!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Tuesday, March 2, 2021

வெள்ளை யானை



என்னடா இது ஆளில்லாத ஊர்ல இந்த ஆள் வந்து திடீர்ன்னு டீக்கடை போடறார்ன்னு நினைக்கறீங்களா? பதிவுலகில் இருக்கும் டிராஃபிக்கை பார்க்கும்போது பதிவு எழுதும் எண்ணமே யாருக்கும் வராது. பல ஜாம்பவான்கள் குட்பை சொல்லிவிட்டார்கள். சிலர் விடாக்கண்டன் கொடாக்கண்டனாக இருக்கிறார்கள்.

நான் இப்படி அவ்வப்போது வருவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஓன்று, `என்னை மன்னார்குடியில கேட்டாக, மாயவரத்துல கேட்டாக...` என்று ஒரு வசனம் வருமே, அதுபோல் என் பதிவுகளை அமெரிக்காவுலேந்து படிக்கிறாக, ஆஸ்திரேலியாவிலிருந்து படிக்கிறாக என்று சொல்லலாம் போலிருக்கிறது. அந்த அளவுக்கு எனக்கு எல்லா கண்டங்களிலும் வாசகர்கள் உண்டு.

இப்படி பல நாடுகளிலிருந்து படிக்கும் வாசகர்கள் ஒரு பதிவை படித்தால் மேலும் 10 பதிவுகளையும் மேய்ந்துவிட்டுதான் போகிறார்கள். அதாவது எனக்கு வாசகர் வட்டம் உண்டு ஆனால் வருமானம்தான் இல்லை. ஆனானப்பட்ட சாரு நிவேதிதாவே `என் அக்கவுண்ட்ல பணம் போடுங்கனு` அவருடைய வலைதளத்தில் சொல்கிறார். நல்ல எழுத்தாளர் என பெயர் வாங்கிய ஞாநி கடைசி காலத்தில் வறுமையில்தான் இறந்திருக்கிறார் போலிருக்கிறது.

பேனாவை எடுத்தவன் உலகை ஆளலாம்னு எவனோ ஒருத்தவன் எங்கேயோ கிறுக்கி வைச்சிருக்கான். சனீஸ்வரன் நம்மை பிடித்தால் இப்படித்தான், பார்க்க கூடாத விஷயங்களை பார்ப்போம், கேட்க கூடாத விஷயங்களை கேட்போம், படிக்க கூடாத விஷ்யங்களையெல்லாம் படிச்சி அதையும் நம்பி வீணாபோய் விடுவோம்.

பிராக்டிகலாக இன்னொரு காரணம் இருக்கிறது. தனிமையை போக்குவதற்கு வேறு வழி இல்லாததுதான். இப்படி உண்மையை பட்டுனு போட்டு உடைக்க வேண்டியதுதானேன்னு நீங்க கேட்கலாம். ஆனால் எழுத்தாளன் இல்லையா, இப்படிதான் ஒரு வரில சொல்ல வேண்டிய விஷயத்தை ஒன்பது வரிகளாக இழுக்க வேண்டும். இது தொழில் தர்மம்.

அதுமட்டுமின்றி, அவ்வப்போது இப்படி நாம் போடும் பதிவுகளை எதிர்காலத்தில் நாமே படிக்கும்போது நாமும் எவ்வளவு மாறியிருக்கிறோம் என்பதை அது நமக்கு காட்டும். அந்த வகையில் இந்த கிறுக்கல்கள் அவ்வப்போது வரும். மூடை பொறுத்தது.

டீக்கடைக்காரர்

முதல் செய்தியே என்னை போல் இங்கே, அதாவது டெல்லியில், இருக்கும் ஒருவரை பற்றியது. இவருக்கும் ஆளில்லாத ஊரில் டீக்கடை போட ஆசை. உண்மையில் அவர் டீக்கடைக்காரரின் மகன்தான். இவர் பேரை சொன்னால் டெல்லியே அதிரும். என்ன செய்வது?  எதிரே இருப்பவர் டம்மி பீஸாக இருப்பதால் இவர் காட்டில் மழை. மிஸ்டர் மோடியை பற்றிய செய்திதான் இது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் போது இங்கே அகமதாபாத்தில் மெட்ரோ டிரைன் மிக விரைவாக, பந்தாவாக, விடப்பட்டது. காரணம் தேர்தல்தான். வெள்ளை யானைக்கு சிமெண்ட் கலர் அடித்து, நாங்கள் உங்களுக்காக என்னென்னெ திட்டங்கள் கொண்டு வந்திருக்கிறோம் பாருங்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டார் மிஸ்டர் மோடி. கடைசியில் அது ஒரு வெள்ளை யானை என்பது, அதாவது இது ஒரு உருப்படாத திட்டம் அல்லது மக்களுக்கு தேவை என ஓன்று இருக்க, அதற்காக இவர்கள் போட்ட திட்டம் தோல்வியில் முடிந்திருக்கிறது என தெரிகிறது.

நான் அடிக்கடி வாக்கிங் போகும் வழியில்தான் இந்த பாதை வருகிறது. ஒரே ஒரு முறைதான் என் கண்ணில் பட்டது. விசாரித்ததில் ஒரு நாளைக்கு நாலே சர்விஸ்தானாம். அதுவும் அந்த பயணமும் 5-10 நிமிட தூரம்தான். போட்ட பணத்துக்கு லாபம் வரவில்லை என்பதைவிட தற்போது நிர்வாக செலவுக்கே எதுவும் தேறாது போலிருக்கிறது. எனவே திட்டம் மேற்கொண்டு விரிவாக்கம் ஆகாமல் ஆமை வேகத்தில் நடக்கிறது. போக்குவரத்து வசதி முக்கியமான ஓன்று. ஆனால் அதை யார் தரவேண்டும், எப்படி தரவேண்டும் என்பதில்தான் மத்திய மாநில அரசுகள் மொக்கையாக சிந்திக்கின்றன.

பல இடங்களில் அவசியமான திட்டங்களுக்கு பணம் இல்லாமல் முடங்கி கிடக்க, இப்படி மொக்கையான திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கடைசியில் பணமும் முடங்கி மக்களுக்கும் அது எந்த ஒரு பலனையும் தரவில்லை. பொதுத்துறை என்பது இப்படித்தான். அதில் 10-ல் 8 வெள்ளை யானைதான்.

பொதுத்துறை என்பது ஒரு காலத்தில் அவசியமாக இருந்தது. சுதந்திரம் அடைந்த போது இந்தியாவில் நிறைய தலைவர்கள் உதை வாங்க/சிறைக்கு போக என போராட்ட தலைவர்கள் இருந்தார்கள்.

வெள்ளையர்கள் நம்மை தொழில்ரீதியாக வளர விடாததால் தொழில் முனைவோர் அப்போது இல்லை. வங்கிகள் மற்றும் வேறு பல கட்டமைப்புகளும் இல்லை. இருந்தாலும் தொழில்வளர்ச்சி அவசியமாக இருக்க, அதை செய்யக்கூடிய நபர்கள் அதிகமாக  இல்லாத நிலையில் அரசே பொதுத்துறை மூலம் அவற்றை செய்யவேண்டிய நிர்பந்தம். எனவே ஆரம்பகட்டத்தில் அரசு பொதுத்துறைகளை ஆரம்பித்தது அந்த கால சூழ்நிலைக்கு சரி. தற்போது நாடு ஓரளவு வளர்ந்துவிட்டது.இனி தொழில்களை தனியார் துறையினர் பார்த்துக் கொள்வார்கள். அரசாங்கம் வழிகாட்டுதலோடு மிக மிக அவசியமான இடங்களில் மட்டும் முதலீடு செய்தால் போதும்.

அரசு துறைகள் லாப நோக்கில் செயல்படாது என்பது உண்மைதான். ஆனால் அங்கே நிர்வாகம் என்பது ரொம்ப சிக்கலான ஓன்று. அங்கே நிர்வாகிகளால் முடிவெடுக்க முடியவில்லை. ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு நாம் என்ன தொழில் செய்கிறோம், இங்கே மேலும் என்ன செய்யலாம் என புரிந்து அவர் செயல்பட ஆரம்பிக்கும்போது அவரை வேறு இடத்துக்கு மாற்றி விடுகிறார்கள். அடுத்த அதிகாரி மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்கிறார்கள்.

இன்னொருபக்கம் அரசியல்வாதிகளுக்கு இது ஊழலின் இன்னொரு கதவு. அவசியமோ இல்லையோ வேண்டியவர்களுக்கு பணம் வாங்கிக்கொண்டு அல்லது கட்சிக்காரர்களுக்கு அவர்களுடைய விசுவாசத்துக்கு பரிசு என தேவையில்லாத வேலையை உருவாக்கி அந்த நிறுவனத்தை நாசமாக்கிவிடுகிறார்கள். இன்னும் பல சொல்லலாம். ஆனால் மக்களுக்கு இதை புரிய வைப்பது சிரமம். அதற்கு நமக்கு அபாரமான அறிவு வேண்டும். என்னிடம் அது இல்லாததால் அடுத்த செய்திக்கு தாவுவோம்.

இது அதைவிட மோசம்

சமீபத்திய கோரோனோவின் மிகப்பெரிய பாதிப்பு போக்குவரத்துதான். கொரானாவுக்கு முன் ஷேர் ஆட்டோவில் குறைந்த கட்டணம் இங்கே 5 ரூபாயாக இருந்தது. சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என இரண்டு பேருக்கு மேல் ஆட்டோவில் ஏற்றக்கூடாது என கட்டுப்பாடுகள் வர, அது 10 ரூபாயாக மாறியது. அதன்பின் நிலைமை சீரானாலும் மரத்தில் ஏறிய வேதாளம் இறங்க மறுக்கிறது. இனி இறங்கவும் மாட்டார்கள்.

ஒரு பயணத்தில் ஒரு பயணி சொல்லிக்கொண்டிருந்தார். அவர் வேலைக்கு போக மூன்று ஆட்டோ ஏற வேண்டுமாம். அந்த வகையில் அவருக்கு போக - வர மாதம் 1500 செலவு. அவருடைய சம்பளத்தில் இது 10 சதவிகிதம். விரைவில் டு வீலர் வாங்க போகிறாராம். (போக்குவரத்தை பொறுத்த வரையில் தமிழ்நாடு பரவாயில்லை. ஓரளவு தனியார் பங்களிப்பு இருக்கிறது.)

இப்படி பிச்சைக்காரர்கள் முதற்கொண்டு வண்டி வாங்கும் அளவுக்கு சூழ்நிலைகளை உருவாக்கிவிட்டு, அதன்காரணமாக டிராஃபிக் சிக்கல், சுற்று சூழல் மாசுபடுதல் என பல தலைவலிகள் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் இதன் காரணமாக பெட்ரோல் உபயோகம் அதிகரிக்க அது அரசுக்கும் தலைவலி, பெட்ரோல் விலை உயர்வால் மக்களுக்கும் தலைவலி. அதற்கு தீர்வு என்று அரசாங்கம் இப்படி உருப்படாத திட்டங்கள் போட்டு அதுவும் தலைவலி. கஷ்டம்டா சாமி.

அற்புதமான புத்திசாலிகள்

இந்தியர்கள் அற்புதமான புத்திசாலிகள். பல வருடங்களுக்கு முன் ஒரு முறை தியேட்டரில் டிக்கெட் வாங்க வரிசையில் நின்றிருந்தேன். பலர் குறுக்கே புகுந்து டிக்கெட் வாங்கி கொண்டிருந்தனர். வரிசையில் நின்றிருந்த பலருக்கு கோவம் வர சண்டை ஆரம்பித்தது. டிக்கெட் கவுண்டரில் புகார் செய்தால், அவர் கவுண்டர் கதவை மூடிவிட்டு `எல்லோரும் வரிசையில் வாங்க, அப்பத்தான் டிக்கெட் கொடுப்பேன்` என்று நீதியை நிலைநாட்டி விட்டார்.

குறுக்கே புகுந்த அவர்களை கண்டித்து விட்டு வரிசையில் வருபவர்களுக்கு டிக்கெட் கொடுப்பார்  என்று பார்த்தால், அவர்களுக்கும் டிக்கெட் இல்லையாம், வரிசையில் இருந்த எங்களுக்கும் டிக்கெட் இல்லையாம். இந்தியாவில் இப்படித்தான் கிறுக்குத்தனமாக முடிவெடுப்பார்கள். அதன்பின் பலர் என்ன முடிவெடுத்திருப்பார்கள்?  ஊரோடு ஒத்து போயிருப்பார்கள். அதுதான் நடந்திருக்கும்/ நடந்துகொண்டிருக்கிறது. அதாவது தவறான பாதைதான் இனி சரியான பாதை நமக்கு அவர்கள் சொல்லித்தருகிறார்கள். நாமும் அதை பின் தொடர்கிறோம். இப்படிப்பட்ட முட்டாள்தனமான நிர்வாகிகளால் இந்தியா மெல்ல மெல்ல சீரழிந்துகொண்டிருக்கிறது.

அதே காட்சி 

இங்கே அகமதாபாத்திலும் இப்படி ஒரு சம்பவம். இந்த குஜராத்தியர்கள் பெற்ற தாயை கூட எட்டி உதைப்பார்கள் ஆனால்  கோமாதாவுக்கு இவர்கள் கொடுக்கும் இருக்கும் மரியாதையே தனி. இங்கே தெருவில் மாடுகளுக்கு இருக்கும் சுதந்திரம் மனிதர்களுக்கு கூட கிடையாது. இப்படி உலாவும் மாடுகளில் பட்டா போட்டவை, போடாதவை  என இரண்டு விதம் உண்டு.

இங்கே ரபாரிகள் அதாவது இடையர்கள் செய்யும் கொடுமை வேறுவிதம். மாடுகளிடம் பாலை கறந்துவிட்டு அவற்றை வெளியே அனுப்பிவிடுவார்கள். அவை வெளியே தெருவெல்லாம் மேய்ந்து வயிற்றை நிரப்பிக்கொள்ள வேண்டும். பாலை மட்டும் இவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும். இது என்னவிதமான புண்ணியமோ? எனக்கு ஒன்றும் புரியவில்லை. பால் கறக்கும் நேரம் மற்றும் இரவு நேரங்களில் மட்டும் அட்டகாசமாக டூ வீலரில் வந்து மாடுகளை அழைத்து செல்வார்கள். அவைகளுக்கு இரவுநேர லாட்ஜிங் வசதி மட்டும் உண்டு போலிருக்கிறது.

இங்கே இந்த ரபாரிகளின் வீடுகளும் பிரமாண்டமாக இருக்கும். ஆண்களும் சரி பெண்களும் சரி எல்லாம் வாளிப்பாக இருப்பார்கள். நான் இந்த பதிவுக்காகத்தான் ரபாரி பெண்களை உற்று பார்த்தேன். வேறு எந்த காரணமும் இல்லை. மாடுகளால் இவர்களுக்கு வருமானம் ஆனால் செலவுகள் இல்லை. அதுதான் இந்த செழிப்புக்கு காரணம்.

சரி இனி விஷயத்துக்கு வருவோம். இப்படி மாடுகள் தெருக்களில் சுற்றுவதால் ஒரு பிரச்சினை. இங்கே அரசு, `ஸ்வச்ச பாரத்` என சுத்தத்துக்கு முன்னுரிமை கொடுத்து பல இடங்களில் சின்னதும் பெரியதுமாக குப்பை தொட்டிகளை வைத்தது. அதில் மக்கும் குப்பை இதில் போடவும், மக்காத குப்பைகளை மற்றதில் போடவும் என வசனம் வேறு எழுதி வைத்தார்கள்.

ஆனால் மாடுகளுக்கு இதெல்லாம் தெரியுமா? அவற்றுக்கு யார் மீது கோபமோ, குப்பை தொட்டி ஒரு பக்கம், குப்பைகள் வேறு பக்கம் என எல்லாவற்றையும் கதகளி ஆடிவிடும். விளைவு ரோடு நாசமாக காட்சி அளிக்கும். நம் நாட்டின் அற்புதமான நிர்வாகிகள் இதற்கும் ஒரு அற்புதமான வழி கண்டுபிடித்தார்கள். இப்படி குப்பை தொட்டிகள் இருப்பதால்தானே மாடுகள் இப்படி செய்கின்றன இனி குப்பை தொட்டியே வைக்க கூடாது என எடுத்துவிட்டார்கள்.

என்னிடம் ஒரு முறை குப்பை சேர்ந்துவிட நான் தெருவை அசுத்தப்படுத்த கூடாது என குப்பை தொட்டியை தேடி தேடி களைத்துப்போய் அப்படியே தூக்கி வீசினேன். எதிரே ஸ்வச்ச பாரத் என வசனம் எழுதி, ஒருவேளை படிக்காதவனுக்கு எப்படி புரியும் என ஒரு குப்பைத்தொட்டி படம் வரைந்து அதில் குப்பையை எப்படி போட வேண்டும் என படம் போட்டு விளக்கியிருந்தார்கள். அதாவது படத்தில் குப்பை தொட்டி இருக்கிறது ஆனால் தெருக்களில் இல்லை.

இந்தியா விளங்கிடும். கிறுக்கு பயல்கள் நிறைந்த நாட்டில் நாமும் கிறுக்காகவே நடந்து கொள்ளவேண்டும்.

0 comments:

Post a Comment