!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Thursday, June 22, 2023

இவர்கள் திருந்தமாட்டார்கள்


எழுதும் ஆர்வம் போய்விட்டது. ஆனாலும் இந்த நீதித்துறை கனவான்கள் செய்யும் அட்டூழியங்களை அவ்வப்போது படிக்க நேரும்போது அறச்சீற்றம் பொங்கிவிடுகிறது. இது அந்த வகை பதிவு.

சமீபத்தில் தமிழ்நாட்டு ஐபிஸ் ஆபிஸர் ராஜேஷ் தாஸ் சக பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் 3 ஆண்டு தண்டனை பெற்றிருக்கிறார். இதுதான் செய்தி. இதில் சந்தோசம் மற்றும் ஆச்சர்யம் என்னவென்றால், அவர் மிக விரைவாக 3 ஆண்டுகளிலேயே வழக்கு விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டிருக்கிறார்.

இதில் இன்னொரு காமெடி என்னவென்றால், இந்த ராஜேஷ் தாஸுக்கு உதவியாக செயல்பட்ட இன்னொரு எஸ்பி கண்ணன், அந்த பெண் போலீஸ் அதிகாரி புகார் கொடுப்பதை தடுத்து சமாதானத்துக்கு முயற்சித்திருக்கிறார். அந்த செயலை செய்த எஸ்பி கண்ணனுக்கு வெறும் 500 ரூபாய் அபாரதமாம். இந்த கொடுமையை என்னவென்று சொல்வது?

இங்கே ஒரு குற்றவாளி விரைவாக தண்டிக்கப்பட்டிருக்கிறார் என்று சந்தோஷப்படவும் முடியாது. காரணம் புகார் கொடுத்தவரும் போலீஸ் என்பதால் இந்த நிலை. இந்த ராஜேஷ் தாஸ் கூட அதிமுக ஜால்ராவாக இருந்திருக்கலாம். எனவே அவருக்கு கடுமையான 3 ஆண்டுகள் தண்டனை . எஸ்பி கண்ணன் திமுகவிற்கு வேண்டியவரோ என்னமோ, அவருக்கு வெறும் 500 ரூபாய் அபராதம்.

தொடர்ந்து நீதிமன்ற செயல்பாடுகளை கவனிக்கும்போது நீதிபதிகளின் மீது மரியாதையை குறைந்தாலும்,  இவர்கள் இந்த அளவுக்கு மொக்கையாய் இருக்கிறார்கள் என்பது அவர்கள் அவ்வப்போது கொடுக்கும் தீர்ப்புகளை பார்த்தால் புரியும். மருத்துவம் படிப்பவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்பதுபோல், நீதிபதியாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பொதுஅறிவு கேள்விகள் வைத்து அதிலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டும் நீதிபதி பதவி என்று சட்டம் வந்தால் நன்றாக இருக்கும்.

பழைய படம் ஒன்றில் ஒரு காமெடி வரும். ஒருவர் எனக்கு இட்லி மட்டும் போதும் என சொல்லி ஒருவரை ஓட்டலுக்கு அனுப்ப, அவர் சாம்பார் சட்னி என எதுவும் இல்லாமல் வெறும் இட்லி மட்டும் வாங்கி வருவார். அப்பேர்ப்பட்ட அறிவாளிகளாக நம்நாட்டு நீதிபதிகள் இருக்கிறார்கள். நீதிபதிகளே சட்டம் என்ன சொல்கிறதோ அதை அப்படியே கேள்வி கேட்காமல் அமல்படுத்தும் அறிவுஜீவிகளாக இருந்தால் மற்ற துறைகள் எப்படி இருக்கும்? 10 வருடங்களுக்கு முன் நான் இதுபோன்ற முரண்பாடுகளை விவரித்து `சில சட்டங்களும், சில அபத்தங்களும்` என ஒரு பதிவு எழுதினேன். நீதித்துறை இன்னும் திருந்தவில்லை போலிருக்கிறது.

மற்ற துறைகளில் நடக்கும் அபத்தங்கள் சகட்டுமேனிக்கு விமர்ச்சிக்கும் இந்த புத்திசாலிகள், கொஞ்சம் கீழே குனிந்து பார்த்தால் அவர்களுடைய காலுக்கு கீழேயும் நிறைய குப்பைகள் இருப்பதை கவனிக்கலாம்.

ஒரு தீர்ப்பை வழங்கும்போது `இங்கே சட்டம் அபத்தமாக இருக்கிறது, இதை சரி செய்யுங்கள்` என்று சட்ட அமைச்சகத்துக்கு ஒரு குறிப்பு அனுப்பலாம். அதையெல்லாம் இவர்கள் செய்யமாட்டார்கள். இங்கே சீர்திருத்தம் வந்துவிட்டால் அவர்களுடைய வருமானம் போய்விடும் என்ற பயம்.

இதற்கு இரண்டே வழிகள்தான் இருக்கிறது. `என்னது, 500 ரூபாய்தான் அபராதமா?` என்று இந்த தீர்ப்பை வழங்கிய அந்த பெண் நீதிபதியின் கையை எவனாவது பிடித்து இழுத்தால் ஒருவேளை மாற்றம் வரலாம். அல்லது நீதிபதிகளின் சம்பளம் அபராதம் என அவர்கள் வசூலித்து கொடுக்கும் தொகையின் அடிப்படையில் வழங்கப்படும் என அவர்கள் கழுத்தில் கத்தி வைக்கலாம். இவை இரண்டும் நடக்கப்போவதில்லை. இருந்தாலும் அவர்கள் வயிற்றில் புளியை கரைக்க இதையும் சொல்லி வைப்போம்.

அடுத்த முரண்பாடு, தண்டனை வழங்கிய உடனேயே அப்பீல் செய்வதற்கு வசதியாக ஒரு மாதம் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறதாம். இந்த வசதி சாதாரண மனிதர்களுக்கு கிடைக்காது. கிடைத்தாலும் அவர்களால் எதுவும் செய்யமுடியாது. 

இனி என்ன நடக்கும். ஐகோர்ட் சுப்ரீம் கோர்ட் எல்லாம் வக்கீல்களின் கோட்டை. அதாவது கீழ் கோர்ட்களில் நிஜமாகவே நீதிபதிகள் இருப்பார்கள். ஆனால் இந்த மேல் கோர்ட்களில் பெரும்பாலும் நீதிபதிகள்  வக்கீல்களாக இருந்து வந்தவர்கள். அதாவது அவர்கள் அனைவரும் ஒரே ஜாதி. எனவே பரஸ்பர உதவி இங்கே வக்கீல்களுக்கு பரிபூரணமாக இருக்கும். அதையும் மீறி அவர்களால் வக்கீல்களை பகைத்துக்கொள்ள முடியாது. வாய்தா கொடுக்க முடியாது என்று ஒரு நீதிபதி சொன்னால் `நீ வக்கீலா இருந்தபோது எத்தினி வழக்கை இழுத்தனு எனக்கு தெரியாதா?` என்று எகிறினால் நீதிபதிகளின் மானம் போய்விடும். அதுமட்டுமின்றி பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல் நீதிபதிகளின் வரலாறு பல வக்கீல்களுக்கு தெரியும் என்பதால் எதையாவது வெளியே போட்டு கொடுத்து அவர்களின் எதிர்காலத்தை கெடுத்தால் இந்த நீதிபதிகள் மேலே உயர்வதில் சிக்கல் வந்துவிடும். 

எனவே மேல்கோர்ட்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தீர்ப்புகள் என்பது நீதிபதி விரும்பும்போது வருவதைவிட வக்கீல்கள் விரும்பும்போதுதான் வரும். ஆதாரங்களை பார்த்து, `அதற்கான வாய்ப்பில்லை ராஜா` என நீதிபதி முழித்தால், `அப்ப வாய்தாவாது கொடு` என வாங்கிவிடுவார்கள். ஆக மொத்தத்தில் இங்கே தண்டிக்கப்பட்டவர்கள் ஜெயிலுக்கு போகப்போவதில்லை. 

வெளித்தோற்றத்துக்கு வக்கீல்கள் நீதிபதிகள் என இருதரப்பாக இவர்கள் தெரிந்தாலும், உண்மையில் இவர்கள் அதிமுக திமுக போல் இரட்டை குழந்தைகள். `உனக்கு வாய்ப்பு வரும்போது நீ சம்பாரி, எனக்கு வரும்போது நான்,` என்ற கொள்கை சித்தாந்தத்தில் வாழ்பவர்கள். அவ்வப்போது மேடையில் எதிர் முகாமை பார்த்து கர்ஜிப்பார்கள், முழங்குவார்கள், வழக்கெல்லாம் போடுவார்கள், ஆனால் அதன் நிலைமை என்னவாகும் என்பது உங்களுக்கு தெரியும். 

சரி, இனி நாம் பிராக்டிகலாக என்ன செய்யலாம் என பார்ப்போம்.

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் என்பது கட்டாயம் என்பதுபோல், இவர்களுக்கும் ஏதாவது செய்யவேண்டும். குறைந்தபட்சம்  கீழ்கோர்ட்டில் தண்டிக்கப்படுபவர்கள் அப்பீலுக்கு போகலாம், ஆனால் 10 சதவிகித தண்டனையை அனுபவித்தபிறகுதான் பெயில் வழங்கப்படும் என ஓரளவுக்காவது இவர்களுக்கு ஜெயிலை காட்டவேண்டும். ஐகோர்ட்டிலும்  தீர்ப்பு வந்துவிட்டால் வந்தால் உள்ளே இருந்துகொண்டுதான் அப்பீல் என்ற வரைமுறையாவது தேவை. இரண்டு நீதிமன்றங்கள் தீர்ப்பை ஊர்ஜிதப்படுத்திய பிறகு அப்புறம் என்ன பெயில்?  

இதை தவிர்த்து இன்னொரு விஷயத்தையும் கவனிக்கிறேன். நான் 2008 லேயே கன்சுயூமர் கோர்ட் போல் அரசியல்வாதிகளுக்காக தனி நீதிமன்றம் இருந்து அங்கே வழக்குகள் விரைவாக நடந்தால் நன்றாக இருக்கும் என எழுதியிருந்தேன். அது வந்துவிட்டது போலிருக்கிறது. சந்தோஷம்தான். 

ஆனால் நம் அரசியல்வாதிகள் எல்லாவற்றிற்கும் ஒரு வழி கண்டுபிடிப்பார்கள். அந்த வகையில் இந்த திமுக அரசு, ஏன் பிஜேபி அரசும் கூட  வழக்குகளை போடுகிறார்கள் ஆனால் சார்ஜ்ஷீட் போடுவதில்லை போலிருக்கிறது. அதை போட்டால் விசாரணை வேகமெடுக்கும் என்பதால்  சாமர்த்தியமாக இவர்கள் அதை செய்வதில்லை. 

எனவே எப் ஐ ர் போடப்பட்டு ஒரு வருடத்திற்குள் சார்ஜ்ஷீட் போடவில்லை என்றால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட பெயில் ரத்து செய்யப்படும் என இருக்கலாம், அல்லது 5 ஆண்டுகளுக்குள் வழக்கு முடிக்கப்படவில்லை என்றால் பெயில் ரத்து, விசாரணை அதிகாரிக்கும் நீதிபதிக்கும்  இத முடிக்காமல் உங்களுக்கு பிரமோஷனே கிடையாது என்றும் சொல்லலாம் இது இரண்டு பேருக்கும் ஒரு நிர்பந்தத்தை ஏற்படுத்தும். குறைந்தபட்சம் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படாமல் கண்டிக்கப்படும் அதிகாரிகளுக்கு அடுத்த 3-5 ஆண்டுகளுக்கு பிரமோஷன் கிடையாது என அவர்களை கிள்ளியாவது விடலாம்.

இவையெல்லாம் சாத்யமில்லைதான். ஆனாலும் இதை யாராவது ஒரு நீதிபதி படித்து அவர் அன்று முழுவதும் தூங்காமல் இருந்தால் அதுவே ஒரு மாற்றத்துக்கு வழிவகுக்கும். 

2 comments:

KILLERGEE Devakottai said...

தங்களது கோபம் புரிகிறது நண்பரே...

மக்கள் மனதில் நல்ல சிந்தனைகள் உதிக்காதவரையில் நல்ல மனிதர்களும் செத்து, செத்து வாழவேண்டிய நிலைபாடு.
-கில்லர்ஜி

Anonymous said...

இங்கே குறிப்பிட்ட தீர்ப்பு ஒரு உதாரணம். எவ்வளவோ இருக்கிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கில்லர்ஜி

சிவானந்தம்

Post a Comment