இந்தத் தலைவலி நீண்ட காலமாக ஓடிக்கொண்டிருக்கிறது; முடிவு வந்தபாடில்லை. என்னதான் பிரச்சினை?
எல்லாத் துறைகளிலும் ஓர் அடிப்படைத் தேர்வு வைத்து, "இந்த மாணவன் இதில் தேறுவானா?" என்று கணித்து அவர்களுக்கு மட்டும் இடம் கொடுப்பது நல்ல விஷயம்தான்.
பல பேருக்குப் போலீஸ் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அதற்கான உடல் தகுதியும் வலியைத் தாங்கும் மனஉறுதியும் இருக்கிறதா என்று தேர்வு வைப்பது போல், மருத்துவத் துறையிலும் வைப்பதில் தவறில்லை.
அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இதுபோன்ற தேர்வுகள் இருக்கின்றன. ஆனால், அவர்கள் அனைவரும் ஒரே மொழியைப் பேசுபவர்கள்; எனவே, அங்குள்ள கல்வி முறைகளிலும் தேர்வுகளிலும் பெரிய வித்தியாசம் இருக்காது.
இந்தியா போன்ற பல மொழிகளைக் கொண்ட நாட்டில் இது சரிவருமா? அந்த அறிவதுதான் நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கு இல்லை. 'வெள்ளைக்காரன் கோட் போட்டால் நாமும் போட வேண்டும், அவன் புல்லட் ரயிலை விட்டால் நாமும் விட வேண்டும்' என்று சிந்திப்பவர்கள் இவர்கள்.
இந்தியா பல்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநிலத்திற்குத் தகுந்தாற்போல் கல்வி கற்றல் முறை இருக்கும். "அதையும் படிக்க வேண்டும், இதையும் படிக்க வேண்டும்" என்ற இரட்டை நிர்பந்தம் மாணவர்களுக்குக் கடுமையான மன உளைச்சலைத் தருகிறது.
வேலைக்கு மட்டும் போகும் பெண்கள் ஒருவகை. ஆனால் "வேலைக்கும் போக வேண்டும், வீட்டிற்கு வந்ததும் சமைக்கவும் வேண்டும்" என்ற இரட்டைப் பளு காரணமாக, அந்த மனஉளைச்சலைத் தாங்க முடியாமல் ஒரு பெண் தன் கணவனுக்குச் சமைத்து வைத்துவிட்டு, 'ஐ அம் எ வொர்க்கிங் மெய்ட்' (I am a working maid) என்று எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்ட செய்தியை நீங்கள் படித்திருக்கலாம். இப்படிப்பட்ட கூடுதல் சுமையை ஒரு படித்த இளம் பெண்ணாலேயே தாங்க முடியவில்லை என்றால், மாணவர்களின் நிலை என்ன?
இப்போது பல ஆடைகள் 'ரெடிமேடாக'க் கிடைக்கின்றன. அவை பலருக்குப் பொருந்திப்போகின்றன. ஆனால், சிலருக்கு அவை பொருந்தாது. அவர்களுக்குக் 'கஸ்டம் மேட்' (Custom-made) எனத் தனியாகத் தைத்துக்கொள்ள வேண்டும். இந்தியா அப்படிப்பட்ட ஒரு நாடுதான். உலக நாடுகளுக்குப் பொருந்தும் பல விஷயங்கள் நமக்குப்பொருந்தாமல் போகலாம். எனவே, இந்தியாவுக்குப் பொருந்தக்கூடிய கொள்கைகளே இங்கு தேவை.
"இந்தத் திட்டத்தைக் காங்கிரஸ் அரசுதான் கொண்டுவந்தது" என்று பாஜகவினர் சமாளிக்கிறார்கள். அப்படியென்றால், காங்கிரஸ் கொண்டுவந்த எல்லாத் திட்டங்களையும் இவர்கள் அப்படியேவா கடைப்பிடிக்கிறார்கள்? வந்தே மாதரம் பாடலைக் காங்கிரஸ் அங்கீகரித்தது; அதையும் இவர்கள் அப்படியே அமல்படுத்தலாமே?
சிக்கல் என்னவென்றால், எல்லா அரசாங்கங்களும் அவ்வப்போது இதுபோன்று புதிய மாற்றங்களைக் கொண்டுவருவார்கள். நோக்கம் நல்லதாகத்தான் இருக்கும்; ஆனால், அப்படி கொண்டுவரப்படும் திட்டங்களில் சில தவறாக முடிந்துவிடலாம். இந்த நீட் தேர்வு, பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, மாணவர்களைத் தற்கொலையை நோக்கித் தள்ளுகிறது என்பதை உணர்ந்த பிறகாவது அரசு இதை நிறுத்தியிருக்க வேண்டும் அல்லது எளிமைப்படுத்தியிருக்க வேண்டும்.
ஆனால், எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்திய ஆட்சியாளர்களின் மனநிலை ஒன்றுதான். அவர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டு, அது தவறாகிவிட்டால், "தவறு செய்துவிட்டோம்" என எந்தக் காலத்திலும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அதைவிட, தேர்தலில் தோல்வியைச் சந்தித்து "மக்களுக்கு அறிவில்லை" என்று திட்டுவார்கள். இங்குத் தமிழ்நாட்டில் திமுக இப்படிப் புலம்பிக்கொண்டிருக்கிறது; நாளை டெல்லியில் பாஜகவும் இப்படி ஒரு சூழலைச் சந்திக்கலாம்.
ஆனால், இங்கு மோடிக்கும் பாஜகவுக்கும் இன்னும் அதிர்ஷ்டம் இருக்கிறது. அவர்களின் எதிரிகளில் பெரும்பாலோர் 'வாரிசுகளாக' இருக்கிறார்கள். மற்ற தலைவர்களான மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் போன்றவர்கள் திறமையற்றவர்களாக இருக்கிறார்கள். இங்குத் தமிழ்நாட்டிற்கு ஒரு புதுமுகமாக 'விஜய்' கிடைத்தது போல், தேசிய அளவில் ஒருவர் வந்து, அந்தப் புதிய முகத்தின் கீழ் மற்ற பாஜக எதிர்ப்பாளர்கள் இணைந்தால் டெல்லியிலும் ஒரு மாற்றம் வரலாம்.
அதேவேளையில், தொடர்ந்து அதிகாரத்தில் இருந்தால் மனிதர்களுக்கு ஓர் இறுமாப்பு வந்துவிடும். அது இப்போது மோடிக்கு வந்துவிட்டது. தர்மேந்திர பிரதான் பல விஷயங்களில் சொதப்புகிறார் எனத் தெரிந்தவுடன், அவரை எச்சரித்து வேறு துறைக்கு மாற்றியிருக்க வேண்டும். அவர் ஊழல் செய்யாத நல்ல நபராக இருக்கலாம்; அது ஒரு சராசரி மனிதனுக்கான தகுதி. ஆனால், அமைச்சர் பதவி என்பது திறமையின் அடிப்படையில் கொடுக்கப்படுவது. இங்குத் திறமை இல்லையென்றால் வீட்டிற்கு அனுப்ப வேண்டியதுதான்.
இனி இந்தப் பிரச்சினைக்குள் போவோம். "ஏற்கெனவே இருந்த நடைமுறையில் நிறைய ஊழல் இருந்தது, தகுதியற்றவர்களுக்கு இடங்கள் விற்கப்பட்டன, அது நீட் வந்த பிறகு தடுக்கப்பட்டிருக்கிறது" என்பது இதை ஆதரிப்பவர்களின் வாதம்.
அப்போது கோடிகளைக் கொடுத்து ஆயிரக்கணக்கில் மருத்துவ இடங்களை வாங்கினார்கள் என்பது உண்மையாக இருக்கலாம். அதைத் தடுத்து முறைப்படுத்த வேண்டிய வேலையைத்தானே அரசு செய்திருக்க வேண்டும்? இப்போது அதைவிட மோசமான நிலை அல்லவா உருவாகியிருக்கிறது!
இப்போது நீட் தேர்வுக்காக லட்சக்கணக்கான மாணவர்கள் பல லட்சங்களைச் செலவு செய்து படிக்கிறார்கள். கணக்குப் போட்டுப் பார்த்தால், இது அதைவிடப் மிகப்பெரிய ஊழல் ஆச்சே! தோராயமாக 22 லட்சம் பேர் நீட் தேர்வுக்காகச் செலவு செய்து படிக்கிறார்கள். அதில் தேர்வாகப்போவது 1.5 லட்சம் மாணவர்கள் மட்டுமே. மீதி 20 லட்சம் மாணவர்களின் பணமும் உழைப்பும் விரயம்; இதற்காகச் செலவிட்ட சில வருடங்களும் வீண். இப்படிப்பட்ட ஓர் அபத்தமான சூழ்நிலையைத்தான் நீட் உருவாக்கியிருக்கிறது.
அதேசமயம், இந்த 'அதிபுத்திசாலி' தலைவர்கள் அவ்வளவு சீக்கிரம் இறங்கிவர மாட்டார்கள். நாம்தான் இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்க வேண்டும்.
என்ன செய்யலாம்?
மருத்துவத் துறையையே இரண்டாகப் பிரித்தால் என்ன? அதாவது, வெறும் பட்டப்படிப்பு இருந்தால் போதும் நீங்கள் இன்ஸ்பெக்டர் ஆகிவிடலாம்; அதுவே மேலதிகாரி ஆக வேண்டுமென்றால் ஐ.பி.எஸ். (IPS) தேர்ச்சி பெற வேண்டும். அதேபோல் இங்கேயும் இரண்டு நிலைகளில் தேர்வுகளைக் கொண்டு வரலாம்.
இருக்கும் மருத்துவ இடங்களில் பாதியை நீட் தேர்வுக்கும், பாதியை மாநில அரசுக்கும் பிரித்துக் கொடுத்துவிடலாம். அதாவது, இந்த 50 சதவீத இடங்களுக்கு மாநில அரசே இங்குள்ள கல்வி முறைக்குத் தகுந்தாற்போல் ஒரு தேர்வை உருவாக்கி மாணவர்களுக்கு இடம் வழங்கலாம். இதன் மூலம் ஏழை மாணவர்களும் அரசுப் பள்ளி மாணவர்களும் கணிசமாகப் பயன்பெறுவார்கள்.
இப்போது கார்களுக்கு மஞ்சள் பலகை (Yellow Board), வெள்ளைப் பலகை (White Board) என இருக்கிறது. அதில் இப்போது பச்சை நிற மின்சார வாகனங்களும் (EV) வந்திருக்கின்றன. அதேபோல், நீட் முடித்த மருத்துவர்கள் ஒரு நிறத்தில் பெயர்ப்பலகை மாட்டிக்கொள்ளலாம்; மற்றவர்கள் வேறு நிறத்தில் மாட்டிக்கொள்ளலாம். பிரச்சினை முடிந்தது! அதன்பின் உங்களுக்கு நீட் படித்த மருத்துவர்தான் வேண்டும் என்றால், அந்தப் பலகையைப் பார்த்து அவரிடம் செல்லலாம். எந்த மருத்துவரை நம்பிச் செல்வது என்பது மக்களின் கையில். இங்குத் தரம் உள்ளவன் ஜெயிப்பான்.
அதிலும் ஏதாவது கோளாறு வந்தால், அப்போதும் அதற்கு ஒரு தீர்வு வரும்.
இப்போதெல்லாம் கூகுள் குரோம் (Google Chrome) வாராவாரம் "Chrome is updated" என்று தகவல் தருகிறது. அதாவது, அவர்கள் அடிக்கடி ஏதோ ஒரு குறையைக் கண்டுபிடிக்கிறார்கள் அல்லது புதிய வசதியைக் கூடுதலாக வழங்குகிறார்கள். கவனத்திற்கு வரும் குறைகளைப் புரிந்துகொண்டு உடனடியாக அதைச் சரிசெய்கிறார்கள்; எனவே அவர்கள் ஜெயிக்கிறார்கள். இந்த எதார்த்த புத்தி பாஜகவினருக்கும் வந்தால் நாட்டிற்கும் நல்லது, அவர்களுக்கும் நல்லது.
மாற்றங்களைப் புரிந்துகொள்ளாவிட்டால் என்ன நடக்கும் என்பதை ஸ்டாலின், பினராயி விஜயன், மம்தா பானர்ஜி போன்றவர்களைப் பார்த்தாவது பாஜக திருந்த வேண்டும்.

0 comments:
Post a Comment