!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Thursday, September 10, 2026

புதிய தலைமைச் செயலகம் - இப்படி செய்யலாம்

தமிழக அரசு புதிய தலைமைச் செயலகம் கட்டப்போவதாக அறிவித்திருக்கிறது. அவசியமானதுதான்; ஆனால் ஏற்கனவே இப்படித்தான் கலைஞர் ஒன்றைக் கட்டி, பின்னர் அது அரசு மருத்துவமனையாக மாறியது. தமிழக அரசியலில் இப்படி அடிக்கடி நடக்கிறது; பரந்தூர் சமீபத்திய உதாரணம். எனவே, மீண்டும் அப்படி ஒரு தலைவலியில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க ஏதாவது செய்ய வேண்டுமே, என்ன செய்யலாம்?

தமிழ்நாட்டில் திருமணங்கள் நிச்சயம் செய்யப்பட்டால், அடுத்த ஆறு மாதங்களில் திருமணம் நடந்துவிடும். இது நம் வழக்கம். ஆனால் இங்கே குஜராத்தில் அப்படியில்லை. நிச்சயத்திற்கும் திருமணத்திற்குமான இடைவெளி ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை இருக்கிறது. அதுவரை மணப்பெண்ணும் மணமகனும் பழகுகிறார்கள். குடும்பங்களும் விசேஷ நாட்களில் சந்தித்துக்கொள்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் இரு குடும்பங்களும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.

இங்கே ஓராண்டு காலம் என்பதே நீண்ட காலம்தான். அதற்குள் மாப்பிள்ளை மற்றும் பெண்ணின் குணநலன்களை அவர்களாலும் புரிந்துகொள்ள முடியும். குடும்பங்களும், 'இது சரிவருமா, வராதா' என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றன. ஒரே தலைவலி என்னவென்றால், பெண்ணும் மாப்பிள்ளையும் கொஞ்சம் 'ஓவராக'ப் பழகாமல் இருக்க வேண்டும்.

ஆனாலும், ஒரு மோசமான ஆணிடமோ அல்லது குடும்பத்திடமோ மாட்டிக்கொண்டு வாழ்க்கை முழுவதும் கஷ்டப்படுவதைவிட, இடையிலேயே இதை முறித்துக்கொள்வது நல்ல விஷயம்தான். நிச்சயம் செய்வதும், பின்னர் அதை முறித்துக்கொள்வதும் வட மாநிலங்களில் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது.

தமிழக அரசும் இதையே கடைப்பிடிப்பது நல்லது. எந்த ஒரு பெரிய திட்டம் என்றாலும், இரண்டு அல்லது மூன்று இடங்களைத் தேர்வு செய்து, முன்கூட்டியே வெளிப்படையாக அறிவித்துவிட வேண்டும். குறைந்தது ஆறு மாத காலமாவது மக்கள் இது குறித்து கவனிக்கட்டும்.

தொலைக்காட்சிகளிலும் பொது மேடைகளிலும் விவாதங்கள் நடக்கும். பல சாதக, பாதக விஷயங்கள் வெளியே வரும். ஏனென்றால், இந்தியாவில் அரசு அதிகாரிகள் என்றால் அவர்கள் அரைவேக்காடுகள் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆளும்கட்சி என்ன விரும்புகிறதோ, அதற்குத் தேவையான ஆதாரங்களை மட்டும் காட்டி அவர்களைக் குஷிப்படுத்துவதுதான் இவர்களின் தலையாய வேலை. தலைவலியும் நஷ்டமும் அரசின் தலையில்தான் விடியும்.

ஒரு காலத்தில் மக்களின் கருத்தை அறிவது சிரமமாக இருந்திருக்கலாம். இன்று இணைய உலகம்; இனி அது சுலபமானதுதான். ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஒரு சுப முகூர்த்த நாளில், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மக்களிடம் இணையவழிக் கருத்துக்கணிப்பு நடத்தலாம். பிக் பாஸில் யாரை வெளியேற்றுவது என்று தீர்மானிப்பதைப் போல, மக்களிடமே கேட்டுவிடலாம். இதற்கான செயலியை அரசு உருவாக்குவதும் நல்லது.

இந்தக் காலகட்டத்தில் மக்கள் ஓரளவுக்குப் பல விவாதங்களைக் கவனித்து ஏதோ ஒன்றை முடிவு செய்திருப்பார்கள். அவர்களின் பெருவாரியான வாக்குகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் இடத்தை அரசியல் கட்சிகளால் அரசியலாக்க முடியாது. தான்தோன்றித்தனமாகச் செயல்படும் ஆளும்கட்சிக்கும் இது ஒரு கடிவாளமாக இருக்கும். பொதுமக்களும் அனாவசியமாகப் போராடினால், தைரியமாக 'ரெண்டு தட்டு' தட்டலாம்.

அதேசமயம் சாதாரண மக்கள் அந்த அளவுக்கு அறிவாளிகள் கிடையாது. விவாதங்களில் யார் எதை சொன்னாலும் நம்பும் அளவுக்கு இவர்கள் அறிவாளிகள். இன்னமும் இந்த MLM முறை மற்றும் க்ரிப்டோ மோசடிகளில் சிக்கி ஏமாறும் மனிதர்கள் இருக்கிறார்கள். எனவே இது கூடுதல் ஆலோசனையாக இருக்கும். இறுதி முடிவை அரசின் நிபுணர் குழு எடுக்கவேண்டும்.

இப்படித் திடீரென்று ஒரு இடத்தை அறிவிப்பதன் மூலம், கட்சிக்காரர்களும் அதிகாரிகளும் அங்கே நிலங்கள் வாங்குவதைத் தடுக்க முடியும். அது ஒரு லாபம்தான். அதேசமயம், அவசரத்தில் எடுத்த முடிவு தவறாகிவிட்டால்?

அயோக்கியர்களிடமிருந்து தப்பி, முட்டாள்களிடம் நாடு மாட்டிக்கொள்ளக் கூடாது. சில அமைச்சர்களின் பேச்சுகளைக் கேட்டால் எனக்கு அந்த சந்தேகம் வருகிறது. இருந்தாலும், ஊழல்வாதிகள் ஆட்கொல்லி நோய். அனுபவமின்மை அந்த அளவுக்கு ஆபத்தானதில்லை. இரண்டு பராசிட்டமால் மாத்திரைகளை ஏடிஎம் கார்டு மூலம் நசுக்கி இந்த அமைச்சர்களுக்குக் கொடுத்தால் குணமாகிவிடும். எனவே பயப்பட வேண்டியதில்லை.

ஆதவ் அர்ஜுன் இறங்கி அடிக்கிறார் என்றால், இந்த டாஸ்மாக் அமைச்சர் நோ-பாலையே தடுத்து ஆடுகிறார். டாஸ்மாக்கில் இன்னமும் 10 ரூபாய் தலைவலி அடங்கவில்லை. இவர் அமைச்சர் என்பதே அவருக்குத் தெரியாது போலிருக்கிறது. அடுத்த சில தினங்களில், 'டாஸ்மாக் ஊழியர்களிடம் கூடுதலாக 10 ரூபாய் வாங்க வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்' என்றும் கோரிக்கை வைப்பார்.

காவல்துறை என்றால் கடுமை, ஆசிரியர் என்றால் கண்டிப்பு, ஆன்மீகவாதி என்றால் கருணை என்று விதிமுறை இருக்கிறது. ஆனால், அரசியல்வாதிகள் இவையெல்லாம் கலந்த கலவையாக இருக்க வேண்டும். எங்கே கடுமை காட்ட வேண்டுமோ, அங்கே இது போன்ற அடங்காத ஊழியர்களைத் தூக்கி எறிய வேண்டும்.

இப்போதைக்கு திமுகவினரைச் சிறையில் தள்ளுங்கள் என்றும், இந்த அமைச்சர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுங்கள் என்றும் இறைவனிடம் வேண்டிக்கொள்ளலாம்.

0 comments:

Post a Comment