!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Tuesday, June 25, 2024

கள்ளக்குறிச்சி மரணங்கள்


இது திமுக ஆட்சியில் இரண்டாவது அவலம். நியாயமாக பார்த்தால் ஆட்சியை கலைக்க கோரலாம். ஆனால் அது சாத்தியப்படாது. இந்திய ஜனநாயகம் கொஞ்சம் வளர்ந்துவிட்டது. இங்கே கவர்னர் ஆட்சி என்பது இனி அபூர்வம்தான். அதுவும் தற்போதுதான் நாற்பதுக்கு நாற்பது என்று மக்கள் செல்வாக்கை திமுக நிரூபித்திருக்கும் சூழ்நிலையில் அப்படி ஒரு கோரிக்கை வைப்பதே அபத்தம். அதற்காக அப்படியே விட்டுவிட முடியுமா?

வழக்கமாக இங்கே அரசியல்வாதிகள் ஆவேசமாக குரல் கொடுப்பார்கள், பத்திரிகையாளர்கள் விவாதிப்பார்கள், பின்னர் மறந்துவிடுவார்கள். இதுதான் நடக்கும். இன்று பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுபிடிக்கக்கூடிய உறுதியான தலைமை இல்லை.

எனக்கு இங்கே வேறு ஒரு யோசனை வருகிறது. அதாவது தில்லியில் முதல்வர் என்று ஒருவர் இருக்கிறார், இருக்கிறார்... அவ்வளவுதான். அங்கே அவர் கட்டுப்பாட்டில் போலீஸ் இல்லை. அங்கே மத்திய அரசுசும் இருக்கிறது, அவர்கள்தான் பலம் பொருந்தியவர்கள் என்பதால் நிர்வாக கோளாறை தவிர்க்க அதுதான் சரியான முடிவு.

அதையே மாநிலத்திலும் கொண்டு வரலாம். நிரந்தரமாக அல்ல, தற்காலிகமாக. ஒரு மாநிலத்தில் 50-100 கும் மேற்பட்ட மரணங்கள் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு காரணமாக (மணிப்பூரை போல்) இருந்தால் காவல்துறையையும், அல்லது இது போன்ற கள்ளச்சாராய மரணமாகவோ இருந்தால் கலால் துறை மட்டும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும் வரும் என்று ஒரு சட்டம் வந்தால் என்ன?

ஒருவேளை மத்தியில் ஆளும் கட்சியின் அரசே மாநிலத்தில் ஆட்சியில் இருந்தால் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் போய்விடும் என முயற்சிக்கலாம்.

மத்திய அரசு துறையே ஏதாவது அயோக்கியத்தனம் பண்ணும்போது (தற்போது நீட் தேர்வு ) சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் சில விஷயங்கள் நடப்பதில்லையா. ஆக எல்லோருக்கும் ஏதாவது ஒரு இடத்தில் ஆப்பு வைக்க ஒரு நடைமுறை வேண்டும்.

மேலே போகும் முன் இங்கே ஒரு எதார்த்தமான விஷயத்தை பார்த்துவிடுவது நல்லது. ஒரு வீட்டில் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் என்ன நடக்கும். மாமியார் சமைப்பார். ஆனால் மருமகளையும் சேர்த்து கவனிப்பாரா. அதுவும் எவ்வளவு நாளைக்கு? அது புலம்பலில்தான் போய்முடியும்.

இதுபோன்ற சூழ்நிலையில் என்ன நடக்கும். அந்த பெண்ணின் அம்மா வருவார். 'நான் என் பெண்ணை வீட்டிற்கு அழைத்து செல்கிறேன். உடல்நிலை சரியானதும் அனுப்புகிறேன்' என்பார். அதுதானே சரியான தீர்வாக இருக்கும்.

கிட்டத்தட்ட அதே பார்முலாதான் இங்கே மாநில அரசுகளுக்கும். 'இங்கே சட்டம் ஒழுங்கு சரியில்லை, இது இரண்டாவது முறை, இது கடைசி எச்சரிக்கை, மூன்றாவது முறை ஏதாவது நிகழ்ந்தால், ஆட்சியை கலைக்க மாட்டோம்,  காவல்துறையை அல்லது கலால்துறையை மட்டும் 6 மாதம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் எடுத்துக்'கொல்லும்'. குற்றவாளிகள் கண்டறியப்பட்டு, தண்டிக்கப்பட்டு(?) நிலைமை சீரானதும் உங்களிடம் ஒப்படைகிறோம்' என ஸ்டாலினிடம் சொல்லிப்பாருங்கள்.

அவர், 'என்னது டாஸ்மார்க் வருமானம் நமக்கில்லையா?' என அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விழுந்தால் எழுந்திருக்க நான்கு நாட்கள் ஆகும். அண்ணியாருக்கு மினரல் வாட்டர் வியாபாரம் என்னவாகும் என்ற கவலைகளும் வரலாம்.  

இதெல்லாம் ஒரு கற்பனைதான். நடக்கும் சாத்தியம் மிகக்குறைவு. இருந்தாலும் இப்படி ஒரு சூழ்நிலை வந்தால் எப்படி இருக்கும் என நினைத்தாலே சுகமாக இருக்கிறது. எனவே சவுக்கு சங்கரை போல் யாராவது ஒருவர் இந்த தகவலை 'முக்கியமான சோர்ஸ் சொன்னாங்க' என்று சும்மா பேருக்கு சொல்லிவையுங்கள்.  

செந்தில் பாலாஜி கைதுக்கு ஸ்டாலின் வருத்தப்பட்டிருப்பார். ஆனால் இப்படி ஒரு செய்தியை கேட்டால், அதன்பின் டாஸ்மார்க் 'வருமானம்' கையைவிட்டு போய்விடும் என்ற பயத்தில் கள்ளச்சாராய மரணம் என்பது பழங்கதையாகிவிடும்.

2 comments:

KILLERGEE Devakottai said...

நல்லதொரு தீர்வு நண்பரே...

Anonymous said...

வாங்க கில்லர்ஜி

தற்போது அரசியல்வியாதிகள் ஜெயிலுக்கு பயப்படுவதில்லை, எனவே இப்படி ஏதாவது அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவேண்டும்.

Post a Comment