இங்கே நான் வெள்ளை அறிக்கை பற்றிப் பேசப்போவதில்லை. காரணம், நான் புள்ளிவிவரங்களை அவ்வளவாக நம்புவது கிடையாது. அதுவும் நாட்டின் நிதிநிலை என்றால் அதில் நட்சத்திரங்களை விட அதிகமான புள்ளிவிவரங்கள் இருக்கும். எந்தப் புள்ளி எங்கே இணையும் என்பதைக் கண்டுபிடிப்பது சிரமம். அதாவது, பல விஷயங்களில் சில விஷயங்களைப் போட்டு இவர்களும் குழம்பி, நம்மையும் குழப்பிவிடுவார்கள்.
எனவே, இந்த பேட்டியின் மூலம் நான் கவனித்த வேறு விஷயங்களைப் பார்ப்போம்.பொதுவாக மனிதர்களில் மூன்று வகை. சம்பாதித்துக் குடும்பத்தை நல்ல நிலைக்குக் கொண்டு வந்த சாதனையாளர்கள் சிலர்; உழைக்காமல், பரம்பரைச் சொத்தை விற்றுத் குடும்பத்தை ஓட்டுபவர்கள் சிலர்; கடன் வாங்கியே குடும்பத்தை நடத்தி, அதைச் சாதனையாகச் சொல்லும் சிலர். இந்தத் திராவிடக் கட்சிகள் மூன்றாவது வகை போலிருக்கிறது. அதிலும் மாநிலத்தைக் கடனாளியாக்கிவிட்டு அவர்கள் பணக்காரர்களாக மாறியிருக்கிறார்கள்.
ஒரு பழைய திரைப்படத்தில் தேங்காய் சீனிவாசன் மனைவிக்கும் குழந்தைக்கும் தாராளமாகச் செலவு செய்வார்; கேட்டதெல்லாம் வாங்கிக்கொடுப்பார். அவர் இறந்த பிறகுதான் கடன் சுமை காரணமாகக் குடும்பம் நடுத்தெருவுக்கு வரும். எனவே, மக்கள் நலத்திட்டங்கள் எந்த வருவாயில் செய்யவேண்டும் என்பதிலும் ஒரு வரம்பு வேண்டும். கடன் வாங்கி மக்களுக்கு நல்லது செய்ய அறிவாளிகள் தேவையில்லை; கழுதைகளே போதும். சமீபத்திய தேர்தலில் அந்தக் கழுதைகளை மக்கள் துரத்திவிட்டார்கள் என்பதுதான் இப்போதைக்கு நல்ல செய்தி.
"அப்படியென்றால் விஜய்யும் அப்படித்தானே வாக்குறுதிகள் கொடுத்தார்" எனச் சில அறிவாளிகள் கேட்பார்கள்.
நானாக இருந்தால் இலவசமே கிடையாது என்று சொல்லித்தான் ஓட்டு கேட்டிருப்பேன்; ஆனால் தோற்றிருப்பேன். இன்று அரசியல் சாக்கடையாகிவிட்டது. இங்கே குழந்தை சாக்கடையில் சிக்கியிருந்தால், அதைக் காப்பாற்ற நீங்களும் சாக்கடையில் இறங்கித்தான் ஆகவேண்டும். அதுபோன்றதுதான் இந்த கவர்ச்சி வாக்குறுதிகளும்.
யுத்தத்தில் உண்மை பலியாகும், கவிதையில் பொய் அழகாகும், அரசியலில் எல்லா மோசடியையும் செய்தாக வேண்டும். அதேசமயம் அதிகாரம் கைக்கு வந்துவிட்ட பிறகு, இனி எதார்த்தமாக முடிவெடுக்க வேண்டும்.
பணம் மற்றும் சாதி அரசியல் தோற்றது போல், இனி இந்த வாக்குறுதி அரசியலும் எடுபடாது. எதிரிகள் தற்போது அட்ரஸ் இல்லாத தலைவர்களாக மாறிவிட்ட நிலையில், இனி விஜய் தான் கொடுத்த வாக்குறுதிகளைப் பற்றிக் கவலைப்படாமல், எதார்த்த அரசியல் செய்தால் போதும்.
********
இந்த வெள்ளை அறிக்கை குறித்த ஒரு காணொளியைக் கவனித்தேன். கேள்விகள் தமிழில் கேட்கப்பட, நிதி அமைச்சர் அதற்கான பதிலை பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே அளித்தார். தமிழ் அவர் வார்த்தைகளில் அவமானத்துடன் நடனமாடியது.
இது விமர்சிக்கப்பட்டது. பதிலடியாக திமுகவின் பிடிஆர் சட்டமன்றத்தில் தட்டுத்தடுமாறி தமிழ் பேசிய காட்சியையும் பார்த்தேன். மொத்தத்தில் தமிழ்நாட்டில் தமிழ் செத்துக்கொண்டிருக்கிறது. தமிழ் தமிழ் என வசனம் பேசிய திராவிடக் கட்சிகளும் இதற்கு ஒரு காரணம்.
இதில் ஒருவர் பெரியாரை வம்புக்கு இழுத்தார். தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று அவர் சொன்னாராம். அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்பது அந்தக்கால வாழ்க்கையைக் கவனித்தவர்களுக்குப் புரியும். பெரியார் ஒரு பேரறிஞர். அந்தத் தகுதியை அடைய அவர் தமிழில்தான் படித்தார். அப்படியிருக்கையில் அவர் ஏன் அப்படிப் பேச வேண்டும்?
அவர் பிராமணர்களை வெறுத்தார். அவர்களோ சமஸ்கிருதத்தைத் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு, ஆங்கிலம் படித்து வெள்ளையர்களின் நெருங்கிய மனிதர்களாக மாறிவிட்டனர். எனவே, மற்ற சாதியினரும் ஆங்கிலத்தைப் படித்தால் அதிகாரத்தை அடைய முடியும் என்ற எண்ணத்தில் சொல்லியிருப்பார். ஒரு பொருளை (சரக்கை) முன்னிலைப்படுத்த இன்னொரு பொருளை மட்டம் தட்ட வேண்டும். இது அப்படிப் புரிந்துகொள்ளப்பட்ட ஒன்று.
சரி, இது பழங்கதை. இனி என்ன செய்ய வேண்டும்? தமிழைக் கொலை செய்வதில் திரைப்படங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும்தான் முக்கிய காரணம். இனி ஆங்கில வார்த்தைகள் அளவுக்கு மீறிப் பயன்படுத்தப்படும் பட்சத்தில் அவற்றைச் தடை செய்ய வேண்டும் அல்லது கடுமையான அபராதம் விதிக்க வேண்டும்.
நீயா நானா நிகழ்ச்சியில் கூட ஒருவர் ஆங்கிலத்தில் பேச, கோபிநாத்துக்கும் தன்னை அறிவாளியாகக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு, அவரும் ஆங்கிலம் பேசுகிறார். இதுதான் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் நடக்கிறது.
இனி நீங்கள் இது போன்ற நிகழ்ச்சியில் ஆங்கிலத்தில் பேச, அது ஒளிபரப்பாகி மகிழ்ச்சியில் இருக்கும்போது, "நீங்கள் இந்த நிகழ்ச்சியில் பேசும்போது மொத்தம் 60 ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள், அதற்கான அபராதமாக 60 * 1000 = 60000 கட்டுங்கள்" என அவர்களுக்குத் தமிழ் வளர்ச்சித் துறை கழகம் மூலம் நோட்டீஸ் போனால் எப்படியிருக்கும்?
"உங்கள் சம்பளத்தில் நீங்கள் பேசிய ஆங்கில வார்த்தைகளுக்கான அபராதம் போக, நீங்களே மீதிப் பணம் கொடுக்க வேண்டும்" என்று விஜய் டிவி, கோபிநாத்திடம் பணம் கேட்டால்... கோபிநாத் மயக்கம் போட்டு விழுவார். அது ஒரு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
இங்கே உதாரணத்திற்குத்தான் கோபிநாத்தை இழுத்திருக்கிறேன். ஆனால், ஏகப்பட்ட 'பீட்டர்கள்' இங்கே இருக்கிறார்கள். இவர்கள் எல்லோருக்கும் இப்படி ஒரு அச்சுறுத்தல் தேவை.
என்னுடைய பதிவிலும் இப்படிச் சில இடங்களில் ஆங்கிலம் வரலாம். சுத்த தமிழில் எழுதினால் அது ஆவணப்படம் போல் ஆகிவிடும். பழகிவிட்டது, நானும் படிப்படியாகக் குறைக்கிறேன்.
ஏதாவது செய்து தமிழைக் காப்பாற்றுங்கள்.

0 comments:
Post a Comment