!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Saturday, March 14, 2026

கேஸ் தட்டுப்பாடு, பிஜேபி சறுக்கியதா?


இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களுக்கான தட்டுப்பாடில் பல விதமான செய்திகள் வருகிறது. மத்திய அரசு சரியாக திட்டமிடவில்லை, இப்படி ஒரு சூழ்நிலையை கணிக்க தவறிவிட்டார்கள் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனக்கும் இங்கே ஆர்வம் வந்தது. ஆசியாவில் பல நாடுகளில் நிலை என்ன என்று கவனித்தேன்.

சவுத் கொரியா 200 நாட்கள், ஜப்பான் 250 நாட்கள், மலேஷியா 30 நாட்கள்?, சீனா 100 நாட்கள், இந்தியா 70 நாட்களுக்கான ரிசர்வ் என பலவிதமான தகவல்கள். இதில் சமையல் எரிவாயு வேறு வகை போலிருக்கிறது. அங்கேதான் இந்தியாவின் கையிருப்பு கொஞ்சம் குறைவாக இருக்கிறது. அதுதான் தலைவலியை உருவாக்கியிருக்கிறது.

கச்சா எண்ணையை ஸ்டாக் செய்வது வேறாம், எல்பிஜி வேறு வகையாம். அதற்கு ஒரு டேங்க் என்றால் இதற்கு 2-3 டேங்க் என போகும் போல் தெரிகிறது. இது நிறைய செலவு பிடிக்கும் கட்டமைப்பு. எனவேதான் பெட்ரோல் விஷயத்தில் 70 நாட்கள் கையிருப்பு என்றால், இந்த எல்பிஜி ஸ்டாக் மிகவும் குறைவான நாட்கள். 2-3 நாட்கள் தான் தாங்கும் என சில எதிர்க்கட்சிகள் சொல்கிறார்கள். அந்த அளவுக்கு இருக்க வாய்ப்பில்லை. ஒரு சில வாரங்களாக இருக்கலாம்.

அதை விட பெரிய தலைவலி நாம் இறக்குமதி செய்யும் எல்பிஜியில் கணிசமாக வருபவை ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவாம். தலைவலியும் திருகுவலியும் இந்தியாவுக்கு ஒரே நேரத்தில் வந்திருக்கின்றன.

இனி அடுத்த கேள்விக்கு போவோம். ஏன் இந்தியா ஜப்பான், கொரியாவை போல் 200 நாள் ரிஸர்வை உருவாக்கக்கூடாது? வாய்ப்பில்லை. பணக்காரன் வீட்டில் பாத்ரூமில் கூட பணம் இருக்கும், ஏழைகளின் பாக்கெட்டில் கூட பணம் இருக்காது. எனவே அவர்களை ஒப்பிட்டு நாம் திட்டமிட முடியாது.

இங்கே ரிசர்வ் என்பது வங்கியில் சேமிப்பு கணக்கில் பணம் போட்டுவைப்பது போன்றது. பணக்காரர்கள் அவசரத்துக்கு உதவும் என சில லட்சங்களை இப்படி போட்டுவைப்பார்கள். அது அவர்களுக்கு சாதாரணம். இந்தியா போன்ற வளரும் நாடுகள் இதை செய்தால், இது வட்டிக்கு வாங்கி வங்கியில் பணம் போட்டு வைப்பதை போன்றது.

சரி, அதை விடுங்கள். யுத்தம் வரப்போகிறது என்று தெரிந்தவுடன் அப்போதாவது செய்யலாமல்லவா என்று கேட்டால்? அதுவும் சாத்தியமில்லை. காரணம் அமெரிக்காவும், இஸ்ரேலும் இதையெல்லாம் சொல்லிவிட்டு செய்யமாட்டார்கள். அப்படி செய்தால் அது எதிரிக்கு தெரிந்துவிடும்.

ஒருவேளை அவர்கள் இந்தியாவிடம் இதை சொல்லி, இந்தியா அவசரம் அவசரமாக கூடுதலாக கச்சா எண்ணெய், எரிவாயுவை இறக்குமதி செய்தால், (அதுவும் ஹார்முஸ் வழியாக செய்யவேண்டும்) `இந்தியா ஏன் இப்படி எண்ணெய் வாங்கிக்குவிக்கிறது` என்ற சந்தேகம் ஈரானுக்கு வரும். அவர்கள் போருக்கான சாத்தியத்தை உணர்ந்து தற்காப்பு நடவடிக்கைகளை எடுப்பார்கள். எனவே அமெரிக்காவும், இஸ்ரேலும் இந்த தகவலை கடைசி வரை கசியவிடவில்லை என்று நான் நினைக்கிறேன். எல்லா நாடுகளும் இப்படித்தான் முடிவெடுப்பார்கள்.

ஆனால் இதில் ஈரானும் ஏமாந்ததுதான் நிஜம். அதனாலதான் அவர்கள் அலட்சியமாக அவர்கள் போர் கப்பலையும், வேறு சில கப்பலையும் எதுவும் நடக்காது என்ற நம்பிக்கையில் இந்தியாவுக்கு அனுப்பிவிட்டார்கள். அதில் ஓன்று இந்தியாவில் பாதுகாப்பாக இருப்பது, இப்போது இந்தியாவுக்கு சில வகைகளில் உதவுகிறது.

எனவே தற்போதைய நிலை எதிர்பாராத ஓன்று. இதில் மோடியை குறை சொல்வதற்கு எதுவும் இல்லை. இந்த அனுபவம் கொடுக்கும் பாடத்தில், எதிர்காலத்துக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய அரசு எடுக்கும் என நம்புவோம்.

ஆனால் இங்கே மோடியின் மீது வரும் கடுப்பு என்னவென்றால், இந்தியாவுக்கு ஈரானுடனும், இஸ்ரேலுடனும் நல்ல நட்புறவு இருக்கிறது, ஒரு நல்ல நண்பனாக இருவரிடமும் பேசி ஒரு சமாதானத்துக்கான முயற்சியை எடுத்திருக்கவேண்டும். ஆனால், போன நாட்டில் எனக்கு ஒரு விருது கொடுத்தார்கள், இந்தியாவுடன் ஒப்பந்தம் போட்டார்கள், எனக்கு அது போதும் என்றால், அவர் ஒரு நாட்டுக்கான பிரதமராகத்தான் இருப்பார்.

ஆனால் விஷ்வகுரு என்பது வேறு. எங்கே நண்பர்களுக்கு நம்மால் உதவ முடியுமோ அங்கே நாம் உதவ வேண்டும். அவர்களுக்கிடையே ஒரு புரிதலை உருவாக்க வேண்டும். அது தோல்வியில் முடியலாம், அது வேறு கதை. ஒருவேளை அப்படி ஒரு முயற்சி அவர் எடுத்து அது நடந்திருந்தால் மோடி நிஜமாகவே விஷ்வகுருவாக உயர்ந்திருப்பார்.

0 comments:

Post a Comment