!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Monday, October 5, 2026

SIR ல பிரச்சினையாமே?

ராகுல் காந்திக்கு எப்படி அரசியல் செய்வது என்று தெரியவில்லை போலிருக்கிறது. ரொம்பவே நிதானமாக யோசித்து, முட்டாள்தனமான போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார். வழக்கம் போல் தோற்றவர்களின் உத்தியான ‘மேடை சரியில்லை’ என்ற உளுத்துப்போன ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார். இந்த முறை அவருக்கு ஸ்டாலின் மற்றும் மம்தா என இரு பார்ட்னர்கள் கிடைத்திருக்கிறார்கள்; இதுதான் வித்தியாசம்.

கிரிக்கெட்டில் உலக அணி என்று ஒன்று உண்டு. அனைத்து அணிகளிலிருந்தும் திறமைசாலிகளைக் கொண்ட அணியாக அது இருக்கும். இந்த ராகுல் காந்தி வித்தியாசமானவர். தோற்றுப்போன தலைவர்களைக் கொண்டு ஒரு அணியை உருவாக்கியிருக்கிறார். அறிவு அதிகமாக இருந்தால் இப்படியெல்லாம் மூளை வேலை செய்யும் போலிருக்கிறது.

நிஜத்தில் SIR என்ற சுத்திகரிப்பு என்பது எல்லாத் துறைகளிலும் தேவைப்படும் ஒன்று. உடம்பு சரியில்லை என்று டாக்டரிடம் போனால் கூட, அவர் வயிற்றைச் சுத்தம் செய்யும் மருந்து ஒன்றைத் தருவார். வீடுகளில் கூட வருடம் ஒரு முறை ஒரு விசேஷத்தை முன்வைத்துச் சுத்தம் செய்வதும் வழக்கம்.

அப்படி இருக்கும்போது வாக்காளர் பட்டியலில் அது தேவைப்படாதா?

ஆனால் அதில் முறைகேடு நடந்ததா என்பதுதான் கேள்வி!

நடந்திருக்கக்கூடும். இந்தியர்களால் பேசாமலும், பிராடு செய்யாமலும் இருக்கவே முடியாது; செத்துவிடுவார்கள். அந்த வகையில் ஏதாவது சில மோசடிகள் அவ்வப்போது நடக்கும். ஆனால் ஜனநாயகத்தின் அஸ்திவாரமான வாக்காளர் உரிமையையே பறிப்பார்களா? வாய்ப்பில்லை ராஜா, வாய்ப்பில்லை!

15 வருடங்களுக்கு முன்பே இதே யோக்கிய காங்கிரஸ், நவீன் சாவ்லா என்ற தேர்தல் கமிஷனர் நியமனத்தில் ஒரு சார்பு நிலை எடுத்தது. அப்போதே அது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. நானும் அப்போது தினமலரில் இது குறித்து ஒரு கடிதம் எழுதினேன்: https://anindianviews.blogspot.com/2010/10/blog-post_5861.html

எனவே எதிர்க்கட்சிகள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். ஆளும் கட்சிகள் முறைகேடுகளில் ஈடுபட்டால்—அப்படி ஒன்று நடந்திருந்தால்—அவற்றை ஆதாரத்தோடு அம்பலப்படுத்த வேண்டும். பின்னர் இவர்கள் அதிகாரத்துக்கு வந்த பிறகு, அதே வேலையை இவர்கள் ஆரம்பித்துவிட வேண்டும். அதுதானே ஜனநாயகம்? வாழ்க ஜனநாயகம்!

இங்கே இந்தப் பிரச்சினை வந்ததற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது. அதில் ஒன்று, பிள்ளையார் பிடிக்க, அது குரங்காய் போன கதை.

கணிசமான பங்களாதேஷ் முஸ்லிம்கள் எங்கும் நிறைந்திருக்கும் ஊழல் காரணமாக போலி ஆதார் அட்டையை வாங்கி, மேற்கு வங்காளம் மட்டுமின்றி இந்தியா முழுக்க சகட்டுமேனிக்குக் குடிமகனாக ஊடுருவிவிட்டார்கள்.

இவர்கள் வேலைவாய்ப்பு தேடி வருகிறார்கள் என்ற வகையில் மட்டும் இருந்தால் பரவாயில்லை. சட்டவிரோதமாகக் குடியுரிமை பெற்றுச் செட்டிலான பிறகு, நமக்கே உபதேசம் செய்யும்போதுதான், அவர்களைக் களையெடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகிவிடுகிறது.

எனவே மேற்கு வங்கத்தில் துடைப்பத்தை எடுத்து போலி வாக்காளர்களை நீக்கப் போய், அதன் பக்க விளைவு இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது.

சில சமயம் போலீசார் திருட்டு வழக்கு குறித்த சந்தேகத்தில் யாரையாவது பிடித்துப் பிளப்பார்கள். அவன், ‘சார்... நான் தெரியாமல் அந்தக் கொலையைப் பண்ணிட்டேன் சார்’ என்று வேறு ஒரு குற்றத்தை உளறிவிடுவான். கடைசியில் அதுவும் ஒரு வழக்காக மாறும்.

அப்படி SIR மூலம் போலி முஸ்லிம் வாக்காளர்களை நாடு முழுவதும் அடையாளம் காணப்போய், வாக்காளர் பட்டியலில் இருந்த புதிய குழப்பம் கவனத்துக்கு வந்தது. அதாவது, ஏகப்பட்ட இடம் மாறியவர்கள், இறந்தவர்கள் எனப் பலர் பல இடங்களில் வாக்குரிமையை நீக்காமல் வைத்திருந்திருக்கிறார்கள்.

இப்படிச் செய்தவர்கள் மோசடிப்பேர்வழிகள் அல்ல; ஆனால் அது மோசடிக்கு வழிவகுத்துவிட்டது.

சட்டத்தில் ‘கிரே ஏரியா’ என்று ஒன்று இருக்கும். சட்டத்தை உருவாக்கியவர்கள் ஒரு விஷயத்தைக் கவனிக்காமல் விட்டிருப்பார்கள்.

சமீபத்தில் ஒரு செய்தியைக் கவனித்தேன். அரசு மருத்துவமனையில் வயதான பெண்களுக்கு உதவுவது போல் நடித்து ஒருவர் பலரிடம் நகைகளைச் சுருட்டியிருக்கிறாராம். அந்த நபர் மீது இதேபோல் பல வழக்குகள் இருக்கின்றனவாம். பல வழக்குகள் இருப்பவருக்கு எப்படி பெயில் கொடுக்கப்பட்டது? அதுதான் ‘கிரே ஏரியா’.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பெயில் என்பது ஒரு நியாயமான நடைமுறை. ஆனால் ஒருவர் தொடர்ந்து குற்றம் செய்தால், அவர்களுக்குப் பெயில் மறுக்கப்பட வேண்டும் என்று அம்பேத்கர் தெளிவாகச் சட்டப்புத்தகத்தில் சொல்லவில்லையாம். அது அவருடைய தவறு; எங்களுடையது அல்ல—இதுதான் நீதிபதிகளின் வாதம்.

இந்த ஓட்டையைக் கவனித்த பிறகு, நீதிபதிகள், வழக்கறிஞர்கள், காவலர்கள் இதை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று இதைத் திருத்தியிருக்க வேண்டும். ஆனால் இந்த கிரே ஏரியா வருமானத்தை அள்ளித்தரும் அட்சய பாத்திரமாக இந்த மும்மூர்த்திகளுக்கு மாறிவிட்டதால், அதை அவர்கள் திருத்த முயற்சிக்கவில்லை.

வாக்காளர் பட்டியலிலும் அதேதான் நடந்திருக்கிறது. பலர் இடம் மாறியிருப்பார்கள். அவர்கள் பழைய இடத்தில் நீக்கப்பட்டிருக்கும் என நம்பியிருப்பார்கள். இறந்தவர்களின் கதையும் அதேதான். செத்துப்போனவன் எங்கேயாவது சொத்து வைத்திருந்தால், அதைத் தேடிப் போய் அடையலாம். அவரின் வாக்காளர் அட்டையை நீக்குங்கள் எனச் சாமானியன் போய் அரசு அலுவலகங்களில் நிற்பானா?

எனவே இங்கேயும் ஒரு கிரே ஏரியா உருவாகிவிட்டது. அரசியல்வியாதிகள் இதைக் கவனித்திருக்கிறார்கள். அவர்களுக்கு இது ஒரு அட்வான்டேஜ் கொடுப்பதால் கமுக்கமாக இருந்துவிட்டார்கள். எங்கெல்லாம் இறந்த, குடிபெயர்ந்த வாக்காளர்களின் பெயர் அப்படியே இருந்ததோ, அங்கெல்லாம் போய், “நான்தான் வடுகபட்டி ராமசாமி” என உதார் விட்டு கள்ள ஓட்டு போட்டுக்கொண்டார்கள். அதிகாரம் அவர்கள் கையில் என்பதாலும், எதிரே இருந்தவனும் இதே தவறைச் செய்தவன் என்பதாலும், இது இதுவரை வெளியே தெரியாமல் இருந்தது.

இந்த முறை SIR மூலம் வீட்டைச் சுத்தமாகக் கழுவிய நிலையில், எல்லாக் குப்பைகளும் வெளியே வந்துவிட்டன. தமிழக அரசியலும் கொஞ்சம் சுத்தமாகிவிட்டது.

இருந்தாலும் இப்படி கள்ள ஒட்டு போடுவது 1000-2000 த்தை தாண்டாது. எனவே அது ஒரு காரணம் இல்லை. ஆனாலும் இந்த சில ஆயிரங்கள் கூட பல தொகுதிகளில் முடிவுகளை மாற்றியிருக்கலாம்.

நிஜத்தில் அந்த சமயத்தில் திமுக மற்றும் எதிர்க்கட்சிகளின் ஆதரவு வாக்குகள் நீக்கப்பட்டிருந்தால், வாக்குப்பதிவு அன்றே பல இடங்களில் ரகளை ஏற்பட்டிருக்கும். அதன் பின் இருந்த இடைப்பட்ட நாட்களில் அது ஊடகங்களில் பல மட்டங்களில் விவாதிக்கப்பட்டிருக்கும். ஒரு சில புகார்களைத் தவிர, பெரிய அளவில் வாக்குரிமை பறிபோனதாகத் தமிழ்நாட்டில் பிரச்சினை ஏற்படவில்லை.

முக்கியமாக, திமுக தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே அதை ஒரு பெரிய பிரச்சினையாக மாற்றியிருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு நம்பிக்கை... இந்தியாவின் இரண்டாவது சாணக்கியன்—அதாங்க ஸ்டாலின்—எப்படியும் ஜெயிப்பார், வரலாறு படைப்பார் என்று நம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால் கடைசியில் கொத்தூஸ் என்ற பட்டப் பெயர்தான் கிடைத்தது.

இப்போது வேறு வழியில்லை. SIR மோசடி என்று உருட்டி அரசியல் செய்யும் நிலைக்கு திமுக வந்துவிட்டது.

உண்மையிலேயே மோசடி நடந்திருக்கிறது என்று அவர்கள் உறுதியாக நம்பினால், “We the Leaders” இணையதளம் போல் ஒரு வலைத்தளம் ஆரம்பித்து, SIR மூலம் வாக்குரிமை இழந்தவர்கள் எல்லாம் அவர்களுடைய பெயர்களைப் பதியச் சொல்லலாம். அப்படிப் பலருக்கு வாக்குரிமை பறிக்கப்பட்டது தெரியவந்தால், அது மக்களிடையே ஒரு நம்பகத்தன்மையைப் பெறும். தொகுதிக்கு ஒரு 5,000 பேரை பொதுவெளியில் கொண்டுவந்தாலே, இவர்களின் போராட்டத்தில் ஒரு நியாயம் இருப்பதாக நம்பலாம்.

அதெல்லாம் நடக்காது; மோசடி நடந்தால்தானே அது வெளியே வருவதற்கு?

அதற்காக பிஜேபி யோக்கிய சிகாமணி என்று நான் சொல்லவில்லை. அவர்களும் ஏதாவது செய்திருப்பார்கள். ஆனால் ஜனநாயகத்தின் அஸ்திவாரமான வாக்காளர் உரிமையிலேயே கை வைக்கமாட்டார்கள். இந்தியாவில் அது சாத்தியமில்லை. எந்த அரசியல் கட்சியும் அதைச் செய்யாது.

எனவே ராகுல் காந்தியும் ஸ்டாலினும் ரூம் போட்டு வேறு ஏதாவது யோசிப்பது நல்லது.

0 comments:

Post a Comment