முதல்வர் விஜய் எடுத்த சில முடிவுகளில் எனக்கு அதிருப்தி இருந்தாலும், இது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
ஆனால், இது குறித்த விமர்சனங்களை கவனித்தபோது, பாமர மக்களிலிருந்து அறிவுஜீவி அர்னால்ட்கள் வரை எல்லோரும் இதைக் குறை சொல்கிறார்கள். கொஞ்சம் எதார்த்தமாகப் பேசும் சவுக்கு சங்கரும் இதைக் குறை சொல்லியிருந்தார். நான் எல்லாவற்றையும் கவனிப்பேன். ஆனால், மற்றவர்கள் கருத்து எப்படி இருந்தாலும், என் வழி தனி வழி.
‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற நிகழ்ச்சியில் ஓர் அப்பாவிப் பெண்ணின் பேட்டி. திருமணமாகி சில வருடங்கள் கடந்தும் அவருக்குக் குழந்தை இல்லையாம். ஒரு டாக்டரைப் போய்ப் பார்த்திருக்கிறார். அவரிடம் பேசிய அந்த டாக்டருக்கு மயக்கம் வராத குறை. காரணம், கணவன் மனைவிக்குள் `அது` நடக்கவில்லையாம். இப்படியும் விவரம் தெரியாத மனிதர்கள் (அந்த ஆணுக்குமா தெரியாது?) நாட்டில் இருக்கிறார்கள் போலிருக்கிறது.
இந்திய ஜனநாயகமும் அப்படித்தான் இருக்கிறது. ஓட்டுப் போடத் தெரிந்த மக்களுக்கு, ஜனநாயகம் என்றால் என்ன, சட்டமன்ற உறுப்பினர்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கும், அவர்களுடைய பிரச்சினை என்ன என்பதெல்லாம் தெரியவில்லை. சில மாதங்கள் அவர்களுடனும் பேயிங் கெஸ்ட்டாக பயணித்துப் பாருங்கள்; அப்போதுதான் அவர்களின் தலைவலிகள் புரியும்.
நிஜத்தில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் மிகவும் குறைவு; செலவினங்கள் அதிகம். இது ஒரு தனி நபர் அலுவலகத்தில் செய்யும் வேலை இல்லை. இது ஒரு மக்கள் சேவை. இது ஏற்படுத்தும் செலவினங்களை (அவசியமான, தவிர்க்க முடியாத) சமாளிக்க முடியாமல், மாற்று வழிகளைத் தேடினார்கள். அதுதான் ஊழலுக்குக் கொண்டுபோய் விட்டிருக்கிறது.
நீங்கள் தற்போது பார்ப்பது ஏற்கனவே ஊழலில் ஊறிப்போய்ப் பணக்காரர்களான உறுப்பினர்கள். தவெக வந்த பிறகுதான் ஏழைகளும் சட்டசபைக்குள் நுழைந்திருக்கிறார்கள். எனவே, அவர்களின் பிரச்சினை தற்போதுதான் வெளியே தெரிகிறது.
கருணாநிதி இருந்திருந்தால், இப்படி ஒரு கோரிக்கைக்கு, `நீங்களே சம்பாதித்துக் கொள்ளுங்கள்` என்று கமிஷன் அடிப்படையில் ஒரு நல்ல பாதை காட்டியிருப்பார். ஜெயலலிதா அப்படிச் சொல்லமாட்டார். அவரே ஊழல் மகாராணியாக இருந்து, வசூலித்து, அந்தப் பணத்தில் கார் வாங்கி அன்பளிப்பாகக் கொடுத்திருப்பார். ஆனால், விஜய் இந்த நியாயமான பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வைக் கொடுத்திருக்கிறார் என்பதுதான் என் கருத்து.
சரி, பிரச்சினை நியாயமாக இருந்தாலும், எல்லோருக்கும் கார் என்பது அபத்தம்தானே?
இங்கேதான் ஒரு நடைமுறையைக் கவனிக்க வேண்டும். உங்கள் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தாலோ அல்லது நிகழ்ச்சிகளிலோ, ‘உங்களுக்கு டீ, காபி வேண்டுமா?’ என்று யாரையும் கேட்கக்கூடாது. அது அநாகரிகம்.
சில நெருங்கிய உறவினர்கள் ஆமாம் என்று கேட்டுவிடலாம். புதியவர்களாக இருந்தால் மறுப்பார்கள். அதிலும், ஒருவரும் கேட்கவில்லை என்றால், நாகரிகம் கருதி எல்லோரும் மவுனமாகிவிடுவார்கள். ஆனால், நிஜத்தில் யாரோ ஒருவருக்குத் தேவைப்படலாம்.
எனவே, இது போன்ற நிகழ்வுகளில் எல்லோருக்கும் ட்ரேயில் காபியை வைத்து நீட்ட வேண்டியதுதான். வேண்டும் என்பவர்கள் எடுத்துக்கொள்வார்கள். தேவையில்லாதவர்கள் மறுத்துவிடுவார்கள்.
ஒருவேளை முதல்வர், ‘யாருக்குக் கார் இல்லையோ, அவர்கள் கோரிக்கை வைத்தால் அவர்களுக்கு வழங்கப்படும்’ என்று அறிவித்திருந்தால், அது முறையாக இருந்திருக்கும். ஆனால், அதில் நாகரிகம் இருக்காது.
தவெக உறுப்பினர்கள் விஜய்யிடம் உரிமையாகக் கோரிக்கை வைத்து கார் வாங்கிக்கொள்வார்கள். திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்களுக்கு இது தர்மசங்கடமாகிவிடும். அவரையே எதிர்த்துப் பேசிவிட்டு, அவரிடமே கோரிக்கை வைப்பதா என்று தயங்குவார்கள்.
எனவே, `எல்லோருக்கும் கார்` என விஜய் அறிவித்ததுதான் முறையான செயல். இதில் வேண்டாம் என மறுப்பவர்கள் மறுத்துவிடலாம். அதைத்தான் உதயநிதியும் சொன்னார். ஆதவ் அர்ஜுனும், ‘தவெக உறுப்பினர்களில் கார் வைத்திருப்பவர்கள் வாங்கப்போவதில்லை’ என்றும் சொல்லிவிட்டார். இங்கே யாருக்கும் தர்மசங்கடம் வராது.
இதில், ‘எங்களுக்கு வேண்டாம்; (எங்கள் கட்சியில் ஏழைகளுக்கு நாங்கள் சீட் கொடுப்பதில்லை. அப்படியே கொடுத்தாலும், அவர்களுக்குத் தேவையானதை அவர்களே `கை நீட்டி வாங்கிக்கொள்ளும்` அளவுக்குத் திறமையானவர்கள்’) என்று வெளிப்படையாகச் சொன்ன உதயநிதியைப் பாராட்ட வேண்டும். அதிமுக குறித்து நான் எதுவும் சொல்லப்போவதில்லை. ஏனென்றால், இங்கே `அ` என்ற ஒரு வார்த்தையைத் தவிர, இவர்களுக்குள் வேறு வித்தியாசம் கிடையாது.
அடுத்து, ஏற்கனவே கார் வைத்திருப்பவர்களுக்கு ஏன் கொடுக்க வேண்டும்? ஒரு வேளை அவர்களும் கேட்கும்பட்சத்தில், அவர்களுக்கும் கொடுக்க வேண்டும். அதுதான் முறையாக இருக்கும். ஏன்?
பெரிய நிறுவனங்களைக் கவனியுங்கள். அங்கே பல ஊழியர்கள் இருப்பார்கள். அவர்கள் சொந்த வாகனங்களில் வருவார்கள். அவர்களில் சிலருக்கு வெளியே மார்க்கெட்டிங் வேலை இருக்கும். நிறுவனம் ஒரு தனி இரு சக்கர வாகனத்தை இதற்காக வைத்திருக்கும். இப்போது, இந்த வேலைக்கான ஊழியர் அவருடைய வண்டியை விட்டுவிட்டு, நிறுவனத்தின் வண்டியைத்தான் பயன்படுத்துவார்.
சொந்த வண்டியைப் பயன்படுத்த மாட்டார். காரணம், பெட்ரோல் செலவும் தேய்மானமும் இவர் தலையில் விழும். அப்படியே சில இடங்களில் பெட்ரோல் காசை நிறுவனம் கொடுத்தாலும், அது அவருடைய வண்டி என்றால், அவர் விடுமுறையில் இருந்தால் அன்று நிறுவனத்திற்கு வண்டி கிடைக்காது. அல்லது வேறு யாராவது கேட்டாலும் கொடுக்கமாட்டார். எனவே, இதுபோன்ற தலைவலிகளைத் தவிர்க்க, அவர்கள் நிறுவன உபயோகத்திற்காகத் தனியாக வண்டி வைத்திருப்பார்கள்.
எம்.எல்.ஏ.க்களின் வேலையும் இப்படித்தான். இதுவரை நீங்கள் பார்த்த திராவிடப் பெருச்சாளி எம்.எல்.ஏ.க்களை விட்டுவிடுங்கள். நிஜமான சராசரி ஏழை உறுப்பினர்களுக்கு இதுவும் கூடுதல் சுமைதான். அவர்கள் ஏழை என்ற நிலையிலிருந்து ஒரு படி மேலே வந்து, சொந்தமாகக் கார் வாங்கியிருக்கிறார்கள். அவர்கள் தங்களின் சொந்த வண்டியைத் தொகுதியைச் சுற்றி வருவதற்குப் பயன்படுத்தினால், சேதாரம் அவர்களுக்குத்தானே? எனவே, அவர்களுக்கும் கார் கொடுப்பதுதான் நல்லது. அதாவது, அவர்கள் கேட்டால்.
அடுத்து, சில கேள்விகள் எழும். அவர்களுக்குத்தான் அரசு நிறைய உபரிப்படிகள் தருகிறதே என்று கேட்கலாம். இதுவும் அபத்தம்தான்.
நீங்கள் எம்.எல்.ஏ. ஆகிவிட்டால், அதன் பிறகு உங்களுக்கு வரும் செலவுகள் சொல்லி மாளாது. இதுவரை பத்து சொந்தக்காரர்கள் இருந்த இடத்தில் அது நூறாக மாறும். ‘நான் உங்களுக்கு தூரத்து சொந்தம்’ என தினம் சிலர் வீட்டுக்கு வரலாம். கட்சிக்காரர்கள், அவர்கள் சுறுசுறுப்பாக இருப்பதைக் காட்டிக்கொள்ள, அடிக்கடி உங்கள் பின்னாலேயே சுற்றுவார்கள். இதுபோக, பொதுமக்கள் ஏதாவது பிரச்சினை என அடிக்கடி தேடி வருவார்கள். இவர்களுக்குத் டீ, காபி கொடுப்பதிலேயே இந்த எம்.எல்.ஏ.க்களின் பாதி சம்பளம் போய்விடும்.
இதுபோக, தொகுதியில் இருக்கும் அனைவரும் தங்கள் இல்ல நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ. வந்தால் கொஞ்சம் மரியாதையாக இருக்கும் என்று பத்திரிகை வைத்துவிடுவார்கள். மாதம் 5–10 நிகழ்ச்சிகள் வந்துவிடும். இவர்களுக்கு மொய் வைக்கவே இந்த எம்.எல்.ஏ.க்கள் வங்கியில் கடன் வாங்க வேண்டியிருக்கும். மொய் வைக்காவிட்டால், குறைவாக வைத்தால் அங்கே மரியாதை கிடைக்காது; அடுத்த முறை ஓட்டும் கிடைக்காது. எவ்வளவு தலைவலிகள்!
இது போன்ற அபத்தங்களைத் தடுக்க, இனி எம்.எல்.ஏ.க்கள் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் மொய் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுக்கக்கூடாது என்று ஒரு சட்டம் தற்போது தேவை. விஜய் இதற்கும் ஒரு தீர்வு கொண்டுவரவேண்டும்.
அடுத்தது, இந்த அல்லக்கைகள். ரவுடிகள் எப்படி எப்போதும் பத்து பேரோடு சுற்றுவார்களோ, அதே தலைவலிதான் இவர்களுக்கும். ஒரு எம்.எல்.ஏ. என்றால், அவருடன் 5–10 வேலையில்லாத நபர்கள் சுற்றுவார்கள். அவன் ஏழைத் தொண்டனாக இருந்தால், செலவு எம்.எல்.ஏ. தலையில் விழும். பணக்காரனாக இருந்தால், ‘அண்ணே, நான் பாத்துக்கிறேண்ணே’ என்று செலவை எம்.எல்.ஏ.வுக்கும் சேர்த்து இவர்கள் செய்வார்கள்.
சில மாதங்கள் கழித்து, ‘அண்ணே... ஒரு கான்ட்ராக்ட் வருது, நீங்க கொஞ்சம் சொல்லுங்கண்ணே’ என்று கழுத்தில் கத்தியை வைப்பார்கள். அப்புறமென்ன, நீங்கள் அரசியல்வாதியில் இருந்து அரசியல்வியாதியாக மாறிவிடுவீர்கள். இதுதான் நல்ல எம்.எல்.ஏ.க்கள் கெட்டவனாக மாறிய கதை.
இவற்றையெல்லாம் தடுக்க வேண்டுமென்றால், எம்.எல்.ஏ.க்களுக்கு இப்படி கொஞ்சம் சலுகைகள் கொடுப்பதன் மூலம் அவர்கள் தடம் மாறாமல் பார்த்துக்கொள்ளலாம். அப்படியும் மாறுவார்கள்; அது இயற்கை. ஆனால், இது போன்ற சலுகைகள் நேர்மையான எம்.எல்.ஏ.க்களின் சதவிகிதத்தை அதிகரிக்கும் என்பதும் உண்மை. எனவே, இப்படி ஒரு முடிவை அறிவித்த முதல்வருக்கு என்னுடைய பாராட்டுக்கள்.
அதேசமயம், அவரைக் குறை சொல்வதற்கும் வேறு சில விஷயங்கள் இருக்கின்றன. அது பின்னர்....

0 comments:
Post a Comment