!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Wednesday, September 30, 2026

சவுக்கு சங்கருக்கு தண்டனை; நீதிபதிகளும் எல்லை மீறுகிறார்கள்

சவுக்கு சங்கருக்கு ஒரு அவதூறு வழக்கில் 3 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பு வந்திருக்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால் நீதி நிலைநாட்டப்பட்டது போல் தெரியும். ஆனால் ஆழ்ந்து கவனித்தால், நீதித்துறையின் பல தீர்ப்புகள் அபத்தமாக இருப்பதும் புரியும்.

உண்மையில், இது போன்ற தீர்ப்புகளை நான் குறை சொல்லமாட்டேன். இது நல்லதுதான். ஆனால் அவை விரைவாக வர வேண்டும்; அதேசமயம் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். அந்த நடைமுறை நீதித்துறையில் கிடையாது.

ஒரு கதை படித்தேன். உண்மை சம்பவமாகவும் இருக்கலாம். ஒருவன் மிகக் கொடிய குற்றம் செய்து, அதற்காக கைது செய்யப்பட்டு தூக்குத் தண்டனை பெறுகிறான். சட்ட நடவடிக்கை பல மட்டங்களில் நீண்ட காலமாக நடந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் சிறையில் நிறையப் படித்து, பல மனிதர்களோடு பழகி, அவன் தன் தவறை உணர்ந்து மனிதனாக மாறுகிறான்.

ஆனால் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டுமல்லவா? அந்த நபர் தூக்கில் போடப்படுகிறான். அப்போது அந்த ஜெயிலர், ‘ஒரு மிருகத்தை இங்கே அடைத்தார்கள்; இப்போது ஒரு மனிதனைத் தூக்கில் ஏற்றுகிறார்கள்’ என்று பதிவு செய்தாராம்.

இந்த வழக்கில் அந்த சன் டிவி மகாலட்சுமி பிரச்சினை குறித்து அப்போதே சவுக்கு இணையதளத்தில் படித்திருக்கிறேன். நீண்ட காலம் ஆகிவிட்டதால் முழு விவரம் ஞாபகத்தில் இல்லை. அதன் பிறகு, யூடியூப் பிரபலமான பிறகு, வேறு ஒருவரின் காணொளியில் சவுக்கு சங்கர் அந்தச் சம்பவம் குறித்து பேசியதைக் கவனித்தேன்.

‘நான் மகாலட்சுமி விஷயத்தில் எல்லை மீறிவிட்டேன். அப்படி நான் எழுதியிருக்கக் கூடாது’ என்று வருத்தம் தெரிவித்திருந்தார். இந்த வருத்தத்தை நீதிமன்றத்தில் சொன்னாரா என்று தெரியவில்லை. அநேகமாகச் சொல்லியிருக்கலாம்.

ஆவேசத்தில் மனிதர்கள் தடுமாறுவது இயற்கை. செய்த தவறை உணர்ந்து, வருந்தி, மீண்டும் அதுபோன்ற தவறுகளைச் செய்யவில்லை என்றால், அதை ஒரு நல்ல மாற்றமாகக் கருத்தில் கொண்டு குறைந்த தண்டனை கொடுத்திருக்க வேண்டும். இந்தத் தீர்ப்பில் அவருக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கான விளக்கம் இல்லை. எனவே, இந்தத் தண்டனை காவல்துறை மற்றும் நீதித்துறையை எதிர்ப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை என்றுதான் கருத வேண்டும்.

இது நீதிபதிகளின் வேலையா? சங்கர் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளைக் கடுமையாக விமர்சிப்பதால் அவர்களின் கைங்கர்யமா? அல்லது விஜய் அவர்களின் வலது, இடது கரங்களையும் இவர் கடுமையாகத் தாக்குவதால், இது அவர்களின் வேலையா? இப்போதைக்குத் தெரியவில்லை.

மொத்தத்தில், கொஞ்சம் தைரியமான ஊடகவியலாளர்கள் உருவானால், அவர்களை உடனடியாக நசுக்கும் முயற்சிதான் இது.

அது காவல்துறையாக இருந்தாலும், நீதித்துறையாக இருந்தாலும் அல்லது யாராக இருந்தாலும் சரி, அவர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான். ஆணவத்தில் ஆடும் எல்லா சாம்ராஜ்யங்களும் ஒரு கட்டத்தில் வீழ்ந்துதான் ஆக வேண்டும். திராவிட ஆட்சிகள் மட்டுமின்றி, இந்தியாவிலும் உலகம் முழுவதும் சொல்வதற்கு எவ்வளவோ உதாரணங்கள் இருக்கின்றன.

அது ஆட்சியாளர்களுக்கு மட்டும்தான் பொருந்தும், காவல்துறைக்கும் நீதித்துறைக்கும் பொருந்தாது என்று நினைக்காதீர்கள். எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் இயற்கை பாடம் கொடுக்கும்.

இனி இந்த வழக்கு குறித்த சில முரண்பாடுகள்.

ஏற்கனவே சில பதிவுகளில் எழுதியிருக்கிறேன். நீதிபதிகள் தீர்ப்பு எழுதும் முன் நிமிர்ந்து பார்ப்பார்கள். எதிரே இருப்பவன் அதிகாரம் உள்ள அரசியல்வாதியாகவோ, பணம் படைத்தவனாகவோ இருந்துவிட்டால், இதுபோன்ற தீர்ப்புகள் எப்போதும் வராது. ஏழையாக, பலமில்லாதவனாக இருந்தால்தான் இந்த நீதிபதிகளுக்கு தீர்ப்பு எழுதும் தைரியம் வரும்.

நான் தினமும் செய்திகளைக் கவனிக்கிறேன். இதுவரை ஏதாவது ஒரு அரசியல்வாதி அல்லது பணம் படைத்தவர் இதுபோன்ற வழக்குகளில் தண்டனை, அதுவும் அதிகபட்ச தண்டனை பெற்றதாக வரலாறு இருக்கிறதா? யாராவது கவனித்திருந்தால் சொல்லுங்கள்.

அடுத்தது, இதுபோன்ற வழக்குகளில் அப்படி என்ன புடலங்காய் விசாரணை இருக்கிறது? எழுதப்பட்ட கட்டுரைகளும், பேசப்பட்ட ஆடியோக்களும் மட்டும்தானே ஆதாரம்? அதை கவனித்து தீர்ப்பு சொல்வதற்கா 10 வருடங்கள் ஆகும்?

அமீர் vs. ஞானவேல் ராஜா (பருத்தி வீரன்) வழக்கில் தீர்ப்பு வந்துவிட்டதா? அது இதைவிடப் பழைய வழக்கு.

மொத்தத்தில், இங்கே வழக்குகள் ஒரு ஆயுதம். யாரையும் தண்டிக்கும் நோக்கம் காவல்துறைக்கும் இல்லை, நீதிமன்றத்துக்கும் இல்லை. அவர்களை எதிர்த்தால், சட்டம் தன் வேலையைச் செய்யும். அவ்வளவுதான்.

ஒரு பதிவை எழுதியாகிவிட்டது. இவர்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை. இருந்தாலும் சில யோசனைகள் சொல்லிவிடுகிறேன்.

பொதுவாக, மற்ற அரசு ஊழியர்கள் 30-35 வருடங்கள் வேலை செய்தால்தான் ஓய்வூதியம் வரும். ஆனால் உயர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் வானத்திலிருந்து குதித்தவர்கள். இவர்களுக்கு 10-15 வருடங்கள் பணியில் இருந்தாலே ஓய்வூதியமும் இன்ன பிற சலுகைகளும் வந்துவிடுகின்றன.
இது நல்ல நடைமுறைதான். நீதியரசர்கள் வயதானவர்களாகவும், அனுபவசாலிகளாகவும் இருப்பது நல்லதுதான். ஆனால் அவர்கள் நேர்மையான, திறமையான நீதியரசர்களாக இருந்திருந்தால், இந்தக் கேள்வி வராது. அவர்கள் அப்படி இல்லை என்பதுதான் இந்தியாவின் துரதிருஷ்டம்.

அதேசமயம், இவர்களுக்குக் கடிவாளம் போடாத அரசியல்வாதிகள், அப்படிப்பட்ட அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுத்த மக்கள் எனப் பழி எல்லோர் மீதும் விழும். இங்கே எல்லோரும் குற்றவாளிகள். ஜனநாயகம் இருக்கிறது. அது மெல்ல மெல்ல வேலை செய்யும் என நம்பலாம்.

இப்படி செய்யலாம்.

“இந்த நீதியரசர்கள் ஓய்வு பெற்ற பிறகு, சில ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு கொடுத்து, இதுபோன்ற வழக்குகளை விசாரிக்கும் வகையில் ஒரு சிறப்பு அமைப்பை உருவாக்க வேண்டும்.”

ஏற்கனவே சில இடங்களில் நடைமுறையில் இருக்கிறது என்று நினைக்கிறேன். இந்த அவதூறு வழக்குகளை நேரடியாகவே இந்த ஓய்வுபெற்ற நீதியரசர்களுக்கு அனுப்பிவிட வேண்டும். அதுவும் குறைந்தது இரண்டு பேர் கொண்ட அமர்வாக இருப்பது நல்லது.

அவர்களிடம் அனுபவம் இருக்கும். எங்கே மன்னிக்க வேண்டும், எங்கே தண்டிக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். அது மட்டுமின்றி, மிக விரைவாக, 6 மாதத்திற்குள் இவற்றை முடிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்தால், எல்லோரும் மாட்டுவார்கள்.

அப்படிப்பட்ட ஒரு அமைப்பு இருந்து, இதுபோன்ற வழக்குகள் விரைவாக முடிக்கப்பட்டால், இதுபோன்ற குற்றங்கள் குறையும். நானும் தேவையில்லாமல் இப்படி ஒரு பதிவு எழுதும் அவசியம் இருக்காது.

ஏதாவது செய்யுங்கள்.

0 comments:

Post a Comment