ஜெயம் ரவியின் ‘அடங்க மறு’ என்று ஒரு திரைப்படம். அதில் அவர் காவலராக நடித்திருப்பார். வழக்கம்போல் பணக்கார அதிகார வர்க்க அப்பாக்களால் வளர்க்கப்பட்ட மூன்று தறுதலைகள் வில்லன்களாக இருப்பார்கள். பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து, அதை காணொளியாகவும் எடுத்து வைத்து, அதையும் காவலரான ஜெயம் ரவியிடம் பெருமையாகக் காட்டுவார்கள். அதைப் பார்த்துக் கொதித்தெழும் ஜெயம் ரவி அவர்களை அடித்து நொறுக்குவார்; பின்னர் லாக்கப்பில் அடைப்பார்.
இது திரைப்படம். இந்த கனவு உலகத்தில் மட்டும்தான் நேர்மையான, தைரியமான காவலர்கள் இருப்பார்கள். அவர்களால் அநியாயத்தைப் பொறுக்கவே முடியாது. தங்கள் அதிகாரியையே 'ஏய்' என சவால் விட்டு ஜெயிப்பார்கள். ஆனால் நிஜத்தில் குனியச் சொன்னால் படுக்கும் காவல்துறை அதிகாரிகள்தான் இருக்கிறார்கள். இங்கேயும் நேர்மையின் சிகரங்கள் இருக்கலாம். ஆனால் அவர்கள் வேறு வகை.
நான் எதுவும் வாங்க மாட்டேன்; மற்றவர்கள் வாங்குவதைப் பற்றி எனக்குக் கவலையில்லை என்ற கொள்கை உடையவர்கள் இவர்கள். எந்தப் பிரச்சினையிலும் சிக்காமல், காலாகாலத்தில் குழந்தை பெறுவது போல், அவ்வப்போது பதவி உயர்வு கிடைக்கவேண்டும். `நாலு ஆர்டர்லிகளை வீட்டில் வேலைக்கு வைத்திருக்கிறேன்` என்று நாலு பேரிடம் பந்தா காட்டும் அளவுக்கு ஒரு வாழ்வு இருந்தால் போதும். இந்த லட்சியத்துக்காக `ஆமாம் சாமி` போட்டு காலத்தைக் கழிப்பவர்கள். இவர்கள்தான் இன்றைய காவலர்கள், அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள். இவர்கள் படித்தவர்கள் என்பது ஒரு கொடுமை; இப்படிப்பட்ட கல்வியைத் தேடி எல்லோரும் ஓடுவது அதைவிடப் பெரிய கொடுமை.
இனி அந்தப் படத்தின் கதைக்கு வருவோம். அந்த மூன்று தறுதலைகளில் ஒருவன் அப்படி ஒரு காணொளியை ஜெயம் ரவியிடம் காட்டியபோது, அந்தக்காட்சியைக் பார்த்தவுடன் ஜெயம் ரவி ஆவேசமாகி அவர்களைப் போட்டுப் பிளப்பார். அப்போதுதான் எதிர்காலத்தில் சட்டமன்ற வரலாற்றில் இடம் பெறப் போகும் 'என் அப்பா யார் தெரியுமா?' என்ற கேள்வியை அந்தத் தறுதலை ஜெயம் ரவியைப் பார்த்துக் கேட்பான்.
ஏண்டா.. இந்த பணக்கார அப்பாக்களுக்குப் பிறந்த பிள்ளைகளே இப்படித்தானா? அப்பா யாருன்னே தெரியாமத்தான் இருப்பீர்களா? என்று ஜெயம் ரவி பதிலடி கொடுத்து பின்னி எடுப்பார். இது அந்தப் படத்தின் ஒரு காட்சி.
ஏற்கனவே சில பதிவுகளில் குறிப்பிட்டுவிட்டேன்; மறுபடியும் எழுதுகிறேன். இந்த அநாகரிகமான வார்த்தைப் போரை முதலில் தொடங்கி வைத்தது உதயநிதிதான். இவரும் பத்தாயிரம் மட்டுமே கணக்கில் வைத்திருக்கும் பணக்கார அப்பாவுக்குப் பிறந்தவர். அதிலும் அப்பா முதலமைச்சராக வேறு இருக்கிறார். எனவே ஏதோ ஒரு மோதலில் உதயநிதி 'என் அப்பா யார் தெரியுமா?' என்று விஜய்யிடம் ஆணவமாகச் சொல்லியிருக்கக்கூடும்.
இது சினிமாவா, உடனடியாகப் பதில் கொடுப்பதற்கு? விஜய்க்கு உதயநிதியின் இந்த ஆணவம் பிடிக்கவில்லை; காத்திருந்திருக்கிறார். காலம் கனிந்தது. ஆட்சியைப் பிடித்தார். "எங்கே அப்பாவைக் காணோம்?" என்று பதிலடி கொடுத்துவிட்டார்.
'நீ இதைக் கிட்டேயிருந்து கேட்டாயா?' என்று சில திமுகவின் விளக்கெண்ணெய்கள் கேட்பார்கள். திமுக ஒரு தீய சக்தி என்று சொல்லித்தான் விஜய் அரசியலில் ஜெயித்தார். அந்த அளவுக்கு திமுகவை எதிரியாக நினைத்தவர் விஜய். விஜய் முதல்வராவதைத் தடுக்க அதிமுக கூட்டணி, 'திருமாவளவன் முதல்வர்' எனப் பல தில்லாலங்கடி வேலைகளைப் பார்த்தது திமுக.
திமுக சொம்புகள் இதை மறுத்தார்கள்; இதிலென்ன தவறு என்றும் கேட்டார்கள். அதிக எண்ணிக்கை கொண்ட கட்சி "என்னால் முடியாது" என்று ஆளுநரிடம் மறுத்த பிறகு அவர்கள் இந்த முயற்சியில் இறங்கியிருந்தால் அதை யாரும் குறை சொல்லப்போவதில்லை.
இந்தச் சம்பவங்களைப் பலர் பல இடங்களில் சொல்லிவிட்டார்கள். ஒரு முறை டிரம்ப் பேட்டி ஒன்றைக் கவனித்தேன். அவருடைய ஆங்கிலம் எனக்கு அவ்வளவாக புரியாது. ஆனாலும் ஒரு பேட்டியில் தமிழ்நாட்டில் திமுகவும் அதிமுகவும் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்வதாக எனக்குத் தகவல் வந்தது; நான்தான் இது சரியில்லை என்று தடுத்து நிறுத்தினேன் என்று டிரம்ப் சொன்னதாக நினைவு. இந்த உலகத்தில் ஏதாவது ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டால் நிச்சயம் அதை டிரம்ப் தான் செய்திருப்பார். அந்த வகையில் நானும் அதை நம்புகிறேன்.
இப்படித் தேர்தலுக்கு முன்னும், தோற்ற பின்பும் விஜய்க்கு எதிரியாக இருந்த திமுக தலைவரை, விஜய் முதல்வரான பின் ஏன் வீடு தேடிச் சென்று பார்க்க வேண்டும்? 'எங்கப்பா யார் தெரியுமா' என்று ஆணவமாகக் கேட்ட உதயநிதிக்கு, இதோ உங்கப்பாவுக்குக் கொத்து பரோட்டா போட்டு வீட்டுல உட்கார வச்சிட்டேன் பார் என்று மைண்ட் வாய்ஸில் பதிலடி கொடுக்கத்தான்.
அதோடு விஜய் கோபம் அடங்கியிருக்கும். ஆனால் 'சோபா முதல்வர்', 'எங்கள் ஆதரவில்தான் ஆட்சி' என்று மீண்டும் அவர்கள் அபத்தமாகச் சீண்ட, 'எங்கப்பா... அப்பாவைக் காணோம்' என்று மறுபடியும் விஜய் உதயநிதிக்குச் சட்டமன்றத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார்.
இவையெல்லாம் அநாகரிகம்தான். இது முடிவுக்கு வர வேண்டுமென்றால் இதை ஆரம்பித்தவரே அதைக் கொண்டுவருவதுதான் வழி. அது உதயநிதிதான். ஆனால் அவருடைய பேச்சுகளைப் பார்த்தால் அவர் திருந்துவார் எனத் தோன்றவில்லை. தமிழ்நாட்டின் ராகுல் காந்தியாக இவர் இன்னும் 10-15 ஆண்டுகளுக்கு அரசியலில் இருப்பார்; அதாவது பெயரளவுக்கு இருப்பார்.
இருந்தாலும் நாம் உதயநிதிக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் அப்படி விஜய்யிடம் அந்த வார்த்தையைச் சொன்னதால்தான், அது பல விஷயங்களுக்குப் பிள்ளையார் சுழியாக மாறி, தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளை அழித்துவிட்டது. ஆக, அவர் தமிழ்நாட்டுக்கு ஏதோ ஒரு வகையில் நல்லதுதான் செய்திருக்கிறார்.
இதில் இப்போது நயினார் நாகேந்திரன் குறுக்கே வண்டி ஓட்டுகிறார். இந்த கதை எங்கே போய் முடியப்போகிறதோ? சில சம்பவங்கள் மிக சாதரணமாக தோன்றலாம், ஆனால் பட்டர்ஃபிளை தியரியைப் போல் இதுவும் ஏதாவது வில்லங்கத்தில் போய் முடியலாம்.

0 comments:
Post a Comment