வாரத்தில் 7 நாட்கள் தான் இருக்கின்றன; ஆனால், 8 பரபரப்புச் செய்திகள் வருகின்றன. அதிலும் இந்த யூடியூப் ஊடகங்கள் வந்து எல்லாரும் ஆளுக்கொரு கடையை திறந்த பிறகு, "இன்று எதைப் பரபரப்பாக்கலாம்?" என்று விதவிதமாக யோசித்து எதையாவது ஒன்றைக் கிளப்பிவிடுகிறார்கள்.
"சட்டப்பேரவையில் ஆங்கிலத்தில் மூச்சுவிடாமல் பேசிய பாமக கணேஷ்குமார்" என்ற தலைப்பில் ஒரு காணொளி (மாலைமுரசு) கவனித்தேன். "இப்பதானே மரிய வில்சன் சிக்கினார், அதற்குள் இவர் யார் புதிதாக வந்து சிக்கியிருக்கிறார்?" என்று பார்த்தால், “Small is beautiful” என்ற ஒற்றை வார்த்தையை மட்டுமே அவர் சட்டசபையில் பேசியிருக்கிறார்! அதற்கு இப்படி ஒரு தலைப்பு. பார்வையாளர்களை கவர எந்த எல்லைக்கும போவார்கள் போலிருக்கிறது. வேலையில்லா திண்டாட்டம், கடுமையான போட்டி என எல்லா துறையும் இப்படி திண்டாடுகிறது.
நாம் எதையாவது எழுதி வைக்கலாம் என்று நினைப்பதற்குள், இவர்கள் வேறு ஒரு செய்தியைப் பூதாகரமாக்கி அதைத் தலைப்புச் செய்தியாக மாற்றி விடுகிறார்கள். எனவே, இனி குருட்டாம்போக்கில்தான் எழுத வேண்டும் போலிருக்கிறது.
இந்தத் தமிழக நிதிநிலை அறிக்கையில் மரிய வில்சன் சர்ச்சைக்குப் பிறகு நான் கவனித்தது, விவசாயிகளின் கடன் தள்ளுபடி குறித்துதான்.
அரசின் விவசாயக் கொள்கைகளைக் கவனிக்கும்போது ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. பெண்கள், பட்டியலின மக்கள், சிறுபான்மையினர், ஏழைகள், விவசாயிகள் ஆகிய பிரிவுகளில் இருப்பவர்கள் என்ன தவறு செய்தாலும்—அது அறியாமையினால் செய்த ஒன்றாகவே இருந்தாலும்—அதைக் கண்டிக்கக் கூடாது என்றொரு புது வியாதி இப்போது எல்லோரையும் பீடித்திருக்கிறது.
இன்றைய அரசியல் சூழலில், பிராமணர்களும் பணக்காரர்களும் மட்டுமே நிரந்தர அயோக்கியர்கள்; இவர்கள் எது செய்தாலும் தவறு, மற்றவர்கள் எது செய்தாலும் சரி என்ற நிலைதான் நீடிக்கிறது.
ஒரு ஆரோக்கியமான சமூகம் தவறைத் "தவறு" என்று துணிந்து சொல்ல வேண்டும்; அதைச் செய்தவன் யார் என்று பார்த்துவிட்டுச் சொல்லக் கூடாது. மேலே குறிப்பிட்ட மக்களிடம் சில இடங்களில் நியாயங்கள் இருக்கலாம்; சில இடங்களில் தவறு அவர்கள் பக்கமே கூட இருக்கலாம். ஆனால், "சமூகத்தில் பின்தங்கியவர்கள்" என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் செய்யும் தவறுகளையோ, தெரியாமல் செய்யும் அத்துமீறல்களையோ கேள்வி கேட்காமல் விட்டால் எப்படி? அதுதான் இப்போது விவசாயிகளின் விஷயத்திலும் நடக்கிறது.
இங்கே விவசாயத் துறையின் பிரச்சினையைச் சுருக்கமாகச் சொன்னால் இதுதான்: தடுக்கி விழும் குழந்தையை ஒருமுறை தூக்கிவிடலாம். ஆனால், ஒவ்வொரு முறையும் தாய் அதையே செய்து கொண்டிருந்தால், குழந்தை தானாக எழக் கற்றுக்கொள்ளாது; தாயின் உதவிக்காகவே காத்திருக்கும். இதுதான் இன்று விவசாயத் துறையிலும் நடக்கிறது.
இன்றைக்கு விவசாயத் துறையில் லாபம் குறைவாக உள்ளது அல்லது இல்லை என்பது உண்மைதான். ஆனால், இதேபோலத் நஷ்டத்தைச் சந்திக்கும் வேறு பல துறைகளும் இருக்கின்றனவே! அவர்கள் நஷ்டமடைந்தால், ஒன்று அந்தத் தொழிலை விட்டு விலகுகிறார்கள்; அல்லது எங்கே தவறு நடந்தது என்று கவனித்து அதைச் சரிசெய்கிறார்கள்.
ஆனால், விவசாயிகள் அப்படிச் செய்வதில்லை. காரணம், ஒவ்வொரு வருடமும் அவர்களுடைய நஷ்டத்தை அரசு ஏதோ ஒரு வகையில் ஏற்றுக்கொள்கிறது. அதனால், "நஷ்டம் அரசுக்குத்தானே!" என்ற அலட்சியத்தில் அவர்களும் தொடர்ந்து அதே தவறான முறையிலேயே பயணிக்கிறார்கள்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுப்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால், அவர்களுக்கு எவ்வளவு தேவை என்று கணித்து, அவ்வளவு யூனிட் மட்டும் கொடுத்தால் போதும். ஆனால் முற்றிலும் இலவசம் என்று கொடுத்தால் அது விரயத்தில்தான் போய் முடியும்.
மானிய விலையில் உரங்கள் தருவதும், குறைந்த வட்டியில் கடன் வழங்குவதும் கூட தேவையானவைதான். ஆனால், வாங்கிய கடனை மொத்தமாகவே தள்ளுபடி செய்வது என்ன நடைமுறை?
உண்மையில் இது பல முறைகேடுகளுக்கே வழிவகுக்கிறது. இப்போது நிலைமை எப்படி இருக்கிறது என்றால், ஒரு விவசாயிக்குப் பணம் தேவைப்படுகிறதோ இல்லையோ, வருடாவருடம் நகையையோ நிலத்தையோ அடமானம் வைத்து முடிந்த அளவு கடன் வாங்கி வைப்பதுதான் புத்திசாலித்தனம் என்றாகிவிட்டது. அரசு கடனைத் தள்ளுபடி செய்யும்போது, அது எவ்வளவு குறைந்த தொகையாக இருந்தாலும் விவசாயிக்கு லாபம்தானே? இதுவொரு வருடாந்திர நோயாகவே மாறிவிட்டது.
வறுமையில் இருக்கும் மனிதர்களுக்கு உதவி செய்வது அரசின் கடமை. அவர்கள் எந்தத் துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அரசு உதவி செய்ய வேண்டும்; இயற்கை பேரிடர் காலங்களில் உதவுவதும் தவறில்லை. ஆனால், ஒருவன் தினமும் கையேந்தினால் அவனுக்குப் பிச்சைக்காரன் என்று பெயர். இதுவரை இருந்த அரசுகள் வாக்கு அரசியலைக் மனதில் வைத்து இப்படி ஒரு நிலையை உருவாக்கிவிட்டன. இந்த நோய்க்கும் உடனடியாக மருந்து தேவை.
புதிதாக வந்துள்ள தவெக அரசும் அதே பாதையில்தான் செல்கிறது. விஜய் அரசு நேர்மையாகச் இருக்கலாம், ஊழல்கள் குறையலாம். ஆனால், இதுவொரு திறமையான அரசாக இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. அதற்கு இன்னும் காலம் எடுக்கலாம்.
அதாவது, இன்றைய அரசியல்வாதிகள் அவ்வளவு சீக்கிரம் திருந்தமாட்டார்கள்; மாற்றங்கள் படிப்படியாகத்தான் நடக்கும். எனவே, நானும் அந்த நம்பிக்கையில் சில யோசனைகளை இங்கே எழுதி வைக்கிறேன்.
விவசாயக் கடன் தள்ளுபடி என்ற வருடாந்திரத் தலைவலியை எப்படித் தீர்க்கலாம்?
இப்போது ரேஷன் அட்டைகளில் பல நிறங்கள் இருப்பது போல, விவசாயிகளுக்கும் கொண்டு வரலாம். தற்போது விவசாயிகள் தரம் பிரிக்கப்பட்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை; இல்லையென்றால் அதைச் செய்வது நல்லது. கார், ஏ.சி போன்ற வசதிகள் வைத்திருப்பவர்களுக்கும் இந்தத் தள்ளுபடி பொருந்துமா என்று தெரியவில்லை.
1000 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் (சட்டசபையில் சொன்னாங்கப்பா) கே.என். நேரு போன்றவர்கள் கூட இந்தத் தள்ளுபடி சலுகையை அனுபவிக்கக் கூடும். அல்லது, "என் பெயரில் எதுவுமே இல்லை; வங்கியில் பத்தாயிரம் ரூபாய் மட்டும்தான் இருக்கிறது" என்று ஸ்டாலினைப் போலக் கணக்குக் காட்டலாம். ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த சொத்தைக் கணக்கிட்டு, அதனடிப்படையில் ஏழை விவசாயிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு மட்டும் உதவி செய்யலாம்.
அல்லது, யார் நிஜமாகவே கஷ்டத்தில் இருக்கிறார்களோ, அவர்கள் மட்டும் விண்ணப்பித்துக் கடன் தள்ளுபடி கோரும் வகையில் விதிகள் இருக்கலாம். அதை அரசு உளவுத்துறை மூலம் சரிபார்க்கலாம். ஆனால் அங்கேயும் நம்ம அரசு ஊழியர் ஒருவன் இருப்பான். லஞ்சம் பெற்றுக்கொண்டு, "இந்த ஆள் ஏழைதான், நான் என் மூன்று கண்ணால் பார்த்தேன்" என்று சான்றிதழ் கொடுப்பான். இருந்தாலும் இப்படி ஏதாவது ஒரு நிபந்தனை இருப்பது நல்லது.
முக்கியமாக கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நபர்களின் புகைப்படங்கள் மற்றும் முகவரியோடு, "இவரது (ரூ. 50,000) கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது" என்று அவர்கள் வசிக்கும் பகுதிகளில் தகவல் பலகை வைத்தால் அது இன்னும் சிறப்பு.
இங்கேதான் ஒரு தியரி வேலை செய்ய ஆரம்பிக்கும். ஒருவனுக்கு நண்பர்கள் இல்லாமல் இருக்கலாம்; ஆனால் எதிரி நிச்சயம் இருப்பான். நாம் தெரியாமல் செய்த சில செயல்கள் சிலரைக் காயப்படுத்தியிருக்கலாம் அல்லது நாம் வளர்வது சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம்.
அப்படிப்பட்டவர்கள் இந்தத் தகவல் பலகையைப் பார்க்கும்போது, "இவன் போன மாதம்தானே BMW கார் வாங்கினான் / வீடு கட்டினான் / நிலம் வாங்கினான்! இவன் ஏழை விவசாயியா? இவனுக்குக் கடன் தள்ளுபடியா?" என்று கொதித்தெழுவார்கள்; அரசுக்கு மொட்டைக் கடிதம் அனுப்புவார்கள். அப்போது இந்த 'போலி ஏழை' விவசாயிகளின் சாயம் வெளுக்கும்.
அப்படி அவர்கள் பணக்காரர்களாக இருப்பது உறுதியானால், அவர்களின் சொத்துக்களைப் பறித்து நிஜமாகவே அவர்களை ஏழை விவசாயியாக மாற்ற வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற வருடாந்திர பிச்சை எடுக்கும் முறை ஒழியும்.
முக்கியமாக, விவசாயக் கடன் தள்ளுபடி கோரிப் போராடும் தலைவர்களின் குடும்பச் சொத்து விவரங்களை நோண்டினால் பல உண்மைகள் வெளியே வரலாம்.
மொத்தத்தில், இந்த விவசாயிகளும் அப்பாவி வேஷம் போட்டுகொண்டு நியாயமில்லாத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆட்டோக்காரர்கள் வகையறாதான்!

0 comments:
Post a Comment