!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Saturday, August 29, 2026

டில்லியை நோக்கி விஜய்..

Aug.5 அன்று எழுதிய 'உதயநிதியின் ‘அந்த’ பேச்சு' பதிவின் ஒரு பகுதி ...https://anindianviews.blogspot.com/2026/08/blog-post_916.html

....தமிழ்நாட்டில் ஸ்டாலினை நம்பி பல கட்சிகள் ஏமாந்து (மோசம்) போனதைப் போல், டெல்லியில் ராகுல் காந்தியை நம்பி ஏமாற யாரும் தயாராக இல்லை. எனவே, தவெக - காங்கிரஸ் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் தொடருமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. தொகுதிப் பிரச்சினை காரணமாக தவெக இவர்களைக் கழற்றிவிடலாம்; மற்ற உதிரி மற்றும் புதிய கட்சிகளுக்குக் கௌரவமான தொகுதிகள் கிடைக்கலாம்.

பிற தென் மாநிலங்களில் தவெக தனியாகவோ அல்லது அங்குள்ள பிற கட்சிகளுடனோ சேர்ந்து ஒரு மூன்றாவது அணியாக மாறலாம்...

இது அந்த பதிவின் கடைசி பகுதி.

இப்போது இதுதான் நடக்கும் என்பது உறுதியாகிறது. ஒரு இடத்தைப் பிடித்துவிட்டால், அடுத்த இலக்கை நோக்கிப் பயணிப்பதைப் போன்றதுதான் இது. ஆனால் இது உடனடியாக சாத்தியமாகுமா?

இதை கணிப்பதுதான் சிரமம். ஊழலில் இரண்டு திராவிடக் கட்சிகளும் திளைத்த அளவுக்கு தேசியக் கட்சிகள் செய்யவில்லை. பிஜேபியில் வாரிசு அரசியல் மேல் மட்டத்தில் இல்லை. கீழ் மட்டத்திலும் அது ஓரளவுக்குத்தான். காங்கிரஸில் வாரிசு அரசியல் இருந்தாலும், திமுக அளவுக்கு, உறவுகள் அத்தனை பேரும் அதிகார மையமாக மாறவில்லை.

இருந்தாலும் இரண்டு விஷயங்கள் இவர்களுக்கு எதிராக இருக்கும். பிஜேபி தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதால், எப்படியும் மக்களுக்கு அவர்கள் மீது அதிருப்தி வரும். திமுகவினர் ஐந்தே வருடத்தில் மக்கள் வெறுப்பை சம்பாதித்துவிடுவார்கள்; பிஜேபி 15 ஆண்டுகளாக இருப்பதால் அதே கோபம் டெல்லியில் நிச்சயம் வரும்.

காங்கிரஸ் முன்னாள் பிரதமர்கள் பல நல்ல விஷயங்களைச் செய்திருந்தாலும், மக்கள் மனதில் அவர்கள் செய்த தவறுகள்தான் எப்போதும் அரசியலாக்கப்படும். அந்த பேக்கேஜை ராகுல் சுமக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, அவர் நிழலிலேயே வளர்ந்த தலைவர் என்பதால், அவர் அரசியல் கற்றுக்கொள்ள இன்னும் 30-40 ஆண்டுகள் ஆகலாம். மொத்தத்தில் சீமான் + எடப்பாடி + உதயநிதி என்ற மூன்று பேரும் சேர்ந்த கலவை அவர். அவர் இந்திய அரசியலில் பேரளவுக்கு இருக்கும் தலைவர். அவ்வளவுதான்.

தமிழ்நாட்டில் எப்படி வேறு வழியில்லாத சூழ்நிலையில் மட்டுமே மக்கள் திமுகவிற்கு ஆட்சியைக் கொடுக்கிறார்களோ, அதேபோல் ஏதாவது ஒரு அதிசயம் நடந்தால் மட்டுமே அவர் பிரதமராக முடியும்.

ஆனால் தேசிய அளவில் பல கட்சிகள் காங்கிரஸ் மீது வெறுப்பைக் கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு தனியாக நிற்கவும் பயம். இந்த இடத்தில் அவர்களை ஒருங்கிணைக்கும் சக்தியாக விஜய் மாறலாம். அவர்கள் பழைய முகம் என்பதால், தேர்தலில் அது பெரிய அளவுக்குப் பலனளிக்காது. அவர்களுக்கும் ஒரு முகமூடி தேவை.

இன்னொருபக்கம், கரப்பான் பூச்சி கட்சி என்று ஒரு புதுசக்தி வந்திருக்கிறது. இதுவும் விரைவில் பெயர் மாற்றத்தோடு, ஒரு மாற்று சக்தியாகக் களம் இறங்கும். இவர்களுக்கும் ஒரு இணைப்பு முகமூடி தேவை. இங்கே எல்லா விதத்திலும் விஜய் பொருந்திப் போகிறார். நிச்சயம் பிஜேபியை எதிர்க்க, காங்கிரஸை ஒதுக்கிவிட்டு ஒரு அணி நிச்சயம் அமையும். அது தேசிய அளவில் கணிசமான தொகுதிகளை அள்ளலாம். இவர்களில் ஆம் ஆத்மீ மற்றும் கரப்பான் பூச்சி கட்சியைத் தவிர, வேறு யாருக்கும் தேசிய அளவில் ஆதரவு இல்லை.

பிஜேபி அடுத்த தேர்தலில் 200-ஐத் தாண்டுவதே சிரமம். இரண்டாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் வருமா அல்லது (பெயர் மாற்றப்பட்ட) தவெக வருமா என்பதுதான் இப்போதைக்கு கணிக்க முடியாத ஒரு கணக்கு. இந்தியா முழுக்க கூட்டணி கணக்குகள் ஒழுங்காக அமைந்தால், அதன் மூலம் ஒவ்வொரு மாநிலத்திலும் 2-5 தொகுதிகளைப் பெற்றாலே, தவெக அந்த இடத்தை அடையலாம்.

இதெல்லாம் சாத்தியமா?

ஓரளவுக்குச் சாத்தியம்தான். என்னதான் ரஜினியாக, தோனியாக இருந்தாலும், அவர்களும் ஒரு காலத்தில் அவுட் ஆஃப் ஃபார்ம் ஆகிவிடுவார்கள். இதே நிலைதான் தேசிய கட்சிகளுக்கும்.

ஒரு காமெடி. ஒரு நீச்சல் போட்டியில் ஒருவன் முதலில் வந்தான். “எப்படி இவ்வளவு வேகமாக உங்களால் நீந்த முடிந்தது?” என்று கேட்டதற்கு, “என்னை இந்தக் குளத்தில் தள்ளிவிட்டது யார்?” என்று கோபமாகக் கேட்டானாம்.

அரசியலில் ஜெயிக்க வேண்டும் என்று போராடுபவர்கள் வேறு. அவர்கள் இதுதான் அரசியல் என்ற தவறான புரிதலில், காலாவதியான கொள்கைகளையும் உத்திகளையும் பயன்படுத்தித் தோற்றுவிடுகிறார்கள். இப்படி திடீரென்று (உதயநிதிக்குப் பாடம் புகட்ட) ஆவேசப்பட்டுக் களத்தில் குதிக்கும் விஜய் போன்றவர்கள் ஜெயித்துவிடுகிறார்கள்.

(இந்த தியரியை மையமாக வைத்தும் ஒரு பதிவு எழுதினேன். https://anindianviews.blogspot.com/2026/07/blog-post_18.html )

இருந்தாலும், நிர்வாக அடிப்படையில் மாநிலம் வேறு, நாடு என்பது வேறு. நிர்வாக அனுபவம் இல்லாத ஒருவர் பெரிய பதவிகளுக்கு வருவது நிச்சயம் ஆபத்துதான். இன்னும் மூன்று ஆண்டுகள் இருக்கின்றன. இவருடைய நிர்வாகத் திறமை அதற்குள் எல்லோருக்கும் தெரிந்துவிடும். அதன்பின் நானும் இவர் தேறமாட்டார் என்றும் எழுதலாம்.

மொத்தத்தில், தமிழ்நாட்டில் பலித்த தியரி தேசிய அளவில் எடுபடுமா?

இங்கே ஒரே பதில்தான். டென்னிஸ் மொழியில் சொன்னால், அட்வான்டேஜ் விஜய்.

கடைசியாக, காங்கிரசை கழட்டி விட்டு சந்தித்த தேர்தல் என்பதால், தவெக காங்கிரசுடனே மீண்டும் டில்லியில் கூட்டணி சேர்வது சாத்தியமாகாது. எனவே தேர்தலுக்கு பின் தமிழ்நாட்டில் நடந்த அதே அரசியல் கட்சிகளின் இடமாற்றம் டில்லியில் நடக்கலாம். அது காங்கிரஸ் அல்லாத மேலும் பலமிழந்த பிஜேபியாகவும் இருக்கலாம். அதுவும் நல்லதுதான்.

0 comments:

Post a Comment