!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Thursday, December 6, 2012

நாட்டு நடப்பு: இப்படியும் சில பெண்கள்

சமீபத்தில் இந்த செய்தியை படித்தபோது சில கேள்விகளால் தலை சுற்றியது. குஜராத்தில் ஒரு பெண் விரைவில் தாயாகப் போகிறார். எப்படி என்பதில்தான் சிக்கல்.

இவர் 52 வயது பெண். இரண்டு பெண்களையும் கட்டிக் கொடுத்துவிட்டார். கணவனும் இறந்துவிட்டார். தனிமையில் தவித்தார். இந்த சூழ்நிலையில், மனைவியை இழந்த இன்னொருவரை திருமணம் செய்துகொண்டார்.

இதுவரை தப்பில்லை. இது யதார்த்தமான, நியாயமான முடிவுதான். ஆனால் இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தது போல், இவருடைய புது கணவருக்கு முதல் தாரத்திலும் குழந்தை இல்லை. எனவே அவருக்கு தன்னுடைய (ராஜ) வம்சம் தழைக்க வேண்டும் என்ற ஆசை.

இந்த ஆசையை நிறைவேற்ற வேண்டியது புது மனைவியின் கடமை. அவருக்கும் இதில் விருப்பமாம். ஆனால் உடல் ஒத்துவரவில்லை. எனவே அந்த பெண்ணின் பெண்ணே, அம்மாவின் சந்தோஷத்துக்காக அவருக்கு வாடகைத் தாயாக இருக்க சம்மதித்திருக்கிறார்.

தனிமையில் இருக்கும் அம்மாவுக்கு ஒரு துணை தேவை என இரண்டாவது திருமணம் செய்து வைத்த இந்த பெண்களின் செயல் பாராட்டுக்குரியது. அம்மாவுக்கே வாடகை தாயாக மாற சம்மதித்ததையும் அந்த நல்ல எண்ணத்துக்காக பாராட்டலாம். ஆனால் யதார்த்தம் என்ற ஓன்று இருக்கிறதே?

இவர் அம்மாவுக்காக குழந்தை பெற்றுக் கொடுத்தாலும், அந்த குழந்தை நாளை உறவு முறையில் சந்திக்க வேண்டிய சிக்கலை சிந்தித்து பார்த்தார்களா?

பிறக்கும் அந்த குழந்தை, சட்டப்படி 52 வயது பெண்ணின் குழந்தை. எனவே அந்த பெண்ணின் பெண் இவருக்கு சகோதரி முறை ஆகிவிடும். ஆனால் யதார்த்தத்தில் சகோதரியின் வயிற்றிலேயே இவர் வளர்கிறார்.

நம் நாட்டில் பெண்களின் நடைமுறை பேச்சே, பத்து மாசம் சுமந்து பெத்தேன் என்ற வசனம்தான். அந்த அடிப்படையில் பார்த்தால் இவரும் அந்த குழந்தைக்கு அம்மாதான். அம்மாவின் அம்மா இவருக்கு பாட்டி. ஆனால் சட்டப்படி அந்த பாட்டித்தான் இவருக்கு அம்மா. என்ன குழப்பம் இது?

இதில் மற்ற உறவுகளை சேர்க்கவில்லை. அது இன்னும் பெரிய சிக்கலாக இருக்கும்.

பொதுவாக வாடகைத்தாய் என்பது முகம் தெரியாத யாரோ ஒரு நபர் என்பதுதான் சிறப்பு. அம்மாவுக்கு உதவுகிறேன் என்ற போர்வையில் இந்த பெண், பிறக்கப் போகும் குழந்தைக்கு தலைவலியைதான் கொடுக்கிறார்.

இந்த காதலை எதுல சேர்க்கிறது?

இது ராஜஸ்தான் செய்தி. அங்கே ஒரு பெண் ஒரு சிறைகைதியை திருமணம் செய்து கொண்டார். திருமணமும் சிறையில்தான். இவர் போலீகாரரின் பெண் என்பது கூடுதல் சேதி.

கதை என்னவென்றால், இந்த பெண்ணை அந்த ஏரியாவை (சம்பல் பள்ளத்தாக்கு) சேர்ந்த ஒரு கொள்ளைக்காரன் தொந்தரவு செய்திருக்கிறான். அப்பா போலீஸ்காரர்தான். இருந்தாலும் யதார்த்தம் புரிந்த போலீஸ்காரர். நம்முடைய பலம் இங்கே வேலை செய்யாது என்பதை உணர்ந்தவர், வேறு ஒரு கொள்ளைகாரனிடம் புகார் செய்திருக்கிறார்.

அந்த கொள்ளைக்காரனுக்கு  இந்த கொள்ளைக்காரன் நண்பனாம். அவன் சொல்லி வைக்க, தொல்லைகள் நின்றது. அவ்வளவுதான். இப்போது பெண்ணுக்கு இந்த கொள்ளைக்காரன் மீது காதல் பிறந்தது. அவர்களுடைய திருமணம்தான் இது.

இதில் அந்த கொள்ளைக்காரன் மீது பல கொலை, கொள்ளை குற்றச்சாட்டுகள் இருக்கிறதாம். கற்பழிப்பும் உண்டு. இந்த லட்சணத்தில் அந்த கொள்ளைக்காரன் மீது காதல்.

இதற்கு ஒரு விளக்கமும் இருக்கிறது. அங்கே அந்த பகுதிகளில் கொள்ளைக்காரர்கள் என்பது சாதாரணமாம். வாழ்வியலில் இது ஒரு பகுதியாக இருக்கிறதாம். எனவே பெண்களுக்கு இது உறுத்தலாக தெரிவதில்லையாம்.

இருந்தாலும், இந்த செய்திகள்  பெண்களின் உலக பார்வை மீது சந்தேகத்தைத்தான் எழுப்புகிறது.

வயது பத்தாது 

சமீபத்தில் ஒரு காதல் திருமணத்தால் சாதிக் கலவரம்(?) ஏற்பட்டது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் ஒரு விஷயத்தை நாம் இங்கே கவனிக்கவேண்டும்.

சட்டப்படி பெண்ணுக்கு 18ம் ஆணுக்கு 21 என்றும் திருமண வயது நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. ஓட்டுரிமையும் இளம் வயதிலேயே வந்துவிடுகிறது.

இதில் ஓட்டுரிமை பிரச்சினையில் பெரிய ஆபத்தில்லை. கணக்குப்படி பர்ர்த்தால் ஓட்டளிப்பவர்களில் ஐந்தில் ஒருவர்தான் இவர்கள். எனவே இவர்களின் (ஒருவேளை) தவறான முடிவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.

அதேபோல் பெற்றோர் பார்த்து முடிவு செய்யும் திருமணங்களில், முடிவை பெரியவர்கள் எடுப்பதால் அங்கேயும் அதிகம் ஆபத்தில்லை.

காதல் திருமணம்தான் தலைவலி. 18 வயதில் ஒரு பெண் தன் எதிர்காலம் குறித்து முடிவெடுக்கலாம் என்பது அபத்தமாகத்தான் இருக்கிறது. அதிலும் பெண்களுக்கு ஆண்களுக்கு கிடைப்பது போல் உலக அனுபவம் அவ்வளவு விரைவாக கிடைப்பதில்லை. அவர்களுக்கு எல்லாவித சுதந்திரமும் குறைவு.

எனவே காதல் திருமணத்தை பொறுத்த வரையில் வயது வரம்பு அதிகரிக்கப்பட வேண்டும். 21 அல்லது அதற்கு மேலும் நிர்ணயிக்கலாம்.

பிரச்சினைகள் வரும்போது அதற்கு தீர்வும் வரவேண்டும். இது குறித்து சட்டம் வந்தால் சந்தோசம்.

சில சமயம் இப்படியும் நடக்கும் 

கடந்த வாரம் ஒரு அதிசயம் நடந்தது. `இந்த வாரம் எனக்கு கெட்ட எண்ணங்கள் நிறைய உதிக்கலாம்` என்று ஒரு பதிவு போட்டிருந்தேன். இந்த பதிவுக்கு இன்ட்லியில் ஓட்டு அதிகம் வந்தது. எனக்கு கிடைக்கும் ஓட்டுக்களின் அடிப்படையில் பார்த்தால் இது அதிகம்.

ஆனால் மிக குறைந்த அளவு படிக்கப்பட்டது. ஒரு படத்துக்கு பத்திரிகையில் மார்க் அதிகமாக கிடைக்க, படம் தியேட்டரில் ஓடவில்லை என்றால் எப்படி இருக்கும். அப்படித்தான் ஆகிவிட்டது. தலைப்பு கவர்ச்சிகரமாக இல்லை போலிருக்கிறது.

அப்பாடா ஒரு வழியாய் பாத்துட்டேன்.

வேறென்ன... கட்சிக் கொடிகளைத்தான். நான் இருக்கும் இந்த இடம் மணிநகர் என்ற தொகுதியில் வருகிறது. வேட்பாளர் நரேந்தர மோடிதான். ஆனால் எந்த பரபரப்பும் இல்லை. ஏதோ கொசு கடிச்சா மாதிரி ஒரு விளம்பரம்.

பிஜேபியோட சின்னம் தாமரையாம். கொடி தொங்குது. ஒரு போஸ்டரும் பார்த்தேன். அதுல மோடி மட்டும்தான் இருக்கார். கடலூர்ல என் கடைக்கு இதைவிட பெரிசா விளம்பர போர்ட் வச்சேன்.

காங்கிரஸ் சின்னம் எதுன்னு தெரியல. சொன்னாதான தெரியும்? ஒரு வேளை ரிசல்ட் அவங்களுக்கு முன் கூட்டியே தெரிஞ்சு போச்சா? அதான் அடக்கி வாசிக்கறாங்களா! 

ஒரு மாவட்ட, வட்ட, சதுர செயலாளர் அப்படின்னு ஒரு பந்தா கிடையாது. தலைவர்களுக்கோ, தொண்டர்களுக்கோ பிறந்த நாள் விழா கிடையாது. என்ன அரசியல் இது? இதையெல்லாம் பார்க்கும்போது, தமிழன் கொஞ்சம் ஓவராவே பந்தா பண்றான்னு தெரியுது.

கடந்த 2007 தேர்தலில் இங்கே பதிவான ஓட்டு சதவிகிதம் 60. தமிழ்நாட்டில் இது 78

இந்த லட்சணத்துல பிரச்சாரம் நடந்தா எப்படி ஓட்டு விழும்? இது ஒரு தேர்தல், அதுக்கு நான் பார்வையாளர். ம்ஹும்... இது சரிபட்டு வராது. நான்  அந்த போஸ்ட ராஜினாமா பண்ணிட்டேன்.

5 comments:

Anonymous said...

குசராத் தேர்தல் நிலவரம் எப்படி இருக்குன்னு இடுகை போடுங்க.

Unknown said...

செய்தி பகிர்வுக்கு நன்றி

Unknown said...

தேர்தல் பீதி எதுவும் இல்லையே.சுவாரசியமான பதிவு.

சிவானந்தம் said...

கருத்துக்களுக்கு நன்றி

இங்கே தேர்தல் என்பது, ரஜினி படத்தை பார்த்துவிட்டு அடுத்து ஒரு கூட்டமே இல்லாத ஆர்ட் பிலிம் பார்ப்பது போல் இருக்கிறது.

தமிழகத்தில் இருப்பது போல் ஜீவி, நக்கீரன் போன்ற அரசியல் இதழ்களோ அல்லது ஜனரஞ்சக இதழ்களோ கிடையாது. இந்தி மொழியின் பாதிப்பு அதிகம் என்றாலும் அதிலும் கிடையாது.

அதாவது என் கண்ணில் எதுவும் படவில்லை. அந்த அளவுக்கு இவர்கள் அரசியல் ஆர்வம் உள்ளவர்கள்.

Ramesh R said...

யதார்த்த பதிவுகள்

Post a Comment