!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Sunday, July 5, 2026

இந்த வியாதிக்கு மருந்தில்லை

நாட்டில் விதவிதமான பிரச்சினைகள் வருகின்றன. அதில் இந்த அவதூறு வழக்குகளும் இப்போது புதிதாக தலைவலிகளை கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. மொத்தத்தில் நீதிமன்றத்தில் தேங்கிக்கிடக்கும் பல லட்சம் வழக்குகளில் இவைகளும் பதிவாகி, மேலே நகர முடியாமல் நின்றுவிடுகின்றன.

இதில் பெரிய தலைவலி என்னவென்றால், கருத்துச் சுதந்திரம் என்பது எது, அதன் எல்லை எது என்று நிர்ணயிப்பதுதான். இணையங்களிலும் முகநூலிலும் பின்னூட்டங்களைக் கவனித்தால் அநாகரிகமான வார்த்தைகளுக்குப் பஞ்சமே இருக்காது. அங்கே அவர்கள் சராசரி மனிதர்கள் என்பதால் அதை ஓரளவுக்குப் பொறுத்துக் கொள்ளலாம் (ஜீரணிக்கலாம்).

ஆனால், பொதுவெளியில் மேல்மட்டத் தலைவர்கள் இதைச் செய்யும்போதுதான் இது கவலைக்குரிய விஷயமாக மாறிவிடுகிறது. அதிலும் முதல்வர் மற்றும் பிரபலமான தலைவர்களைப் பற்றிப் பேசும்போது இது எல்லை மீறிப் போய்விடுகிறது. இங்கே வழக்குகள் தேவைதான். ஆனால், இதுவரை இதுபோன்ற வழக்குகளில் தீர்ப்பு வந்ததாகத் தெரியவில்லை. இதற்கு முடிவு கட்டச் சொல்லி அதற்கும் ஒரு வழக்கு போட வேண்டும் போலிருக்கிறது.

தற்போது விவாதத்துக்கு உள்ளாகும் இந்தக் கொழுப்பான வார்த்தைகளிலும் ஒரு தலைவலி இருக்கிறது. தெருச்சண்டைகளையும் வீட்டிற்குள் நடக்கும் சண்டைகளையும் கவனித்தாலும் சில விஷயங்கள் புரியும். ஒருவன் நாகரிகமானவனாக இருப்பான்; அவன் வாயில் கெட்ட வார்த்தைகளே வராது. ஆனால், எதிரில் இருப்பவன் சண்டையில் ஒரு தரங்கெட்ட வார்த்தையை விட்டுவிட்டால், இப்போது இவனுக்கும் கோபம் வந்து இவனும் அதே வார்த்தைகளைப் பயன்படுத்தத் தொடங்குவான். இங்கே குற்றவாளி முதலில் அதைச் சொன்னவன்தான்.

அரசியலிலும் அப்படி ஒரு சூழ்நிலை இருக்கிறது. இந்த அநாகரிக வார்த்தைப் போரை திமுகதான் ஆரம்பித்து வைத்தது. இவர்கள் தவெக-வினரைத் தரம் தாழ்ந்து "தற்குறிகள்" என விமர்சிக்க, அவர்களும் ஆரம்பத்தில் ஓரளவுக்குப் பதிலடி கொடுத்தார்கள். ஆனால், ஆட்சியே கைக்கு வரும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை; வந்துவிட்டது. இப்போது அவர்கள் சிவன் கழுத்தில் உள்ள பாம்பாக மாறிவிட்டார்கள். அந்தத் துணிச்சலில் அவர்களும் திமுகவினரைக் கிழி கிழியென அநாகரிகமாகவும் கிழிக்கிறார்கள்.

இந்தப் பக்கம் திமுகவினர் ஆட்சி போகும் என்று நினைக்கவில்லை. அப்படியே போனாலும் அதிமுக வந்து இந்த ஊழல் சாம்ராஜ்யத்தைத் தொடர்வார்கள், வழக்குகள் வராது, நமக்கு ஆபத்தில்லை என்று நினைத்தார்கள்.

ஆனால், அடித்தது ஒரு சுனாமி. அந்த அதிர்ச்சி திமுகவினரைப் பைத்தியமாக்கிவிட்டது. அவர்களுக்கு நாலாபக்கமும் அடி, தோல்வி; ஒரு நடிகரிடம் தோல்வி; இதுவரை நாம் செய்த ஊழல்கள் வெளிவந்து மானம் போகிறது என்ற அசிங்கம் ஒருபக்கம்; இனி வழக்குகள் வந்து யார் உள்ளே போவார்களோ என்ற பயம் ஒரு பக்கம். இப்படி ஒரு மிகப்பெரிய தோல்வி என்ற பேக்கேஜை விஜய், திமுகவுக்குக் கொடுத்துவிட்டார். எனவே, அவர்களுக்கும் பயத்தில் என்ன செய்வது என்றும் தெரியவில்லை, என்ன வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரியவில்லை. வம்பை விலை கொடுத்து வாங்குகிறார்கள்.

ஒரு காணொளியைக் கவனித்தேன். தொலைக்காட்சி விவாதத்தில் திமுக பேச்சாளர் ராஜீவ் காந்தி, முதல்வர் விஜய்யை முன்னாள் நடிகர் எனக் குறிப்பிட்டார். இந்தப் பக்கம் தவெக சார்பாக வந்தவருக்குக் கோபம் வந்துவிட்டது. அவர் தற்போது முதல்வர். இப்படி வாய்க்கொழுப்போடு பேசுவதால்தான் எம்.ஜி.ஆர் உங்களை 10 வருடம் (கூப்பில்) உட்கார வைத்தார் எனப் பதிலடி கொடுத்தார். இப்போது நெறியாளருக்குக் கோபம் வந்தது. ராஜீவ் காந்தி சொன்னபோது தடுக்காத நெறியாளர், இப்போது இது என்ன வார்த்தை என்றார். அவரும் ஒரு உடன்பிறப்பு.

இதுதான் தலைவலி. நீங்கள் ஒருவரை மட்டமாகத் தாக்கினால், எதிரியும் அதே ஆயுதத்தை அல்லது அதைவிட மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவான். அதன்பிறகு கத்திக் கதறுவதால் என்ன பயன்? இங்கே யார் இந்த விளையாட்டை ஆரம்பித்தது என்று பார்த்தால், அது திமுகவினரிடம்தான் போய் முடியும்.

சட்டசபையில் `எங்கே அப்பாவைக் காணோம்?` என்று முதல்வர் கேட்கிறார் என்றால், நிச்சயம் அது ஒரு அநாகரிகமான மோசமான செயல்தான். ஆனால், கடந்த காலங்களில் திரைமறைவில் ஏதோ ஒரு பிரச்சினையில், `என் அப்பா யார் தெரியுமா?` என்று விஜய்யிடம் உதயநிதி அதிகாரத் தொனியில் சொல்லியிருக்கக்கூடும். அந்த ஆணவத்திற்குத்தான் விஜய் இப்படி அநாகரிகமாகச் சட்டசபையில் நக்கலடித்திருக்கிறார்.

நான் கூட விஜய் தனிமை விரும்பி மற்றும் அரசியல்வாதியாகப் பேசத்தெரியாதவர் என்பதால், சிலகாலம் செங்கோட்டையன் அவர்களை முதல்வராக அமர்த்தி, பின்னர் விஜய் வருவார் என நினைத்தேன்.

ஆனால், விஜய் முதல்வராக பதவி ஏற்றபோது அவர் அதை  செல்பி  எடுத்தார். அப்போதே எனக்கு புரிந்துவிட்டது, இவர் முதல்வராகி அதை யாரிடமோ காட்டத்துடிக்கிறார் என்று. அந்த செல்பியையும் யாரோ ஒருவருக்கு அனுப்பியபோது, அங்கே இவர் எண் பிளாக் செய்யப்பட்டிருக்கலாம். எனவே, உடனடியாக நேரடியாகவே அவர்கள் வீட்டுக்கு போய் 'நம்பரையா பிளாக் பண்ற? இதோ நான் முதல்வராகிவிட்டேன் பார்' என்று நேரடியாகவே தரிசனம் கொடுத்திருக்கிறார். அங்கே உதயநிதியும் வேறு வழியின்றி வாசலிலேயே வந்து வரவேற்றிருக்கிறார். இதுதான் காலத்தின் கொடுமை.

எனவே, ஆட்சியில் இருக்கும்போதும் வார்த்தைகளில் கண்ணியம் வேண்டும்; ஆட்சியை இழந்த பிறகு இன்னும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், அதிகாரம் விஜய்யிடம் இருப்பதால் இப்போது பதிலடி இன்னும் பலமாக இருக்கும். இந்த அடிப்படை அறிவு உதயநிதிக்கு இருக்காது; இருந்தாலும் சொல்லி வைப்போம்.

இந்தத் தியரி விஜய்க்கும் பொருந்தும். ஒருவன் வறுமையிலிருந்து, சொந்தங்களால் புறக்கணிக்கப்பட்டு, அவமானங்களைத் தாண்டி மேலே வருவான். அதன்பின் அவன் வீட்டு நிகழ்ச்சிகள் மிகவும் ஆடம்பரமாக இருக்கும். அது பணத்திமிர் அல்ல; தன்னை மட்டம் தட்டியவர்களுக்கு "நான் சாதித்துவிட்டேன் பார்" என்று சுட்டிக்காட்டப்படும் ஒரு பதிலடி. இந்த ஹேங்ஓவர் சில வருடங்கள் இருக்கும். நிஜத்தில் இந்த வியாதிக்கு மருந்தில்லை. இது தானாகவே வந்து தானாகவே மறையும் வியாதி.

ஆனால், சாதனையாளன் இதுபோன்ற அல்ப சந்தோஷங்களைச் சில காலம் அனுபவித்துவிட்டு, அதன்பின் தன் இலக்குகளைக் குறிவைத்து நடந்தால் ஜெயிப்பான். இல்லை, எதிரியையே நினைத்து வாழ்ந்தால் அவனும் வீழ்வான்.

எனவே, விஜய் ஒரு 6 மாதத்திற்கு திமுகவினரைக் கதறவிட்டு ரசித்து, அதன்பின் மக்கள் நலனில் மட்டும் கவனம் செலுத்தி, நல்ல நிர்வாகத்தைக் கொடுத்தால்தான் அது மீண்டும் வெற்றியாக மாறும்.

ஜெயிப்பவன் தலைவனல்ல, தொடர்ந்து ஜெயிப்பவன்தான் தலைவன். அந்தத் தொடர்ந்த வெற்றி என்பதும் தலைவர்களின் குடும்பங்களின் வாழ்க்கைத்தரம் உயராமல், மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நபர்கள்தான் வரலாற்றில் இடம்பெறுவார்கள்.

0 comments:

Post a Comment