
விஜய் கர்நாடகா போகிறாராம்! போகட்டும். அவருக்கென்று ஒரு ஸ்டைல் இருக்கிறது. ஒருவேளை அதுவும் பலிக்கலாம்.
தண்ணீர் பிரச்சினை உலகளாவிய பிரச்சினை. நாடுகளுக்கிடையே பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஒரு உலகளாவிய நடைமுறை இருக்கிறது.இந்தியா பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்குத் தண்ணீர் கொடுக்க வேண்டிய நிர்பந்தம். அதே சமயம் சீனாவில் இருந்து இந்தியாவுக்குத் தண்ணீர் வரும் பிரச்சினையும் இருக்கிறது.
இந்தியாவிலும் மாநிலங்களுக்கிடையில் நதிநீர் பகிர்வில் ஏதாவது கோளாறு வந்தால், அதே கொள்கையைத்தான் இந்தியா உள்நாட்டிலும் கடைப்பிடிக்க வேண்டும். எனவே, நியாயம் என்பது தமிழ்நாட்டுக்கு மறுக்க முடியாத ஒன்று.
இங்கே எப்போதும் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் இதை அவர்களுக்கு வசதியான பார்வையிலேயே பார்ப்பார்கள்."இலங்கை ராணுவம் அட்டூழியம்; இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு" என்று தமிழக ஊடகங்கள் தலைப்பு வைப்பார்கள். ஆனால், இந்த மீனவர்கள் இந்திய எல்லையைத் தாண்டிப் போனார்கள் என்பதை இவர்கள் சொல்ல மாட்டார்கள்.
இலங்கையிலும், இந்தியாவின் பிற மாநில ஊடகங்களிலும் அவர்களுக்குத் தகுந்தாற்போல் செய்தி வெளியிடுவார்கள். தமிழக ஊடகங்களுக்கு இது செய்தியல்ல; வியாபாரம். "தமிழனுக்கு அநீதி இழைக்கப்பட்டது" என்று கூவினால் அது கவனத்தை ஈர்க்கும்.
அரசியலும் அப்படித்தான். இங்கே எதிர்க்கட்சிகள் விஜய் வெற்றியை ஜீரணிக்க முடியாமல், அவர் என்ன செய்தாலும் குறை சொல்ல வேண்டும் என்ற மனநிலையில், வயித்தெரிச்சலில் இருக்கிறார்கள். அது அவர்கள் தலைவலி.
இங்கே நியாயம் யார் பக்கம்?
இரண்டு பக்கமும் இருக்கிறது. தமிழ்நாடு கடற்கரை உள்ள மாநிலம். தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. மழை வந்தால் அதிக பலன் கடற்கரை மாநிலங்களுக்குத்தான் கிடைக்கும். எனவே, அப்படி வரும் மழைநீரை முறையாகச் சேமித்தாலே பற்றாக்குறை கணிசமாகக் குறையும். ஆனால், நமக்கு இயற்கையாகக் கிடைக்கும் நீரை முறையாகச் சேமிக்காமல், மற்ற மாநிலங்களைக் குறை சொல்வதில் அர்த்தமில்லை. நாம் முறையாக இருந்து அவர்கள் கொடுக்கவில்லை என்றால் அது நம் நிலையை மேலும் வலுப்படுத்தும்.
இனி கர்நாடகாவின் நிலை.
நதிநீர் என்பது விகிதாசாரத்தில் மாநிலங்களுக்கிடையே பகிர்வது. மழை குறைவாக இருந்தால், அதனால் நீரின் அளவு குறைந்தது என்று சொன்னால் அது பிரச்சினையில்லை. "எனக்கு அதிகமாகத் தேவைப்படுகிறது, அதனால் கொடுக்க மாட்டேன்" என்றால் அது சுயநலம், அடாவடித்தனம். அதை ஏற்க முடியாது.
பெங்களூரில் மக்கள் தொகை பெருகுகிறது, கர்நாடகாவில் தொழில் வளர்கிறது, அதனால் நீரின் தேவை அதிகமாக இருக்கிறது என்பதெல்லாம் கர்நாடகாவின் பிரச்சினை. அதை அடுத்தவர்கள் தலையில் கட்டக் கூடாது.
இந்தத் தியரியின்படி பார்த்தால், உ.பி., பீஹார் போன்ற மாநிலங்களில் மக்கள் தொகை பெருகிவிட்டது; எனவே, "எங்களுக்கு அதிக எம்.பி.க்கள் வேண்டும்" என்று கேட்டால் அதை கர்நாடகா ஏற்குமா? மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறையைக் கர்நாடகா எதிர்க்கிறது. அங்கே ஒரு கொள்கை இங்கே ஒரு கொள்கையா?
இது காவிரி நீர் குறித்த செய்தி.மேகதாது அணையும் அதே பாதையில் வருகிறது. அங்கே அணை கட்டினால் அங்குள்ள மக்களுக்கு வளர்ச்சி வரும் என்று நினைக்கிறார்கள். பெங்களூருக்குத் தண்ணீர் கிடைக்கும் என்பதும் அவர்கள் கணக்கு. அது நல்ல விஷயம். ஆனால், அதன் விளைவுகள் மற்ற மாநிலங்களுக்குப் பாதகமாக அமைந்தால்?
"ஒப்பந்தப்படி கொடுப்போம்" என்பது வெறும் வார்த்தை. இன்றைய உலகில் நம்பிக்கைக்கு மதிப்பில்லை. சொத்துக்கு ஆசைப்பட்டுப் பெற்றோரையும் கணவரையும் கொல்லும் உலகில் நாம் இருக்கிறோம். "நல்லதே நடக்கும்" என்று நம்புபவன் இன்று முட்டாளாகிவிட்டான். Preventive action is the best remedy in today's world. அமெரிக்கா ஈராக், ஈரான் விஷயத்தில் இதைத்தான் செய்கிறது. அதனால்தான் அவர்கள் சூப்பர் பவராக இருக்கிறார்கள்.
என்ன செய்யலாம்?
ஒரே வழி, நாடு முழுவதிலும் இருக்கும் அணைகளை மத்திய அரசே தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வதுதான். மாநில அரசை விட மத்திய அரசை ஓரளவுக்கு நம்பலாம். அதன்பின் எங்கே வேண்டுமானாலும் அணைகள் கட்டட்டும். மற்ற மாநிலங்களுக்குக் கொடுக்க வேண்டிய நியாயமான பங்கைக் கொடுத்துவிட்டு அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்.
சரி, தற்போது விஜய் கர்நாடகா போவதால் பிரச்சினை தீர்ந்துவிடுமா?
திராவிடக் கட்சிகள் மாநிலப் பார்வை கொண்டவை. அவர்களின் வாக்கு வங்கி மாநிலத்திற்குள்ளேயே என்பதால், மாநிலங்களுக்கிடையே சண்டை வருவது அவர்களுக்குப் பிரச்சினையில்லை. உண்மையில் இப்படி வெறுப்பை மாநிலங்களிடையே வளர்ப்பதில்தான் அவர்களின் வாக்கு வங்கி இருக்கிறது.
தேசியக் கட்சிகள் இதை கொஞ்சம் ஜாக்கிரதையாக அணுகுகின்றன. இதில் விஜய்யும் அடக்கம். அநேகமாக வரும் பாராளுமன்றத் தேர்தலில் தென் மாநிலங்களில் த.வெ.க. (பெயர் மாற்றத்தோடு) கணிசமான தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்புத் தெரிகிறது.
இங்கே 70-80 தொகுதிகளை விஜய் கைப்பற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனவே, அவர் நிதானமாக அணுகுகிறார். அது நல்ல விஷயமும் கூட.
விஜய் வித்தியாசமானவர். அவர் ஆரம்பக்கட்ட சினிமா சுமாராக இருந்தது; ஆனாலும் ஜெயித்தார். அரசியலும் அப்படித்தான் தெரிந்தது; ஆனாலும் ஜெயித்தார். அதாவது எப்படியோ ஜெயிக்கிறார். அதுதான் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்.
மேகதாது விஷயத்திலும் இது நடக்கலாம். அங்கே கர்நாடக முதல்வருடன் விஜய் விருந்து சாப்பிட்டுவிட்டு, (குடிக்க) "தண்ணி கொஞ்சம் கொடுங்க" என்று கேட்க, கர்நாடக முதல்வர், "விஜய் தண்ணீர் கேட்கிறார், அணையைத் திறந்து விடுங்கப்பா" என்றும் சொல்லலாம்.
இது காமெடிதான். நமக்கு காரியம் நடந்தால் போதும். அதேபோல் மேகதாது விஷயத்தில் என்ன முடிவு எட்டப்படுகிறது என்பதையும் பின்னர் பார்ப்போம்.
ஆட்சியை இழந்த திமுக, அடைய முடியாத அதிமுக, ஜெயிக்க முடியாத மற்ற சிறிய தலைவர்கள், டெபாசிட் கூட வாங்க முடியாத சீமான், அறிவாளி என நினைத்துக் கொண்டு தங்கள் முகத்திலேயே கரியைப் பூசிக்கொண்ட உப்புமா பத்திரிகையாளர்கள் என ஒரு பெரிய பட்டாளம், விஜய் என்ன செய்தாலும் அது தவறு என அரசியல் செய்கிறார்கள். ஆனால் "நான் பாட்டுக்கு என் ரூட்ல போறேன்" என எதையும் பொருட்படுத்தாமல் விஜய் அவர் பாதையில் போகிறார்.
இதுவரை இந்த முடிவு அவருக்கு வெற்றியைக் கொடுத்திருக்கிறது. இனி என்னவாகும் என்பது போகப் போகத் தெரியும். இயற்கையின் நியதிப்படி இவரும் அவ்வப்போது சில சறுக்கல்களைச் சந்தித்தாலும், இவர் இன்னும் கொஞ்சம் உயரத்திற்குப் போவார் என்றுதான் தெரிகிறது.
0 comments:
Post a Comment