!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Monday, May 20, 2024

கஞ்சா சங்கர்


ரொம்ப நாளாகிவிட்டது, எதையாவது கிறுக்குவோம் என நினைத்தால் மூன்று விஷயங்கள் என்னை உறுத்தியது. ஓன்று சவுக்கு சங்கர், இன்னொன்று இளையராஜாவும் அவருடைய இசை உரிமையும், மூன்றாவது இந்த பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் முறை அல்லது அதில் உள்ள கோளாறுகளை பற்றி.

இதில் சவுக்கு சங்கருக்கு ஆதரவான மனநிலையில் நான் இருந்தேன். தற்போது சந்தேகத்தோடு இருக்கிறேன். இதில் சங்கரை பற்றி வரும் செய்திகளை கவனித்தால் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. கஞ்சா அடிக்கும் சவுக்கு சங்கர் போதை பொருள் வியாபாரி சாதிக் பாட்சா மற்றும் அவரது நண்பர் அமீர் பற்றி இந்தளவு பேசுவார் என்பது நம்பும்படி இல்லை.

அவர் கஞ்சா அடிப்பாரா இல்லையா என்பது மருத்துவ பரிசோதனையில் தெரிந்துவிடுமாம். சில அறிவாளிகள் சொல்கிறார்கள். அதை காவல்துறையும் நிரூபிக்கக்கூடும். ஆனால் அதை எப்படி நிரூபிப்பார்கள் என்பது சிறைக்கு சென்றவர்களுக்கு மட்டுமே தெரியும்.

நான் சிறையில் இருந்த முதல் எட்டு மாதம் அட்மிஷன் செல்லில்தான் இருந்தேன். 15 முதல் 20 கைதிகள் இந்த செல்லில் இருப்பார்கள். இங்கே இருந்த அட்மிஷன் கைதிகளை கண்காணிக்க பழைய கைதிகளும் (நிர்வாகியாக) இருப்பார்கள். இவர்களுக்கு பீடியும் கஞ்சாவும் தண்ணீர் பட்ட பாடு.

ஒரு மாதம் இந்த செல்லில் இருந்தால், நீங்கள் பீடி குடிக்காத நபராக இருந்தாலும், அதையும் நீங்கள் சுவாசித்த ஆக வேண்டும். இதில் கஞ்சாவையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

ஒரு முறை சிலர் கஞ்சா அடிக்க, ஒரு அட்மிஷன் கைதி என்னிடம் சொன்னார், `யாரோ கஞ்சா அடிக்கிறார்கள்` என்று. எனக்கு புகை மட்டும்தான் தெரியும், அதில் கஞ்சா எது என்று பிரித்து பார்க்க தெரியாது. அனுபவமுள்ளவர் கண்டுபிடித்துவிட்டார்.

இது போன்ற செல்லில் நீங்கள் இருந்து, உங்களையும் பரிசோதித்தால் நீங்களும் கஞ்சா பிடித்திருக்கிறீர்கள் என ரிப்போர்ட் சொல்லலாம். அதாவது என்னை அப்போது யாராவது பரிசோதித்திருந்தால் நானும் கஞ்சா புகையை இழுத்திருக்கிறேன் என ரிப்போர்ட் சொல்லும். நான் கஞ்சா புகையை சுவாசித்திருக்கிறேன், இழுக்கவில்லை என்ற எதார்த்தமான உண்மை வெளியில் வராது.

இங்கே சவுக்கு சங்கரை இது போன்ற செல்களில் அடைத்துவிட்டு, அல்லது சங்கர் பீடி கேட்க இவர்கள் பீடியில் அதை கலந்து கொடுத்து ஆதாரத்தை இவர்களாகவே உருவாக்கலாம்.

கார்பன் டேட்டிங் என்பது ஒரு பொருள் எவ்வளவு பழமையானது என கண்டுபிடிக்கும் ஒரு நடைமுறை. அதேபோல் இவர்கள் எடுக்கும் டெஸ்ட், சங்கர் துல்லியமாக 4 வருடம் 7 மாதம் 18 நாள் முன்னதாக இவர் கஞ்சா பயன்படுத்த ஆரம்பித்தார் என ரிப்போர்ட் வரப்போவதில்லை. இவர்கள் இரண்டு மாதம் சங்கரை இதுபோன்ற செல்களில் அடைத்துவிட்டு ரிப்போர்ட் எடுப்பார்கள், அது பாசிட்டிவாக வரும். அது ஒரு ஆதாரமாகிவிடும், அவ்வளவுதான்.

இருந்தாலும் பெண் தொடர்பு மற்றும் சொத்து குவிப்பு செய்திகள் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. எனவே 6 மாதம் 1 வருடம் போனால்தான் ஓரளவு புரியவரும். எனவே அதன்பின் பார்ப்போம்.

ஒருவேளை அவரை பற்றிய செய்திகள் உண்மையாக இருக்கும்பட்சத்தில், போலீசார் ஒரு கையை உடைத்ததுபோல், வெளியே வந்தபிறகு மக்கள் அவருடைய இன்னொரு கையையும் உடைக்க வேண்டும். காரணம் குற்றவாளிகளுக்கு வேண்டுமானால் சிறை என்பது ஒரு தண்டனையாக இருக்கலாம், ஆனால் நம்பிக்கை துரோகிகளுக்கு பொதுவெளியில் அவமானம் என்பதுதான் சரியான தண்டனையாக இருக்கும்.

இதில் இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம், சங்கர் மீது கஞ்சா வழக்கு போட்டதை, குண்டாஸ் போட்டதை நானும் ஆதரிக்கிறேன்.

`என்னையா நீ காவல்துறையின் ஒரு தப்பான செயலை ஆதரிக்கிற? என கேள்வி எழுப்பக்கூடாது. இதை புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அதற்கும் நீஙகள் சிறைக்கு சென்றிருக்கவேண்டும் அல்லது நீதிமன்றங்களின் செயல்பாடுகளை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

தொடர்ந்து குற்றம் செய்ப்பவர்களை காவல்துறை கைது செய்து உள்ளே அனுப்பினால், அவர்களை இந்த மரியாதைக்குரிய, பெரும் மரியாதைக்குரிய நீதிபதிகள் (இரண்டு மரியாதை கவனிக்கவும்) இன்ஸ்பெக்ட்டர் கைது செய்யும்போது சட்டையில் பட்டன் போடவில்லை, ஷூவில் லேஸ் கட்டவில்லை  என ஏதாவது மொக்கை காரணம் சொல்லி கேட்பவர்க்கெல்லாம் பெயிலை வாரி வழங்கும் வள்ளல்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் காவல்துறை என்னதான் செய்யும்? இங்கே அவர்களுக்கு கஞ்சா கேசும் குண்டர் சட்டமும்தான் ஒரே வழி.  

எனவே இங்கே நிஜமான குற்றவாளிகள் நீதிபதிகள்தான், காவல்துறை அல்ல. இதையும் நீங்கள் கவனிக்கவேண்டும். 

குண்டர் சட்டம்பற்றி மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் காவல்துறையை கண்டித்து ஒரு தீர்ப்பு  சொன்னார். பலரும் அதை பாராட்டினார்கள். ஆனால் இங்கே எலி ஏன் அம்மணமாக ஓடியது என்பது, அதாவது அந்த நீதிபதிக்கு கோவம் வர காரணம்  என்ன என்பது சிறைக்கு சென்றவர்களுக்கு மட்டும்தான் தெரியும். அதே சமயம் சிறைக்கு சென்று வந்த சிலருக்கு அதுவும்  தெரியவில்லை என்பது கொடுமையின் உச்சக்கட்டம்.

0 comments:

Post a Comment