இந்த இடைத்தேர்தலில் தவெக 50 சதவீத வாக்குகளை வாங்கும் என்று கடந்த மாதம் எழுதிய ஒரு பதிவில் கணித்திருந்தேன். அது தப்புக் கணக்காகிவிட்டது.
இது 20-20 மேட்ச் மாதிரிதான். முதல் 10 ஓவர்களில் இந்தியா 100 ரன்களை எடுத்திருக்கும். வழக்கம்போல் கால்குலேட்டரில் கணக்குப் போட்டு, அடுத்த 10 ஓவர்களில் 100 + 20 எனக் குத்துமதிப்பாகக் கணக்குப் போட்டுவிடுவோம்.
ஆனால், அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் கணக்கைப் பொய்யாக்கிவிடும்.
இங்கே நான் தவெகவின் வாக்கு வங்கி 35 சதவீதம் இருப்பதால், அதனுடன் 15 சதவீதத்தைக் கூட்டினேன். திமுக கூட்டணிக் கட்சிகள் வந்ததால் கிடைக்கும் 5, ஊழலை விஜய் அம்பலப்படுத்துவதால் பொதுமக்களின் ஆதரவால் கூடும் 5, அத்துடன் அதிமுகவில் இருந்து பலர் வந்திருப்பதால் மேலும் கிடைக்கக்கூடிய 5 என எல்லாவற்றையும் சேர்த்து 50 சதவீதத்தைத் தாண்டும் எனக் கணித்தேன்.
ஆனால், இந்த இரண்டு தொகுதிகளிலும் தவெகவின் வாக்கு வங்கி எவ்வளவு என்பதை நான் அப்போது கவனிக்கவில்லை. அந்த வகையில் கணக்குப் போட்டால், மதுராந்தகத்தில் தவெக 31 சதவீத வாக்குகளையே வாங்கியிருந்தது. இப்போது 9 சதவீதம் வாக்கு வங்கியை அதிகரித்திருக்கிறது.
தாராபுரத்தில் 23 சதவீதத்திலிருந்து 37 சதவீதமாக உயர்ந்துவிட்டது. அந்த வகையில், நான் கணித்த 15 சதவீதக் கூடுதல் வாக்குகளைப் பெற்றுவிட்டது.
இதைத் தாண்டி வேறு சில கணக்குகளும் இருக்கின்றன. திமுக வாங்கிய வாக்குகளின் அடிப்படையில் பார்த்தால், ஒன்று, திமுகவை விட்டு வெளியே வந்த கட்சிகளுக்கு வாக்கு வங்கி இல்லை; அல்லது அந்த வாக்குகள் முதலிலேயே விஜய்க்கு வந்துவிட்டன என்றுதான் இருக்க வேண்டும்.
எனவே, இனி கூட்டணிக் கட்சிகளை எந்தக் கட்சியும் பொருட்படுத்த வேண்டியதில்லை. அடுத்து வரக்கூடிய தேர்தல்களில் சிறிய கட்சிகள் இனி சீட் வாங்குவதற்குத் தலையால் தண்ணீர் குடிக்க வேண்டும். விஜய் வந்ததால் விளைந்த இன்னொரு நன்மை இது. அளவுக்கு அதிகமாகக் குழந்தைகள் இருந்தாலும் ஆபத்து என்பது போல், இந்தச் சில்லறைக் கட்சிகளும் ஒரு தலைவலிதான். எனவே, இவர்களின் மரணமும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே.
அடுத்து சில விஷயங்கள் நடந்திருக்கின்றன. இந்த முறை ஓட்டுக்குப் பணம் கொடுக்கப்படவில்லை என்பதால் வாக்கு சதவீதம் குறைந்திருக்கிறது. என்னதான் திமுகவும் அதிமுகவும் பணம் கொடுத்திருந்தாலும், அந்தப் பணத்தைப் பெற்றவர்கள் நிச்சயமாக அந்தக் கட்சிகளுக்கு வாக்களித்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. கடந்த தேர்தலிலேயே வாக்களிக்காதவர்கள் இந்தத் தேர்தலிலா வாக்களிக்கப் போகிறார்கள்? நிச்சயம் அந்த வாக்குகள் தவெகவுக்குத்தான் போயிருக்கும்.
இதையெல்லாம் தாண்டி மேலும் சில விஷயங்கள் நடந்திருக்கின்றன. பாமகவுக்கு மந்திரிப் பதவி எனப் பேசியது, அவர்களை உள்ளே இழுப்பதற்காக என்றாலும், அது பட்டியலின மக்களின் வாக்குகளைச் சற்றுத் தடுமாறச் செய்திருக்கலாம். அதில் எவ்வளவு வாக்குகள் வந்தன, எவ்வளவு போயின என்பது தெரியவில்லை.
அதைவிட முட்டாள்தனமானது, சென்னையில் நடந்த காங்கிரஸின் SIR-க்கு எதிரான கூட்டத்தில் முதல் முறையாகத் தவெக அமைச்சர்கள் கலந்துகொண்டது. அதுவும் வாக்குப்பதிவுக்கு முன்னதாக.
தமிழ்நாட்டில் காங்கிரஸைவிட பாஜகவுக்கு வாக்கு சதவீதம் அதிகம். அந்த வாக்குகள் இரட்டை இலை, உதயசூரியன் போன்று உறுதியாக இல்லாமல், திமுக எதிர்ப்பு என்ற அடிப்படையில் எங்கே வேண்டுமானாலும் செல்லக்கூடிய வாக்குகள். கடந்த பொதுத் தேர்தலில் விஜய் திமுகவை மிகக் கடுமையாக எதிர்த்ததால், அந்த பாஜக வாக்குகளும் கணிசமாக விஜய்க்குக் கிடைத்தன. அந்த வகையில், காங்கிரஸுடன் கூட்டணி வைத்த பிறகு, அவர்களிடம் பட்டும் படாமலும் நடந்திருக்க வேண்டும்.
ஆனால், SIR-க்கு எதிரான அந்தக் கூட்டத்தில் தவெக அமைச்சர்கள் அதிகாரப்பூர்வமாகக் கலந்துகொண்டது பாஜக ஆதரவாளர்களை வெறுப்பேற்றியிருக்கும். அவர்கள் வாக்களிக்காமல் புறக்கணித்திருக்கலாம் அல்லது அதிமுகவுக்கே வாக்களித்திருக்கலாம்.
எப்படி இருந்தாலும், சில சறுக்கல்கள், சில சோதனைகள் எனச் சந்தித்துக்கொண்டே, இனி விஜய் மெல்ல மெல்லப் பலம் பெறுவார் என்பதுதான் உண்மை.
இனி விஜய்க்கு எதிரி விஜய்தான். இலவசங்கள் என்ற மாயையிலிருந்து விடுபட்டு நல்ல ஆட்சியைக் கொடுக்காவிட்டால், அவரே தோற்பார்.
தமிழ்நாட்டில் அண்ணாவைத் தவிர்த்து வேறு யாரும் மக்களால் விரும்பித் தேர்ந்தெடுக்கப்படவில்லை. கலைஞர் வந்துவிடுவார் என்ற பயத்தில் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் ஜெயித்தார்கள். திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்ற எண்ணத்தில் விஜய்க்கு வாக்களித்தார்கள்.
விஜய் இரண்டாவது முறையாக ஒரு பொதுத் தேர்தலில் ஜெயித்தால்தான், அது அவருடைய வெற்றியாக மாறும். அந்தச் சாதனை அவருடைய நிர்வாகத் திறமையால்தான் வர வேண்டும்.
அந்த உண்மையைத் தெரிந்துகொள்ள நாம் இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

0 comments:
Post a Comment