!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Wednesday, August 5, 2026

உதயநிதியின் ‘அந்த’ பேச்சு

இது ஒரு சிக்கல். ஓட்டப்பந்தயத்தில் 5 கிலோமீட்டர் ஓட வேண்டும் என்றால், சரியாக அந்த இடத்தை அடைந்தவுடன் உடனே நிற்க முடியுமா? முடியாது. ஓடிய வேகத்திற்கு இன்னும் 10 மீட்டர் தூரம் சென்றுதான் நிற்க முடியும். அதுபோன்றதுதான் மேடைப் பேச்சும். பேச்சின் வேகத்தில் நம்மை அறியாமல் சற்று எல்லை மீறிப்போய் விடுவோம். தவறை உணர்ந்த பிறகு வருத்தம் தெரிவிக்க வேண்டும்; அடுத்த முறை அந்தக் குறையைத் தவிர்க்க வேண்டும். அந்த நாகரிகம் உதயநிதியிடம் இல்லை.

இன்னொரு பக்கம் சினிமாவுக்குக் குத்துப்பாட்டு தேவைப்படுவதைப் போல், மேடைப் பேச்சிலும் சில சுவாரசியங்கள் தேவைப்படுகின்றன. இது காலங்காலமாக இருந்து வருகிறது. வால்மீகி இராமாயணம் போர் அடிக்கிறது என்று யாரோ சொன்ன பிறகு, கம்பர் அவர் எழுதிய இராமாயணத்தில் கொஞ்சம் காமத்தைக் கலந்திருக்கக்கூடும்.

மேடைப் பேச்சுக்கள் சுவாரசியமாக இருக்க இதுபோன்ற பேச்சுக்கள் தேவை. ஆரம்ப காலத்தில் தலைவர்களே அந்த வேலையைச் செய்தார்கள். பின்னர் கடுமையான விமர்சனங்கள் வரத் தொடங்கிய பிறகு, அதைக்கடைநிலை பேச்சாளர்களிடம் ஒப்படைத்துவிட்டார்கள். ஆனால், திமுக தலைவர்களுக்கு இது பொருந்தாது; அவர்கள் வடிவமைப்பு அப்படி. ஒவ்வொரு முறையும் மக்கள் அவர்களை வீட்டிற்கு அனுப்பியபோதும், "நாங்கள் திருந்தமாட்டோம்" என்ற வகையில் செயல்படுபவர்கள் அவர்கள்.

விஜய்யும் "வாயில் வருகிறது" என்று சொல்லி ஒரு எல்லையோடு நின்றுவிட்டார். மேலும் பல இடங்களில் அவர் கொஞ்சம் எல்லை மீறிப் பேசியிருக்கிறார் என்றால், இவர்கள் கொடுத்த குடைச்சலின் எதிரொலியே அது.

அதுமட்டுமன்றி, அவருக்கு அரசியல், அதிகாரம், மேடைப் பேச்சு என எல்லாமே புதிது என்பதால் கொஞ்சம் தடுமாறுகிறார். மேடைப் பேச்சு தனக்கு வராது என்பதை உணர்ந்ததாலும், இன்றைய ஊடகங்கள் தரமற்று இருக்கின்றன என்பதைப் புரிந்துகொண்டதாலும் கூடுமானவரை அவர்களைத் தவிர்க்கிறார்.

ஆனால், உதயநிதிக்கு ஒரு அரசியல் வரலாறு இருக்கிறது. அது அவருடைய தாத்தா காலத்திலிருந்தே அசிங்கமாகவே இருக்கிறது. அந்தப் பரம்பரையை அவர் தொடர்கிறார் போலிருக்கிறது. அந்தத் தாத்தாவாலேயே அரசியலில் ஜெயிக்க முடியவில்லை. அவர்களாவது ஒரு முறை ஜெயிப்பார்கள், பின்னர் தோற்பார்கள்; உதயநிதிக்கு அந்த அதிர்ஷ்டமும் கிடைக்காது.

விஜய் நடிகராக இருந்தபோதே உதயநிதி அவரைச் சீண்டிவிட்டார். அதற்கான பதிலை விஜய் 'கொத்து பரோட்டா'வாகக் கொடுத்துவிட்டார். கொளத்தூர் கூட எதிர்பாராமல் நடந்தது. இப்போது அவரிடம் அதிகாரம் இருக்கிறது; கூடவே குருவும் உச்சத்தில் இருக்கிறார். இனி திமுகவினருக்குப் பல இடங்களில் கொத்து பரோட்டா கிடைக்கும்.

"அப்பாவைக் காணோம்" என்ற வார்த்தையோடு விஜய்யின் கோபம் அடங்கியிருக்கலாம். ஆனால் உதயநிதி மீண்டும் உசுப்பிவிட்டார். உதயநிதி மீது நிறைய ஊழல் புகார்கள் இருக்கும். அதில் ஏதோ ஒன்று விரைவில் அவர் காலைச் சுற்றும். இப்போது 'விசாரணை' என்ற புள்ளியில் அது இருக்கிறது. விஜய் இனி நிதானமாக கோலம் போடுவார். எப்படியும் இன்னும் சில ஆண்டுகளில் சில மாதச் சிறைவாசம் உதயநிதிக்குக் காத்திருக்கிறது.

வழக்கம்போல் உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் தலையிடும். வாய்தா, பிணை (Jail/Bail), தண்டனை நிறுத்திவைப்பு என்ற பெயரில் நீதிபதிகள் பெரிய புள்ளிகளை மட்டும் காப்பாற்றுவார்கள். அவர்களின் தலையாய வேலையே அதுதான். ஆனாலும், ஆளும் கட்சியையும் பகைத்துக்கொள்ள முடியாது என்பதால் சில மாதங்கள் கழித்துதான் தலையிடுவார்கள். அந்த வகையில் உதயநிதி சில மாதங்கள் 'விருந்தினராக' இருக்கும் வாய்ப்புதான் அதிகம்.

ஆனால், கதை இங்கே வேறு ஒரு பாதையில் திரும்பும்.

இப்போது விஜய்க்கு நீதிபதிகள் மீது கோபம் வரும்; நீதிபதிகள் டெல்லியைப் பார்த்துதான் பயப்படுகிறார்கள் என்ற உண்மை புரியும். எனவே, "பாராளுமன்றத்திலும் நமக்கு வலுவான பலம் வேண்டும்" என்று நினைப்பார். ஏற்கனவே முதலமைச்சர் பதவி கிடைத்துவிட்டது, அடுத்து டெல்லிதான். அது ரொம்ப உயரம் என்பதால் அவருக்குச் சாத்தியமில்லை. கணிசமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்குத் தென் மாநிலங்களிலிருந்து கிடைத்தால் அது டெல்லியையும் பயமுறுத்தும்.

விஜய்க்கு ரசிகர் பட்டாளம் தென் மாநிலங்களில் ஓரளவு இருக்கிறது. போதாக்குறைக்குப் புதுமுகம் என்ற வசதியும் உள்ளது. அங்கேயும் தேசியக் கட்சிகளில் அதிருப்தியில் இருக்கும் தலைவர்கள், வாய்ப்பு (சீட்) கிடைக்காதவர்கள், பாஜக மற்றும் காங்கிரசை வெறுக்கும் புதிய தலைமுறை மக்கள் இருப்பார்கள். எனவே, தமிழ்நாட்டில் கை கொடுத்த அதே சமன்பாடு (Formula) அங்கேயும் வேலை செய்யலாம். தமிழ்நாடு அளவுக்கு இல்லை என்றாலும் ஓரளவுக்கு அது கைகொடுக்கும். அப்புறம் என்ன, 'கில்லி'தான்!

இங்கேதான் ஒரு சிக்கல் வருகிறது. அதாவது, ராகுல் காந்தி டெல்லியில் இருக்கும் எடப்பாடி போன்றவர். எடப்பாடியைப் போலவே பல தோல்விகளைச் சந்தித்த பிறகும், "நான் ஒரு தலைவன்" என்ற மிதப்பில் இருக்கிறார். தற்போதைக்கு அவரை யாரும் சீண்டுவதில்லை; விஜய்யும் அதில் போய் சேரும் எண்ணத்தில் இல்லை. வெறும் கூட்டணியோடு நிறுத்திக்கொள்வோம் என்றாலும் அதிலும் தலைவலிதான்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தென் மாநிலங்களில் காங்கிரஸ் தவெகவிற்கு எவ்வளவு தொகுதிகள் (சீட்) கொடுப்பார்கள் என்பது ஒரு கேள்விக்குறி. தமிழ்நாட்டிலும் அவர்கள் சாத்தியமில்லாத அளவுக்கு இடங்களைக் கேட்கலாம்.

தமிழ்நாட்டில் ஸ்டாலினை நம்பி பல கட்சிகள் ஏமாந்து (மோசம்) போனதைப் போல், டெல்லியில் ராகுல் காந்தியை நம்பி ஏமாற யாரும் தயாராக இல்லை. எனவே, தவெக - காங்கிரஸ் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் தொடருமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. தொகுதிப் பிரச்சினை காரணமாக தவெக இவர்களைக் கழற்றிவிடலாம்; மற்ற உதிரி மற்றும் புதிய கட்சிகளுக்குக் கௌரவமான தொகுதிகள் கிடைக்கலாம்.

பிற தென் மாநிலங்களில் தவெக தனியாகவோ அல்லது அங்குள்ள பிற கட்சிகளுடனோ சேர்ந்து ஒரு மூன்றாவது அணியாக மாறலாம்.

மொத்தத்தில் பாதைகளை நாம் தேர்ந்தெடுப்பதில்லை; இயற்கை நம்மைச் சில பாதைகளை நோக்கித் தள்ளுகிறது என்பதுதான் உண்மை. அதுதான் விஜய்யின் வாழ்க்கையில் நடக்கிறது. இனி வரக்கூடிய சில தேர்தல்கள் கணிக்க முடியாதவையாக இருக்கப்போகின்றன.

0 comments:

Post a Comment