எப்போதாவது சீமானின் பேச்சை கேட்பதுண்டு. அப்படி ஒரு முறை கேட்டபோது `எதற்கய்யா 8 வழி சாலை.. வீட்டுக்கு சீக்கிரம் போய் என்ன பண்ணப்போற?` என கோபமாக கர்ஜித்தபோது, நான் அதிர்ச்சியானேன்.
பொருளாதாரத்தை தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு இது புரியும், உள்கட்டமைப்பு சரியாக இருந்தால்தான் எந்த ஒரு நாடும் வளம் பெறமுடியும் என்பதை. இந்த உள்கட்டமைப்பில் பல வழி சாலைகளும் ஓன்று. அப்போதே எனக்கு கோவம் வந்து ஒரு பதிவை எழுதவேண்டும் என நினைத்தேன். வழக்கம்போல் டிஃபரஷன் வந்து நின்றுவிட்டது.
சமீபத்தில் தேர்தல் பரப்புரையில் தொலைக்காட்சி நெறியாளர்களுக்கு ஒரு அறிவுரை சொன்னார். `எடப்பாடி, ஸ்டாலின், கமல் மற்றும் என்னை கூப்பிட்டு விவாதம் வையுங்கள், யார் ஜெயிக்கிறார் என பாப்போம்` என சவால் விட்டார். இவர் நன்கு வாயை வளர்த்து வைத்திருக்கிறார். அந்த நம்பிக்கை இவரை இப்படி வாயாட வைத்திருக்கிறது.
ஆனால் இவரின் வாய் சவடாலை கேட்டபோது எனக்கு கோபமும் வந்தது கூடவே இந்த நாட்டின் எதிர்காலம் குறித்து அவநம்பிக்கையும் வந்தது. இப்போதைக்கு இந்தியாவில் இரண்டுவிதமான தலைவர்கள்தான் கண்ணுக்கு தெரிகிறார்கள். ஊழல்வாதிகள் மற்றும் சீமானை போன்ற அரைவேக்காடுகள்.
இதில் துரதிர்ஷ்டம் என்னவென்றால் இவரை போன்ற நபர்கள் வார்த்தை ஜாலங்களில் அற்புதமாக, வசீகரமாக இருக்கிறார்கள். ஒருவகையில் நேர்மையான அரசியல்வாதி என்ற தோற்றமும் தெரிகிறது. அது ஒருவகையில் உண்மையாகவே இருக்கக்கூடும்.
ஆனால் எதார்த்தம் புரியாத, புத்திசாலித்தனம் இல்லாத நேர்மை யாருக்கும் பயன்படாது. மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு என்றோரு நேர்மையான மனிதர் இருந்தார். 23 வருடங்கள் தொடர்ந்து ஆட்சி புரிந்தார். அவருக்கு பிறகு வந்த புத்ததேவ் பட்டாச்சார்யா மற்றும் மம்தா பானர்ஜியும் நேர்மையான, எளிமையான மனிதர்களே. அவர்களின் ஆட்சியையும் 20 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் என்ன பயன்?
சமீபத்திய கொரோன லாக் டவுனில் ஒரு கவனிக்கத்தக்க செய்தி. இந்த லாக் டவுன் காரணமாக புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் கணிசமானவர்கள் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள். இந்த பரிதாபத்தை என்னவென்று சொல்வது? 40 ஆண்டுகால நேர்மையான தலைவர்களின் ஆட்சி இவர்களை எந்த நிலைமையில் வைத்திருக்கிறது.
இன்னொரு நேர்மையான தலைவரான ஒடிசாவின் நவீன் பட்நாயக் கதையும் அப்படிதான் இருக்கிறது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் கணிசமானவர்கள் ஒடிஷாவை சேர்ந்தவர்களும் அடக்கம்.
இங்கே நேர்மையான தலைவர்கள் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவில்லை. ஆனால் தமிழகம் கழங்களின் ஊழலில் சிக்கி தவித்தாலும், வளர்ச்சியில் தமிழகம் மற்ற மாநிலங்களை விட முன்னணியில்தான் இருக்கிறது.
இது ஒரு வினோதமான சூழ்நிலை. ஊழல்வாதிகள் வளர்ச்சியை கொடுக்கிறார்கள். நேர்மையானவர்கள் மக்களை வறுமையில் வைத்திருக்கிறார்கள். இதை எப்படி புரிந்து கொள்வது? அல்லது ஓரளவு புரிந்தாலும் இதை மற்றவர்களுக்கு புரியவைப்பது அதைவிட சிரமம்.
இங்கே ஒரே செய்திதான். ஊழல்வாதிகள் ஆபத்தானவர்கள்தான், ஆனால் அதைவிட ஆபத்து இப்படி நேர்மையை மட்டும் தகுதி என நினைத்துக்கொள்ளும் முட்டாள் தலைவர்கள்.
இதற்கு ஒரு கதை இருக்கிறது. கணவனை இழந்த ஒரு அம்மா தன் இரு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார். வேலைக்கு போய் குடும்பத்தை நடத்தினார். ஓரளவு பொருளும் இருந்தது. இவரும் சம்பாதித்து சேமித்தார்.
காலத்தின் கொடுமை இவரின் ஒரு பிள்ளையை ஊதாரியாக மாற்றியது. இன்னொரு பிள்ளை உலகம் புரியாத அப்பாவியாக இருந்தது. பெரிய பிள்ளை அவ்வப்போது வீட்டிலேயே திருட ஆரம்பித்தான். அக்கம் பக்கத்தில் இதை சொல்லி அந்த அம்மா புலம்புவது வழக்கம். சின்னப்புள்ள அப்பாவியாக இருந்தாலும் அந்த பிள்ளை மீது அந்த அம்மாவிற்கு நம்பிக்கை.
ஒருநாள் அந்த அம்மா தன்னுடைய சின்னபுள்ளையை செமத்தியாக அடித்து கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சி. தன்னுடைய திருட்டு புள்ளையை கூட இவர் இப்படி அடித்ததில்லையே என ஆச்சர்யம். `பெரியவனாவது 100-200 திருடுவான். இவன் என்னை நடுத்தெருவுல கொண்டுவந்து நிறுத்திட்டானே` என கத்திக்கொண்டிருந்தார்.
நடந்தது இதுதான். வீட்டில் இந்த சின்னப்புள்ள தனியாக இருந்தபோது கணவன் மனைவி போல் இருவர் வந்திருக்கின்றனர். திருடர்கள். இவர்களை பற்றிய விவரம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். `உங்கப்பா போன பிறகு உங்கம்மா ரொம்ப கஷ்டப்படறாங்க என வார்த்தைகளை அள்ளி வீசியிருக்கிறார்கள். கடைசியில், `வரும்போது உனக்காக பிஸ்கட் வாங்க மறந்துட்டோம். நீயே போய் உனக்கு பிடித்ததை வாங்கிக்கொள்` என சொல்ல, அந்த சின்னப்புள்ள காசை வாங்கிக்கொண்டு சிட்டாய் பறந்தான். இவர்களும் வீட்டில் கிடைத்தை வாரிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள்.
இப்படித்தான் உலகம் வித்தியாசமாய் இருக்கும். இங்கே அயோக்கியர்களை விட முட்டாள்கள் மிக ஆபத்தானவர்கள் என்பதையும் மக்கள் உணர வேண்டும்.
இங்கே இரண்டு கழகங்களின் அழிவை ஆவலுடன் எதிர்பார்க்கும் எனக்கு, அதற்கு மாற்று என வரும் இந்த சின்னப்புள்ள கமல்,சீமான் போன்றவர்களின் அரசியலை பார்த்தால் அதுவும் பயமாக இருக்கிறது.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை நேர்மையான அதே சமயம் திறமையான தலைவர்கள் தெரியவில்லை. இப்போதைக்கு எனக்கு ஒரே சந்தோசம், தமிழ்நாட்டில் எனக்கு ஓட்டு இல்லை.
0 comments:
Post a Comment