சமீபத்தில்தான் இந்தச் செய்தியை தினமலரில் கவனித்தேன். பல வெளிநாட்டுப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்களுடைய கிளைகளைத் திறந்திருக்கின்றனவாம். தமிழகத்திலும் அப்படி ஓர் ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம் வந்திருக்கிறது. இது நல்ல செய்தி.
இது குறித்து நான் ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அது தினமலர் 21-06-2009 இதழில் வெளியானது. பின்னர், அக்டோபர் 2010-ல் அதை எனது வலைப்பதிவில் மறுபதிவு செய்தேன்.
அந்தக் கடிதம்:
"ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், இங்கே இந்தியாவில் கல்லூரிகளில் சட்டவிரோதமாக லட்சக்கணக்கில் நன்கொடைகள் வாங்கப்படுவதும் மத்திய அரசின் மோசமான கல்விக் கொள்கையைக் காட்டுகின்றன.
கல்வியின் அவசியத்தை மக்கள் உணர்ந்து வரும் வேளையில், அதற்குத் தகுந்தாற்போல் கல்வி நிலையங்களின் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு தவறிவிட்டது.
மிக அதிகப்படியான நன்கொடைகளைத் தவிர்க்கவும், தரமான கல்வியைத் தேடியும் இந்திய மாணவர்கள் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களை நாடுவதை மத்திய அரசு தடுக்கவில்லை. ஆகவே, வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களையே இந்தியாவில் நேரடியாகவோ அல்லது இந்திய நிறுவனங்களின் துணையுடனோ நடத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.
இதன் மூலம் நமக்கும் அந்நியச் செலாவணி மிச்சமாகும்.
வளர்ச்சியடைந்த நாடுகளின் பொருளாதாரப் புள்ளிவிவரங்களை இணையதளம் மூலம் ஆராய்ந்திருக்கிறேன். இன்றைய வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களின் வளர்ச்சிக்காகப் பாரம்பரியத் தொழில்களையோ அல்லது இயற்கை ஆதாரங்களையோ நம்பியிருக்கவில்லை.
மாறாக, இன்றைய சூழ்நிலையில் எந்தத் துறையில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்று கணித்து, அதன்படி செயல்பட்டு வெற்றி கண்டிருக்கின்றன.
கல்வியை ஒரு லாபமளிக்கும் துறையாகக் கணித்து, அதன் மூலம் ஆஸ்திரேலியர்கள் பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டுவது அவர்களுடைய புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது.
இந்தியாவும் இயற்கைச் சுற்றுலா, மருத்துவச் சுற்றுலா மற்றும் கல்விச் சுற்றுலா போன்ற துறைகளில் நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், அந்நியச் செலாவணியை ஈட்டவும் வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்து, இத்துறைகளில் கூடுதல் கவனத்தையும் முதலீடுகளையும் செய்ய வேண்டும்."
https://anindianviews.blogspot.com/2010/10/blog-post_3138.html
கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய கடிதம் இது. தற்போது இது சாத்தியமாகியிருக்கிறது. இது, காக்கா உட்காரப் பனம்பழம் விழுந்த கதையா அல்லது யாரோ என் கருத்தைக் கவனித்து இதைச் செயல்படுத்தியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. நாம் எழுதுகிறோம்; மாற்றம் எங்கேயோ நடக்கிறது. அவ்வளவுதான்.
இதேபோல், ராஜீவ் காந்தி கொலையாளிகளை நீதிமன்றம் மூலம் ஏதோ ஒரு விதியைக் காட்டி விடுதலை செய்துவிடுவார்கள் என்றும் 2011-ல் எழுதியிருந்தேன்.
https://anindianviews.blogspot.com/2011/09/blog-post.html
அப்போது ஒருவர் போட்ட கமெண்ட் இது:
"நீண்ட அனுபவம் உடையவர் நீங்கள்... அறிவாளி! ஊரில் இருப்பவர்கள் எல்லோரும் முட்டாள்கள்... அதன் அடிப்படையில் உலகிற்கு உங்கள் தீர்க்கதரிசனத்தைச் சொல்கிறீர்கள்..."
கடைசியில் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். அதாவது, நடக்கிறது... கொஞ்சம் தாமதமாக!
விஜய் கட்சி ஆரம்பித்தபோதும், கடந்த ஆண்டு நவம்பரில் 'விஜய் ஆரம்பித்திருக்கும் இ-காமர்ஸ்' என்று ஒரு பதிவு போட்டேன்.
https://anindianviews.blogspot.com/2025/11/blog-post_29.html
விஜய்க்கு ரசிகர்கள் என்ற அஸ்திவாரம் பலமாக இருக்கிறது; மற்ற திமுக, அதிமுக எதிர்ப்பாளர்களுக்கு அப்படியொரு பலம் இல்லை. எனவே, அவர்கள் விஜய்யின் கட்டமைப்பில் இணைந்து எதிரியைத் தோற்கடிக்க நினைப்பார்கள் என்று எழுதியிருந்தேன். அப்போதுகூட நான் எதிர்பார்த்தது 25 சதவீத வாக்குகள்தான். ஆனால், அது 35 சதவீதமாகப் போய் முடிந்தது.
சில நேரங்களில் நாம் போடும் கணக்குகள் சரியாகின்றன. சில மாற்றங்கள் நிகழ பல ஆண்டுகள் ஆகின்றன. எனவே, வாய்ப்பு கிடைக்கும்போது எழுதுவோம். இங்கே யார் படிக்கிறார்கள், எவ்வளவு பேர் படிக்கிறார்கள் என்பதெல்லாம் முக்கியமில்லை.
விதைத்துக்கொண்டே இருப்போம். விதைக்கும் விதைகள் எல்லாம் முளைப்பதில்லை. ஏதாவது ஒன்று முளைத்தாலும் அது சமுதாயத்துக்கு லாபமே!
0 comments:
Post a Comment