பழனி முருகர் கோவிலுக்குச் சொந்தமான (?) நிலம் குறித்த சர்ச்சை முடிவுக்கு வந்துவிட்டது. உயர் நீதிமன்றம் அந்த பதிவை ரத்து செய்துவிட்டது. இது நல்ல விஷயம். ஆனால் அதேசமயம் இங்கே பல தேவையற்ற சர்ச்சைகளும் குழப்பங்களும் உருவாகியிருக்கிறது.
முதல் குழப்பம் அறநிலையத்துறை ரமேஷ் மீது பழி சுமத்துவது. ஒரு நபர் மீது குற்றம் சாட்டுவதற்கு ஒரு லாஜிக் வேண்டும். விஜய் ஊழலை அனுமதிக்கமாட்டார் என்பது தெரிந்த உண்மை. ஒருவேளை அவரும் தடம் மாறினாலும் அதற்கும் சில வருடங்கள் ஆகும்.
ஒருவேளை விஜய் ஊழலை (தேர்தல் செலவுக்கு) ஓரளவுக்கு அனுமதித்தாலும், ரமேஷ் போன்றவர்கள் செய்வதற்கு வாய்ப்பில்லை. அவர் முதல் முறை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர். இப்படி பொறுப்புக்கு வந்த உடனே யாரும் இப்படி வம்பை விலை கொடுத்து வாங்கமாட்டார்கள். அதுவும் 100 கோடி ஊழல் செய்யும் அளவுக்கு துணிச்சல் நிச்சயம் வராது. இங்கே யாரையும் யோக்கியன் என்று சொல்லமுடியாது. இருந்தாலும் எதார்த்தம் என்ற அடிப்படையில் பார்த்தால் இங்கே ஊழலுக்கு வாய்ப்பில்லை.
ஆனால் மோசடி நடந்திருப்பது உண்மை. இது கவனக்குறைவாக இருக்கலாம். அல்லது அவருக்கு தெரியாமல் நடந்திருக்கலாம். இது வெளிவந்தபின் ரமேஷ் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பதைத்தான் கவனிக்கவேண்டும்.
இதுபோன்ற தவறுகள் நிர்வாகக் கோளாறுகள் இயற்கையானவை. விஜய்யே இதற்கு பலியாகியிருக்கிறார். கடுமையான குற்றச்சாட்டுக்கு உள்ளான ஐ பி எஸ் அதிகாரியான அருனையே லஞ்ச ஒழிப்பு துறைக்கு நியமித்தவர் விஜய். நாம் நமக்கு கீழே உள்ள அதிகாரிகளை சொல்வதை நம்பி சில முடிவுகள் எடுப்போம். அது தவறாகிவிடும். அதை உணர்ந்தபின் அதை சரி செய்வதுதான் நல்ல நிர்வாகமுறை. அதை அருண் விஷயத்தில் விஜய் செய்துவிட்டார்.
அமைச்சர் ரமேஷும் அவரது துறையில் நடந்த கோளாறை விரைவில் சரி செய்வார் என்று நம்புவோம். அவருக்கு தவறான ஆலோசனைகளை வழங்கிய அதிகாரிகளை `சரியான` இடத்துக்கு அனுப்புவது இந்த அதிகாரிகளுக்கு ஒரு நல்ல பாடமாக இருக்கும்.
ஆனால் எனக்கு இங்கே வேறு சில குழப்பங்கள் வருகிறது. ஒருவர் நீதிமன்றம் சென்று அனுமதி வாங்கி இவ்வளவு துணிச்சலாக நிலத்தை விற்கிறார் என்றால் அங்கே 10 சதவிகிதம் அளவுக்காவது அவர்கள் பக்கம் நியாயம் இருக்ககூடும். மூலப்பத்திரம் என்று ஓன்று இருக்கும். அதை அவர் யாரிடம் வாங்கினார், அவர் எப்படி இந்த நிலத்தின் உரிமையாளர் ஆனார் என்ற விவரம் இருக்கும். இப்படி எந்த தகவலும் இதுவரை வெளிவரவில்லை.
இங்கே அரசின் நிர்வாகமுறை எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். அங்கே இருப்பவர்கள் அதிகாரிகள் என்பதால் படிவத்தில் ஒரு சாதாரண புள்ளி அதிகமாக இருந்துவிட்டாலும், இது சரியில்லை;இதை ஆட்சேபிக்கிறேன் என்று குறிப்பு எழுதிவிடுவார்கள். எதற்கு? அதற்குத்தான்.
அடுத்து வரும் அதிகாரிகள் அது தவறு என்றாலும், நமக்கேன் வம்பு என்று அந்த நிலையையே அப்படியே கடைபிடிப்பார்கள்; கவனிக்கப்பட்டால் சரி செய்வார்கள். இதுபோல் பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கலாம். எனவே இங்கே நியாயம் யார் பக்கம் என்பது, ஒரு பட்டிமன்றம் நடத்தி அதில் விற்றவர்,வாங்கியவர், ஆட்சேபிப்பவர் என எல்லோரையும் பேசவிட்டு கவனித்தால்தான் புரியும்.
இன்னொரு பக்கம், இது கோவில் நிலம் என்றே வைத்துக்கொள்வோம். அதை பயன்படுத்துபவர்கள் அதற்கான ஏலத்தொகையையோ, வாடகையையோ பழனி முருகனுக்கு கொடுத்திருப்பார்கள். அப்படி ஏதாவது செய்தி வந்ததா என்று கவனித்தால், அதுவும் இல்லை.
இந்த நிலத்தை விற்க முயற்சித்தவர் எந்த அடிப்படையில் அந்த இடம் அவருக்கு சொந்தமானது என்று நினைக்கிறார் என்று பார்த்தால் அதுவும் தெரியவில்லை.மொத்தத்தில் இது வடிவேல் காமெடிதான். நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டே என்பதுதான். எதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன் என்பதற்கான பதில் இல்லை. இது மோசடி என்று செய்தி வருகிறதே எந்த வகையில் மோசடி என்ற தகவல் முழுமையாக இல்லை.
சம்மந்தப்பட்ட நபர் இது குறித்து ஒரு தெளிவான பேட்டி கொடுத்தால் (கொடுத்திருக்கிறாரா?) நாம் ஓரளவுக்காவது புரிந்துகொள்ளலாம். ஒரு வழக்கு நீதிமன்றத்துக்கு போய்விட்டால் அதைப்பற்றி பேசக்கூடாது என்று சொல்லிவிடுவார்கள். எனவே அவரும் பேசமாட்டார். நீதிபதிகளும் யார் மீது தவறு என்று சொல்லாமல் வழக்குகளை வருடக்கணக்கில் இழுத்தடிப்பார்கள். நாம்தான் குழப்பத்தில் இருப்போம். மொத்தத்தில் நீதித்துத்துறை தற்போது ஒரு ஜோக்கர்ஸ் கிளப்பாக மாறிவருகிறது.
இது தினமலரில் வந்த செய்தி
(....அனைத்து தரப்பினரின் வாதங்களையும் கேட்காமல், ஆரம்ப கட்டத்திலேயே ரிட் மனுவை தனி நீதிபதி அனுமதித்திருக்கக்கூடாது. அறநிலையத்துறை கமிஷனர் 1999ல் பிறப்பித்த உத்தரவின்படி, தண்டபாணி சுவாமி மடத்தின் தக்காராக நியமிக்கப்பட்டேன்.) இது அந்த தக்காரின் வாதம்.
இந்த வழக்கில் என்னையும் கேட்கவேண்டும் என்று சொல்லும் தக்கார், இதையும் சொல்கிறார். அதாவது 1999 லேயே இவர் அந்த கோவிலின் தக்காராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அநேகமாக இந்த வழக்கு அதற்கு முன்பிருந்தே இருந்திருக்கக்கூடும். ஆனால் இந்த 25 ஆண்டுகளாக வழக்கு முடிக்கப்படவில்லை. ஏன்?
நீதித்துறை இந்நேரம் இந்த வழக்கை முடித்து யார் உரிமையாளர் என்று தெளிவாக தீர்ப்பு வழங்கியிருக்கவேண்டும். ஆனால் நீதிபதிகளுக்கு வழக்குகளை இழுப்பதில் அப்படி ஒரு பேரானந்தம் போலிருக்கிறது. இவர்கள் பெயில் கொடுப்பதற்கும் வாய்தா கொடுப்பதற்காகவும் மட்டுமே நீதிமன்றம் செல்வார்கள் போலிருக்கிறது.
அரசுத்துறைகளில் தேவையில்லாமல் நம்மை அலைக்கழிப்பதால் நொந்துபோய் நாம் லஞ்சம் கொடுத்தாவது நமது நியாயமான காரியத்தை முடிப்போம். அதுபோல் இந்த நிலத்தை விற்றவரும் செய்தாரா என்று தெரியவில்லை. நான் அவரை ஆதரிக்கவில்லை. ஒரு சந்தேகமாக சொல்கிறேன்.
(..உயர் நீதிமன்ற தனி நீதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர் ஆகியோரை ஏமாற்றி, ரிட் மனுவில் உத்தரவு பெறப்பட்டுள்ளது. பத்திரப்பதிவிற்கு சம்பந்தப்பட்ட நபர்கள் முத்திரை தீர்வை தொகையை சரியாக செலுத்த தவறியுள்ளனர். தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. சார் - பதிவாளர் பதிவு செய்த பத்திரம்செல்லாது.இவ்வாறு உத்தரவிட்டனர்....) இதுவும் அந்த அமர்வு நீதிபதிகள் சொன்ன வார்த்தைகள்.
இதையெல்லாம் நீங்கள் நம்புகிறீர்களா? இதுதான் நீதித்துறை. இவர்கள் ஒரு நீதிபதியையே ஏமாற்றிவிட்டார்களாம். அப்பேற்பட்ட அப்பாவி நீதிபதியாக இருக்கிறார். நிஜத்தில் ஒரு நீதிபதியே இந்த மோசடியில் சம்பத்தப்பட்டிருக்கிறார்கள் என்றவுடன் அப்படியே கதையை மாற்றிவிட்டார்கள்.
இதிலிருந்து என்ன தெரிகிறது. மதுரை உயர்நிதிமன்றத்தில் ஒரு முட்டாள் நீதிபதியாக இருக்கிறார். இதை நான் சொல்லவில்லை. அதே மதுரை உயர்நிதிமன்றத்தின் வேறு ஒரு அமர்வு சொல்லியிருக்கிறது. அந்த நீதிபதி புத்திசாலியாக இருந்து கொஞ்சம் ஜாக்கிரதையாக செய்யப்பட்டிருந்தால் இந்த தலைவலி வந்திருக்குமா?
நிஜத்தில் நாட்டில் நடக்கும் பெரும்பாலான வழக்குகளின் நிலை இதுதான். இங்கே அவசரப்பட்டு நடந்தது மோசடி என்றும் சொல்லமுடியாது, அல்லது அவர்கள் மோசடி செய்யவில்லை என்றும் சொல்லமுடியாது. மக்களை இருட்டில் வைத்திருப்பது இந்த அரசியல்வாதிகளுக்கு, நீதிபதிகளுக்கு வசதியாக இருக்கிறது.
மக்கள் தவறு செய்வது வேறு, அவர்கள் தங்களின் நியாயமான பிரச்சினையை தீர்க்கமுடியாமல் தவறான பாதையை தேர்ந்தெடுப்பது என்பது வேறு. இந்த பழனி கோவில் நிலம் விவகாரம் எந்த வகை என்பது புரியவில்லை. சில வருடங்களுக்கு பின் தெரியவரலாம்.
இதுபோன்ற தலைவலிக்கு முடிவுகட்ட, எந்த ஒரு வழக்கும் 10 ஆண்டுகளுக்கு மேல் தாண்டாமல் முடித்துவைக்க வேண்டும். அல்லது அதன்பின் அவற்றை விரைவு நீதிமன்றங்களுக்கு மாற்றி விரைவாக முடிக்கவேண்டும். முதல்வர் விஜய் அவர்கள் இதை கவனிக்கவேண்டும்.

0 comments:
Post a Comment