!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Thursday, September 24, 2026

போக்ஸோ வீரமணி

நாம் சில சமயம் சாப்பிடக்கே வழியில்லாமல் தவிப்போம்; சில சமயம் மிதமிஞ்சிய சாப்பாட்டோடு தவிப்போம். இப்போது செய்திகள் அப்படித்தான் இருக்கின்றன. இந்த வீரமணி விஷயத்தை கடந்த ஆட்சியில் அத்தனை ஊடகங்களும், அரசியல் வியாதிகளும், சமூகப் போராளிகளும் பேசாமல் தவிர்த்தார்கள்; எதுவும் தெரியாத மாதிரி நடித்தார்கள். இப்போது பேப்பரே படிக்காத பிச்சைக்காரன் கூட வீரமணி பாலியல் வழக்கு குறித்து நமக்குப் பாடம் எடுப்பான் போலிருக்கிறது. அந்த அளவுக்கு எல்லோரும் எழுதித் தள்ளுகிறார்கள்.

நிஜத்தில் இதுபோன்ற விஷயங்கள் எந்தக் காரணம் கொண்டும் வெளியே வராது. ஏதோ ஒரு விபத்து மாதிரி வெளிவந்தால்தான் உண்டு. காரணம், குற்றவாளிகள் வேறு, கிரிமினல்கள் வேறு. இந்த ‘கிரிமினல்’ என்ற வார்த்தைக்குச் சரியான தமிழ்ப் பெயர் இல்லை. குற்றவாளிகள் குற்றம் செய்வார்கள், அவ்வளவுதான்.

ஆனால் கிரிமினல்கள் அதை ஒரு மிகப்பெரிய வலைப்பின்னலாகச் செய்வார்கள். யாரால் நமக்கு ஆபத்து ஏற்படும், யார் நமக்கு உதவ முடியும் என்பதையெல்லாம் கணித்து, அவர்களையும் இந்தக் குற்றத்தில் ஏதாவது ஒரு வகையில் பங்குதாரராக மாற்றிவிடுவார்கள். பணம் அல்லது பெண், இரண்டில் ஏதோ ஒன்றில் அவர்கள் பலவீனமாக இருப்பார்கள்; அதில் மாட்டிக்கொள்வார்கள்.

இதுபோன்ற குற்றங்கள் வெளிவந்தால் நாமும் மாட்டுவோம் என்ற பயத்தில், பெரிய தலைகள் எப்படியாவது இவர்களைக் காப்பாற்றிவிடுவார்கள். அல்லது, ‘உன் குடும்பத்துக்கு நான் பாதுகாப்பு தருகிறேன்; சிறையில் நன்றாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறேன்’ என்று ஏதோ ஒரு ஒப்பந்தம் செய்து, கடைநிலையில் இருப்பவனை மட்டும் பலியாடாக மாற்றி இவர்கள் தப்பித்துக்கொள்வார்கள்.

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் அந்த ‘சார்’ என்பவர் தப்பித்துவிட்டார் அல்லவா? அதே கதைதான் இங்கேயும் நடக்கும். அந்த ‘சார்’ செல்வரத்தினம் என்ற காவல் அதிகாரி என்று சவுக்கு சங்கர் சொன்னார். எனக்கு நம்பிக்கையில்லை. அது வேறு யாராகவும் இருக்கக்கூடும். அல்லது, அவர் இவராக இருந்தாலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்கு பல விஷயங்கள் தெரிந்தவராக இருக்க வேண்டும். எப்படியோ, அங்கே ஒரே ஒரு ஆட்டை மட்டும் பலிகொடுத்து அந்த வழக்கை முடித்தார்கள்.

நான் சிறையில் இருந்த முதல் மூன்று மாதத்திலேயே எடை குறைந்து போனேன். என்னைப் பார்க்க வந்த உறவினர், ‘என்ன இப்படி இளைச்சிப் போயிட்ட?’ என்று கேட்டார்.

ஆனால் இந்த அண்ணா பல்கலைக்கழக ஞானசேகரன் சில வருடங்களாக உள்ளே இருக்கிறார். அவரைப் போய் எடை போட்டுப் பாருங்கள். நிச்சயம் கூடி இருக்கும். அதுவும் அவர் பளபளப்பாகவும் இருக்கக்கூடும். இதுதான் சிறை.

இனி இந்த போக்ஸோ வழக்கு.

வழக்கமாக ஒரு திருடன் மாட்டினால், அவனைப் பிடிக்கும் காவல் துறையினர், வேறு எங்கெல்லாம் திருடினாய் என்று கேட்பார்கள். வேறு குற்றங்களில் இந்தக் குற்றவாளிக்குத் தொடர்பு இருக்கிறதா என்றெல்லாம் கவனிப்பார்கள்.

அதேபோல், வேறு எந்தக் குற்றமென்றாலும், அங்கே குற்றவாளியிடமோ அல்லது பாதிக்கப்பட்டவர்களிடமோ பலவிதமான கேள்விகளைக் கேட்பார்கள். அன்பில் மகேஷிடம் கூட 200 கேள்விகள் கேட்கப்பட்டது; மீதி 100 கேள்விகள் மீண்டும் கேட்பார்கள்.

அதேபோல், இந்தப் பாலியல் மோசடியில் பாதிக்கப்பட்ட பெண்களிடமும் இதேபோல் கேள்விகள் கேட்கப்படும். ஆனால் அத்தனையும் வீரமணி சம்பந்தப்பட்டதாகத்தான் இருக்கும். அவர் எத்தனை மணிக்கு வந்தார், எப்போது போனார், எத்தனை முறை வந்தார், அவர் வயதென்ன, என்ன சட்டை போட்டிருந்தார் என்பது போன்ற கேள்விகள்தான் இருக்கும். வேறு யார் உங்களிடம் தவறாக நடந்துகொண்டார்கள் என்ற கேள்வியைத் தப்பித் தவறியும் கேட்க மாட்டார்கள்.

அப்படிக் கேட்டால், அது காவல் துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் கூட சிக்கும் வாய்ப்புகள் வந்துவிடும்.

இங்கே வழக்கம்போல் முடிந்தவரை இழுக்க முயற்சிப்பார்கள். இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி கடுமையானவராக இருந்தால், அவர் பதவி உயர்வில் இடம் மாறும் வரை காத்திருப்பார்கள். அதன்பின் என்ன நடக்கும் என்பது ஆண்டவனுக்குத்தான் தெரியும்.

ஆனால் இந்த வழக்கு ரொம்பவே பிரபலமாகிவிட்டதால், நிச்சயம் தண்டனை கிடைக்கும். அது வீரமணிக்குப் பாலியல் குற்றத்திற்காகவும், மற்றவர்கள் அவரை மிரட்டிப் பண மோசடி செய்தார்கள் என்ற அடிப்படையில்தான் இருக்கும். கூடுமானவரை மற்ற பெரிய தலைகள் இந்த அவமானத்திலிருந்து காப்பாற்றப்படுவார்கள்.

நான் கவனித்த வரையில் இந்திய நீதித்துறை இப்படித்தான் செயல்படுகிறது. சரி, ஏதோ ஒரு குற்றவாளியாவது தண்டிக்கப்படுவான் என்று சந்தோஷப்பட வேண்டியதுதான்.

0 comments:

Post a Comment