அதிலும் இவருடைய ஆதரவாளர்களில் கணிசமானவர்கள் பிராமணர்கள்; எனவே அவர்களையும் பகைத்துக்கொள்ள மாட்டார். ஏற்கனவே திராவிட கட்சிகள் ஆட்சியின் மீது மக்கள் வெறுப்பில் இருந்தனர். அந்த வெறுப்பை விஜய் அறுவடை செய்துவிட்டார். இனி அதிகாரத்தில் இல்லாத திராவிட கட்சிகளை திட்டி அரசியல் செய்யவும் முடியாது. இவருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு `விஜய் எதிர்ப்பு`தான். இதை மட்டும் வைத்தா வண்டி ஓட்டமுடியும்?
விஜய் அரசியலுக்கு புது வரவு. மக்களுக்கு அவர் மீது ஒரு சாப்ட் கார்னர் நிச்சயம் இருக்கும். இது ஐந்து ஆண்டுகாலம் தொடரும். அப்படியும் அவர் ஏதாவது சொதப்பினாலும் அவர் மீது கோவம்தான் வரும், வெறுப்பு வராது. வெறுப்பு என்பது இரண்டு, மூன்று முறை தொடர்ந்த மோசமான, வளர்ச்சியற்ற ஆட்சிகளை பார்த்து வருவது. கேரளா, மேற்கு வங்க மாநிலங்கள், திராவிட கட்சிகள் இதனால்தான் வீழ்ந்தன.
விஜய்க்கு அப்படி ஒரு ஆபத்து உடனே வராது. ஒருவேளை அடுத்த தேர்தலில் விஜய்க்கு ஒரு மாற்று கிடைக்காத பட்சத்தில், "இதுதான் லாஸ்ட் வார்னிங்" என எச்சரித்து மக்கள் மறுபடியும் அவருக்கே அதிகாரத்தை கொடுப்பார்கள். அவருக்கு இருக்கும் கூட்டணி பலமும் அதை உறுதிப்படுத்தும். மொத்தத்தில் அடுத்த பத்து ஆண்டுகாலம் விஜய் காட்டில் மழைதான். இது ஒரு தோராய கணக்கு.
அதேசமயம் தமிழ்நாட்டில் ஒரு நல்ல எதிர்க்கட்சி இல்லை என்ற சூழ்நிலை இருக்கிறது. அதை அறுவடை செய்ய அண்ணாமலை இறங்கியிருப்பதும் நல்ல விஷயம்தான். ஆனாலும் அது ஒரு பலமான அரசியல் கூட்டணியாகவும் இருக்க வேண்டும். அதற்கு அண்ணாமலை தலைமையில் ஒரு அணி உருவாக்க வேண்டும் அல்லது ஒரு பலமான கூட்டணியில் இவர் போய் சேரவேண்டும். ஆனால் அதற்கான வாய்ப்பு இருக்கிறதா?
வாய்ப்பு 1: இனி திமுக தலைமையில் பெரும்பாலான கட்சிகள் இணையாது. அது முடிந்துபோன கதை. ஒருவேளை பாஜக இணைந்தால் அப்போதும் பாஜகவின் 3-5 சதவீத வாக்கு கிடைக்கும் என்ற உத்தரவாதம் கிடையாது. எப்படி பல நடுநிலையாளர்கள் மற்றும் பாஜகவினர் அதிமுக கூட்டணியை விரும்பாமல் விசிலுக்கு ஒட்டு போட்டதை போல், இப்படி ஒரு கூட்டணி உருவானால் அண்ணாமலைக்கு போட்டுவிடுவார்கள். எனவே பாஜக- திமுக கூட்டணி வருவதற்கான வாய்ப்பு 90 சதவீதம் இல்லை. அப்படியே வந்தாலும் அதுவும் பலிக்காத கூட்டணியாக இருக்கும். ஆனால் சிறுபான்மையினரின் வாக்கை திமுக நிச்சயம் இழக்கும். எனவே திமுகவை பொறுத்தவரை மறுபடியும் சொல்கிறேன் - அவர்கள் கதை முடிந்துபோன கதை.
ஒருவேளை திமுக வேறு வழியில்லாமல் அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம். ஆனால் இரண்டு கட்சிகளிலும் பல பெருந்தலைகள் இருக்கிறார்கள். அங்கே எல்லோருக்கும் சீட் கொடுப்பது சிரமம். தொகுதி பங்கீடு, யாருக்கு சீட்டு என்பதில் சண்டை தொடங்கி, இரண்டாம் நிலை தலைவர்கள் எல்லாம் "இனி இங்கே இருந்தால் அதோகதிதான்" என ரூட் மாறிவிடுவார்கள். எனவே அப்படி ஒரு கூட்டணி வந்தாலும் அதுவும் பலமாக இருக்கப்போவதில்லை.
வாய்ப்பு 2; அதிமுக தலைமையில்? அதிமுக என்ற கட்சி தமிழ்நாட்டில் இன்னும் இருக்கிறதா? அங்கே பாடி போஸ்ட்மார்ட்டத்துக்கு போய்விட்டது. எனவே நாமும் அதை மேலும் அறுக்கவேண்டாம். விட்டுவிடுவோம்.
வாய்ப்பு 3; நாம் தமிழர் சீமான்? அவர் ஒரு பெண் குழந்தையை பெற்று அதை வளர்க்க போய்விட்டார். அவருக்கு தெரிந்த ஒரு ஜோசியர் சொன்னாராம்: "உங்களால என்ன முடியுமோ அதை மட்டும் பாருங்க" என்று. அவரும் எதார்த்தத்தை புரிந்துகொண்டு இல்வாழ்க்கையை நோக்கி நகர்ந்துவிட்டார்.
அடுத்து பாஜக; அவர்கள் தமிழ்நாட்டை தலைமுழுகிவிட்டார்கள் அல்லது அந்த கான்ட்ராக்டை அண்ணாமலையிடம் அவுட் சோர்சிங் செய்துவிட்டார்கள். அண்ணாமலையோ கொண்டையை மறைக்காமலேயே நம்மிடம் பேசிக்கொண்டிருக்கிறார்.
விஜய் ஜெயித்து கூட பிரச்சினை இல்லை. தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளையும் இனி என்ன செய்வது என்ற குழப்பத்தில் தள்ளிவிட்டிருக்கிறார். அதுதான் இந்த தேர்தலின் ஹைலைட். அதிலிருந்து அவர்கள் மீள்வதற்கே பல ஆண்டுகள் ஆகும் போலிருக்கிறது.
உண்மையில் இது அண்ணாமலைக்கு மிகப்பெரிய சேலஞ். பாஜகவிலேயே இருந்தாலும் வளரமுடியாது, தனியே போனால் கொஞ்சம் வளரலாம்; ஆனால் பலனிருக்காது என்ற நிலை. நிஜமான அண்ணாமலையார்தான் ஏதாவது ஒரு அற்புதம் செய்து இந்த மானிட அண்ணாமலையை காப்பாற்றமுடியும்.
அரசியலில் பத்தாண்டுகாலம்தான் ஒரு நம்பிக்கை காலம். அந்த காலகட்டத்தில் நீங்கள் சாதித்துவிட வேண்டும் அல்லது பாதி கிணறாவது தாண்டிவிட வேண்டும். ஏற்கனவே அண்ணாமலை ஐந்து ஆண்டுகளை இழந்துவிட்டார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அவர் சில படிகள் ஏறாவிட்டால் அவரும் பத்தோடு பதினொண்ணாக காணாமல் போய்விடுவார்.
ஒருவேளை தனியாக தேர்தலில் நின்று பத்து சதவீத வாக்கை கைப்பற்றினாலும், மற்ற கட்சிகளும் தனியே நிற்கவேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதால், இந்த ஒட்டு சேதாரம் விஜய்க்கு பாதிப்பை ஏற்படுத்தாது.
அதன்பின் ஒரு கட்டத்தில் கூட்டணி என்ற நிர்ப்பத்தை நோக்கி அவர் நகர்ந்தே ஆகவேண்டும். அப்படி நிலை வந்தால், அதிமுகவை இவர் ஏற்கமாட்டார். திமுகவை கடுமையாக எதிர்க்கிறார். பாஜகவுடன் கூட்டணி என இணைந்தால், `அப்ப எதுக்கு வெளியே வந்த` என்ற கேள்வி எழும். எந்த முடிவை எடுத்தாலும் அது தற்கொலையில் போய் முடியும் என்ற இக்கட்டான நிலையில் இவரும் இருக்கிறார்.
மொத்தத்தில் இவர் நியுயார்க்குக்கு டிக்கட் போட்டுவிட்டு சிட்னி பிளைட்டில் ஏறி அமர்ந்திருக்கிறார். பயணங்கள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்!

0 comments:
Post a Comment