!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Wednesday, October 14, 2026

என்னது, 35 ரூபாய்க்கு ஒரு யூனிட்டா? இதை நான் எதிர்பார்த்தேன்!

சில மாதங்களுக்கு முன்பு நான் எழுதிய ஒரு பதிவில் உள்ள சில வரிகள்.

( நிர்மல்குமார் சட்டம் படித்திருக்கிறார் போலிருக்கிறது; ஏதோ பேருக்குப் படித்திருக்கிறார். இன்ஜினியரிங், ஆர்ட்ஸ் என இன்னும் சில படிப்புகளும் வருகின்றன. கொஞ்சம் விட்டால் ஐஏஎஸ் முடித்து, ஐபிஎஸ் டிரெயினிங் கூட போயிருப்பார் போலிருக்கிறது!

அளவோடு சாப்பிட வேண்டும்; அளவுக்கு மீறிச் சாப்பிட்டால் அது நம்மை மந்தமாக்கிவிடும். எனவே, இப்படி அதிகம் படித்தவர்கள் கூடக் கொஞ்சம் மந்தமாகத்தான் இருப்பார்கள் போல. அதனால்தான் இவர் நிர்வாகத்தில் சொதப்புகிறார். அமைச்சர் கீர்த்தனாவைப் போல் இவரும் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவார் என்று நினைக்கிறேன். எனவே, இவருக்கு இந்தத் துறையில் நிறைய ஆலோசகர்கள் தேவைப்படுவார்கள். அந்த வகையில், அவருக்குச் சரியான ஆலோசனை வழங்காத அதிகாரிகளும் குற்றவாளிகளே! )

இங்கே என் கணிப்பு பலித்ததற்காகச் சந்தோஷப்படவில்லை. வருத்தம்தான். அவர் மீது அல்ல; இன்னமும் படித்தவன் அறிவாளி என்று நினைக்கும் மக்கள் மீதுதான். துரதிர்ஷ்டவசமாக, விஜய்யும் இதில் சிக்கிக்கொண்டார். ஒரு துறையையே இவர் ஒழுங்காகச் சமாளிக்கமாட்டார். அப்படிப்பட்டவரிடம் பல முக்கியமான துறைகளை விஜய் கொடுத்திருக்கிறார்.

விரைவில் அமைச்சரவை மாற்றம் வரலாம். முதலில் பவுடர் அமைச்சரைத் தூக்க வேண்டும்; அதன் பிறகு பலர் மாற்றப்படலாம். ஆனால், நிர்மல்குமாரைச் சட்டத்துறை மற்றும் மின்துறையிலிருந்து மாற்றினால் நன்றாக இருக்கும். கூடுமானவரை, அவருக்கு விருப்ப ஓய்வு கொடுப்பதுகூட நல்லது. எழுதி வைத்துக்கொள்ளுங்கள். அவர் மீண்டும் ஏதாவது ஒன்றில் சொதப்புவார்.

சில மாதங்களுக்கு முன்பு, திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களை இவர் விடுவித்தார். ஆனால், அந்த இடங்களுக்குப் புதியவர்கள் நியமிக்கப்பட்டார்களா என்பதை அவர் கவனிக்கவில்லை. அது நீதிமன்றத்தில் கண்டனத்துக்குள்ளானது.

இப்போது மின்துறையிலும். இவரை இப்படியே விட்டால், இது இன்னும் தொடரும். இவர் ஊழலில் ஈடுபடாமல் இருக்கலாம்; ஆனால், சொதப்பல் மன்னனாக இருக்கிறார். ஊழல் எப்படி ஆபத்தானதோ, அதே தலைவலிதான் திறமையற்ற நிர்வாகமும். இரண்டுமே எப்படியாவது அரசுக்குப் பண இழப்பை ஏற்படுத்தும்.

அதேசமயம் அவரை மட்டும் குறை சொல்வதிலும் அர்த்தமில்லை. இங்கே அடுத்த குற்றவாளிகள் அதிகாரிகள். சட்டத்துறையிலும் இதேதான் நடந்தது. என்னதான் அமைச்சர் என்றாலும், பல நிர்வாக நடைமுறைகளைப் புரிந்துகொள்ள அவருக்குச் சில வருடங்கள்கூட ஆகலாம். அதுவரை அமைச்சர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டியவர்கள் அதிகாரிகள்தான்.

அமைச்சர் ஒரு ஃபைலில் கையெழுத்துப் போடுகிறார் என்றால், அதன் பக்கவிளைவுகள் என்ன என்பதை அவருக்கு அதிகாரிகள் புரியவைக்க வேண்டும்.

விஜய் வந்த பிறகு அதிகாரிகளின் வருமானம் போய்விட்டதால் அவர்களும் கடுப்பில் இருக்கிறார்கள். அல்லது, அவர்கள் திராவிட அதிகாரிகளாக இருக்கலாம். விஜய் ஆட்சியில் தவறுகள் நடக்க வேண்டும்; அதன் மூலம் ஆட்சி கவிழ வேண்டும்; அப்போதுதான் தங்களுடைய வசந்த காலம் மீண்டும் வரும் என்று கனவு காண்கிறார்கள்.
 
இங்கே அதிகாரவர்க்கம் திறமையாக இருந்தால், இந்த அதிகாரிகளைச் சுளுக்கு எடுத்துவிடலாம். ஆனால், தற்போது விஜய் உட்பட எல்லோருமே அப்ரண்டீஸ்களாக இருக்கிறார்கள். இவர்கள் எப்போது அரசியல் கற்று, எப்போது வளர்ச்சியைக் காட்டி... தலை சுத்துது!

சரி, இருந்தாலும் சில விஷயங்களைச் சொல்லி வைப்போம்.

மின் பற்றாக்குறையும் தண்ணீர்ப் பஞ்சமும் இனி அடிக்கடி வரலாம். எனவே, எல்லா மின் மீட்டர்களையும் ரீசார்ஜ் செய்யக்கூடிய மீட்டர்களாக மாற்றுவது ஒரு நல்ல நடைமுறையாக இருக்கும். தற்போது ஸ்மார்ட் மீட்டர் என்று சொல்கிறார்கள். அதிலேயே இன்னும் சில வசதிகளைப் புகுத்தலாம்.

ஆப்பிரிக்கர்கள் இந்த விஷயத்தில் நம்மைவிட முன்னேறியிருக்கிறார்கள். அங்குள்ள பல ஆப்பிரிக்க நாடுகளில் இதுபோன்ற நடைமுறைகள் இருக்கின்றன. அதாவது, மொபைலுக்கு ரீசார்ஜ் செய்வதுபோல் மின் யூனிட்டுகளையும் ரீசார்ஜ் செய்கிறார்கள்.

ஒரு காலத்தில் நாம் மொபைல் கடைகளில் 10, 50 ரூபாய் ரீசார்ஜ் கார்டுகளை வாங்கி மொபைலில் பணம் ஏற்றினோம். அதேபோல், ஆப்பிரிக்காவில் கடைகளில் மின்சார ரீசார்ஜ் கார்டுகளை வாங்கி, அதில் உள்ள குறியீட்டைப் பயன்படுத்தி மின் யூனிட்டுகளை வாங்குகிறார்கள். நீங்கள் வாங்கிய கார்டின் மதிப்பின் அடிப்படையில் யூனிட்டுகள் உங்கள் கணக்கில் ஏறிவிடும். அதாவது, கையில் காசு இல்லையென்றால், இரண்டு நாட்களுக்குத் தேவையான யூனிட்டுகளைக்கூட நீங்கள் வாங்கிக்கொள்ளலாம்.

அங்கேயும் மின் பற்றாக்குறை இருப்பதால், நீங்கள் அதிக யூனிட்டுகளைப் பயன்படுத்தினால் கட்டணம் உயர்ந்துகொண்டே போகும்.

இந்தியாவிலும் அது தேவை. எப்படி, வருடத்துக்கு 12 கேஸ் சிலிண்டர்கள்தான் மானியத்தில் என்று இருக்கிறதோ, அதேபோல் தமிழ்நாட்டில் ஒரு குடும்பத்துக்கு மாதத்துக்கு இவ்வளவு யூனிட்டுகள்தான் ஓரளவு நியாயமான விலையில் கொடுக்க முடியும் என்று நிர்ணயிக்கலாம். அந்த இலக்கு முடிந்தவுடன், அதற்கு மேல் நீங்கள் பயன்படுத்த வேண்டுமானால், கடைகளில் விற்கும் ரீசார்ஜ் கார்டுகளை வாங்கிக்கொள்ளுங்கள்; ஒரு யூனிட் 37 ரூபாய்தான் என்று சொல்லிவிடுங்கள். அதன்பிறகு, 150 யூனிட்டுகளில் இரண்டு மாதங்களுக்குக் இந்த குடும்ப தலைவர்கள் குடும்பத்தை ஓட்டுவார்கள்.

இந்தப் பற்றாக்குறைக்கு நிர்வாகத் திறமையின்மை ஒரு காரணமாக இருந்தாலும், மிக முக்கியமான காரணம் மக்களின் அலட்சிய மனநிலைதான். அரசாங்கம் இலவசமாகக் கொடுக்கிறது; எனவே, விரயமாக்குகிறார்கள். என்னிடம் பணம் இருக்கிறது; எனவே, அது எனக்குப் பொருட்டில்லை என்று நினைக்கும் மக்களும் இருக்கிறார்கள். ஆனால், இங்கே அரசு கூடுதல் விலைக்கு மின்சாரத்தை வாங்கிக் குறைந்த விலையில் தருவதால், அதன் உண்மையான வலியை மக்கள் உணர்வதில்லை.

அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில், “நாமா பில் கட்டப்போகிறோம்?” என்ற எண்ணத்தில் அங்கே மின்சாரம் விரயமாவதைக் கவனிக்காமல் இருப்பவர்களும் இருக்கிறார்கள். இதுவும் ஒரு தலைவலி.

இது ஒரு மிகப்பெரிய வியாதி. வலியை உணராத மனிதன் எந்தக் காலத்திலும் மருந்தை உட்கொள்ளமாட்டான். எனவே, நல்ல அரசு தேவையான இடங்களில் இலவசங்களையும், சில அவசியமான இடங்களில் வலியையும் மக்களுக்கு கொடுக்க வேண்டும். ஆனால், இங்கே நடப்பது எல்லாமே தலைகீழ்.

அதைவிட முக்கியமாக, ஒரு மென்பொருளை உருவாக்கி, தினசரி மின் பயன்பாட்டை நம் மொபைலிலேயே தெரிந்துகொள்ளும் வசதியும் தேவை. ஒரு காலத்தில் மொபைலில் பேலன்ஸ் பார்த்துவிட்டு, அவசியமான போன்களை மட்டுமே செய்வோம். அதுபோல் ஒரு நடைமுறை இதிலும் இருந்தால், மக்கள் தங்களுடைய மின் பயன்பாட்டைக் கவனிப்பார்கள். “இந்த மாதம் பயன்பாடு அதிகமாக இருக்கிறது; அனாவசியமான பயன்பாட்டைக் குறைப்போம்” என்று யோசிக்கலாம்.

ஆனால், அதைவிட மிகப்பெரிய தலைவலி இந்த நிர்மல் குமார் போன்றவர்கள்தான். டெல்லியில் தர்மேந்திர பிரதான் போன்றவர்கள் அறிவாளிகளாக சித்தரிக்கப்பட்டார்கள். கடைசியில் அவர் கதி என்ன ஆயிற்று? அதேதான் இவர் விஷயத்திலும் நடக்கும்.

நிர்மல் குமாரிடம் எந்த அமைச்சரவையை கொடுத்தாலும் அங்கே ஒரு தலைவலி வரப்போவது நிச்சயம். எனவே முதலில் இந்த அமைச்சரைத் தூக்குங்கள்!

0 comments:

Post a Comment