ஜெயிலர் படம் குறித்த முகநூல்வாசிகளின் விமர்சனங்கள் இன்னமும் என் பக்கத்தில் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு வாரம் ஆகியும் இந்த நிலைமை. அந்த அளவுக்கு அவற்றைப் படித்தேன். நிஜத்தில் நானும் முதல் நாள் முதல் ஷோ விமர்சனங்களைப் படித்துவிட்டு, இங்கே அகமதாபாத்தில் போய்ப் பார்க்கலாம் எனத் தியேட்டர்களைத் தேடினேன்.
விமர்சனங்களை நம்பித் தியேட்டருக்குச் சென்று, நான் கடைசியாக இங்கே பார்த்த படம் விக்ரம். அந்தப் படம்கூட எனக்குச் சுமாராகத்தான் தெரிந்தது.
இந்த முறையும் அதே சந்தேகம். முதல் சில நாட்கள் ரஜினி ரசிகர்களின் அலப்பறை அதிகமாக இருக்கும். ரஜினி இரண்டு கால்களால் நடந்து வந்தார், கையால் சிகரெட் பிடித்தார் என்றெல்லாம் இமாலயச் செய்திகளைச் சொல்வார்கள். ஊடகங்களைக் கேட்கவே வேண்டாம். பெரிய நடிகர் என்றால் எதற்கு வம்பு என்று அவர்களும் அப்படியே சொல்லிவிடுவார்கள். எனவே தவிர்த்தேன். அடுத்த சில நாட்களில் வந்த மேலும் சில விமர்சனங்களைப் படித்த பிறகு, படம் பார்க்கும் எண்ணம் போய்விட்டது.
இனி சில பழங்கதைகள்.
நான் ரஜினி ரசிகன் இல்லை. இந்த FDFS பழக்கமெல்லாம் எனக்குக் கிடையாது. ஆனால், 20 வருடங்களுக்கு முன்புவரை ரஜினி படத்தைத் தவறவிட்டதில்லை. மற்ற படங்களுக்கு விகடனில் விமர்சனம் படிப்பேன்; பலரிடமும் கருத்துக் கேட்பேன். ஆனால், ரஜினிக்கு அந்த ஃபில்டர் கிடையாது. முதல் சில நாட்களைத் தவிர்த்து, எப்படியும் பார்த்துவிடுவேன். அதிலும் நான் பிளாக்கில் டிக்கெட் வாங்கிப் பார்த்த படம் என்றால், அது ரஜினி படமாகத்தான் இருக்கும். காரணம், ரஜினி படம் போரடிக்க வாய்ப்பே இல்லை. எப்படியும் காசு செரித்துவிடும்.
ஆனால், காலம் மாறும்; மனிதர்களும் மாறுவார்கள். ரஜினியும் விதிவிலக்கல்ல. இந்த மாற்றம் அவருடைய திருமணத்துக்குப் பிறகோ, பணம் கொட்ட ஆரம்பித்த பிறகோ வந்திருக்க வேண்டும். அதற்கு முன்புவரை ரஜினியின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தால், அதிகம் குறை சொல்ல முடியாத ஓர் எதார்த்தமான மனிதர் என்ற பிம்பம்தான் தெரியும்.
ஆனால், 80-களில் அவர் வெற்றிக்கோட்டைத் தொட்ட பிறகு, அவருடைய பாணி மாற ஆரம்பித்துவிட்டது. இதே சமயத்தில் அவருக்குத் திருமணமும் நடந்ததால், அவருடைய மனைவி அவருக்குப் பொருளாதார ஆலோசகராக மாறியிருக்கலாம்.
வெற்றியும் மனைவியும் வந்த பிறகு, 80-களில் மட்டும் தொடர்ந்து சில தயாரிப்பாளர்களின் படங்களில் நடித்தார்.
90-களுக்குப் பிறகு, அவருடைய தயாரிப்பாளர்கள் மாறிக்கொண்டே இருந்தார்கள். யாராவது கால்ஷீட் கேட்டால், 'தேதி இல்லைங்க...' என்று மட்டும் சொல்லாமல், 'ஒரு கோடி கொடுக்கிறேன்னு ஒரு தயாரிப்பாளர் சொன்னார்; அவருக்கே கால்ஷீட் கொடுக்க முடியல' என்று ஒரு பிட்டையும் போட்டிருக்கக்கூடும். இந்தக் மறைமுக குறியீட்டை புதிய தயாரிப்பாளர்களும், ரஜினியை வைத்து ஏற்கெனவே படம் தயாரித்த பழைய தயாரிப்பாளர்களும் புரிந்துகொண்டிருப்பார்கள். டெண்டரை உயர்த்தியிருப்பார்கள். அதன்பின் தேதிகள் வானத்திலிருந்து குதித்திருக்கும்!
உண்மையில், ரஜினியின் இந்த உத்தியைக் குறை சொல்ல முடியாது. இது ஒரு வெற்றிகரமான வியாபார முறைதான். ரஜினிக்கு யாரோ சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால், இங்கேதான் ஒரு தியரி வேலை செய்ய ஆரம்பிக்கிறது. நிறைய பணம் கொடுப்பவன் நமக்கு முதலாளியாகிவிடுகிறான். அவர்களைச் சந்தோஷப்படுத்த வேண்டிய அவசியம் வந்துவிடுகிறது.
தொழிலில் இது சரி. நடிப்பில்?
இங்கே ரசிகர்கள் இருக்கிறார்கள்; சமூகம் இருக்கிறது.
ஒரு கட்டம் வரை மனம்போனபடி நடித்தவர் (அதுவே அவருடைய பாணியாகவும் இருந்தது), இப்போது தயாரிப்பாளர்கள் சொல்படி நடக்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்துவிட்டது. எதேச்சையாக இவர் பேசிய அரசியல் வசனங்கள் அனல் பறக்க, அவை அவருடைய படங்களுக்கு நல்ல வரவேற்பைக் கொடுக்க, தயாரிப்பாளர்கள் இதை விரும்ப ஆரம்பித்தார்கள். ரஜினியும் அவர்களின் விருப்பத்துக்குப் பணிந்துபோனார்.
இங்கே ரசிகர்கள் இதை சீரியஸாக எடுத்துக்கொண்டார்கள். இது அவர்களின் மனதில் அரசியல் ஆசையைத் தூண்டுகிறது என்பதை உணர்ந்து, ரஜினி இதைத் தவிர்த்திருக்க வேண்டும். ஆனால், பணம்! தயாரிப்பாளர் இங்கே கடவுளாகிவிட்டார். ரசிகர்களின் நலனைவிடத் தயாரிப்பாளரின் நலன் முன்னுக்கு வந்துவிட்டது. இங்கேதான் ஒரிஜினல் ரஜினி மறைந்து, சந்தர்ப்பவாத ரஜினி பிறந்திருக்கிறார்.
பலர் சொல்வது போல, நிஜத்தில் அவர் அரசியலுக்கு வந்திருந்தாலும், அவர் ஜெயித்திருக்கும் வாய்ப்பு குறைவு. காரணம், தமிழக அரசியல் இரண்டு மையப்புள்ளிகளில்தான் இயங்குகிறது. ஒன்று, பிராமண எதிர்ப்பு; மற்றொன்று, திமுக எதிர்ப்பு. இரண்டிலும் அவர் மிகவும் பலவீனமாக இருக்கிறார்.
அவருடைய பிராமண உறவும், திமுக உறவும் எல்லோருக்கும் தெரிந்த ஓன்று. அதுமட்டுமின்றி, அவர் தமிழராக இல்லாமல் இருப்பதும், அவருக்குத் தமிழ் எழுதத் தெரியாததும் அவருக்குப் பின்னடைவாக இருந்திருக்கும். இவ்வளவு கோளாறுகளை வைத்துக்கொண்டு அவர் அரசியலில் ஜெயிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு.
அதன்பின், அவர் தன் பலத்தை உணர்ந்து விலகிய நிலையில், அப்படியே தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால், விஜய்யின் வருகையையும் அவருடைய வெற்றியையும் இவரால் ஜீரணிக்க முடியவில்லை.
சரி, அதோடு முடிந்ததா என்று பார்த்தால், இப்போது ஜெயிலர் 2!
அவர் நடித்த படம் வெற்றி பெற்றால், அதைப் பார்த்து யார் பொறாமைப்படப் போகிறார்கள்? அவருக்குப் போட்டி இப்போது யாருமில்லை. எனவே, எல்லோரும் சந்தோஷமாகப் படத்தைப் பார்த்துவிட்டு ஒதுங்கப்போகிறார்கள். ஆனால், அங்கேயும் தேவையில்லாத வசனத்தை வைத்து மீண்டும் தன்னுடைய தரத்தைத் தாழ்த்திக்கொண்டார்.
"50 வருஷமா நிறைய பேரு, நிறைய விதமா என்னை முடிக்கணும்னு ட்ரை பண்ணாங்க... ஆனா யாராலயும் முடியல!" என்று ஒரு வசனமாம். யாருக்கு இந்த வசனம்?
தயாரிப்பாளரோ, இயக்குநரோ இப்படிப்பட்ட வசனத்தை வைத்திருந்தாலும், ரஜினி இதைத் தடுத்திருக்க முடியும். ஆனால், அவருக்குள்ளும் ஆழ்மனதில் ஏதோ ஒரு அரிப்பு இருந்திருக்கிறது. அதற்கு இந்த வசனம் ஒரு மருந்தாக இருந்திருக்கிறது. ஆனால், இனி இவர் உறுமினால் அதை யாராவது ரசிப்பார்களா? எதிரில் ஆளே இல்லாமல் சுவரைப் பார்த்துக் கத்திய கதைதான்.
நிஜத்தில் ரஜினியை வீழ்த்த யாரும் தேவையில்லை. ஏனென்றால், ஏதேனும் ஆபத்து என்றால், 'நான் வெளியே வரமாட்டேன்' என்று வீட்டுக்குள்ளேயே இருந்துகொண்டு பன்ச் டயலாக் பேசும் வீரனை யாரால் வீழ்த்த முடியும்? ரஜினியின் பாஷையில் சொன்னால், இது ஒரு ஹைப்போதெட்டிக்கல் கொஸ்டின்!
ஒரு வகையில், ஜெயிலர் 2-வின் வெற்றியை, இந்த இடைத்தேர்தலில் திமுக இரண்டாம் இடத்துக்கு வந்த நிலைக்கு ஒப்பிடலாம். திமுக இரண்டாம் இடத்துக்கு வரவில்லை. அதிமுக கணிசமான வாக்கு வங்கியை இழந்து பின்னே போனதால், பை டிஃபால்ட்டாக திமுக இரண்டாம் இடத்துக்கு வந்திருக்கிறது. இருந்தாலும், அவர்கள் வாங்கிய வாக்குகள் அவர்களுக்கு ஓர் உற்சாகம்தான். எனவே, இதையே வெற்றியாகச் சொல்லி திமுகவினர் மனதைத் தேற்றிக்கொள்கிறார்கள்.
அதே நிலைதான் ரஜினி ரசிகர்களுக்கும். தவெக வெற்றிக்குப் பிறகு விஜய் ரசிகர்களின் அலப்பறை அதிகமாகியிருப்பது, ரஜினி ரசிகர்களை மன உளைச்சலுக்குத் தள்ளியிருக்கிறது. அந்த நிலையில், இந்த வெற்றி அவர்களுக்கு உற்சாகத்தைத் தந்திருக்கிறது. அவ்வளவுதான்.
ஆனாலும், நிஜம் என்று ஒன்று இருக்கிறது. விஜய்யின் வெற்றி அதிர்ஷ்டத்தால் வந்தது என்றாலும், அபூர்வமானது. ஒரு சினிமா வெற்றியோடு இதை ஒப்பிட முடியாது.
ஒரு சினிமாவின் வெற்றி என்பது அவ்வப்போது வரக்கூடியது. இதையெல்லாம் சாதனை என்று பேசுவதும், அதில் அரசியலைக் கலந்து பேசுவதும் அறியாமையின் உச்சம்.
அதிலும் ஒரு கொடுமை இருக்கிறது. ரஜினியின் பிரபலமான வசனம், 'சிங்கம் சிங்கிளாகத்தான் வரும்...' என்பது.
அந்த வசனத்தின்படி, விஜய் சிங்கிளாக வந்து திராவிடக் கட்சிகளின் கதையை முடித்தார்.
ஆனால், ரஜினி சினிமாவில் பல நடிகர்களைக் கொண்ட ஒரு கூட்டத்துடன் வந்து வெற்றி பெற்றிருக்கிறார். அதுவும் சினிமாவில்! பான் இந்தியா படம் இப்படித்தான் இருக்கும் என்பது உண்மைதான். ஆனால், இத்தனை நடிகர்களா?
அரசியல் நமக்கு வராது என்று ஒதுங்கியவர், அதே பாதையில் பயணிப்பதுதான் அவருக்கு நாகரிகமாக இருக்கும். தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் இப்படி ஏதாவது ஒரு சர்ச்சை தேவை. அதில் அவர்கள் பணம் பார்த்துவிடுவார்கள். ஆனால், இங்கே சர்ச்சையில் சிக்கி அசிங்கப்படப்போவது ரஜினிதான்.
இனி அவர் நினைத்தாலும் விஜயின் உயரத்தை தொட முடியாது, சினிமா வெற்றியுடன் அரசியல் வெற்றியை ஒப்பிட முடியாது. எனவே இனியாவது அவர் கவனமாக இருப்பது நல்லது.

0 comments:
Post a Comment