!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Sunday, March 29, 2026

A B C D கூட்டணி ஜெயிக்குமா?

அதாங்க.. திமுக கூட்டணி ஜெயிக்குமா என்பதுதான் கேள்வி. அந்த 26 ஏழுத்தை கொண்டவன் ஒரு காலத்தில் உலகத்தை ஆண்டான். இப்போது அவன் நிலை என்ன.. அதுதான் உலகம். இங்கே எந்த சாம்ராஜ்யமும் தொடர்ந்து அதிகாரத்தில் இருந்ததாக சரித்திரம் இல்லை. அதுவும் தற்போது டிஜிட்டல் உலகம். இங்கே வளர்ச்சியும் வீழ்ச்சியும் மிக வேகமாக இருக்கும்.

2026 தேர்தலில் யார் ஜெயித்தாலும் ஒரு சாம்ராஜ்யம் சிதையப் போகிறது. அது திமுகவா அல்லது அதிமுகவா என்பதுதான் புதிர். டைம் மிஷின் மட்டும் கிடைத்தால் உடனடியாக மே மாதம் போய் உலகம் எப்படி இருக்கிறது என்பதை பார்த்துவிட வேண்டும் என்று மனம் துடிக்கிறது.

இந்த சட்டசபை தேர்தல் காமெடியாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. முதல் காமெடி திமுகதான். எங்களை யாரும் மிரட்டமுடியாது என்கிறார் ஸ்டாலின். டெல்லிக்கு நாங்கள் பயப்படுவோம் என நினைத்தீர்களா? என்று வாய்ச்சவடால் விடுகிறார். ஆனால் 26 கட்சி கொண்ட கூட்டணி அமைக்கிறார். சென்னையில் ஏதாவது ஒரு கொடியுடன் நான் நடந்து போனால், எனக்கும் ஒரு சீட் கிடைத்திருக்கும் போலிருக்கிறது.

சுடுகாட்டில் ஒருவன் தனியாக நடந்து போனால் அவன் தைரியமானவன் என்பது சொல்லாமலே தெரியும். கூட்டத்தோடு நடந்து போபவன் அப்படி சொன்னால்தான் பிரச்சினை. பயத்தை மறைக்க அப்படி சொல்கிறான் என்று அர்த்தம்.

அதேசமயம் ஸ்டாலின் செய்தது சரிதான். எவ்வளவு பலசாலியாக இருந்தாலும் எதிரியை குறைத்து மதிப்பிடவும் கூடாது. ஆனானப்பட்ட அமெரிக்காவே யாராவது ஹெல்ப்புக்கு வாறீங்களா என கேட்கும் நிலையில்தான் இந்த உலகம் இருக்கிறது. அமெரிக்கா ஈரானை ஈசியாக சமாளிக்கும். அது அவர்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் கூட்டணி பலம் வெற்றியை விரைவுபடுத்தும், உறுதிப்படுத்தும்.

இதில் கூட்டணியை ஸ்டாலின் உறுதி செய்த விதம்தான் பிரச்சினை. காங்கிரஸ் களைத்துப் போய்விட்டது. பேரம் பேசுவோம் கிடைத்தால் லாபம் என்ற நிலை. தேமுதிக என்பது விஜயகாந்த் என்ற பிராண்ட். தனியே நின்றால் குறைவாகத்தான் இருக்கும். அதுவே பலமான கூட்டணி என்றால், பலம் இரட்டிப்பாகிவிடும். எனவே கணக்குகள் சரிதான். அதை சுமுகமாக முடித்திருக்க வேண்டும். இந்த அதிருப்தியால் கூட்டணி கட்சிகளில் யார் யார் காலை வாரப்போகிறார்களோ?

இந்த பக்கம் அதிமுக கூட்டணியும் அதே அளவுக்கு காமெடியாகத்தான் இருக்கிறது. கிட்டத்தட்ட எடப்பாடியும் சீமானைப் போல் மாறி வருகிறார். அதாவது அவர் தன்னை மிகப் பெரிய ராஜதந்திரியாக, திறமைசாலியாக நினைத்துக்கொண்டிருக்கிறார். கட்சி நாசமா போனால் நமக்கென்ன, நமக்கு வண்டி ஓடினால் போதும் என்ற மனநிலை.

தற்போதிருக்கும் சூழ்நிலையில் கூட்டணி ஆட்சி வரும் வாய்ப்புதான் தெரிகிறது. எனவே இங்கே கூட்டணி கட்சிகளையும் ஜெயிக்க வைக்கவேண்டிய கட்டாயமும் திராவிட கட்சிகளுக்கு இருக்கிறது, அதேசமயம் அவர்கள் வளர்ந்தால் நமக்கு ஆபத்து என்ற பயமும் இருக்கிறது. அப்படி ஒரு இடியாப்ப சிக்கலை இந்த தேர்தல் உருவாக்கியிருக்கிறது. இது எந்த மாதிரியான தேர்தல் முடிவுகளை தரும் என தெரியவில்லை.

கடந்த தேர்தலில் அதிமுக ஓட்டு 20 சதவிகிதம்தான். கவர்ச்சிகரமான, புரட்சிகரமான தலைமை அங்கு இல்லை. சில குறுநில மன்னர்கள் (செங்கோட்டையன், ஓபிஎஸ்) வாஸ்து சரியில்லை என வீடு மாறிவிட்டார்கள். மேலும் பல பண்ணையார்கள், ஜமீன்தார்கள் திமுக பக்கம் போய்விட்டார்கள். அதனால் ஏற்படும் ஓட்டு இழப்பையும் கவனித்தால் தற்போது அதிமுகவின் ஓட்டு வங்கி 15 சதவிகிதற்கும் கீழே போயிருக்கும். இதை வைத்து கொண்டு எடப்பாடி காட்டும் அலப்பறை கொஞ்சம் அதிகம்தான். கிட்டத்தட்ட இவர் சீமானின் கசினாக மாறி வருகிறார்.

இங்கே சீமானை நான் கணக்கில் சேர்க்கவில்லை. ஏனென்றால் அவர் போடும் கணக்கு அவருக்கே புரியாது.

அடுத்து வருவது தவேக விஜய். இவர் கிட்டத்தட்ட அதிமுகவிற்கு இணையாக 10-15 ஓட்டு வங்கிக்கு வந்துவிட்டார். கூட்டணிக்காக முயற்சி நடந்திருக்கிறது. அந்த பேச்சு வார்த்தை வெளிப்படையாக நடந்தால் தலைவலி என சிபிஐ அலுவலகத்துக்கு வரவழைத்து பேசி இருக்கிறார்கள். அதிமுக, தவெக இரண்டு கட்சி ஒட்டு வங்கியும் சமமாக இருக்கிறது என்று விஜய் சொல்லி இருக்கலாம். 

ஆனால் எடப்பாடிக்கு உலகம் புரியவில்லை. அவருக்கு இன்னும் ஒரு தோல்வி தேவைப்படுகிறது. விஜய்க்கு ஜெயித்தால் மகிழ்ச்சி, தோற்றால் பயிற்சி என்ற நிலை. எனவே விஜய் நோ டீலிங் என சொல்லிவிட்டார். விஜய் தோற்றாலும் அடுத்த தேர்தலுக்கு தாக்கு பிடிப்பார். எடப்பாடி தோற்றால், சம்போ சிவ சம்போதான். பார்க்கலாம்.

இங்கே அரசியல்வாதியாக விஜய் மீது எனக்கு நம்பிக்கை வரவில்லை. ஆனால் ஒரு தனி மனிதனாக அவர் மீது ஒரு சாஃப்ட் கார்னர் உண்டு. ஒருவன் மனைவியை வெறுக்கலாம், பெற்றவர்களை வெறுக்கலாம், ஆனால் பிள்ளைகளை புறக்கணிப்பது எதார்த்தத்தை மீறிய செயல். அவருக்கு எங்கேயோ காயம் பட்டிருக்கிறது. அந்த காயங்களை ஏற்படுத்தியது யார் என்று தெரியவில்லை.

அந்த காயங்களுக்கு திரிஷா ஒரு மருந்தாக இருக்கிறார். அவர் திரிஷாவோடு ஊர் சுற்றுகிறார் என்பது செய்தி. ஆனால் மனைவி சங்கீதாவை வெறுப்பேற்றுகிறார் என்பதுதான் நிஜம். திரிஷாவை மிரட்டி அனுப்பினாலும், அந்த இடத்துக்கு வேறு ஒரு பெண்ணை கொண்டுவருவார். அவருடைய நோக்கம் டூயட் பாடுவது அல்ல, சங்கீதாவுக்கு பாடம் புகட்டுவது. அந்த அளவுக்கு விஷயம் முற்றிவிட்டது.

இதுவரை அவருடைய பேச்சு ஒரு தலைவனுக்கான நம்பிக்கையை தரவில்லை. இருந்தாலும் பெனிபிட் ஆப் டவுட் என்பது புதியவர்களுக்கு கொடுத்தாக வேண்டும். விஜய் டிவியின் காமெடியை மிஞ்சும் அளவுக்கு இருக்கிறது விஜய் ரசிகர்களின் பேட்டி. ஆனால் யுத்தத்தில் தலைவன் திறமையானவனாக இருந்தால் கழுதைகளும் ஓட ஆரம்பிக்கும். எனவே இவர் எப்படிப்பட்டவர் என்பதை அடுத்த ஐந்து ஆண்டுகள் சொல்லிவிடும்.

ஆனால் வேறு ஒரு கணக்கு. தலைவர்களே சில சமயம் தப்பான கணக்கு போடுவார்கள். சுதந்திரத்துக்கு முன் அதிகாரம் பெரும்பாலும் பிராமணர் கையில் இருந்ததால், சுதந்திரத்தின் மூலம் கிடைக்கும் அதிகாரம் அவர்களுக்குத்தான் போகும் என நினைத்து சுதந்திரம் வேண்டாம் என்றார் பெரியார். தேர்தல் அரசியலையும் அவர் நம்பவில்லை.

ஆனால் அண்ணா எதார்த்தவாதியாக தேர்தலில் இறங்கினார். துணிச்சலான, அந்த காலத்தில் கற்பனை செய்ய முடியாத கூட்டணியில் இறங்கினார். முடிவு, தமிழ்நாடு அதிகார மாற்றத்தை சந்தித்தது. இன்று தமிழ்நாட்டில் பிராமணரை ஒரு அரசியல் கட்சியின் தலைவராக மட்டுமில்லை, வேட்பாளராக நிறுத்த கூட கட்சிகள் பயன்படுகின்றன என்றால் அண்ணா எடுத்த அந்த எதார்த்த முடிவுதான் காரணம். அன்று பிராமண ஏகாதிபத்தியம் இருந்தது. இன்று திராவிட ஏகாதிபத்தியம் வந்துவிட்டது. எனவே சில நேரங்களில் இதை உடைக்கவும் ஒரு மாற்றுப் பாதை தேவை.

இந்த தேர்தலில் இன்னொரு முக்கியமான விஷயமும் நடக்கப்போகிறது. தமிழ்நாட்டில் மத உணர்வை தூண்ட பிஜேபி கடுமையாக முயற்சி செய்தது. அது நடக்கவில்லை. ஆனால் ஈரான் போர் அதை செய்துவிட்டது. தமிழக முஸ்லிம்கள் ஈரானுக்கு ஆதரவான போராட்டம் என அந்த உணர்வுக்கு எண்ணெய் ஊற்றிவிட்டார்கள். சமூக வலைத்தளங்களில் வரும் கருத்துக்களை பார்த்தால், தமிழ்நாட்டில் ஹிந்து போலரைசேஷன் வலுப்பெற்றிருக்கிறது. இது நிச்சயம் திமுகவிற்கு ஒரு அடியாக மாறலாம். ஆனால் அது எந்த பக்கம் சாயும் என்பது கேள்விக்குறி? ஏனென்றால் இங்கே பிஜேபியை வெறுக்கும் இந்துவும் இருக்கிறான்.

ஒரு ஓடை. உங்களால் அதை தாண்ட முடியாது. அதற்காக அப்படியே நிற்க முடியுமா? நடுவில் ஒரு கல்லை தூக்கி போடுங்கள். அங்கே ஒரு காலை வைத்து தாண்டிவிடலாம். அது போல் விஜய் ஒரு ஸ்டாப் கேப் அரேஞ்சமென்ட். இது நிலைக்கலாம், அல்லது காணாமல் போகலாம். ஆனால் துணிச்சலாக முடிவெடுக்க வேண்டும். பயத்திலேயே வாழ்பவன் கடைசி வரை திருமாவளவன் அவர்களை போல் புலம்பிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

திராவிட கட்சிகள் ரொம்பவே பழுத்துவிட்டது. அதன் இன்னொரு அர்த்தம் அழுகிவிட்டது என்பதுதான். இது உடல் நலத்துக்கு கேடு. எனவே இங்கே ஒரு மாற்றம் தேவை என்பதை தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொள்வார்கள் என நினைக்கிறேன்

0 comments:

Post a Comment