அரசியல் களம் எவ்வளவோ மாறிவிட்டது. கூட்டம் காட்டுவதெல்லாம் பழங்கதையாகிவிட்டது. அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி எல்லாம் நிறையவே பெரும் எண்ணிக்கையில் கூட்டங்களை வரவழைத்துக் காட்டியிருக்கின்றன.
அதேபோல் திராவிட கட்சிகளிலும் நிறையப் பேசுபவர்கள் இருக்கிறார்கள். சீமானைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்; அவர் ஒரு இரண்டாம் கோயபல்ஸ். ஆனால், இந்த பேச்சுத்திறமை மக்களிடம் எடுபட்டதா? அதிகம் பிரச்சாரம் செய்யாத, மேடைப்பேச்சே தெரியாத விஜய்தான் வெற்றி பெற்றார்.
இப்படி இன்றைய உலகமும் மக்களின் பார்வையும் மாறிவிட்ட சூழ்நிலையில், இன்னமும் அந்த உளுத்துப்போன (உளுந்தூர்பேட்டை) மாநாடு போன்றவை அரசியல் கட்சிகளுக்குத் தேவையா?
ஒருவேளை இப்படி இருக்கலாம்:
தவெக அரசில் ஆரம்பத்தில் திருமாவளவன் அவர்களுக்கு இருந்த மரியாதை இப்போது குறைந்திருக்கலாம். அவர் ஆதரவில் வந்த ஐபிஎஸ் அருண் இப்போது பலமற்று இருக்கிறார். திருமாவளவனாலும் அவரைக் காப்பாற்ற முடியாது போலிருக்கிறது. இது அவருக்கு அவமானம்.
அதுமட்டுமன்றி, தகைசால் தமிழர் விருது கிருஷ்ணசாமி அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் தவெக - பாமக உறவு பலமாகிறது. இதையும் தடுக்க வேண்டும்; "எங்களுக்கும் பலம் இருக்கிறது" என்று விஜய்க்குக் காட்ட வேண்டும் என்ற நிர்பந்தமும் விசிகவுக்கு இருக்கிறது.
இரண்டாவது, சிலர் விசிகவிலிருந்து திமுகவிற்குத் தாவுகிறார்கள். எனவே, "இங்கே நான்தான் தலை", "கூட்டம் என் பின்னால்தான் இருக்கிறது" என்று திமுகவிற்குக் காட்ட வேண்டிய நிர்பந்தம்; அதுவும் இந்த மாநாட்டிற்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
ஒருவன் தன் இலக்கில் ஜெயித்து அதை ஒரு வெற்றி விழாவாகக் கொண்டாடினால் பரவாயில்லை. ஆனால், தவறான கூட்டணியில் இருந்து தோல்வி அடைந்து, ஏதோ ஒரு அதிர்ஷ்டத்தால் அமைச்சர் பதவி கிடைக்க, இதையெல்லாம் ஒரு வெற்றியாகக் காட்ட வேண்டிய கொடுமைக்கு விசிக வந்துவிட்டது.
மூன்றாவது, வழக்கம் போல் வசூலுக்குக் கணக்கு காட்டுவது. ஆடி மாதம் வந்தால் பலர் திருவிழா நிகழ்ச்சி என வசூலில் இறங்குவார்கள். இதில் நிஜமான கோவில் வசூலும் உண்டு; இதைச் சாக்காக வைத்துப் பணம் வாங்கும் ரவுடிகளும் உண்டு. என்னதான் ரவுடிகள் கூழ் ஊற்றுகிறோம் என்று வசூலில் இறங்கினாலும், அவர்களும் பெயரளவுக்குக் கொஞ்சமாவது கோவிலுக்குச் செலவு செய்ய வேண்டும்; அதாவது கணக்கு காட்ட வேண்டும்.
அந்த வகையில் விசிக தற்போதுதான் முதல்முறையாக அதிகார வர்க்கத்தில் ஒன்றாக மாறியிருக்கிறது. "இதுவரை கொடுத்தது பத்தாது" எனப் பணக்காரர்களைக் குறிவைத்து வசூலில் இறங்கியிருப்பார்கள்; இனியும் இறங்குவார்கள். அப்படி வசூலிக்கப்பட்ட பணத்திற்குக் கணக்கு காட்ட இப்படி ஒரு மாநாட்டை நடத்தியிருக்கலாம்.
அதாவது இங்கே ஒரே கல்லில் பல மாங்காய். "நாங்கள் பலமாக இருக்கிறோம்" என்று விஜய்க்கும் திமுகவிற்கும் ஒரு தகவல்; பணக்காரத் தொழிலதிபர்களுக்கு "நாங்கள் யார் தெரியுமா?" என ஒரு தகவல். இப்படிப் பல இலக்குகளை இதுபோன்ற மாநாடுகள் மூலம் இவர்கள் சாதிப்பார்கள். ஆனால், இதுபோன்ற காமெடியை இனி யாரும் பொருட்படுத்த மாட்டார்கள் என்பது வேறு கதை.
ஆனால் நிதர்சனம் வேறு. திமுக என்றால் ஊழல் மற்றும் குடும்ப அரசியல், பாஜக என்றால் மதவாதம் என்று எப்படி ஒரு பிம்பம் அரசியல் கட்சிகள் மீது விழுந்துவிட்டதோ, அதேபோல் விசிக என்றால் அது "ரவுடிகள் கட்சி" என்ற பிம்பம் விழுந்துவிட்டது. அந்தக்கறையை இவர்கள் துடைப்பார்கள் என்று பார்த்தால், இந்த மாநாடும் அங்கே இவர்கள் செய்த ரகளையும் அதை மேலும் ஊர்ஜிதப்படுத்தியிருக்கின்றன.
இந்த பிம்பம் தொடர்ந்தால், இவர் தவெக கூட்டணியில் இருந்தாலும் எதிர்கால அரசியலில் ஜெயிக்க முடியாது.
விஜய்க்கு இந்த புதிய கூட்டணிகள் பலம்தான். ஏகப்பட்ட திராவிட கட்சிகளின் ஊழல்களை அம்பலப்படுத்துவதால், அவருக்கு வாக்கு பலம் மேலும் கூடும். அவருடைய அமைச்சர்கள் நிஜமாகவே ஊழலில் மாட்டினாலும், திமுகவை ஒப்பிடும்போது இவர்கள் பரவாயில்லை என்ற அடிப்படையில் ஓட்டை விஜய் அறுவடை செய்துவிடுவார்.
இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், ஒரு வகையில் காங்கிரசும் விசிகவும் தேர்தலுக்கு முன்பே கூட்டணி வராதது விஜய்க்கு அதிர்ஷ்டமாகப் போய்விட்டது. அவர்கள் இருவரும் முன்பே வந்திருந்தால் நிலைமை வேறுவிதமாகப் போயிருக்கும். காங்கிரசின் 5%, விசிகவின் 2% என 7% வாக்கு விஜய்க்குக் கூடுதலாகக் கிடைத்திருக்கும். அதாவது தவெகவின் 15+7=22% என வந்திருக்கும்; அது சீட்டாக மாறியிருக்காது.
அவர்கள் இல்லாததால், பாஜக வாக்குகள் 8-10%, நடுநிலை வாக்குகள் 10% என கணக்கு அவருக்குச் சாதகமாகிவிட்டது. இந்த 20% உடன் அவருடைய 15% சேர்ந்ததால் இந்த வெற்றி.மொத்தத்தில் அதிர்ஷ்டம் விஜய்க்கு நாலா பக்கமும் அடித்திருக்கிறது.
இனி சிறுத்தைகளைப் பார்ப்போம். சிறுத்தைகள் இப்படியே அட்டகாசம் செய்துகொண்டிருந்தால், அடுத்த தேர்தலில் ஸ்டாலினைப் போல் திருமாவளவன் அவர்களும் ஓய்வில் இருப்பார். இதை அவர் உணர வேண்டும். அரசியலில் 20 ஆண்டுகள் என்பது மிக நீண்ட காலம். கிட்டத்தட்ட இவர் பத்தாம் வகுப்பைப் பத்து வருடமாகப் படிப்பதற்குச் சமம்.
தமிழ்நாட்டில் அடுத்து வரும் தேர்தல் வித்தியாசமான ஒரு முடிவைத் தரலாம். தவெக கூட்டணி பலமாக உருவாகும். ஆனால், ஜெயிப்பது என்னவோ தவெக மட்டுமாகத்தான் இருக்கும். கூட்டணிக் கட்சியினர் அதே வாக்குகளை வாங்க மாட்டார்கள். அவர்கள் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்கலாம்; அதுவும் சந்தேகம்தான்.
ஏனென்றால், தமிழ்நாடு மக்கள் கிராஜுவேஷன் முடித்து போஸ்ட் கிராஜுவேஷனுக்குள் நுழைந்துவிட்டார்கள். இனி இங்கே வாக்கு வங்கியே கிடையாது. புதுமுகத்திற்கு வாய்ப்பு கொடுப்பார்கள். அடுத்து ஒரு புதுமுகம் வந்தால், அவன் நல்லவனாகத் தெரிந்தாலே அங்கே குத்திவிடுவார்கள்.
இந்த கூட்டணிக் கட்சிகள் எல்லாம் நீண்டகால வரலாற்றைக் கொண்டவை. அதுவும் நீண்டகாலமாக வளர்ச்சியே இல்லாமல் குட்டையாய்க் கிடப்பவை. எனவே விஜய்யே வந்து சொன்னாலும் இவர்களுக்கு ஓட்டு விழாது. இதுதான் இனி தமிழக அரசியல்.
மொத்தத்தில் தமிழ்நாட்டில் விசிக கதையும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றுதான் தெரிகிறது. அணையும் நெருப்பு பிரகாசமாக எரிகிறது.

0 comments:
Post a Comment