!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Showing posts with label ahmedabad. Show all posts
Showing posts with label ahmedabad. Show all posts

Tuesday, March 2, 2021

வெள்ளை யானை



என்னடா இது ஆளில்லாத ஊர்ல இந்த ஆள் வந்து திடீர்ன்னு டீக்கடை போடறார்ன்னு நினைக்கறீங்களா? பதிவுலகில் இருக்கும் டிராஃபிக்கை பார்க்கும்போது பதிவு எழுதும் எண்ணமே யாருக்கும் வராது. பல ஜாம்பவான்கள் குட்பை சொல்லிவிட்டார்கள். சிலர் விடாக்கண்டன் கொடாக்கண்டனாக இருக்கிறார்கள்.

நான் இப்படி அவ்வப்போது வருவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஓன்று, `என்னை மன்னார்குடியில கேட்டாக, மாயவரத்துல கேட்டாக...` என்று ஒரு வசனம் வருமே, அதுபோல் என் பதிவுகளை அமெரிக்காவுலேந்து படிக்கிறாக, ஆஸ்திரேலியாவிலிருந்து படிக்கிறாக என்று சொல்லலாம் போலிருக்கிறது. அந்த அளவுக்கு எனக்கு எல்லா கண்டங்களிலும் வாசகர்கள் உண்டு.

இப்படி பல நாடுகளிலிருந்து படிக்கும் வாசகர்கள் ஒரு பதிவை படித்தால் மேலும் 10 பதிவுகளையும் மேய்ந்துவிட்டுதான் போகிறார்கள். அதாவது எனக்கு வாசகர் வட்டம் உண்டு, ஆனால் வருமானம்தான் இல்லை. ஆனானப்பட்ட சாரு நிவேதிதாவே `என் அக்கவுண்ட்ல பணம் போடுங்கனு` அவருடைய வலைதளத்தில் சொல்கிறார். நல்ல எழுத்தாளர் என பெயர் வாங்கிய ஞாநி கடைசி காலத்தில் வறுமையில்தான் இறந்திருக்கிறார் போலிருக்கிறது.

பேனாவை எடுத்தவன் உலகை ஆளலாம்னு எவனோ ஒருத்தவன் எங்கேயோ கிறுக்கி வைச்சிருக்கான். சனீஸ்வரன் நம்மை பிடித்தால் இப்படித்தான், பார்க்க கூடாத விஷயங்களை பார்ப்போம், கேட்க கூடாத விஷயங்களை கேட்போம், படிக்க கூடாத விஷ்யங்களையெல்லாம் படிச்சி அதையும் நம்பி வீணாபோய் விடுவோம்.

பிராக்டிகலாக இன்னொரு காரணம் இருக்கிறது. தனிமையை போக்குவதற்கு வேறு வழி இல்லாததுதான். இப்படி உண்மையை பட்டுனு போட்டு உடைக்க வேண்டியதுதானேன்னு நீங்க கேட்கலாம். ஆனால் எழுத்தாளன் இல்லையா, இப்படிதான் ஒரு வரில சொல்ல வேண்டிய விஷயத்தை ஒன்பது வரிகளாக இழுக்க வேண்டும். இது தொழில் தர்மம்.

அதுமட்டுமின்றி, அவ்வப்போது இப்படி நாம் போடும் பதிவுகளை எதிர்காலத்தில் நாமே படிக்கும்போது நாமும் எவ்வளவு மாறியிருக்கிறோம் என்பதை அது நமக்கு காட்டும். அந்த வகையில் இந்த கிறுக்கல்கள் அவ்வப்போது வரும். மூடை பொறுத்தது.

டீக்கடைக்காரர்

முதல் செய்தியே என்னை போல் இங்கே, அதாவது டெல்லியில், இருக்கும் ஒருவரை பற்றியது. இவருக்கும் ஆளில்லாத ஊரில் டீக்கடை போட ஆசை. உண்மையில் அவர் டீக்கடைக்காரரின் மகன்தான். இவர் பேரை சொன்னால் டெல்லியே அதிரும். என்ன செய்வது?  எதிரே இருப்பவர் டம்மி பீஸாக இருப்பதால் இவர் காட்டில் மழை. மிஸ்டர் மோடியை பற்றிய செய்திதான் இது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் போது இங்கே அகமதாபாத்தில் மெட்ரோ டிரைன் மிக விரைவாக, பந்தாவாக, விடப்பட்டது. காரணம் தேர்தல்தான். வெள்ளை யானைக்கு சிமெண்ட் கலர் அடித்து, நாங்கள் உங்களுக்காக என்னென்னெ திட்டங்கள் கொண்டு வந்திருக்கிறோம் பாருங்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டார் மிஸ்டர் மோடி. கடைசியில் அது ஒரு வெள்ளை யானை என்பது, அதாவது இது ஒரு உருப்படாத திட்டம் அல்லது மக்களுக்கு தேவை என ஓன்று இருக்க, அதற்காக இவர்கள் போட்ட திட்டம் தோல்வியில் முடிந்திருக்கிறது என தெரிகிறது.

நான் அடிக்கடி வாக்கிங் போகும் வழியில்தான் இந்த பாதை வருகிறது. ஒரே ஒரு முறைதான் என் கண்ணில் பட்டது. விசாரித்ததில் ஒரு நாளைக்கு நாலே சர்விஸ்தானாம். அதுவும் அந்த பயணமும் 5-10 நிமிட தூரம்தான். போட்ட பணத்துக்கு லாபம் வரவில்லை என்பதைவிட தற்போது நிர்வாக செலவுக்கே எதுவும் தேறாது போலிருக்கிறது. எனவே திட்டம் மேற்கொண்டு விரிவாக்கம் ஆகாமல் ஆமை வேகத்தில் நடக்கிறது. போக்குவரத்து வசதி முக்கியமான ஓன்று. ஆனால் அதை யார் தரவேண்டும், எப்படி தரவேண்டும் என்பதில்தான் மத்திய மாநில அரசுகள் மொக்கையாக சிந்திக்கின்றன.

பல இடங்களில் அவசியமான திட்டங்களுக்கு பணம் இல்லாமல் முடங்கி கிடக்க, இப்படி மொக்கையான திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கடைசியில் பணமும் முடங்கி மக்களுக்கும் அது எந்த ஒரு பலனையும் தரவில்லை. பொதுத்துறை என்பது இப்படித்தான். அதில் 10-ல் 8 வெள்ளை யானைதான்.

பொதுத்துறை என்பது ஒரு காலத்தில் அவசியமாக இருந்தது. சுதந்திரம் அடைந்த போது இந்தியாவில் நிறைய தலைவர்கள் உதை வாங்க/சிறைக்கு போக என போராட்ட தலைவர்கள் இருந்தார்கள்.

வெள்ளையர்கள் நம்மை தொழில்ரீதியாக வளர விடாததால் தொழில் முனைவோர் அப்போது இல்லை. வங்கிகள் மற்றும் வேறு பல கட்டமைப்புகளும் இல்லை. இருந்தாலும் தொழில்வளர்ச்சி அவசியமாக இருக்க, அதை செய்யக்கூடிய நபர்கள் அதிகமாக  இல்லாத நிலையில் அரசே பொதுத்துறை மூலம் அவற்றை செய்யவேண்டிய நிர்பந்தம். எனவே ஆரம்பகட்டத்தில் அரசு பொதுத்துறைகளை ஆரம்பித்தது அந்த கால சூழ்நிலைக்கு சரி. தற்போது நாடு ஓரளவு வளர்ந்துவிட்டது.இனி தொழில்களை தனியார் துறையினர் பார்த்துக் கொள்வார்கள். அரசாங்கம் வழிகாட்டுதலோடு மிக மிக அவசியமான இடங்களில் மட்டும் முதலீடு செய்தால் போதும்.

அரசு துறைகள் லாப நோக்கில் செயல்படாது என்பது உண்மைதான். ஆனால் அங்கே நிர்வாகம் என்பது ரொம்ப சிக்கலான ஓன்று. அங்கே நிர்வாகிகளால் முடிவெடுக்க முடியவில்லை. ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு நாம் என்ன தொழில் செய்கிறோம், இங்கே மேலும் என்ன செய்யலாம் என புரிந்து அவர் செயல்பட ஆரம்பிக்கும்போது அவரை வேறு இடத்துக்கு மாற்றி விடுகிறார்கள். அடுத்த அதிகாரி மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்கிறார்கள்.

இன்னொருபக்கம் அரசியல்வாதிகளுக்கு இது ஊழலின் இன்னொரு கதவு. அவசியமோ இல்லையோ வேண்டியவர்களுக்கு பணம் வாங்கிக்கொண்டு அல்லது கட்சிக்காரர்களுக்கு அவர்களுடைய விசுவாசத்துக்கு பரிசு என தேவையில்லாத வேலையை உருவாக்கி அந்த நிறுவனத்தை நாசமாக்கிவிடுகிறார்கள். இன்னும் பல சொல்லலாம். ஆனால் மக்களுக்கு இதை புரிய வைப்பது சிரமம். அதற்கு நமக்கு அபாரமான அறிவு வேண்டும். என்னிடம் அது இல்லாததால் அடுத்த செய்திக்கு தாவுவோம்.

இது அதைவிட மோசம்

சமீபத்திய கோரோனோவின் மிகப்பெரிய பாதிப்பு போக்குவரத்துதான். கொரானாவுக்கு முன் ஷேர் ஆட்டோவில் குறைந்த கட்டணம் இங்கே 5 ரூபாயாக இருந்தது. சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என இரண்டு பேருக்கு மேல் ஆட்டோவில் ஏற்றக்கூடாது என கட்டுப்பாடுகள் வர, அது 10 ரூபாயாக மாறியது. அதன்பின் நிலைமை சீரானாலும் மரத்தில் ஏறிய வேதாளம் இறங்க மறுக்கிறது. இனி இறங்கவும் மாட்டார்கள்.

ஒரு பயணத்தில் ஒரு பயணி சொல்லிக்கொண்டிருந்தார். அவர் வேலைக்கு போக மூன்று ஆட்டோ ஏற வேண்டுமாம். அந்த வகையில் அவருக்கு போக - வர மாதம் 1500 செலவு. அவருடைய சம்பளத்தில் இது 10 சதவிகிதம். விரைவில் டு வீலர் வாங்க போகிறாராம். (போக்குவரத்தை பொறுத்த வரையில் தமிழ்நாடு பரவாயில்லை. ஓரளவு தனியார் பங்களிப்பு இருக்கிறது.)

இப்படி பிச்சைக்காரர்கள் முதற்கொண்டு வண்டி வாங்கும் அளவுக்கு சூழ்நிலைகளை உருவாக்கிவிட்டு, அதன்காரணமாக டிராஃபிக் சிக்கல், சுற்று சூழல் மாசுபடுதல் என பல தலைவலிகள் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் இதன் காரணமாக பெட்ரோல் உபயோகம் அதிகரிக்க அது அரசுக்கும் தலைவலி, பெட்ரோல் விலை உயர்வால் மக்களுக்கும் தலைவலி. அதற்கு தீர்வு என்று அரசாங்கம் இப்படி உருப்படாத திட்டங்கள் போட்டு அதுவும் தலைவலி. கஷ்டம்டா சாமி.

அற்புதமான புத்திசாலிகள்

இந்தியர்கள் அற்புதமான புத்திசாலிகள். பல வருடங்களுக்கு முன் ஒரு முறை தியேட்டரில் டிக்கெட் வாங்க வரிசையில் நின்றிருந்தேன். பலர் குறுக்கே புகுந்து டிக்கெட் வாங்கி கொண்டிருந்தனர். வரிசையில் நின்றிருந்த பலருக்கு கோவம் வர சண்டை ஆரம்பித்தது. டிக்கெட் கவுண்டரில் புகார் செய்தால், அவர் கவுண்டர் கதவை மூடிவிட்டு `எல்லோரும் வரிசையில் வாங்க, அப்பத்தான் டிக்கெட் கொடுப்பேன்` என்று நீதியை நிலைநாட்டி விட்டார்.

குறுக்கே புகுந்த அவர்களை கண்டித்து விட்டு வரிசையில் வருபவர்களுக்கு டிக்கெட் கொடுப்பார்  என்று பார்த்தால், அவர்களுக்கும் டிக்கெட் இல்லையாம், வரிசையில் இருந்த எங்களுக்கும் டிக்கெட் இல்லையாம். இந்தியாவில் இப்படித்தான் கிறுக்குத்தனமாக முடிவெடுப்பார்கள். அதன்பின் பலர் என்ன முடிவெடுத்திருப்பார்கள்?  ஊரோடு ஒத்து போயிருப்பார்கள். அதுதான் நடந்திருக்கும்/ நடந்துகொண்டிருக்கிறது. அதாவது தவறான பாதைதான் இனி சரியான பாதை நமக்கு அவர்கள் சொல்லித்தருகிறார்கள். நாமும் அதை பின் தொடர்கிறோம். இப்படிப்பட்ட முட்டாள்தனமான நிர்வாகிகளால் இந்தியா மெல்ல மெல்ல சீரழிந்துகொண்டிருக்கிறது.

அதே காட்சி 

இங்கே அகமதாபாத்திலும் இப்படி ஒரு சம்பவம். இந்த குஜராத்தியர்கள் பெற்ற தாயை கூட எட்டி உதைப்பார்கள் ஆனால்  கோமாதாவுக்கு இவர்கள் கொடுக்கும் இருக்கும் மரியாதையே தனி. இங்கே தெருவில் மாடுகளுக்கு இருக்கும் சுதந்திரம் மனிதர்களுக்கு கூட கிடையாது. இப்படி உலாவும் மாடுகளில் பட்டா போட்டவை, போடாதவை  என இரண்டு விதம் உண்டு.

இங்கே ரபாரிகள் அதாவது இடையர்கள் செய்யும் கொடுமை வேறுவிதம். மாடுகளிடம் பாலை கறந்துவிட்டு அவற்றை வெளியே அனுப்பிவிடுவார்கள். அவை வெளியே தெருவெல்லாம் மேய்ந்து வயிற்றை நிரப்பிக்கொள்ள வேண்டும். பாலை மட்டும் இவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும். இது என்னவிதமான புண்ணியமோ? எனக்கு ஒன்றும் புரியவில்லை. பால் கறக்கும் நேரம் மற்றும் இரவு நேரங்களில் மட்டும் அட்டகாசமாக டூ வீலரில் வந்து மாடுகளை அழைத்து செல்வார்கள். அவைகளுக்கு இரவுநேர லாட்ஜிங் வசதி மட்டும் உண்டு போலிருக்கிறது.

இங்கே இந்த ரபாரிகளின் வீடுகளும் பிரமாண்டமாக இருக்கும். ஆண்களும் சரி பெண்களும் சரி எல்லாம் வாளிப்பாக இருப்பார்கள். நான் இந்த பதிவுக்காகத்தான் ரபாரி பெண்களை உற்று பார்த்தேன். வேறு எந்த காரணமும் இல்லை. மாடுகளால் இவர்களுக்கு வருமானம் ஆனால் செலவுகள் இல்லை. அதுதான் இந்த செழிப்புக்கு காரணம்.

சரி இனி விஷயத்துக்கு வருவோம். இப்படி மாடுகள் தெருக்களில் சுற்றுவதால் ஒரு பிரச்சினை. இங்கே அரசு, `ஸ்வச்ச பாரத்` என சுத்தத்துக்கு முன்னுரிமை கொடுத்து பல இடங்களில் சின்னதும் பெரியதுமாக குப்பை தொட்டிகளை வைத்தது. அதில் மக்கும் குப்பை இதில் போடவும், மக்காத குப்பைகளை மற்றதில் போடவும் என வசனம் வேறு எழுதி வைத்தார்கள்.

ஆனால் மாடுகளுக்கு இதெல்லாம் தெரியுமா? அவற்றுக்கு யார் மீது கோபமோ, குப்பை தொட்டி ஒரு பக்கம், குப்பைகள் வேறு பக்கம் என எல்லாவற்றையும் கதகளி ஆடிவிடும். விளைவு ரோடு நாசமாக காட்சி அளிக்கும். நம் நாட்டின் அற்புதமான நிர்வாகிகள் இதற்கும் ஒரு அற்புதமான வழி கண்டுபிடித்தார்கள். இப்படி குப்பை தொட்டிகள் இருப்பதால்தானே மாடுகள் இப்படி செய்கின்றன இனி குப்பை தொட்டியே வைக்க கூடாது என எடுத்துவிட்டார்கள்.

என்னிடம் ஒரு முறை குப்பை சேர்ந்துவிட நான் தெருவை அசுத்தப்படுத்த கூடாது என குப்பை தொட்டியை தேடி தேடி களைத்துப்போய் அப்படியே தூக்கி வீசினேன். எதிரே ஸ்வச்ச பாரத் என வசனம் எழுதி, ஒருவேளை படிக்காதவனுக்கு எப்படி புரியும் என ஒரு குப்பைத்தொட்டி படம் வரைந்து அதில் குப்பையை எப்படி போட வேண்டும் என படம் போட்டு விளக்கியிருந்தார்கள். அதாவது படத்தில் குப்பை தொட்டி இருக்கிறது ஆனால் தெருக்களில் இல்லை.

இந்தியா விளங்கிடும். கிறுக்கு பயல்கள் நிறைந்த நாட்டில் நாமும் கிறுக்காகவே நடந்து கொள்ளவேண்டும்.

Tuesday, February 9, 2021

மனிதன் மாறிவிட்டான், மரத்தித்தில்....


காலம் மனிதனை எப்படி மாற்றுகிறது? பல விஷயங்களை நினைத்து பார்த்தால் நமக்கே அதிர்ச்சியாக இருக்கும். இப்படி ஒரு மாற்றம் என் வாழ்க்கையில் நடந்தது. அந்த சம்பவங்கள் இங்கே.

எனக்கு பணத்தின் மீதான ஆசை அதிகம். பேராசை கிடையாது. என் கழுத்தின் மீது பல வருடங்களாக, அதாவது இளமை பருவத்திலிருந்தே, கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது. அந்த சிக்கலிலிருந்து நான் தப்ப வேண்டுமென்றால் எனக்கு நிறைய பணம் வேண்டும். அப்புறம் மேலும் சில `விஷயங்கள்` நடக்க வேண்டும். அப்படி ஏதாவது நடந்தால்தான் நான் தப்பிக்க முடியும் என்பதால் இந்த ஆசை.

தற்போது காலம் கடந்துவிட்டது. இனி அதை பற்றி பேசி புண்ணியமில்லை. ஆனால் இந்த பணத்திற்கான தேடலில் நடந்த சில சுவாரசியமான சம்பவங்கள்.

25 வருடங்களுக்கு முன் லாட்டரியும் இருந்தது, எனக்கும் ஷேர் மார்க்கெட் பரிச்சியமாகி இருந்தது. இரண்டில் ஏதாவது ஓன்று என்னை கோடீஸ்வரனாக்கிவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. எனவே ஓரளவுக்கு வருமானம் இருந்தாலும் எனக்காக செலவு செய்வதிலும் கூட ரொம்பவே கஞ்சத்தனமாக இருந்தேன். பணம் வந்த பிறகு மொத்தமாக வாழ்க்கையை அனுபவித்துக் கொள்ளலாம் என்று திட்டம். கனவு காணும் உரிமை மட்டும்தான் மனிதனுக்கு இருக்கிறது, அதற்கு அப்ரூவல் கொடுப்பவர் வேறு ஒருவர் என்பதை ரொம்ப தாமதமாக உணர்ந்தேன்.

இப்படி கஞ்சனாக இருந்து மிச்சமாகிய பணத்தை உப்புமா கம்பெனிகளின் ஷேர்களை அனுபவமின்றி வாங்கி குவித்தேன். இப்போது அந்த ஷேர் பத்திரங்களை எடைக்கு போட்டால் 50 ரூபாய் கூட தேறாது.

அப்போது வந்து கொண்டிருந்தே தமிழ்நாடு பம்பர் லாட்டரிகளை வியாபாரியாக இருந்தும் தொழில் தர்மத்தை மீறி விற்காமலும் வைத்து பார்த்தேன். அதாவது ஒழுங்காக வந்து கொண்டிருந்த பணத்தை உதாசீனப்படுத்தினேன். இப்போது அவற்றை நினைத்து பார்த்தால் கண்களில் ஏதோ ஓன்று வருகிறது. அதன்பின் என் கணக்குகள் என்னை கை கழுவிவிட நான் ஜெயிலுக்கு போனேன். அங்கே சில அனுபவங்கள்.

நான் முதலில் இருந்த பிளாக்கில் சாப்பாட்டுக்கு ரொம்பவே கஷ்டப்பட்டேன். அங்கே நான் இருந்த 8 மாதங்களில் பெரும்பாலும் மோர் சோறு அல்லது தண்ணி ஊற்றி சாப்பிடுவதுதான் நிலைமை. இதில் காலை பட்டினி வேறு. இடையில் சிறை கிச்சனுக்கு போய் காசு கொடுத்து மதியம் மட்டும் ரொட்டி வாங்கி வந்தாலும், அதற்கு மாசம் 300 ரூபாய் என்பதால் பட்ஜெட்டும் இடித்தது. அந்த ரொட்டியும் அப்பளத்தை விட கொஞ்சம் மொத்தமாக இருக்கும். எனவே அது பசியை தீர்க்காது. இப்படியும் 8 மாதம் எனக்கு சிறை வாழ்க்கை ஓடியது.

அதன் பிறகு அங்கேயே வேறு பிளாக்குக்கு மாறினேன். அதை சிறை என்று சொன்னால் எனக்கே சிரிப்பு வரும். எனவே அதை மென்ஸ் ஹாஸ்டல் என்று சொல்லலாம். இங்கே பெரும்பாலும் போதை பொருள் குற்றவாளிகள், இலங்கை தமிழர்கள்தான் இருப்பார்கள். இவர்களுக்கு பெயில் கிடையாது என்பதாலும் நீண்ட காலம் இருக்கப்போவதால் மனத்தளர்ச்சி வந்துவிடும் என்பதால் இவர்களுக்கு நிறையவே சுதந்திரம்.

தொடர் குற்றவாளிகளை போல் இவர்கள் அடிக்கடி சண்டை போட மாட்டார்கள் என்பதாலும் இந்த சுதந்திரம். இங்கே இருந்தவர்கள் மிடில் கிளாஸ் மற்றும் வசதியானவர்கள். இதன் காரணமாக இந்த பிளாக் ஒரு ஹாஸ்டலை போல் சுத்தமாக சுகாதாரமாக இருந்தது. ஏதோ என்னுடைய அதிர்ஷடம் இங்கே வந்து சேர்ந்தேன். இங்கே எனக்கு சிறை வாழ்க்கை கொஞ்சம் நிம்மதியாகவே இருந்தது.

முதலில் இருந்த பிளாக்கில் அப்பர் மிடில் கிளாஸாக இருந்தவன், இந்த பிளாக்கில் அப்படியே தலைகீழ். எல்லோரும் கொஞ்சம் வசதியாக இருக்க நான் மட்டும் படஜெட் பத்மநாபனாக இருந்தேன்.

இப்படி என் வாழ்க்கை பல மாதங்கள் ஓடிக்கொண்டிருக்க, ஒரு முறை குளிப்பதற்காக பாத்ரூம் போனேன். அது பிளாக்கை தள்ளி வெளியே இருந்தது. 5-6 பாத்ரூம் இருக்கும். வெளியே துணி துவைப்பதற்கு விசாலமான இடம். இப்படி நான் போனபோது வழியில் 2000 ரூபாய் கிடந்தது. எடுத்தேன். 

அதை கொண்டு வந்து நான் இருந்த செல்லின் நிர்வாகியிடம்  (இலங்கை தமிழர்) கொடுத்து `யாரோ கீழே போட்டுவிட்டார்கள். யார் என்று விசாரித்து கொடுத்துவிடுங்கள்` என்றும் சொல்லிவிட்டேன். அப்போது நான் இருந்த மனநிலையில் இயல்பாக நான் செய்த விஷயம். இதில் எனக்கு விசேஷமாக எதுவும் தெரியவில்லை.

அதன்பின் மற்றவர்கள் என்னை பார்க்கும் பார்வையில் ஒரு மாற்றம் தெரிந்தது. வித்தியாசத்தை நான் வெளிப்படையாகவே உணர்ந்தேன். ஒருவர் என்னிடம் `உங்களையெல்லாம் யார் ஜெயில்ல போட்டது?` என்று ஆச்சர்யமாக கேட்டார். இன்னொருவர் `சிவா அண்ணனிடம் இந்த பணம் கிடைத்ததால்தான் திருப்பி கொடுத்தார். வேறு யாராவது இருந்தால் கொடுத்திருக்கமாட்டார்கள்` என்றார்.

அப்போதுதான் என்னுடைய செயலின் பாதிப்பு தெரிந்தது. நான் அங்கே `தனி ஒருவன்` அல்லது `ஆயிரத்தில் ஒருவனாக` இருந்தேன். மறுநாள் சிறையில் சிலர் ஸ்பெஷலாக வரவழைத்து குடிக்கும் டீ எனக்கு கிடைத்தது. மரியாதையாம்! சிறையில் அந்த டீ அவ்வளவு சுவையாக இருக்கும்.

சிறையில் பணம் இல்லாமல் பலர் கஷ்டப்படும் நிலையில், நானே மாதம் ரூ.1000 என்ற பட்ஜெட்டில் என் சிறை வாழக்கையை ஒட்டிக்கொண்டிருக்க, இந்த பணத்தை நானே வைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் தொடர்ந்து நல்ல புத்தகங்களை வாசித்து வந்ததால் அந்த எண்ணம் எனக்கு வரவில்லை. நான் இயல்பாக அப்போது நடந்து கொண்டேன். இதையே வேறு மொழியில் சொல்லவேண்டுமென்றால் என்னை தேடி வரும் பணத்தை நான் உதாசீனப்படுத்தியிருக்கிறேன். 

இதன்பின் சிறையில் பொழுதுபோகாமல், அரசியலையும் தொடர்ந்து (சிறையிலும்) வாசித்து கொண்டிருந்தபோது சில அரசியல் நிகழ்வுகள் என்னை கோபப்படுத்தியது. அப்படி ஒரு சம்பவம் என்னை கோவப்படுத்த, சிறையிலிருந்தே மத்திய அரசை விமரிசித்து தினமலருக்கு (இது உங்கள் இடம்) ஒரு கடிதம் எழுதினேன். நல்லவேளை மாநில அரசை விமர்ச்சிக்கவில்லை. அது பிரசுரமாக.. அப்படியே மேலும் சில என தொடர்ந்தது.

இந்த சமயத்தில் சிறையில் ஒரு வயதானவர் வந்தார். அவர் மீது மிசா (குண்டர் சட்டம்) போடப்பட்டிருந்தது. வசதியானவர். பிள்ளைகள் நல்ல நிலையில் சாப்ட்வெர் கம்பெனியில் வேலை பார்ப்பதாக சொன்னார். அவரை பார்த்தால் குற்றவாளியைப்போல் தெரியவில்லை. இருந்தாலும் எங்கேயோ பிரச்சினை. ஏதோ பிரஷர் வந்து இவர் மீது குண்டர் சட்டம் போட்டுவிட்டார்கள்.

குண்டர் சட்டம் போட வேண்டுமென்றால் யாரிடமாவது கத்தியை காட்டி மிரட்டி இருக்க வேண்டும். தமிழ்நாடு போலீசுக்கு திரைக்கதை நன்றாக அமைக்க தெரியும். எனவே ரோட்டோர டீக்கடையில் கத்தியை காட்டி மிரட்டியதாக ஒரு கதையை தயார் செய்து அதை காட்டி குண்டர் சட்டம் போட்டுவிட்டார்கள்.

சிறையில் பல கைதிகளின் சார்ஜ் சீட் படித்து பார்த்து, அது குறித்து கைதிகளிடம் பேசியிருக்கிறேன். பல வழக்குகள் இப்படித்தான் புனையப்படுகிறது. ஓன்று, வேண்டாதவர்களை உள்ளே தள்ள. இரண்டு, பல குற்றவாளிகள் வழக்கை இழுப்பது சாட்சிகளை மிரட்டுவது என தில்லாலங்கடி வேலை பார்த்து வழக்குகளிருந்து தப்பிவிடுவதால், இது போன்ற பொய் வழக்குகள்.

இங்கே எல்லாமே போலிசின் செட்டப் என்பதால், சாட்சிகள் பயப்படுவதில்லை. நடக்காத ஒன்றை நான் என் மூன்று கண்ணால் பார்த்தேன் என்று இந்த சாட்சிகள் சொல்ல, அவர்களுக்கு தண்டனை உறுதியாகிவிடும். அல்லது போலீஸ் மற்றும் குற்றவாளிகளின் `கெட் டு கெதர்` நல்லபடியாக இருந்தால், அந்த கேஸ் அவ்வளவுதான். இனி நம் விஷயத்துக்கு வருவோம்.

குண்டர் சட்டம் போடப்பட்டு 3-4 மாதத்தில் போர்ட் என ஒரு நீதிபதிகள் குழு வசம் இந்த குண்டர் சட்ட வழக்குகள் மறு பரிசீலனைக்கு வரும். இங்கே விசாரிப்பவர் ஒரு நீதிபதியா அல்லது பெஞ்சா என தெரியவில்லை. இங்கே பெரும்பாலான கேஸ்கள் குண்டர் சட்டத்திலிருந்து விடுவிக்கப்படும்.

பத்திரிகையாளர்களிடம் `நாங்கள் குற்றவாளிகளை 23 1/2 மணி நேரத்தில் பிடித்தோம். இவர்கள் இதற்கு முன் பல குற்றங்களை செய்திருக்கிறார்கள்` என பந்தாவாக போட்டோ செஷன் வைத்து போஸ் கொடுக்கும் இந்த  போலீசார், நீதிபதிகளிடம் எதுவும் சொல்வதில்லை.

நீதிபதி என்ன விவரம் தெரியாதவரா, போலீசார் மைண்ட் வாய்ஸில் சொல்வதை பாக்கெட்டில் போட்டு கொண்டு பெயில் கொடுத்து விடுவார். நான் சிறையில் இருந்த வரை 10-ல் 8 கேஸ்கள் இப்படி குண்டர் சட்டத்தை உடைத்து கொண்டு பெயிலில் போய் விடுவார்கள். அப்புறம் என்ன வெண்டக்காய்க்கு இந்த குண்டர் சட்டம் என்றே தெரியவில்லை. இந்த காமெடி இன்னும் தொடர்கிறது.

இங்கே நான் சொல்ல வந்த பெரியவர் குண்டர் சட்டத்தை உடைக்க வக்கீல்களிடம் பேசி இருக்கிறார். இதை உடைக்க உளி மற்றும் சுத்தியல் வாங்க வேண்டும் என கொட்டேஷன் கொடுத்திருக்கிறார்கள். பீஸ் எகிறி இருக்கிறது. இந்த நேரத்தில் `மத்திய அரசுக்கே அறிவுரை சொல்ற ஒரு அறிவாளி நம்ம பிளாக்குல இருக்கிறரர்`  என என்னை நோக்கி யாரோ கை காட்டிவிட்டார்கள். அப்படித்தான் அவர் என்னிடம் வந்தார்.

நான் சார்ஜ் ஷீட்டையும் படித்தேன், அவர் சொன்ன விளக்கத்தையும் கேட்டேன். `நான் நல்ல பொருளாதார நிலையில் இருக்கிறேன். என் பிள்ளைகள் சாப்ட்வேர் இன்ஜினியர்கள், நான் இந்த ரவுடித்தனம் செய்வேனா?` என்று கேள்வி கேட்டு மேலும் சில விளக்கங்களை பெட்டிஷனாக எழுதி கொடுத்தேன். அது காக்கா உட்கார பனங்காய் விழுந்த கதையாகிவிட்டது.

நீதிபதிகளுக்கு தெரியும் எது பொய் கேஸ் எது உண்மை என்று. இருந்தாலும் அவர்களுக்கும் பல `விஷயங்கள்` தேவை அல்லவா. அதை இப்படி பெயில் கொடுப்பதிலும், வழக்கை இழுக்கடிக்க குற்றவாளிகளுக்கு உதவுவதன் மூலம் பெற்று விடுகிறார்கள். இங்கே சில விதிவிலக்குகளும் உண்டு.

பொதுவாக வீட்டில் படைத்தால், காக்காய்க்கு சோறு வைப்பார்கள். காரணம் புண்ணியமாம்! இன்னொரு காரணம்  அது கொஞ்சமாய் சாப்பிடும். ஒருவேளை அது எனக்கு ஃபுல் மீல்ஸ் வேணும் என்று கேட்டு நிறைய வாங்கி சாப்பிட்டால் என்னவாகும். அதன்பின் நாம் காக்கையை கூப்பிடமாட்டோம். அதாவது நாம் புண்ணியம் செய்யவேண்டும், ஆனால் அது நம் கையை கொஞ்சமாக கடிக்க வேண்டும். இதுதான் மனிதன் காக்கையை தேர்ந்தெடுத்தன் காரணம் (என்று நான் நினைக்கிறேன்).

நீதிபதிகளும் அப்படிதான்.  காசேதான் கடவுளடா என்ற பாட்டைத்தான் விரும்பி கேட்பார்கள். அதேசமயம் இப்படி திடீர் என சில சின்ன புண்ணியங்களும் கிடைக்கும். `என்னடா இந்த ஆள் ஒரிஜினல் வக்கீல் மூலம் வராமல் ஒரு டுபாகூர் வக்கீல் மூலம் பெட்டிஷன் கொடுக்கிறாரே, இவரிடம் எதுவும் தேறாது` என நினைத்தார்களோ அல்லது காக்கைக்கு சோறு வைப்பது போல், இந்த வழக்கு பொய் என்பது நன்றாகவே தெரிகிறது, இதை ரத்து செய்து புண்ணியம் தேடலாம் என்றும் நினைத்திருக்கலாம். அந்த வகையில் அவர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது.

அவர் சந்தோஷமாக என்னிடம் வந்தார். `உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?` என்று கேட்டார். நான் அப்போதும் உத்தமபுத்திரனாக இருந்தேன். `எனக்கு எதுவும் வேண்டாம். வேறு யாராவது கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்யுங்கள்` என்றேன். அவர் என்னை மேலேயும் கிழேயுமாக ஒரு முறை பார்த்தார். பலர் என்னை அப்படி பார்த்திருக்கிறார்கள். இது எனக்கு அடிக்கடி நடக்கும். நான் ஒரு டிபெக்டிவ் பிராடக்ட். ஒன்னும் பண்ண முடியாது.   

இருந்தாலும் `ஏதாவது கேளுங்க` என்று அவர் வற்புறுத்த, அந்த சமயத்தில் சிறையில் என்னுடைய செருப்பு அறுந்துவிட்டது. ஊருக்கு தகவல் சொல்லி வர லேட்டாகும் என்பதால், அதை மட்டும் கேட்டேன். அவரும் வாங்கி கொடுத்ததாக ஞாபகம். அப்படியே அவருக்கு மனுவில் வந்த பிஸ்கட் பழம் என அவற்றையும் கொடுத்தார்.

ஒருவேளை பணம் கேட்டிருந்தால், 1000-5000 கிடைத்திருக்கக்கூடும். கவனிக்கவும், கொஞ்சமாகவே இருந்தாலும், பணம் என்னை தேடி வருகிறது. நான் அதை உதாசீனப்படுத்துகிறேன். விதி வலியது அல்லவா, அதான்.

இது நடந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. அதன் பின் வாழ்கை கதற கதற பல அனுபவங்களை கொடுத்தது. பணம் எனக்கு கண்களில் தண்ணியை மட்டும் காட்டவில்லை, பெட்ரோல், டீசல், எல் பில் ஜி  என எல்லாவற்றையும் காட்டிவிட்டது. எந்த சின்ன தொகையை நான் அலட்சியமாக உதறினேனோ, அதுவே ஒரு கட்டத்தில் எனக்கு பெருந்தொகையாக மாறிபோனது.

ஒருவேளை நான் பணத்துக்கு மரியாதை கொடுக்கவில்லை, அதனால்தான் இப்படி நடக்கிறதோ என்ற எண்ணம் எனக்குள் கேள்வியாக மாறியது. இனி அதை மதிக்கவேண்டும் என்ற உணர்வு வந்துவிட்டது.

இப்படிப்பட்ட மனநிலையில் நான் ஒரு நாள் இங்கே அகமதாபாத்தில் வாக்கிங் போய் கொண்டிருந்தேன். (இடத்தை சொல்லமாட்டேன். பின்னர் இன்னொரு பதிவுக்கு அது தேவைப்படும்.) எனக்கு முன்னே இருவர் பைக்கில் போய் கொண்டிருந்தனர். பின்னால் அமர்ந்தவர், அவர் சட்டையில் இருந்து எதையோ எடுக்க, அதிலிருந்து 200 ரூபாய் கீழே விழுந்தது. அவர் கவனிக்காமல் போய்விட்டார்.

நான் கவனித்து விட, விரைவாக போய் எடுத்துவிட்டேன். அப்போது `சாயப், மேனே பெஹலே தேக்கா` என்று குரல். திரும்பி பார்த்தால், 3 வீலரில் ஒரு பிச்சைக்காரன். அவர்தான் முதலில் பார்த்தாராம்.

ப்ரோட்டோகால்படி பார்த்தால், எனக்கு முன்னால் அந்த பிச்சைக்காரன்தான் இருந்தான். எனவே அவனுக்குத்தான் சொந்தம். எழுந்து வந்து எடுக்கமுடியவில்லை. நிஜமாகவே ஊனமுற்றவர்.

வழக்கமாக இவர்களை உட்காரவைத்து யாராவது ஒருவர் வண்டியை தள்ளிக்கொண்டு வருவார். இவர் தனியாகவே இருந்தார். என்னைப்போலவே சிங்கிள் போலிருக்கிறது. அதுமட்டுமின்றி ஸெல்ப் மேட் பில்லியனர் என்பதுபோல் இவர் ஸெல்ப் மேட் பிச்சைக்காரர். இந்த இரண்டு காரணங்களுக்காக நான் அந்த பணத்தை அவரிடம் கொடுத்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி என்னை `சார்` ன்னு சொன்னான். அந்த மரியாதைக்காவது நான் கொடுத்திருக்க வேண்டும்.

ஆனால் காலம் என்னை மாற்றிவிட்டது. எனக்குள் ஒருவன் காணாமல் போய்விட்டான். அதே சமயம் பணத்தை முறைகேடாக அடையும் அளவுக்கு நான் மாறவில்லை. என்னை தேடிவரும் வரும் பணத்தை உதாசீனப்படுத்த கூடாது என்ற எண்ணம் மட்டும் வந்துவிட்டது.

எனவே நான் `யோவ்... நீ அபிஷியல் பிச்சைக்காரன், நான் அன் அபிஷியல்.. அவ்வளவுதான்` என்று மைண்ட் வாய்ஸில் சொல்லிவிட்டு, பணத்தை எடுத்துக்கொண்டு நகர்ந்தேன். அந்த  பிச்சைக்காரனுக்கு பணம் போனதைவிட, இப்படி ஒரு டீசண்டான பிச்சைக்காரனை பார்த்தது அதிர்ச்சியாக இருந்திருக்கும்.

மேலுலகத்திலிருந்து யாரவது பார்ப்பார்கள். அடடா இந்த ஆளுக்கு பணத்தோட அருமை தெரிஞ்சி போச்சி, இனிமே இவனுக்கு கொடுக்கலாம் நினைப்பார்கள் என்று ஒரு நம்பிக்கை. ஆனால் ஒரு மாற்றத்தையும் காணோம். ஒரு வேளை நான் இருக்கற ஏரியா பக்கம் கடவுள் ரவுண்ட்ஸ் வரலியோ? எப்படி இந்த மெசேஜை அவருக்கு பாஸ் பண்றது?

அதே சமயம் அந்த பிச்சைக்காரன் ஏதாவது சாபம் விட்டு நிலைமை இன்னும் மோசமாகிவிடுமோ என்ற பயமும் இருந்தது. ஆனால் அப்படியும் எதுவும் நடக்கவில்லை.

Thursday, March 26, 2020

கோரோனோ



நம் நாட்டு நிர்வாகிகளை என்னவென்று சொல்ல, ஒரு பக்கம் பால், மளிகை கடை திறந்திருக்கும் என்று அறிவிப்பு. இன்னொரு பக்கம் `யாரும் வெளியே போககூடாது` என்று மிரட்டல். ஊர் சுத்த நினைப்பவர்கள் இதில் எதாவது ஒரு காரணத்தை சொன்னால் போதும். அல்லது நிஜமாகவே பொருள் வாங்க போகிறவர்கள் போலீசிடம் உதை வாங்க வேண்டும். இப்போது நாம் என்ன செய்வது? 

அதே சமயம் ரேஷன் கடைகளில் பணமாம். அரிசி மற்றும் மற்ற இத்யாதிகளும் இலவசமாகவே கிடைக்குமாம்! கொடுமை. நம்ம ஆட்கள் இலவசம் என்றால் `கோரோனோ ஒரு 5 கிலோ கொடுங்கள்` என்று கேட்டு வாங்குபவர்கள் ஆயிற்றே? இனி அங்கே கூட்டம் கூடும். அங்கே யாருக்காவது கோரோனோ இருந்தால் திண்டாட்டம்தான். 

இதில் தமிழக அரசின் செயல் படுமுட்டாள்தனம். வீடு தேடி போய் டோக்கன் கொடுப்பார்களாம். அப்படியே எந்த தேதியில் உங்களுக்கு ரேஷன் கடையில் பணம் கிடைக்கும் என்று சொல்லிவிடுவார்களாம். அப்போது போய் நீங்கள் வாங்கிக் கொள்ளவேண்டும். என்ன கொடுமை சரவணன் இது? 

வீடு போய் தேடி டோக்கன் கொடுக்கும் நாய்கள் அதற்கு பதில் பணமே கொடுத்துவிடலாமே? எதற்கு இரண்டு வேலை? 

விஜய் மல்லையாவை நம்பி 5000 கோடி கொடுப்பவர்கள் உள்ளூர் செல்லையாவை நம்பி 1000-2000 கொடுக்க கூடாதா! பிராடு நடக்கும் என்று பயமா? சொல்லிவிடுங்கள் ஊழியர்களிடம். பணத்தை கொடுத்து கையெழுத்து வாங்கிக்கொண்டு, ஒரு மீட்டர் தூரத்தில் அந்த நபருடன் செல்பி எடுக்க வேண்டும் என்று. நாளை புகார் வந்தால் மாட்டிக் கொள்வார். 

இப்படி சிலர் வீடு தேடி போவதும், ஒரு ஏரியாவை சேர்ந்த 100 பேர் ரேஷன் கடைகளில் கூடுவதும், இதில் எது சிறந்தது? 

பாண்டிச்சேரி கதை வேறுவிதமாக இருக்கிறது. பணம் வங்கியில் போடப்படுமாம். ஏழை என்றாலே பெரும்பாலும் ஏ டி எமில் பணம் எடுக்க தெரியாதவர்களாக இருப்பார்கள். வண்டி இல்லாதவர்களாக இருப்பார்கள். வங்கிக்கு எப்படி போவது? சிக்கல்தான். 

ரேஷன் பொருட்கள் கதையும் இப்படித்தான். நாம் போகும்போது `இன்று உங்க ஏரியா இன்று இல்லை` என்று பதில் வரும். சக்கரை இருக்கும், அரிசி இருக்காது. இதை கண்டுபிடித்து எல்லாவற்றையும் வாங்குவதற்கு நாம் 10 முறை போக வேண்டும். ஏழைகள் மட்டும் ரேஷன் வாங்கும்போதே அங்கே கூட்டம் அதிகமாக இருக்கும். இனி எல்லோரும் வருவார்கள் என்றால்? இதில் பந்த் எங்கே? 

பிரச்சினை என்னவென்றால் இக்கட்டான நேரங்களில் செயல்படும் முறை வித்தியாசமாக, அது பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்காமல் இருக்க வேண்டும். அதுதான் நம்மிடம் கிடையாது. 

தனியார்காரன், `உனக்கு என்ன வேண்டும் என்று சொல், நான் வீட்டுக்கே அனுப்பி வைக்கிறேன்` என்று சொல்ல, அரசோ `உனக்கு எது வேண்டுமானாலும் என்னை தேடி வந்து என் காலில் விழு` என்று சொல்கிறது. 

இங்கே அகமதாபாத்தில் பல வியாபாரம் மொபைலில் நடக்கிறது. ஆட்டோவை கடையாக மாற்றி மெக்கானிக் ஷாப் /சோடா கடை /பங்க் கடை என பலவிதம். மினி வேன்களில் ஐஸ்கிரீம் கடை கூட. இந்த கடைகளை வியாபாரம் முடிந்ததும் வீட்டுக்கு ஒட்டிக்கொண்டு போகலாம். அல்லது அங்கேயே விட்டுவிட்டும் போகலாம். 

இப்போதைக்கு நமக்கு தேவை பால்/மளிகை மற்றும் ATM சேவைதான். இந்த கான்செப்டை இங்கே புகுத்தி இவற்றை மொபைல் கடையாக மாற்றி ஒவ்வொரு ஏரியாவிலும் தினம் 1மணி நேரம் இந்த சேவைகள் கிடைக்கும் என்று சொல்லி கடையை அவர்கள் ஏரியாவிலேயே நிறுத்திவிட வேண்டியதுதான். பிரச்சினை தீர்ந்தது.

மளிகை கடை கூட நிறைய இருக்கும். ஒரு மணி நேரம் அவர்களுக்கு அனுமதி தரலாம். மற்ற இரண்டுக்கும் இது அவசியம். இல்லையென்றால் இந்த பந்தின் அர்த்தமே நிறைவேறாது. 

Wednesday, August 13, 2014

அகமதாபாத் நகர் (பொங்கல்) வலம்


இந்த வாரம் பொங்கல் தொடர்பான காட்சிகளே வித்தியாசமாய் இருந்தது. பல இடங்களில் கவனித்ததில் இவர்கள் காத்தாடி வாங்கியது 100, 2000 என இருந்தது. அந்த அளவுக்கா காத்தாடி விடுவார்கள் என ஆச்சர்யப்பட்டேன். பொங்கல் அன்று சில வீடுகளில் காத்தாடி விட்டதை கவனித்த போதுதான் அதுவே குறைவு என்பது தெரிந்தது. அந்த அளவுக்கு விண்ணில் காத்தாடிகள்.

எந்த வம்புக்கும் போகவேண்டாம், அதாவது எந்த காத்தாடியையும் அறுக்க வேண்டாம் என நினைத்து காத்தாடி விட முடியாது. நீங்கள் காத்தாடி பறக்க விட்ட சில நிமிடங்களிலே ஏதாவது ஓன்று உங்களை காவு வாங்கிவிடும். 

நான் வேடிக்கை பார்க்க போன இடத்தில் ஒருவர் 5 நிமிடத்திற்கு ஒன்றை பலி கொடுத்துக் கொண்டிருந்தார். இந்த வேகத்தில் இருந்தால் நூறு காத்தாடிகளே பத்தாது.

பொங்கல் தொடர்பான மேலும் சில விஷயங்கள்

ஆர்ச்

நீங்கள் பல விதமான ஆர்ச் பார்த்திருக்கலாம். இது புதுவிதம். மூவிங் ஆர்ச். டூ வீலர்களில் இருக்கிறது. காத்தாடி நூல்களால் உயிருக்கு ஆபத்து என்பதால் வண்டிகளில் இதை பொருத்தி இருக்கிறார்கள். ஒரு நீட்டு கம்பியை எடுத்து டூ வீலரின் முன்னே இருக்கும் இரண்டு கண்ணாடிகளுக்கான கம்பிகளில் பொருத்தி விடுகிறார்கள். அவ்வளவுதான். இனி வண்டி ஓட்டும்போது முன்னே காத்தாடி நூல் இருந்தால் இந்த ஆர்ச் உங்களை அதிலிருந்து காப்பாற்றும்.

விளக்கு பலூன் 



டுக்கள்

இப்போது இந்த பேஷனும் கிளம்பி இருக்கிறது. மாலை 7 மணிக்கு பிறகு எல்லோரும் ஒரு சேர இந்த (விளக்கு) பலூன்களை பறக்கவிடுகிறார்கள். மாடியிலிருந்து பார்த்தால் காட்சிகள் அற்புதமாக இருக்கிறது.

தீபாங்கல்

ம்ஹும். ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை. தீபாவளியையும் பொங்கலையும் இணைத்தால் இந்த வார்த்தைதான் வருகிறது. இங்கே பொங்கலுக்கும் பட்டாசு வெடிக்கிறார்கள். புது பழக்கமாம். எனவே எங்கும் வெடிமயம்தான்.

ஒருபக்கம் இந்த விளக்கு பலூன்கள் கண்கொள்ளா காட்சியாக இருக்க, அத்துடன் விண்ணிலே வெடித்து சிதறும் ராக்கெட் பட்டாசுகளின் வர்ண ஜாலங்களும் சேர...அற்புதமான காட்சிதான்.