!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Sunday, August 23, 2026

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் : இங்கேயும் கிரீமி லேயர் வரும்

முதலில் ஒரு கதை. அந்தக் காலத்தில் விக்கிரமாதித்தன் என்ற மன்னர் இருந்தார். அவர் நீதி பரிபாலனம் செய்வதில் சிறந்து விளங்கினார். அவர் இறந்த பிறகு, அந்தச் சிம்மாசனம் மண்ணில் புதைந்து, ஒரு மேடாக இருந்தது. அந்த மண் மேட்டில் யார் அமர்ந்தாலும், அவர்கள் நேர்மையானவர்களாக மாறிவிடுவார்களாம்.

நிஜத்தில், இந்தக் கொடுமைதான் தற்போது அரசியலில் நடக்கிறது. தமிழக சட்டமன்றத்தில் இருந்த இருக்கைகளில் கடந்த 50 ஆண்டுகளாக திறமையற்ற மற்றும் ஊழலில் திளைத்த முதல்வர்களும் அமைச்சர்களும் அமர்ந்திருக்கிறார்கள். இப்போது அந்த இருக்கைகளுக்கும் அந்த வியாதி பிடித்துவிட்டது. யார் அந்த இருக்கையில் அமர்ந்தாலும், அவர்களையும் அது முட்டாளாக்கிவிடுகிறது.

தற்போது விஜயும் அவருடைய அமைச்சர்களும் இந்தச் சிக்கலில் மாட்டிக்கொண்டார்கள். அதில் இந்தத் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டமும் ஒன்று. 

ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கம் சரி. ஆனால், அதை அமல்படுத்தும் முறையில் இது நாட்டுக்கும் தலைவலியைத் தரப்போகிறது; கூடவே ஏழைகளுக்கும்.

சமீபத்தில்தான் பிரதமர், “சில ஆண்டுகளுக்குத் தங்கம் வாங்காதீர்கள்” என மக்களிடம் கோரிக்கை வைத்தார். இது அந்நியச் செலாவணி கையிருப்பைக் குறைத்து, ரூபாயைப் பலவீனப்படுத்துகிறது என்று சொல்லியிருந்தார்.

ஆனால், இந்தத் திட்டம் அதற்கு நேர் எதிராக இருக்கிறது. தற்போது ஜோய் ஆலுக்காஸ் இந்தத் திட்டத்திற்காகக் கணிசமான அளவு தங்கத்தை இறக்குமதி செய்யப் போகிறது. இது எப்படி இருக்கிறது?

கூடுதலாக, இதில் இன்னொரு தலைவலியும் இருக்கிறது. அரசாங்க மருத்துவமனைகள் ஏழைகளுக்காக இருக்க வேண்டும். அங்கே கூட்டம் குறைவாக இருந்தால், அது அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், இந்தத் திட்டம் அரசு மருத்துவமனைக்கு வந்து குழந்தை பெற்றால் ஒரு கிராம் தங்கம் என்ற நிபந்தனையை வைக்கிறது.

இந்த ஏழைகளிலேயே சில படிகள் மேலே ஏறிய ஏழைகளும் இருப்பார்கள். அவர்கள் தனியார் மருத்துவமனைகளை நாடினால், அது அவர்களுடைய விருப்பம். ஆனால், அவர்களும் இந்த மோதிரத்துக்கு ஆசைப்பட்டு இங்கே இடத்தைப் பிடித்தால், நிஜமான ஏழைகளுக்குப் படுக்கை கிடைக்காது. எப்போது படுக்கை காலியாகும் என வாசலில் காத்துக்கொண்டிருப்பார்கள். அல்லது அவர்கள் தரையிலும் படுக்க வைக்கப்படலாம்.

சுருக்கமாகச் சொன்னால், இடஒதுக்கீட்டில் உருவான கிரீமி லேயர் தலைவலி இங்கேயும் உருவாகும்.

அரசு மருத்துவமனைகளிலும் 500 ரூபாய் கொடுப்பவனுக்குப் படுக்கை விரைவாகக் கிடைக்கலாம். பிச்சைக்காரனுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கும்; இன்னும் இரண்டு பெற்றால் மோதிரம் கிடைக்கும் என அவனும் மனைவியை மேலும் சுமைதாங்கியாக மாற்றுவான்; மக்கள் தொகையும் பெருகும்.

இந்த பதிவுக்காக ஒரு புகைப்படத்தை தேடினால், ஒரு படம் கிடைத்தது. அது சண்டிகர் நகர அரசு மருத்துவமனை. படுக்கை பற்றாக்குறையால் இரண்டு கர்ப்பிணிகள் ஒரே படுக்கையில் இருக்கிறார்களாம். இனி இது தமிழ்நாட்டிலும் நடக்கலாம்.      

அதுசரி, இவர்களுக்கு பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேண்டுமா? வேறு ஏதாவது கொடுத்தால் வாங்க மாட்டார்களா? 

இதையாவது அரசு பரிசீலிக்க வேண்டும். நகைக்குப் பதிலாக, அவர்கள் விரும்பும் வேறு ஏதாவது ஒரு பொருளை வழங்கலாம். இங்கே விஜய் கொடுத்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படும்; நாட்டுக்கும் தலைவலி வராது.

அடுத்ததாக, இனி ஏழைகள் யார் என்பதை அடையாளப்படுத்த சில தகுதிகளை நிர்ணயிக்க வேண்டும். மகளிர் உரிமைத் தொகையில் அப்படி இருக்கிறது. மாத வருமானம் குறிப்பிட்ட தொகைக்குக் கீழ் இருக்க வேண்டும் மற்றும் முதல் இரண்டு குழந்தைகளுக்குத்தான் இந்தத் தங்க மோதிரம் கிடைக்கும் என்பது போன்ற நிபந்தனைகள் தேவை.

அது என்ன மாயமோ தெரியவில்லை; அதிகாரத்துக்கு வரும் வரை நல்லவர்களாகவும் திறமைசாலிகளாகவும் இருப்பவர்கள், இங்கே வந்து அமர்ந்ததும் திறமையற்றவர்களாகவும் ஊழல்வாதிகளாகவும் மாறிவிடுகிறார்கள். இது கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என எல்லோருக்கும் பொருந்தும்.

விஜய் ஊழலில் ஈடுபடமாட்டார். ஆனால், இது போன்ற முட்டாள்தனமான திட்டங்களுக்கு ஒரு மாற்று வழியைக் கண்டுபிடித்து அந்தத் தியரியைப் பொய்யாக்கினால் நல்லது. பார்ப்போம்.

முக்கியமாக, சட்டமன்றத்துக்கு புதிய இடம் தேர்வு செய்யுங்கள். ஆனால், அதற்கு முன் முதல்வரும் அமைச்சர்களும் அமர்ந்திருக்கும் அந்த இருக்கைகளை விரைவில் புதிதாக மாற்றிவிடுங்கள். சில நேரங்களில் ஜோசியத்தையும் நம்ப வேண்டியிருக்கிறது.

0 comments:

Post a Comment