!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Monday, September 14, 2026

இடைத்தேர்தல் காமெடிகள்

இந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்கள் பலரை அழ வைக்கப்போகின்றன.

ஏற்கனவே அதிகாரத்தை இழந்து, ஊழல்கள் வெளிவந்து அவமானத்தில் திமுகவினர் கத்திக் கதறிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒருவன் அநாகரிகமாகப் பேச ஆரம்பித்துவிட்டான் என்றால், அதற்கு ஒரே அர்த்தம்தான்—அவர்களுக்கு எங்கேயோ வலிக்கிறது. அந்த வலியைத் தாங்க முடியவில்லை; திருப்பி அடிக்கவும் முடியவில்லை. இது போன்ற நேரங்களில் வார்த்தைகளால் எதிரியை ஆபாசமாகத் திட்டி மனசாந்தி அடைய வேண்டியதுதான். அதுதான் திமுக தலைவர்களின் ஆபாசப் பேச்சுக்குக் காரணம்.

இந்தப் பக்கம் விஜய் இன்னமும் புதுமாப்பிள்ளையாக ஜாலியாக எதிரிகளை நக்கலடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப் புதுமாப்பிள்ளையையும் இப்போதைக்குக் கட்டுப்படுத்த முடியாது.

ஒரு வருடத்திற்கு விஜய் செய்யும் குறும்புத்தனத்தையும் கொழுப்பையும் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொள்ள வேண்டும்; வேறு வழியில்லை. அதே அளவுக்கு திமுக தலைவர்களின் கதறலுக்கும் காதில் பஞ்சை வைத்துக்கொண்டு, “இப்படி எதையாவது கத்தி உன் மனதைத் தேற்றிக்கொள்” என்று ஒதுங்க வேண்டும்.

அதன்பின்தான் விஜய்க்கு அந்த ஹேங்ஓவர் (Hangover) போய், “தான் ஒரு முதல்வர்; இனி கொஞ்சம் நாகரிகமாகப் பேச வேண்டும்” என்பது உறைக்கும். திமுகவினருக்கு இது வெறும் தோல்வி அல்ல; திராவிடக் கட்சிகளுக்கு முடிவுரை என்பதும் புரியும். அதன்பின் என்னவாகும்? நிச்சயம் ஏதாவது ஒரு புதுத் தலைவலி வந்திருக்கும்; அதை அப்போது கவனிப்போம்.

இனி இடைத்தேர்தல்:

இந்தத் தேர்தல் எல்லாக் கட்சிகளின் வாக்கு வங்கியையும் வெளிச்சம் போட்டுக் காட்டப்போகிறது. அநேகமாகப் பதிவாகும் வாக்கு சதவீதம் 93.5-ஐத் தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதில் 50%-க்கும் மேல் தவெக கைப்பற்றலாம். திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் வாக்கு வங்கியும் 15%-க்கும் கீழே போகலாம். அது அவர்களுக்கு இன்னும் அவமானமாக இருக்கும்.

தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கவும் முடியாது. திமுக ஒதுங்கினால், “ஓடிவிட்டார்கள்” என்ற அவப்பெயர்; அதிமுகவிடம் கூட்டணி என்றால், அது அதைவிடக் கேவலமாக அரசியலாக்கப்படும். மொத்தத்தில் நாலாபக்கமும் திமுகவுக்குக் கண்ணிவெடியாக இருக்கிறது.

அதிமுகவைப் பொறுத்தவரை, தேர்தல் வெற்றி என்பது தலைமை + சின்னம் + பிற கட்சித் தலைவர்களின் செல்வாக்கு + வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கு என்ற கலவைதான். எனவே, அங்கே அதிமுக முந்தைய தேர்தலில் வாங்கிய வாக்குகளில் 75%-ஐத் தக்கவைத்தால், அதுவே அவர்களுக்கு வெற்றி. ஆனால், அங்கே வாங்கிய வாக்குகளில் பாதி குறையக்கூடும்.

நாம் தமிழரும் இடதுசாரிகளும், “திராவிடக் கட்சிகள் அசிங்கப்படுவதை எங்களால் பார்க்க முடியவில்லை; எனவே நாங்களும் உங்களோடு சேர்ந்து அசிங்கப்படுகிறோம்” என்று களத்தில் குதித்திருக்கிறார்கள்.

ஆனால், இவர்களை விட ரொம்பவே அதிர்ச்சியில் இருப்பவர்கள் இந்தத் தொகுதிகளின் வாக்காளர்கள்தான். காரணம், இந்த முறை காசு கொடுப்பார்களா என்பது சந்தேகம்தான். தங்கள் வாக்கு வங்கியை நிரூபிக்க இந்த இரண்டு கழகங்களும் பணத்தை இறைக்கத் தயாராக இருப்பார்கள்; ஆனால், ஏற்கனவே மக்கள் பணத்தை வாங்கிக்கொண்டு அல்வா கொடுத்த நிலையில், இனி அவர்கள் பணத்தை இறைப்பது சந்தேகம்தான்.

காவல்துறையும் விஜய் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, பணத்தைக் கொண்டுபோவதும் கொடுப்பதும் சிரமம். தலைவர்களுக்கு வேண்டுமானால் இது கௌரவப் பிரச்சினையாக இருக்கலாம்; ஆனால், கீழ்மட்டத் தலைவர்கள், “எதற்கு இந்த பலனில்லாத செலவு?” என்று தலைமை கொடுத்த பணத்தைச் சுருட்டும் வாய்ப்பு அதிகம்.

இதுவரை வாக்காளர்களைத் தேடிப்போய்ப் பணம் கொடுத்த நிலை மாறி, இந்த முறை வாக்காளர்களே வந்து, “யோவ்... கொடுக்கிறதைக் கொடுய்யா... சத்தியமா உனக்குத்தான் ஓட்டு போடுவேன்” என்று கெஞ்சும் நிலை வந்தாலும் வரலாம்.

தமிழக அரசியல் மாற வேண்டும் என எதிர்பார்த்திருப்போம். ஆனால், இப்படித் தடாலடியாக மாறியது ஆச்சரியம்தான்.

நடப்பதெல்லாம் நன்மைக்கே!

0 comments:

Post a Comment