இந்தியா போன்ற சுதந்திரமான ஜனநாயக நாட்டில் இவையெல்லாம் நிரந்தரத் தலைவலி. இதனால் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அதேசமயம், இதுபோன்ற திட்டங்களில் அரசியல் கட்சிகள் மறைமுகமாக நிலங்களை வாங்கி ஊழல் செய்கின்றன என்பதும் உண்மை.
சில சீன காணொளிகளைக் கவனித்தேன். அங்கே எல்லாத் துறைகளிலும் பிரமாதமான வளர்ச்சி. ஆனால் அரசை எதிர்த்துப் போராட்டங்கள் என்பதே கிடையாது. தியான்மென் சதுக்கம் கொடுத்த அடி, இந்தத் தலைமுறையையும் பயமுறுத்தி வைத்திருக்கிறது.
அதுமட்டுமின்றி, அங்கே டிஃப்ளேஷன் (Deflation) சில ஆண்டுகளாக இருக்கிறதாம். அதாவது, விலைவாசி ஏறி வருவதைப் போல, சீனாவில் அது இறங்குமுகமாக இருக்கிறதாம். அது இன்னும் குறையவில்லை. அங்கே இருக்கும் முகேஷ் அம்பானி போன்றவர்கள் ஷேர் ஆட்டோவில் பயணித்தால் எப்படி இருக்கும்?
மக்கள் அரசை எதிர்க்கப் பயப்படுகிறார்கள்; பணக்காரன் செலவு பண்ணவே பயப்படுகிறான். இதுதான் இன்றைய சீனா. இது என்ன விதமான வளர்ச்சி? எதிர்காலத்தில் சீனாவும் ரஷ்யாவைப் போல் சிதறப்போகிறது என்பது என் கணிப்பு. பார்ப்போம்.
இந்தியாவில் கதையே வேறு. இங்கே பிரதமருக்கே இரவில் போன் செய்து, “சார், நீங்க தாசா, இல்ல லார்ட் லபக்கு தாஸா?” என்று கேட்பார்கள். அவ்வளவு கொழுப்பு பிடித்தவர்கள் நாம். செலவுக்கும் அஞ்ச மாட்டோம். கடன் வாங்கியாவது செலவு செய்வோம்; அடுத்தவன் தலையில் மிளகாய் அரைத்தும் செலவு செய்வோம். வங்கியில் கடன் வாங்கியும் செலவு செய்வோம். யாரை ஏமாற்றினாலும் பெயில் கொடுக்க, வழக்கை இழுக்க எங்களுக்கு நீதிபதிகள் இருக்கிறார்கள். பணக்காரர்களாக இருந்தால் தள்ளுபடி செய்ய அரசாங்கமும் இருக்கிறது. அப்பேற்பட்ட புண்ணியப் புடலங்காய் பூமி இந்தியா.
எனவே, இங்கே சீனா மாதிரியான வளர்ச்சி இருக்காது. அதேசமயம், மக்களின் கோபம் ஏதோ ஒரு வகையில் வெளிப்பட்டுவிடுவதால், இந்தியா உடையும் என்ற பயமும் கிடையாது.
இனி பரந்தூர்.
எதிர்காலத்தில் பல இடங்களில் இதுபோன்ற தலைவலிகளை தமிழ்நாடு சந்திக்கலாம். எனவே, இதற்கு ஒரு வழி தேவை.
சில யோசனைகள்.
புதிய சட்டமன்றம், விமான நிலையம் மற்றும் இயற்கைக்கு ஆபத்து போன்ற சிக்கலான திட்டங்களைத் தேர்வு செய்யும்போது, சட்டமன்றத்தில் விவாதித்து மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் தேவை என்று கொண்டுவரலாம். டெல்லியில் முக்கியமான மசோதாக்களுக்கு இதுதான் நடைமுறை. மாநிலங்களிலும் இப்படி இருந்தால், ஆளுங்கட்சி தன்னிச்சையாக செயல்பட முடியாது. அப்படி நிறைவேற்றப்படும் திட்டங்களைக் கைவிடவும் முடியாது.
அதைவிட முக்கியம், இப்படி ஒரு திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு, அதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் அங்கேயும் அதன் சுற்றுவட்டாரத்திலும் யார் நிலம் வாங்கினார்களோ, அவர்களின் பத்திரப் பதிவுகள் ரத்து செய்யப்பட வேண்டும். அங்கே அப்படி நிலம் வாங்கியவர்கள் விவசாயம், தொழில் செய்கிறார்கள் என்றால் அது பிரச்சினை இல்லை. அவர்களை விட்டுவிடலாம்.
எதற்கும் பயன்படுத்தாத நிலங்களின் பத்திரப் பதிவை மட்டும் ரத்து செய்துவிடலாம். கரைவேட்டிகள் அங்கே நிலம் வாங்கியிருந்தால், நிச்சயம் சும்மாதான் இருக்கும் அல்லது பெயரளவுக்கு ஏதோ ஒன்று இருக்கும். அதை கண்டுபிடிப்பது சுலபம்தான். அவர்களுக்கு மட்டும், கடந்த காலங்களில் எந்த விலைக்கு வாங்கினார்களோ அந்தத் தொகையை மட்டும் திருப்பிக் கொடுக்கப்படும் என்ற நடைமுறையைக் கொண்டுவரலாம்.
ஊழல்களை ஒழிக்க நிறைய வழிகள் இருக்கின்றன. இங்கே நோக்கம்தான் முக்கியம். விஜய் இந்த விஷயத்தில் உறுதியாக இருந்தால், அதுவும் சாத்தியம். இப்படி ஒரு ஆபத்து இருந்தால், ஆளுங்கட்சியினர் எதிர்காலத்தில் நிலம் வாங்குவதைத் தவிர்ப்பார்கள்.
ஆனால், இதையெல்லாம் விட எனக்கு வேறு ஒரு கேள்வி எழுகிறது.
அது என்ன எல்லாத் திட்டங்களும் சென்னைக்கு அருகே, சென்னைக்குப் பக்கத்தில் என்றுதான் வருகிறது. இப்போதே நகரம் பல மடங்கு விரிவாகி வருகிறது. அடுத்த 20, 30 ஆண்டுகளில் இந்தப் பரந்தூரும் சென்னை லிஸ்டில் வரலாம். அப்படியிருக்க, மீண்டும் சென்னைக்கு அருகிலேயே ஏன் இன்னொரு விமான நிலையம்?
ஒரு புள்ளிவிவரம். சென்னை விமான நிலையத்திற்கு வருடத்திற்கு 2.30 கோடி பயணிகள் வருகிறார்களாம். அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் கோவை வெறும் 34 லட்சம்தான். அதாவது, 15 சதவிகிதம்தான். இதன் அர்த்தம், சென்னைக்கு வரும் பெரும்பாலான பயணிகள் பிற மாவட்டங்களுக்குப் பயணிக்கிறார்கள் என்பதுதான். எனவே, புதிய விமான நிலையம் சென்னைக்கான தேவை இல்லை; தமிழ்நாட்டுக்கான தேவை.
இதை வேறு மாதிரி சொல்லலாம். சென்னையில் ஒரு நகைக்கடை இருக்கிறது. கடை வாடிக்கையாளர்களால் திணறுகிறது. இப்போது அவர்கள் என்ன செய்வார்கள்? வாடிக்கையாளர்கள் யார் என்று கவனிப்பார்கள்.
சென்னையில் இருப்பவர்கள்தான் என்றால், நிச்சயம் கடைக்கு விரிவாக்கம் தேவை. மேலும் சில மாடிகள் கட்டலாம் அல்லது பக்கத்தில் இடம் வாங்கிப் பெரிதாக்கலாம்.
ஆனால் வாடிக்கையாளர்கள் புதுச்சேரி, வேலூர் போன்ற ஊர்களிலிருந்து வருகிறார்கள் என்றால், இப்போது உங்களுக்குத் தேவை ஒரு கூடுதல் கிளை. இது போன்ற ஊர்களில் கிளை திறப்பது, அங்குள்ள வாடிக்கையாளர்களுக்கு சுலபமாகவும் இருக்கும்; மேலும் அங்கிருந்து 100–200 கிலோமீட்டர் சுற்றளவில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் முடியும். இதுதான் பெரும்பாலான ஜவுளி, நகைக்கடை உரிமையாளர்கள் செய்வார்கள்; செய்கிறார்கள்.
சென்னைக்கும் இதே தியரிதான். சென்னைக்கு இந்தப் பக்கம் கடல், அந்தப் பக்கம் மிக அருகில் ஆந்திரா. சென்னை வந்து இறங்கும் பயணிகளில் கணிசமானவர்கள் பிற மாவட்டங்களுக்குப் பயணிப்பவர்கள். ஒரு நாள் சென்னைக்கு வந்திறங்கும் பயணிகளிடம், “எங்கே போகிறீர்கள்?” என்று ஒரு கேள்வியைக் கேட்டால் இதற்கான பதில் கிடைத்துவிடும். அவர்களுக்கு வேறு வழி இல்லாததால் சென்னையைப் பயன்படுத்துகிறார்கள்.
இன்னொரு பக்கம், கோவை கேரள எல்லையை ஒட்டி இருக்கிறது. மத்திய தமிழகத்துக்கு யாராவது வரவேண்டும் என்றால், ஒன்று இந்தக் கடைசிக்கு அல்லது அந்தக் கடைசிக்கு வந்து இறங்க வேண்டும்.
அந்த வகையில், இப்போதைய தேவை தமிழ்நாட்டின் மையப் பகுதியில் — மதுரையில் — இருக்கும் ஏதாவது ஒரு நகரத்தில் விமான நிலையத்தை விரிவாக்குவது அல்லது புதிதாக ஒன்றை உருவாக்குவதுதான்.
இதன் மூலம் 30 சதவிகிதப் பயணிகள் சென்னைக்கு வருவது மடைமாற்றப்பட்டால், மீனம்பாக்கத்தைப் பிற காரணங்களுக்காக விரிவாக்குவது சுலபமாகிவிடும்.
ஆனால், இந்தியா ஒரு விவசாய நாடு. அதிலும் தமிழ்நாடு கடற்கரை மாநிலம். இங்கே நீங்கள் எந்தப் பக்கம் காலை வைத்தாலும், அது ஏதோ ஒரு விவசாய நிலமாகத்தான் இருக்கும். எனவே, இது விவசாய நிலம் என்ற காரணத்தைக் காட்டி எல்லாத் திட்டங்களையும் எதிர்ப்பது ஒரு வகையான அரைவேக்காட்டுத்தனம்தான். இதில் திமுகவும் அடக்கம்; தவெகவும் அடக்கம்.
வியாபாரிகள் மொழியில் சொன்னால், இப்போதைக்கு மீனம்பாக்கத்துக்கு விரிவாக்கம் தேவை இல்லை; நீண்ட தூரத்தில் ஒரு கிளை தேவை. அது 200 கிலோமீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். அதற்குத் தகுந்தாற்போல் அரசு திட்டமிட வேண்டும்.

0 comments:
Post a Comment