அதிமுக கொஞ்சம் கொஞ்சமாகச் சிதறிவருகிறது. விஜய் அங்கேயிருந்து எம்.எல்.ஏக்களை ஒட்டுமொத்தமாகக் கணிசமாகத் தூக்குவார் என்று பார்த்தால், இ.எம்.ஐ கணக்காக கொஞ்சம் கொஞ்சமாக இழுக்கிறார். அதுவும் நல்லதுதான்; எல்லோரும் ஒரே நேரத்தில் முடிவெடுக்க மாட்டார்கள்.
என்னதான் இருந்தாலும் அது அவர்களுக்குத் தாய் கழகம், அதை விட்டுவிட்டு வர யாருக்கும் எளிதில் மனசு வராது. எடப்பாடி பழனிசாமி திருந்துவார் என எதிர்பார்த்திருக்கலாம், இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துப் பார்ப்போம் என அவர்கள் தயங்கியிருக்கலாம். ஆனால், எடப்பாடிக்கு எதைப் பற்றியும் கவலையில்லை. "கட்சியை விட நான்தான் முக்கியம்" என்ற இறுமாப்பு அவருக்கு. எனவே, இனி அதிமுக மெல்லச் சாவதைத் தவிர வேறு வழியில்லை.
சரிதான். ஏனென்றால், அரசியலுக்கான விதிமுறை அப்படிப்பட்டது. ஒரு ஆரோக்கியமான, சந்தோஷமான குடும்பத்தை உடைப்பது அநாகரிகமாக இருக்கலாம். ஆனால், அதிருப்தியில் இருப்பவர்களை அழைப்பதோ, அவர்களாகவே முன் வந்து இணைவதோ இயல்பானதுதான்.
இது கிட்டத்தட்ட பட்டியல் இன மக்களின் மன உணர்வைப் போன்றது. அவர்கள் கிறித்துவ மதத்திற்கு மாறினார்கள் என்றால், அது அவர்களின் விருப்பமா? அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்காமல் மற்ற இந்துக்கள் அவமதிக்கும் போது, அவர்களுக்கு வேறு என்ன வழி? அதே தியரிதான் இங்கேயும் பொருந்தும்.
பெரியார் இந்து மதத்திற்குத் தந்த அடியைவிட, 'பட்டியலின மக்கள் மதம் மாறுகிறார்கள்' என்ற அச்சம் காரணமாகத்தான் இந்து மதம் கொஞ்சம் வேகமாக மாறியிருக்கிறது. எனவே, அகங்காரம் மதங்களில் இருந்தாலும் சரி, அரசியல் கட்சித் தலைவர்களிடம் இருந்தாலும் சரி, இதுபோன்ற அதிர்ச்சி வைத்தியங்கள் கொடுத்துதான் அவர்களைத் திருத்த வேண்டும். இருந்தாலும் எடப்பாடி திருந்த மாட்டார் என்பது வேறு கதை.
மரியாதை இல்லை என்ற காரணத்தினால் கட்சி மாறுவது சரி, ஆனால் இவர்கள் ஊழல் பேர்வழிகளாக இருக்கிறார்களே?
இதுதான் கவலைப்பட வேண்டிய விஷயம். இருந்தாலும் 'எதார்த்தம்' என்று ஒரு தியரி இருக்கிறதல்லவா? அந்த அடிப்படையில் பார்த்தால் இவையும் தவிர்க்க முடியாதவை.
இதற்கு இரண்டு உதாரணங்களைச் சொல்லலாம். நீதித்துறையில் குற்றவாளிகளைத் தண்டிக்க 'அப்ரூவர்' என்ற நடைமுறை இருக்கிறது. முக்கியமான குற்றவாளிகளைத் தண்டிக்க, சிலருக்கு மட்டும் இப்படித் தண்டனையிலிருந்து விலக்கு அளிப்பார்கள். இங்கே எல்லோரையும் தண்டிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தால் உங்களால் யாரையுமே தண்டிக்க முடியாது. அந்த வகையில் விஜய்யின் ஆட்சி பலமாக இருந்து குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்றால், சிலரை அரவணைத்தாக வேண்டும். வேறு வழியில்லை.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக ஆதரவு என விஜய்க்குப் பெரும்பான்மை இருக்கிறது. அந்த பலமே அவருக்குப் போதுமே? ஏன் இப்படி அதிமுக கட்சி எம்.எல்.ஏக்களைச் சேர்க்க வேண்டும்?
என்ன இருந்தாலும் இப்போது விஜய்க்கு ஆதரவளிக்கும் கட்சியினர் திமுகவின் நீண்ட கால கூட்டாளிகள். அங்கே பதவி சுகத்தை அனுபவிக்காவிட்டாலும் வேறு ஏதாவது சலுகைகளைப் பெற்றிருப்பார்கள். அந்த நன்றி விசுவாசம் இன்னும் பலருக்கு இருக்கும். எனவே, அதிமுக தலைவர்கள் மீது எடுக்கும் நடவடிக்கைக்கு அவர்கள் ஆதரவாக இருப்பார்கள்; அதுவே திமுக என்றால் தடை போடுவார்கள். "விடுங்க விஜய் சார்.." எனச் சமாளிப்பார்கள்.
அப்படி அவர்கள் தடுக்காவிட்டால், "இவர்கள் என்னென்ன சலுகைகளை அனுபவித்தார்கள்" எனப் பல விஷயங்களை திமுக வெளியே கசியவிடும். இது இவர்களின் மானத்தை வாங்கிவிடும். அந்த வகையில் திமுகவிற்கு எதிரான நடவடிக்கையில் இவர்கள் முட்டுக்கட்டையாகத்தான் இருப்பார்கள். எனவே, விஜய்க்கு இவர்களைத் தாண்டிய முழுமையான பலம் அவசியம். அதற்காகக் கொஞ்சம் அதிரடி மற்றும் அநாகரிக அரசியலும் செய்தாக வேண்டும்.
இன்னொரு தலைவலியும் இருக்கிறது. சில பெண்கள் காதல் வலையில் விழுவார்கள். பெற்றோருக்குப் பதற்றமாக இருக்கும். அந்த காதலன் சரியில்லை என்றால் தடுத்து விடுவார்கள். ஆனால், அதோடு விட்டாலும் ஆபத்துதான். அடுத்த ஆறு மாதத்தில் மீண்டும் அதே காதலனிடம் அந்தப் பெண் மயங்கிவிடுவாள். இந்த முறை சொல்லாமல் ஓடிப்போய்விடுவாள்.
இதைத் தடுக்க ஒரே வழி, உடனடியாக அந்தப் பெண்ணுக்கு வேறு திருமணம் செய்து, 'இனி காதலுக்கு வழியில்லை' என்று அந்த ஆசைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான். இதுதான் பெரும்பாலான இடங்களில் நடக்கிறது.
அரசியலும் அப்படித்தான். இங்கே எதிர்க்கட்சிகள் இன்னமும் ஆவேசத்தில் இருக்கிறார்கள். அவர்கள் வாய்ப்புகளைத் தேடுகிறார்கள். 10-15 எம்.எல்.ஏக்கள் கிடைத்தால் போதும் இந்த ஆட்சியைக் கவிழ்த்துவிடலாம் என வலை விரித்துக் காத்திருக்கிறார்கள். அது சாத்தியமில்லை என்றாலும், இதுவும் ஒரு ஆபத்துதான்.
எனவே, இரண்டு பக்கமிருந்தும் தலா பத்து பத்து எம்.எல்.ஏக்கள் இந்த பக்கம் வந்து அவர்கள் மேலும் பலவீனமானால், அதன்பின் அது அவர்களுக்குச் சாத்தியமில்லாத ஒன்றாக மாறிவிடும். அந்த வகையில் யுத்தத்திலும் அரசியலிலும் எதிரியை விட்டுவைப்பது என்பதே ஆபத்துதான்.
அதே சமயம் கிறித்துவப் பிரசாரகர்களைப் போல வீடு வீடாகப் போய் அநாகரிகமாக 'வா' என்று ஆசை காட்டி மதம் மாற்றுவதைபோல், எம் எல் ஏக்களுக்கு பதவி ஆசை காட்டக்கூடாது.
கதவுகளைத் திறந்து வையுங்கள். எம்.எல்.ஏக்கள் அவர்களாக விருப்பப்பட்டு வந்தால் அவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள். அதற்கான வாய்ப்புகளே நிறைய இருக்கின்றன.
இருக்கும் இடமோ அல்லது செல்லும் பாதையோ சரியில்லை என்றால் அதை மாற்றுவது என்பது இயற்கையான ஒன்று, அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அது மதமாக இருந்தாலும் சரி, அரசியல் கட்சியாக இருந்தாலும் சரி!

0 comments:
Post a Comment