ரொம்ப சிம்பிளான பதில்தான். உங்கள் குழந்தை தராத மகிழ்ச்சியைப் பேரக் குழந்தை தருகிறதல்லவா? அதே தியரிதான்.
பேரக் குழந்தை தரும் மகிழ்ச்சியே அலாதியானது என்று ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் அதற்கான காரணத்தை யாரும் சொன்னதில்லை. கொஞ்சம் யோசித்தால் அதற்கான பதில் கிடைத்துவிடும். அந்தத் தியரிதான் விஜய் விஷயத்தில் வேலை செய்கிறது.
முதலில் உங்களுக்குக் குழந்தை பிறப்பது 20–25 வயதில். அந்த இளம் வயதில் உங்களுக்குக் குழந்தையைப் பார்ப்பது சந்தோஷம்தான். ஆனால் அந்தக் குழந்தை மைண்ட் வாய்ஸில், “டேய் அப்பா, நான் உன்னை நம்பித்தான் வந்திருக்கேன். இனிமேல் ஒழுங்கா வேலைக்குப் போகணும், சிக்கனமா இருக்கணும்” என்ற நிஜத்தை உங்களுக்குச் சொல்லும். அது உங்களுக்குப் பொறுப்பை உணர்த்தும்; கவலையையும் கொடுக்கும். பேரக் குழந்தை அப்படியெல்லாம் சொல்லாது.
மேலே சொன்னது ஒரு காரணம்தான். ஆனால் நிஜமான காரணம் வேறு.
இளம் வயதில் யாரும் பெரிய சுமையைச் சுமப்பதில்லை. கவலைகள் இல்லாமல் பெற்றோர்களின் பாதுகாப்பில் சுதந்திரமாக வாழ்ந்திருப்பீர்கள். அந்தக் காலங்களில் உங்களைப் பார்த்துச் சிரித்த அத்தனை முகங்களும் நிஜமாகவே சிரித்திருக்கும். அதை உண்மை என நம்பியிருப்பீர்கள்.
ஆனால் காலம் மாறும். திருமணத்திற்குப் பிறகு இப்போது பலருக்குப் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருப்பீர்கள். எல்லோரும் உங்களிடம் எதையாவது எதிர்பார்ப்பார்கள். அது உங்களின் கடமையாகவும் இருக்கலாம். சில இடங்களில் அந்தக் கடமையைச் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகலாம். இப்போது எதிரே அதிருப்தி தெரியும். அவர்களின் புன்னகையில் வெறுமை இருக்கும். சில இடங்களில் வெறுப்பும், சில இடங்களில் விஷமும் இருக்கும்.
இந்த மனநிலையில் நீங்கள் 25 வருடம் வாழ்ந்து முடித்து, அதன் பிறகு நீங்கள் பார்க்கும் ஒரு பேரக் குழந்தை கள்ளம் கபடம் இல்லாமல் சிரிக்கும்போது, அது கொடுக்கும் சந்தோஷம்தான் இது. இந்தச் சிரிப்பை இவ்வளவு நாளாக நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். அதனால்தான் இது பேரின்பத்தைத் தருகிறது.
அதாவது, உங்கள் குழந்தையை அனுபவங்களே இல்லாமல் பார்க்கிறீர்கள்; பேரக் குழந்தையை அனுபவங்களுக்குப் பிறகு பார்க்கிறீர்கள். வெயிலில் அலைந்து விட்டு, அதன் பிறகு நிழலில் அமரும் சுகம் போன்றதுதான் இது.
அதே கதைதான் அரசியலிலும்.
அரசியலிலும் மக்களுக்காகச் சேவை செய்த தலைவர்கள் இருந்தார்கள். பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் மக்களுக்காகவே வாழ்ந்தார்கள். அண்ணா நீண்ட நாள் ஆளவில்லை. அதன் பின் வந்தவர்களிடம் அந்தத் தரம் குறைந்துகொண்டே வந்தது. எடப்பாடி, ஸ்டாலின் போன்றவர்கள் வந்தபோது தரம் அதலபாதாளத்துக்குப் போனது.
அந்தக் காலத்தில், “மக்கள் நலம், மக்கள் நலம் என்றே சொல்லுவார்; தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்” என்று எம்ஜிஆர் பாட்டு பாடினார். அந்தக் காலத் தலைவர்கள் மக்கள் நலனை மட்டுமே மனதில் கொண்டவன்தான் தலைவனாக இருக்க முடியும் என்ற கொள்கையோடு இருந்தார்கள்.
(பெரியார், அண்ணா, எம்ஜிஆர் மூன்று பேருக்குமே குழந்தை இல்லை. எனவே இப்படித்தான் வாழ்ந்திருக்கலாம். அவர்களுக்கு வாரிசுகள் இருந்திருந்தால் அவர்கள் எப்படி இருந்திருப்பார்களோ?)
இப்போதிருக்கும் ஸ்டாலினும், எடப்பாடியும், “குடும்பத்தைக் கவனிக்காதவன் எப்படி தலைவனாக முடியும்?” என்று கேட்கிறார்கள். அப்படியென்றால் இவர்கள் எப்பேற்பட்ட அரசியல் ஞானசூன்யமாக இருப்பார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.
இந்தப் பதிவைப் படிப்பவர்கள் அப்படியே விக்கிப்பீடியா போய், வரலாற்றில் சாதனை படைத்த தலைவர்கள் எனத் தோராயமாகச் சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் வாழ்க்கை முறையை ஆராய்ந்து பாருங்கள். சில உண்மைகள் உங்களுக்குப் புரியும்.
அதைவிட முக்கியம், தற்போது தலைவர்கள் மட்டுமின்றி மக்களின் தரமும் கணிசமாக இறங்கிவிட்டது. ஆரம்பகட்ட இந்தியாவில் மக்களுக்குக் கல்வி கொடுக்கப்பட்டது. பின்னர் தனியார்கள்மூலம் விற்கப்பட்டதால், அதில் தரம் இல்லை. அன்று மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்லவே சில பல கிலோமீட்டர் நடந்தார்கள்; அப்படியே உலகத்தையும் கவனித்தார்கள்.
இப்போது மதிப்பெண்தான் இலக்கு என்றாகிவிட்டது. பாதுகாப்பாக வண்டியில் போகிறார்கள்; அங்கேயும் படிக்கிறார்கள், மனப்பாடம் செய்கிறார்கள். இப்போது மதிப்பெண் வந்துவிட்டது; ஆனால் மனிதநேயம் குறைந்துவிட்டது.
இப்படி நாலாபக்கமும் அரசியல்வாதிகள் முதல் சக மனிதர்கள் வரை, “நான், என் குடும்பம்” எனச் சுயநலமாக இருந்துகொண்டு, அதைத்தான் தகுதி எனச் சொல்லி வாழும் சூழ்நிலையில், குடும்பத்தைக் கவனிக்காமல் மக்களுக்குச் சேவை செய்கிறேன் என்று ஒருவன் வந்தால், அதுவும் எளிமையாக இருந்தால், மக்களுக்கு எப்படி இருக்கும்? அதுதான் விஜய்க்கு இப்போது கிடைத்திருக்கும் ஆதரவுக்குக் காரணமாக இருக்கக்கூடும்.
இது நிலைக்க வேண்டுமென்றால், விஜய் வெறும் எளிமையாக இருந்தால் மட்டும் போதாது; நிர்வாகத் திறமையையும் காட்ட வேண்டும். இவருக்கு இருக்கும் செல்வாக்குக்கு இலவசம் கொடுத்துத்தான் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று இல்லை. தைரியமான முடிவை எடுக்கலாம். ஆனால் அந்தத் தன்னம்பிக்கை வர அவருக்கு இன்னும் சில வெற்றிகள் தேவை. அதேபோல் நல்ல ஆலோசகர்களும் தேவை.
டெல்லியைப் போல் ராஜ்ய சபை இங்கேயும் இருந்தால், அதன் மூலம் சில திறமைசாலிகளை அமைச்சரவையில் இழுக்கலாம். அதற்கு இங்கே வழியில்லை. எனவே காத்திருக்க வேண்டியதுதான்.
முக்கியமாக, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் மற்றும் பெண்களுக்கான இலவசப் பேருந்து எல்லாம் தேவையில்லாத சேவை. இனியாவது மக்கள் வாழ்வதற்குக் கற்றுக்கொடுங்கள்; இலவசங்களுக்கு அவர்களைப் பழக்கப்படுத்தாதீர்கள்.
“என் செல்லமே” என்று கொஞ்சுபவர்கள், “எனக்குன்னு வந்து வாய்ச்சுது பாரு” என்று மக்கள் புலம்பும் நாளும் வரலாம். அதை விஜய் புரிந்துகொண்டால் சரி.

0 comments:
Post a Comment