!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Monday, November 2, 2026

குடிச்சுக் கெட்டவனும், படிச்சுக் கெட்டவனும்...

நான் இரண்டாவது வகை. முதல் வகை என்பது எப்போதாவது...

சிறு வயதிலிருந்தே யார் வீட்டுக்காவது சென்றால், அங்கே இருக்கும் புத்தகத்தைத் தேடி உடனடியாக வாசிப்பதுதான் வழக்கம். டீ, காபி எல்லாம் அப்புறம்தான். அதேபோல், எந்த ஊரில் இருந்தாலும் அங்கே இருக்கும் நூலகத்தின் பதிவேட்டில் என்னுடைய பெயரும் இருக்கும். என் வாழ்க்கையில் நான் அதிகம் தேடியது ஓட்டலையும் புத்தகத்தையும்தான். முன்னதில் நான் துரதிர்ஷ்டசாலி; பின்னதில் நான் அதிர்ஷ்டசாலி.

காலம் மாறியது, வயதும் கூடியது, இணையமும் வந்துவிட்டது. தினமும் ஷேர் டிரேடிங் செய்வதால் அதற்குக் கணினி அவசியம். இதனால் வாசிப்புக்குப் பஞ்சமே இல்லை. வாரத்தில் ஐந்து நாட்கள்தான் டிரேடிங். வாசிப்புக்கோ முடிவே இல்லை. கொஞ்சமாகப் படிப்போம் என ஆரம்பித்து, இன்னொரு பெக் அடிப்போம் என்ற அளவுக்கு அது தொடரும். சில சமயம் கடுப்பாகி, நாளை முதல் படிக்க மாட்டேன், இனி எழுத மாட்டேன் எனச் சபதம் எடுத்தாலும், அது குடிகாரன் கதையாகத்தான் முடியும்.

இனி விஷயத்துக்கு வருவோம்.

நிறைய குடித்தால் உடல்நலம் கெடுவது போல், நிறையப் படித்தால் கண் கெடும்; கண்ணாடி வரும். இது எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் அரசியல் படித்தால்? இங்கே கண்ணும் கெடும்; கூடவே அரசீற்றமும் வரும்.

விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் திரைப்படம். அதில் அவர் இன்ஸ்பெக்டராக இருப்பார்.இதில் தானைத்தலைவி நிவேதிதா பெத்துராஜும் நடித்திருப்பார். சமூக அவலங்களைக் கவனிக்கும்போது விஜய் ஆண்டனிக்குக் கை நரம்பில் ரத்தம் ஏறும். அது அவரை அவ்வப்போது மயக்கத்துக்குத் தள்ளும்.

கிட்டத்தட்ட நானும் அந்த நிலைக்கு வந்துவிட்டேன் போலிருக்கிறது. கையில் ரத்தம் ஏறுவது தெரியவில்லை. ஆனால் தலைக்குள் ஏதோ நடப்பதை உணர முடிகிறது. மயக்கம் வருகிறது. டாக்டரிடம் சென்றபோது, ரத்தப் பரிசோதனை மற்றும் வேறு சில டெஸ்ட்களை எடுக்கச் சொன்னார். பரிசோதனை முடிவுகளைப் பார்த்துவிட்டு, எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்றார். 'அப்புறம் ஏன் மயக்கம்?' எனக் கேட்டதற்கு, 'எதற்கும் ஒரு சைக்கியாட்ரிஸ்ட்டிடம் ஒரு செஷன் வைத்துப் பார்ப்போம்' என்றார்.

மறுத்துவிட்டேன். வியாதி தெரிந்துவிட்டது. இனி படிக்காமல் இருக்க வேண்டும்; கண்ணை மூடிக்கொண்டு நடக்க வேண்டும். அதுதான் இந்த வியாதிக்கு மருந்து. அது முடியுமா? நடக்காது. எனவே, எல்லாம் அவன் செயல் எனத் தாண்டிப் போக வேண்டியதுதான்.

******

இந்த முறை கண் பிரச்சினை காரணமாக ஒரு கண் டாக்டரிடம் போயிருந்தேன். இது வேறு ஒரு உலகம். எப்படி எல்லாத் துறையிலும் மொள்ளமாரிகள் இருக்கிறார்களோ, அதே கதைதான் இங்கேயும். கண்களில் நம்பர் வந்ததிலிருந்து பல டாக்டர்களிடம் போய்விட்டேன். ஒவ்வொருவரும் ஒரு விதம்.

இதில் கண்ணாடி விற்பவர்கள் என இன்னொரு கும்பல் இருக்கிறது. கண்ணாடிக் கடைகளில் சில விஷயங்களைக் கவனித்தேன். சில கடைகளில் முதலாளி மாலையில்தான் கடைக்கு வருகிறார். அதாவது, அவருக்கு இந்த வருமானம் போதவில்லையாம். எனவே, வேறு வேலைக்கும் போகிறார். இவர்களிடம் பெரும்பாலும் விலை நியாயமாக இருக்கிறது.

இன்னொரு பக்கம், இங்கே ஒரு பிராண்ட் கடை இருக்கிறது. எல்லா இடங்களிலும் ஒரு கிளை வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு கிளையிலும் ஒரு புதிய பெண்ணை வேலைக்கு வைத்து, கடையைப் பார்த்துக்கொள்ளச் செய்கிறார்கள். அந்தப் பெண்களுக்கு அனுபவம் இல்லை. இளம் பெண்கள். அவர்கள் சொல்லும் விதம் நம்மை நம்ப வைப்பதாகவும் இருக்கிறது; அதே நேரத்தில் ஏமாறவும் வைக்கிறது. ஆரம்பத்தில் நமக்கும் இது புதிது என்பதால், அவர்கள் சொல்வதை நம்பி ஏமாந்துவிடுகிறோம்.

அவர்களுக்கு சேல்ஸ் டார்கெட் வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவை, அவர்களுடைய பிரச்சினை என்ன என்பதெல்லாம் புரியாமல், 'ஏதாவது ஒன்றை என்னிடம் வாங்கு' என்ற அடிப்படையில் விற்றுவிடுகிறார்கள். சில அனுபவ வியாபாரிகள் நம்முடைய பிரச்சினைகளை புரிந்து கொண்டு அதற்கு தீர்வும் வழங்குவார்கள். இந்த இளம் வயதினருக்கு விற்பனை மட்டுமே குறிக்கோள்.

சட்டையாக இருந்தால் போட்டுப் பார்த்து வாங்கலாம். இது கண் கண்ணாடி. அது நமக்குச் சரிவரவில்லை என்பது புரியவே சில நாட்கள் ஆகிவிடும். அதன்பின் அது நமக்கு நஷ்டம். வேறு யாருக்கும் பயன்படாது. எனவே, எந்தத் துறையாக இருந்தாலும், இதுபோன்ற பிராண்ட் கடைகளில் அனுபவமில்லாதவர்கள் விற்பனையில் இருந்தால், அவர்களிடம் பொருட்களை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

இங்கே குழப்பம் என்னவென்றால், இந்தத் துறையில் வருமானம் குறைவு என வேறு வேலைக்கும் போகும் சிலர்; இங்கே வருமானம் அதிகம் என மேலும் கிளைகள் திறக்கும் சிலர். எது உண்மை? ஏதோ ஒன்று இடிக்கிறது. அது என்னவென்று புரியவில்லை.

0 comments:

Post a Comment