குஜராத் தேர்தலையும் தமிழ்நாட்டு தேர்தலையும் கவனிக்கும் போது வித்தியாசங்கள் அநியாயத்துக்கு நம்மை பார்த்து சிரிக்கின்றன. மனமும் இந்த முரண்பாடுகளுக்கு பதிலை தேடுகிறது. சில காரணங்கள் இங்கே.
தமிழகம் மாநில அந்தஸ்த்தை அடைந்தது 1950 ல். குஜராத் அந்த அந்தஸ்த்தை 1960 ல் பெற்றது.
தமிழகம் இயற்கையாகவே இந்தியா என்ற மத்திய அமைப்பிலிருந்து விலகி இருக்கிறது. மாநில உணர்வு இங்கே அதிகம். இது தமிழ்நாட்டில் தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் என இரண்டு பிரிவை உருவாக்கியது.
குஜராத்தில் இந்த தியரி வேலை செய்யவில்லை. இரண்டே கட்சிகள். அதுவும் தேசிய கட்சிகள். தேசத்தந்தை காந்தியே ஒரு குஜராத்தியர் என்பதால் இங்கே மாநில உணர்வுக்கு (கட்சிகளுக்கு) வாய்ப்பில்லை.
நடிகர்கள்
அடுத்த யதார்த்தம் நடிகர்கள். தமிழ் நடிகர்களுக்கு தமிழ்நாட்டில் தங்களை மார்கெட்டிங் செய்வது எளிதாக இருக்கிறது. எனவே அவர்கள் தனித்தோ அல்லது கட்சி சார்ந்தோ அரசியலுக்கு வந்து விடுகிறார்கள். நடிகர்கள் என்ற கவர்ச்சியும் மக்களை அரசியல் பக்கம் திருப்புகிறது.
இந்தி நடிகர்களுக்கு அந்த வாய்ப்பே கிடையாது. இங்கே அவர்கள் தொட்டுக்க ஊறுகாய் போலத்தான். எனவே இந்தி பெல்ட்களில் அரசியலை மக்களிடம் கொண்டு செல்ல ஒரு பிராண்ட் அமையவில்லை.
பரிணாம வளர்ச்சி
கட்சிகள் உடைவதும் யதார்த்தம். போன வருடம் ஒற்றுமையாய் படம் காட்டிய அன்னா ஹசாரே டீமே இப்போது இரண்டு கிளைகளாகிவிட்டது. அந்த தியரியின்படி, தமிழகத்தில் தேசிய, மாநில, நடிகர் கட்சிகள் என பலவிதம் இருந்து, அவையும் பிளந்து தங்களுக்கு கீழே MLM மாதிரி கிளைகளை பரப்பி இருக்கின்றன. இதனால் தமிழகத்தில் கட்சிகள் அதிகமாகிவிட்டது.
சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், தமிழ்நாடு தி.நகர் ரங்கநாதன் தெருபோல் கூச்சல் குழப்பம் நிறைந்த சந்தை. பெரிய, சிறிய என ஏகப்பட்ட வியாபாரிகள்.
குஜராத்தில் இந்த தியரியும் வேலை செய்யவில்லை. 2007 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், பிஜேபி தவிர்த்து பிற கட்சியை சேர்ந்த எம் எல் ஏக்கள் 6 பேர்தான். இதில் இருவர் சுயேச்சை. இதுவே நிலைமையை புரியவைக்கும்.
தேசிய கட்சிகளை பொறுத்த வரையில், மாநிலத்தில் இரண்டு தலைவர்களுக்குள் மோதல் வந்தால், அதில் ஒருவருக்கு மத்தியில் பதவியை கொடுத்து அங்கே உட்காரவைத்து விடுவார்கள். எனவே அவ்வளவாக சண்டை வரவில்லை போலிருக்கிறது. இப்போதுதான் அதற்கான அறிகுறி தெரிகிறது.
இங்கே நரேந்தர மோடி சூப்பர்மேனாக இருக்கிறார். மத்தியிலும் பிஜேபி ஆட்சியில் இல்லை. ஒருவேளை ஆட்சிக்கு வந்தாலும் மோடி பிரதமர் அல்லது அடுத்த நிலை தலைவர் என்ற நிலை. இந்த சூழ்நிலையில், இனி பிஜேபி யில் எதிர்காலம் இல்லை என்பதை உணர்ந்து மோடியின் எதிர் அணி தற்போதுதான் தனி கட்சி ஆரம்பித்திருக்கிறது.
அதேபோல் காங்கிரசிலும் நடந்திருக்கிறது. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி சாத்தியமில்லை. மத்தியிலும் மூட்டை கட்டவேண்டிய சூழ்நிலை. எனவே கடந்தகால காங்கிரஸ் ஆட்சியில் துணை முதல்வராக இருந்த ஒருவர், தற்போது பிஜேபிக்கு தாவி இருக்கிறார்.
அதாவது தமிழகத்தில் அடிக்கடி நடக்கும் விஷயங்கள் இங்கே இப்போதுதான் நடக்க ஆரம்பித்திருக்கின்றன. பரிணாம வளர்ச்சியின் படி பார்த்தால், தமிழகம் அளவுக்கு இது களை கட்ட இன்னும் பல காலம் ஆகும்.
நீயா, நானா...பார்த்துடறேன் ஒரு கை
பிராந்திய மாநிலங்களில் ஓட்டு சதவிகிதம் அதிகரிக்க இன்னொரு காரணமும் இருக்கிறது. கட்சியிலிருந்து ஒருவர் வெளியேறும்போது அவர் தன் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு வந்துவிடுகிறார். அதேசமயம் இவரை செல்லாக்காசாக்க அந்த கட்சி தலைவரும் தலைகீழாக நிற்பார்.
எனவே இருவரும் பணத்தை வாரி இறைப்பார்கள். தங்கள் பலத்தை நிருபிக்க ஆட்களை கூட்டி கூட்டம் காட்டுவார்கள். அந்த கூட்டம் `கூட்டப்படுவது` என்பது எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும், இப்படி காசுக்கு வரும் மக்களில் ஒரு பகுதி மக்களுக்கு இயற்கையாகவே அரசியல் ஆர்வம் வந்துவிடுகிறது.
இந்த சண்டைகளும், எந்த கட்சி எங்கே போகும் என்ற கணக்கும், தமிழகத்தில் தேர்தலை சினிமாவை போல் சுவாரசியமாக ஆக்கிவிட்டது.
அனைத்தும் நானே
இன்னொரு யதார்த்தமும் இருக்கிறது. தமிழ்நாட்டில் கட்சிகள் அந்தந்த கட்சித் தலைவர்களின் கட்டுபாட்டில் இருக்கிறது. பயமில்லாமல் சுருட்டலாம். சுருட்டியதை தேர்தலில் செலவும் பண்ணலாம். யாரும் கேள்வி கேட்க முடியாது.
குஜராத்தில் இதுவும் நடக்க வாய்ப்பில்லை. இங்கே மாநில முதல்வர் மீது குற்றச்சாட்டு வந்தால் மத்திய தலைமை இவர்களை மாற்றிவிடும் அபாயம் இருப்பதால், இவர்கள் அளவுக்கு அதிகமாக ஊழலில் இறங்க வாய்ப்பில்லை.
அதைவிட முக்கியமாக, ஜெயித்தால் நாம்தான் முதல்வர் என்ற நம்பிக்கையில் கலைஞரும், அம்மாவும், இருக்கிறார்கள்.பணத்தை தைரியமாக தேர்தலில் இறைக்கிறார்கள். தேசிய கட்சிகளில் அப்படிப்பட்ட உத்தரவாதம் கிடையாது. எனவே யாரும் பெட்டியை திறப்பதில்லை.
இது என்ன புதுத் தலைவலி?
பொதுவாக தொழிலில் போட்டி இருந்தால் அங்கே தரம் வரும், விலையும் குறையும். இதுதான் யதார்த்தம். ஆனால் இந்த தியரி அரசியலுக்கு சரிபட்டு வராது போலிருக்கிறது. தமிழகத்தில் கடுமையான போட்டி காரணமாக எல்லா கட்சிகளும் செலவு செய்யவேண்டிய நிர்பந்தத்துக்கு வந்துவிட்டன.
செலவு செய்த பணத்தையும் எடுக்க வேண்டும, ஆட்சியும் அடிக்கடி மாறும், எனவே இரண்டு தேர்தல்களை தாங்கும் அளவுக்கு பணம் வேண்டும் என்ற நிலையில் கட்சிகள் இருக்கின்றன. இதுவும் தமிழகத்தில் ஊழலை அதிகப்படுத்தி இருக்கலாம்.
மீட்டிங்
கடலூரில் எனக்கு கடை (திருப்பாப்புலியூர்) தேரடித்தேருவில் இருந்தது. கடை எதிரேதான் மீட்டிங் நடக்கும். கடையில் உட்கார்ந்து கொண்டே பேச்சை கேட்கலாம். பின்னர் கடை சன்னதி தெருவுக்கு மாறியது. இப்போது மீட்டிங் இங்கே மாறிவிட்டது. எனவே மேடை பேச்சை கேட்டே ஆகவேண்டும். நானும் பல கட்சிகளின் மீட்டிங்கை கேட்டிருக்கேன்.
காலபோக்கில் எனக்கு இவர்களின் நாகரீக மொழி பிடிக்கவில்லை. கீழ்மட்ட தலைவர்கள் பேச்சில் ஒரு விஷயமும் இருக்காது. அநாகரீக வார்த்தைகள் அதிகமாகவே இருக்கும். பெரிய தலைகள் ரொம்ப லேட்டாக வருவார்கள். நமக்கு அதுவரை பொறுமை இருக்காது. எனவே அதிகம் கேட்பதில்லை.
அதுவும் அதிமுக மீட்டிங் என்றால் கடையை சீக்கிரம் மூடிவிடுவேன். அங்கே தலை முதல் வால் வரை எங்கேயும் விஷயம் இருக்காது. (ஆனால் கடந்த ஆண்டு அதிமுகவை ஆதரித்து ஒரு பதிவு போட்டேன். எல்லாம் காலத்தின் கொடுமை.)
இப்படி ஒரு முறை கடையை மூடும்போது ஒரு அதிமுக கட்சிக்காரர், `சிவா..என்ன நீ... மீட்டிங் நடந்தா கடையை மூடிடற. அரசியல் ஆர்வம் கொஞ்சமாவது வேணும்ப்பா` என்று சொல்லி கோவப்பட்டார்
அதுவும் அதிமுக மீட்டிங் என்றால் கடையை சீக்கிரம் மூடிவிடுவேன். அங்கே தலை முதல் வால் வரை எங்கேயும் விஷயம் இருக்காது. (ஆனால் கடந்த ஆண்டு அதிமுகவை ஆதரித்து ஒரு பதிவு போட்டேன். எல்லாம் காலத்தின் கொடுமை.)
இப்படி ஒரு முறை கடையை மூடும்போது ஒரு அதிமுக கட்சிக்காரர், `சிவா..என்ன நீ... மீட்டிங் நடந்தா கடையை மூடிடற. அரசியல் ஆர்வம் கொஞ்சமாவது வேணும்ப்பா` என்று சொல்லி கோவப்பட்டார்
அவருக்கு கடையில் உட்கார்ந்து கொண்டே மீட்டிங் கேட்க விருப்பம். நான் கடையை மூடி விட்டால் நிற்க வேண்டிவருமே. அதனால் இந்த உபதேசம்.
ஆனால் எனக்கு அரசியல் ஆர்வம் இல்லைன்னு சொன்னார் பாருங்க. அதுதான் எனக்கு கஷ்டமா போச்சு. என்னத்த சொல்றது, எல்லாரும் என்ன தப்பு தப்பாவே புரிஞ்சு வச்சிருக்காங்க.
சரி, இங்கே அகமதாபாத்தில் மீட்டிங் எப்படி நடக்கிறது என பார்க்கும் ஆர்வமும் வந்தது. இந்த பகுதியில் அதற்கான அறிகுறியும் தெரியவில்லை.
ஒரு நாள் பதிவு எழுதிக் கொண்டிருக்கும் போது லவுட் ஸ்பீக்கரில் ஒருவர் கத்திக் கொண்டிருந்தார். அவசரமாக ஆபிஸை மூடிவிட்டு போய் கவனித்தேன்.
கம்யுனிஸ்ட் கட்சி மீட்டிங். இவர்கள் எளிமைக்கு பேர் போனவர்கள். அப்படிப்பட்ட கம்யுனிஸ்டுகளே தமிழ்நாட்டில் மீட்டிங் என்றால் கொஞ்சம் செலவு செய்வார்கள். ஆனால் இதை எதில் சேர்ப்பது?
டீக்கடையில் நீட்டு பெஞ்ச் இருக்குமே, அதுபோல் 10 பெஞ்சை போட்டு துணிவிரித்து அதன்மேல் நின்றுகொண்டு பேசிகொண்டிருந்தார். இந்த மேடை அமைக்க 10 நிமிஷம் போதும். எனக்கு சப்பென்று ஆகிவிட்டது.
அப்படியும் ஆர்வம் தாங்காமல், தம்பியிடம், `யாராவது பெரிய தலைவர்கள் வந்தால் சொல்லு` என்றேன். `இங்கே மீட்டிங் இப்படித்தான் நடக்கும்` என்றான்.
இது நரேந்திர மோடி தொகுதி. காங்கிரஸ் தரப்பில் வேட்பாளரும் புதியவர். எனவே இங்கே ஒரு பரபரப்பும் இல்லை. அதிர்ஷ்டம் இருந்து அப்படி ஏதாவது மீட்டிங் நடந்தால் போய் பார்க்கும் மூடில் இருக்கிறேன்.
இந்த பதிவை எழுதி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் சன் நியுஸில் செய்தி. குஜராத்தில் தேர்தல் சூடு பிடித்ததாம். சொன்னார்கள். இந்த சூட்டை உணர நான் அடுப்பு மேலதான் போய் உக்காரணும். சும்மாவா சொன்னனாங்க `வெளியூர் காரனுக்கு தெரியுமா உள்ளூர் நிலவரம்`ன்னு. இது அப்படித்தான் இருக்கு.
ஒருவேளை இருக்கலாம். இங்கே இதுவரை நடந்த தேர்தல்களின் அடிப்படையில் குஜரத்தியர்களுக்கு அப்படி தெரியலாம். ஆனால் நாம் அவர்களுக்கு ஒன்றைத்தான் சொல்லமுடியும். `தம்பி, நீங்க இன்னும் ரொம்பத் தூரம் போவனும்`.
5 comments:
//இனி பிஜேபி யில் எதிர்காலம் இல்லை என்பதை உணர்ந்து மோடியின் எதிர் அணி தற்போதுதான் தனி கட்சி ஆரம்பித்திருக்கிறது.//
கேஷுபாய் பட்டேல் GPPன்னு கட்சி தொடங்கியிருக்காரு.
//
அதேபோல் காங்கிரசிலும் நடந்திருக்கிறது. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி சாத்தியமில்லை. மத்தியிலும் மூட்டை கட்டவேண்டிய சூழ்நிலை. எனவே கடந்தகால காங்கிரஸ் ஆட்சியில் துணை முதல்வராக இருந்த ஒருவர், தற்போது பிஜேபிக்கு தாவி இருக்கிறார்.
//
முன்னாடி 'சங்கர்சிங் வகேலா' பிஜேபி.ல இருந்து காங்கிரசுக்குத் தாவினாரு.
உலகத்தையே பதைபதைக்க வைத்த அந்த கலவரத்தின் நிகழ்வுக்குப்பின் முஸ்லிம்களின் நிலை எப்படி இருக்கிறது?
குஜராத் அரசியலிலிருந்து முஸ்லிம்களை தூரமாக்கி வைத்துள்ளதாக செய்திகள் வருவது உண்மையா?
இரண்டாந்தார குடிமக்களாகவும் அகதிகளாகவும் குஜராத்தி முஸ்லிம்கள் இருந்து வருகிறார்கள் என்பது எந்தளவிற்கு உண்மை?
இந்து சமூகத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்க்கும் உறவு நிலைகளில் பெரிய பிளவு ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறதே இது உண்மையா?
@அனானிமஸ்,
//கேஷுபாய் பட்டேல் GPPன்னு கட்சி தொடங்கியிருக்காரு.//
ட்ரெண்ட மட்டும் சொல்லுவோம்ன்னு நினைச்சேன். அதனால டீடைலா சொல்லல. இவர் சார்ந்த பகுதிகளில் தற்போது ஓட்டு சதவிகிதம் அதிகரிக்கலாம்.
//முன்னாடி 'சங்கர்சிங் வகேலா' பிஜேபி.ல இருந்து காங்கிரசுக்குத் தாவினாரு.//
இவரை பத்தி நான் முதல்ல படிச்சிருக்கேன். ஆனால் சமீபமா நான் படிச்ச எந்த செய்தியிலேயும் இவர் பெயர் அடிபடல. அதனால் குறிப்பிடல
@உதயம்
உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமென்றால் நான் பல இடங்களுக்கு சுற்ற வேண்டும். அது சாத்தியம் இல்லை.
நான் சிறு வயதிலேயே இங்கே இருந்திருக்கிறேன். அப்போதே இந்துக்களும் முஸ்லிம்களும் தனித்தனி ஏரியாவில் இருப்பார்கள். இப்போது அது இன்னும் அதிகமாக ஆகி இருக்கும். அவர்களுடன் பேசாமல் அவர்கள் மனநிலையை அறிய முடியாது.
முக்கியமான பிரச்சினை பத்திரிக்கைகள்தான். எனக்கு குஜராத்தி தெரியாது. ஆங்கில பத்திரிக்கைகளுக்கு தேசிய விஷயங்கள்தான் முக்கியம். ஜூவி, ரிப்போர்டர் போன்ற அரசியல் இதழ்களும் இல்லை. தமிழ்நாட்டில் வீட்டில் உட்கார்ந்து கொண்டே தமிழக அரசியலையும் வாழ்வியலையும் ஆராயலாம். இங்கே அது சிரமம்.
நல்லதோ, கெட்டதோ, உள்ளூர் விஷயங்கள் வெளியே போகும்போது அது மிகைபடுத்தப்படும் என்ற உண்மையை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.
சார் நீங்கள் சொல்லுவதையெல்லாம் பார்த்தால் பள்ளி தேர்தல் போல இருக்கும் போல.
//குஜராத் அரசியலிலிருந்து முஸ்லிம்களை தூரமாக்கி வைத்துள்ளதாக செய்திகள் வருவது உண்மையா?
இரண்டாந்தார குடிமக்களாகவும் அகதிகளாகவும் குஜராத்தி முஸ்லிம்கள் இருந்து வருகிறார்கள் என்பது எந்தளவிற்கு உண்மை?//
Unless proved, all these vathanthi are used to grow hate among Muslims. Muslims are happy to hear these false stories and grow hatred. Its what they want.
Indiavukku koduppinai awlothan. Nanri.
Post a Comment