ஒரு மனிதன் எப்படித்தான் வேஷம் போட்டாலும், ஏதோ ஒரு கட்டத்தில் தன்னுடைய மனநிலையை வெளிப்படுத்திவிடுவான். இது இயற்கை. அதாவது, வடிவேலு 'கொண்டையை' மறந்த கதைதான்!
இதுதான் தற்போது பாண்டே விஷயத்தில் நடந்திருக்கிறது. இவர் கடந்த தேர்தலில் விஜய் தோற்பார் என்று துல்லியமாகக் கணித்தார்; "அரசியலே பேச மாட்டேன்" என்றெல்லாம் சவால் விட்டார். கடைசியில் அந்த அவமானத்தைத் துடைத்துக்கொண்டு, மறுபடியும் 'கருத்து கந்தசாமியாக' மாறினார்.
அதேநேரத்தில் கணிப்புகள் எல்லா நேரத்திலும் பலிக்கும் என்று அர்த்தமில்லை. நாமும் சில இடங்களில் தப்புக் கணக்கு போட்டிருப்போம். அந்த வகையில், பாண்டேயின் சவாலை மறந்துவிடலாம்; அது பெரிய பிரச்சினையில்லை.
அதன்பின் அவர் நடுநிலை வகிப்பதாகக் காட்டிக்கொண்டார். பிராமணர் என்பதால், திமுகவின் தோல்வியே இவருக்குச் சந்தோஷமாக இருந்திருக்கும். அந்த வகையில், இவருடைய பேட்டிகளும் விஜய்க்கு ஆதரவான மனப்பான்மையிலேயே அமைந்திருந்தன.
இருந்தாலும், மனிதர்களுக்குள்ளும் ஒரு வலி இருக்கும். "நாம் ஏமாந்துவிட்டோம்" என்ற உண்மையை ஜீரணிக்க முடியாமல், நம்மை ஏமாற்றியவனை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
எதிரி எங்கேயாவது தோற்க வேண்டும்; சறுக்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். கடைசியில், "பார்த்தீர்களா, நான் அப்பவே சொன்னேன்" என்று சொல்லித் திருப்திப்பட்டுக்கொள்வார்கள். இந்த இடைத்தேர்தல் தமக்கு அப்படி ஒரு வாய்ப்பைக் கொடுக்காதா என்ற நப்பாசை இந்த பாண்டேவுக்கு!
சமீபத்தில் 'ஆதன்' யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "இந்த இடைத்தேர்தலில் மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். நான் இதுவரை என்னுடைய 'மைண்ட் வாய்ஸை' வெளியே சொன்னதில்லை; இந்த முறை வெளிப்படையாகவே சொல்கிறேன்" என்று குறிப்பிட்டார்.
கருத்தை யார் வேண்டுமானாலும் சொல்லட்டும். விஜய் சேதுபதியைப் போல் திரைக்குப் பின்னால் இருந்து கோழையாக உறுமுவதைவிட, நேரடியாகச் சொல்வது நல்ல விஷயம்தான். ஆனால் எதார்த்தம் என்று ஒன்று இருக்கிறதல்லவா!
உண்மையில் விஜய் அரசை விமர்ச்சிப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அனுபவமின்மை காரணமாகப் பல இடங்களில் சொதப்புகிறார்கள். அதைச் சுட்டிக்காட்டியிருக்கலாம்.
ஆனால், "ஒரு கட்சியின் சார்பில் போட்டியிட்டு, பின்னர் கட்சி மாறி, மீண்டும் அதே கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுவது தவறு. இப்படிப்பட்ட நபர்களை ஆதரித்தால், அது இதுபோன்ற செயல்களை நியாயப்படுத்திவிடும். எனவே, அதிமுகவிற்கு ஓட்டு போடுங்கள்" என்று கூறியிருக்கிறார்.
நியாயமான கருத்துதான். ஆனால், எல்லா இடத்திலும் ஒரே அளவுகோலை நாம் பயன்படுத்த முடியாது. சில சூழ்நிலைகளில் நாம் செய்யும் செயல்கள், அந்த நேரத்துக் கட்டாயத்தின் அடிப்படையில் அவசியமாகிவிடுகின்றன.
இந்து தர்மத்தின் சித்தாந்தப்படி பார்த்தால், வாலியை ராமர் மறைந்திருந்து தாக்கியதைப் போன்ற சில சம்பவங்கள் நிகழ்வதுண்டு. இதைத் தவறு என்றும் சொல்லலாம்; வேறு வழியில்லை என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
இதை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்பப் புரிந்துகொள்ள ஓர் உதாரணம்:
போலீசார் அவ்வப்போது சில குற்றவாளிகளை என்கவுண்டர் செய்கிறார்கள். சட்டப்படி இது குற்றம். ஆனால் போலீசாரிடம் போய்க் கேட்டால், அதற்கு அவர்கள் ஒரு விளக்கம் வைத்திருப்பார்கள்:
"நாங்கள் சட்டப்படி தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். ஆனால், பல இடங்களில் மக்கள் பயத்தின் காரணமாகப் புகாரளிப்பதும் இல்லை; சாட்சியம் சொல்வதும் இல்லை. இது எங்களுக்குப் பெரிய தலைவலி.
இன்னொரு பக்கம், நீதிபதிகள் ஒருவன் எத்தனை குற்றங்கள் செய்தாலும் பெயில் கொடுத்துவிடுகிறார்கள். இப்படிப்பட்ட மக்களையும், ஊழல் நீதிபதிகளையும் வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வது? தவறுதான், ஆனால் வேறு வழியில்லை" என்பதுதான் அவர்களின் பதிலாக இருக்கும்.
அதேதான் அரசியலுக்கும்.
இந்த வேட்பாளர்கள் அதிமுகவை விட்டு விலகி, இப்படி ஒரு மறுதேர்தலுக்கு வழிவகுத்தது தவறுதான். ஆனால், பிரச்சினையை அவர்களின் கோணத்தில் இருந்து பார்த்தால், அவர்களுக்கு வேறு வழியிருக்கவில்லை என்பதுதான் நிஜம்.
கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ந்து படுதோல்விகளைச் சந்தித்தால், உடனடியாகக் கேப்டன் மாற்றப்படுவார். ஒரு நிறுவனம் தொடர்ச்சியாக நஷ்டத்தைச் சந்தித்தால், அதன் தலைவர் மாற்றப்படுவார். இதெல்லாம் அங்கு நடக்கிறது.
ஆனால், அரசியலில் மட்டும் எத்தனை முறை தோற்றாலும் தலைவர்கள் தங்கள் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க மறுக்கிறார்கள்.
மம்தா பானர்ஜி இப்போதுதான் முதல் தோல்வியைச் சந்தித்தார். ஆம் ஆத்மி கட்சியும் தோல்வியைச் சந்தித்தது. அங்கெல்லாம், "இனி இந்தக் கட்சிகள் தேறாது" என்று கூறி உறுப்பினர்கள் கட்சி மாறவில்லையா?
அதுவும் அவர்கள் பதவியை ராஜினாமா செய்யாமலேயே பாஜகவிற்குத் தாவினார்கள். அது பாண்டேவுக்குத் தவறாகத் தெரியவில்லை.
ஆனால், இந்தத் தமிழ்நாடு எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மக்களிடம் சென்று மறுதீர்ப்பு கோருகிறார்கள். அது இவருக்குத் தவறாகத் தெரிகிறது. இதுதான் பிராமணப் பாசம்!
உண்மையில், தொடர்ந்து தோல்வியைச் சந்திக்கும் எடப்படியார், தலைவர் பதவியில் இருந்து விலகி வேறொரு தலைமைக்கு வழிவிட்டிருக்க வேண்டும்.
அல்லது, கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களைக் கூட்டி ஒரு ரகசிய வாக்கெடுப்பு நடத்தி, இந்தத் தோல்விக்குப் பிறகும் "நான்தான் கட்சியின் தலைவர்; கட்சி என் பின்னால்தான் இருக்கிறது" என்பதை நிரூபித்திருக்க வேண்டும். அப்படி ஒன்று நடந்த பிறகு துரோகம் செய்திருந்தால், அதைத் தவறு என்று சொல்லலாம்.
அப்படி ஒரு சூழல் இல்லாத வரை, எடப்பாடி போன்ற சர்வாதிகாரத் தலைவர்களுக்கு இப்படித்தான் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும். இது எடப்பாடிக்கு மட்டுமல்ல, எல்லாக் கட்சிகளுக்கும் பொருந்தும்.
இதைத் தடுக்க வேண்டுமென்றால், அனைத்து அரசியல் கட்சிகளிலும் தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகவே கட்சிப் பொதுக்குழுவைக் கூட்டி, ரகசிய வாக்கெடுப்பு மூலம் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறை வர வேண்டும்.
தேர்தல் முடிந்த பின் தோற்ற தலைவர்கள் தோல்விக்கான காரணங்களைப் பட்டியலிட்டு, மீண்டும் கட்சியினரின் நம்பிக்கையை பெற வேண்டும்.
இதுபோன்ற கட்சி தாவும் காமெடிகள் ஏற்கனவே நடந்தன; நடந்துகொண்டிருக்கின்றன; இனிமேலும் நடக்கும். இங்கே தவறு கட்சி மாறுபவர்கள் மீது இல்லை; அதிகாரத்தை விட்டுக்கொடுக்க மறுக்கும் தலைவர்கள் மீதுதான்.
எனவே, பாண்டே அவருடைய உபதேசத்தை முதலில் எடப்பாடிக்குத்தான் வழங்க வேண்டும்!

0 comments:
Post a Comment