மரிய வில்சன் தற்போது பிரபலமாகிவிட்டார். நல்ல விஷயத்துக்காக என்றால் பாராட்டலாம். ஆனால், இவர் அடாவடி பேர்வழியாக, ரவுடியாகப் பிரபலமாகியிருக்கிறார்.
அதேசமயம், இதை ஒரு வகையில் குறை சொல்ல முடியாது. முன்கோபக்காரர்கள் எல்லாம் அயோக்கியர்கள் என்று அர்த்தமல்ல. இவர்கள் இப்படியும் இருக்கலாம், அப்படியும் இருக்கலாம். உங்கள் பக்கம் நியாயம் இருந்தால் கோபம் வர வேண்டும், அதுதான் மனித இயல்பு.
இவருடைய தனிப்பட்ட குடும்ப உறவில் ஏற்பட்ட ஒரு பிரச்சினைக்காக இவர் அடிதடியில் இறங்கியதை நாம் பார்த்தோம். அங்கே நியாயம் யார் பக்கம் என்பது நமக்குத் தெரியாது; அதுமட்டுமின்றி, அது அவர் அரசியலுக்கு வரும் முன் நடந்த சம்பவம். எனவே, அதை ஏதோ ஒரு வகையில் மன்னித்துக் கடந்துவிடலாம்.
ஆனால், எப்போது இவர் அரசியல்வாதியாக, அமைச்சராக ஆனாரோ, அதற்குப் பின் அதன் கண்ணியத்தை இவர் காப்பாற்ற வேண்டும்.
தமிழ்நாட்டில் தமிழர்களே தங்கள் தாய்மொழியான தமிழ்மொழியைப் புறக்கணிக்கும் அவலம் நடக்கிறது. அதைச் பெருமையாகப் பேசும் சில மனிதர்களை ஒரு விவாத நிகழ்ச்சியிலும் கவனித்தேன். இது ஒரு அபாயகரமான போக்கு.
இப்பொழுதே பெரும்பாலான நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், விவாத நிகழ்ச்சியை நடத்தும் நபர்கள், கோபிநாத் உட்பட, அவ்வப்போது ஆங்கிலத்தைக் கலந்து பேசுகிறார்கள். இதையெல்லாம் கவனித்து வாழும் நமக்கே இப்போதெல்லாம் பேச, எழுத ஆரம்பித்தால் பல வார்த்தைகள் ஆங்கிலமாகத்தான் வருகின்றன.
இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஏற்கனவே `தமிழக நிதிநிலை வெள்ளை அறிக்கையும், மிஸ்டர் கோபிநாத்தும்` என்ற ஒரு பதிவில் கோபிநாத்தையும் மரிய வில்சனையும் கண்டித்து ஒரு பதிவு எழுதியிருந்தேன்.
இப்போது மரியா வில்சனின் ஆணவப் பேச்சு, இது எவ்வளவு தூரத்திற்குப் போய்விட்டது என்பதை உணர்த்துகிறது. அதுமட்டுமின்றி, வேறு சில அமைச்சர்களும், உறுப்பினர்களும் இயல்பான தமிழ் பேச முடியாமல் தடுமாறுகிறார்கள்.
இதே சட்டமன்றத்தில் சபாநாயகர் பொறுமையாகவும் தவறில்லாமலும் தமிழ் பேசுகிறார். வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஆளுநர் ஆர்லேகர், தமிழில் சில வார்த்தைகளைக் கற்றுக்கொண்டார் என்பதையும், மேலும் கற்க அவர் ஆர்வமாக இருப்பதையும் சபாநாயகர் சட்டசபையில் தெரிவித்தார்.
இப்படி அவர்களே ஒரு நாகரிகத்தைக் கடைப்பிடிக்கும் போது, தமிழர் என்று சொல்லிக்கொள்பவர்கள் தங்கள் தாய்மொழியை அவமானப்படுத்தினால் எப்படி?
இது ஒரு மோசமான வியாதி. அதன் வெளிப்பாடுதான் `நான் இப்படித்தான் இருப்பேன்` என்ற மரிய வில்சனின் ஆணவப் பேச்சு.
சரி, இது அவர்களின் கருத்துச் சுதந்திரம் என அவர்கள் போக்கிற்கே விட்டுவிடுவோம். ஆனால், அரசு சில கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
இனி தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத நபர்களுக்குத் தமிழ்நாட்டில் வாக்குரிமையும் கிடையாது; அதே அடிப்படையில் தேர்தலில் போட்டியிடவும் முடியாது என்று ஒரு சட்டம் தற்போது தேவை. தமிழ்நாட்டை ஆள்பவர்கள் தாய்மொழியை மதிக்க வேண்டும். அந்த எண்ணம் இல்லாதவர்கள் அதிகாரத்திற்கு வராமல் இருப்பதே நல்லது.
அதுமட்டுமின்றி, ஆங்கிலம் அதிக அளவில் கலந்து பேசும் திரைப்படங்கள், விவாத நிகழ்ச்சிகளுக்குக் கடுமையான அபராதம் விதிக்க வேண்டும். இல்லையென்றால், அடுத்த 200 ஆண்டுகளில் சமஸ்கிருதம் (?) 30%, ஆங்கிலம் 30% என கலந்து, உலகின் தொன்மையான வாழும் மொழி என்ற பெருமையைத் தமிழ் இழந்துவிடும்.
ஒரு பதிவில் கவனித்தேன்; காகிதங்கள் உயரே பறக்கலாம், ஆனால் அது கடைசியில் குப்பைத் தொட்டிக்குத்தான் போகும் என்று ஒருவர் எழுதியிருந்தார். அதுதான் இவர் விஷயத்திலும் நடக்கும் போலிருக்கிறது

0 comments:
Post a Comment