சமீபத்தில் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டதன் மூலம், ஒரு முரண்பாடான சட்டம் கவனத்துக்கு வந்திருக்கிறது. இப்படிப்பட்ட முரண்பாடான சட்டம் நம் கவனத்துக்கு வருவது இது முதல்முறை அல்ல. இது தொடரும்.
சில சட்ட முரண்பாடுகள்
குஜராத்தில் (2002) பிஜேபி அரசு சட்டசபையை முன்கூட்டியே கலைத்தது. 6 மாதத்துக்கு ஒரு முறை சட்டமன்றம் கூட்டவேண்டும் என்ற விதி இருக்கிறது, எனவே விரைவில் தேர்தல் தேவை என்று வலியுறுத்தியது. மதஉணர்வு தலைதூக்கிய சூழ்நிலையில் அதை உடனடியாக அறுவடை செய்ய அவர்களுக்கு ஆசை.
இந்த பக்கம், சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு தேர்தலை எப்போது நடத்தவேண்டும் என முடிவு செய்யும் அதிகாரம் தேர்தல் கமிஷனுக்குதான் என்று இன்னொரு சட்டம். கலவரத்தால் மக்கள் இடம் மாறி இருக்கும் சூழ்நிலையில் உடனடி தேர்தல் சாத்தியமில்லை என்பது தேர்தல் கமிஷனின் வாதம்.
சட்டமன்ற நடைமுறைகளை மனதில் வைத்து, சில அரசியவாதிகள் சட்டசபையை கூட்டாமல் தவிர்க்கக் கூடும் என்ற நோக்கில் 6 மாத இடைவெளியில் சட்டசபை கூட வேண்டும் என்று ஒரு சட்டம்.
அதேசமயம் தேர்தல் நியாயமாக மற்றும் முறையாக நடக்க பல விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டி இருப்பதால், அந்த அடிப்படையில் தேர்தல் கமிஷனுக்கும் அப்படி ஒரு சுதந்திரம். ஆனால் இப்படி ஒரு தலைவலி வரும் என சட்டத்தை உருவாக்கியவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
அதேசமயம் தேர்தல் நியாயமாக மற்றும் முறையாக நடக்க பல விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டி இருப்பதால், அந்த அடிப்படையில் தேர்தல் கமிஷனுக்கும் அப்படி ஒரு சுதந்திரம். ஆனால் இப்படி ஒரு தலைவலி வரும் என சட்டத்தை உருவாக்கியவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
கடைசியில், இந்த 6 மாத விதி உயிருள்ள சட்டமன்றத்துக்குதான் பொருந்தும் என ஜனாதிபதி விளக்கம் அளிக்க அது தெளிவுபடுத்தப்பட்டது.
கிட்டத்தட்ட அதேபோன்ற குழப்பம்தான் இணைய சட்டத்திலும் வந்திருக்கிறது. பத்திரிகைகள் மற்றும் புத்தகங்களை நெறிபடுத்த சில சட்டங்கள். அந்த சட்டங்கள் வந்து பல காலம் ஆன பிறகு இந்த இணைய சட்டம் வந்திருக்கும். இரண்டும் வேறு வேறு தளத்தில் இருப்பதால் இதிலுள்ள முரண்பாடுகள் தெரியாமல் போயிருக்கலாம். இனி அது தெளிவுபடுத்தப்படலாம்.
சிறை
மேலே சொன்னது மேல்மட்ட பிரச்சினை என்பதால், முரண்பாடுகள் கவனத்துக்கு வந்ததும் அது தெளிவுபடுத்தப்பட்டது. ஆனால் சிறைகளில் சில சட்டங்கள் இருக்கே, அது அபத்தத்தின் உச்சகட்டம். அதை கவனிப்பார்தான் யாருமில்லை.
கைதிகளுக்கு தண்டனையில் சில வசதிகள் உண்டு. ஒருவர் 3 வருடம் தண்டனை பெற்றாலும், நன்னடத்தை மற்றும் விடுமுறை நாட்களை கணக்கில் கொண்டு, அது இரண்டு வருடத்திலும் முடிந்துவிடும்.
கைதிகளுக்கு தண்டனையில் சில வசதிகள் உண்டு. ஒருவர் 3 வருடம் தண்டனை பெற்றாலும், நன்னடத்தை மற்றும் விடுமுறை நாட்களை கணக்கில் கொண்டு, அது இரண்டு வருடத்திலும் முடிந்துவிடும்.
தவறு செய்பவர்கள் திருந்தும் வாய்ப்பு இருப்பதால் இந்த வசதி. இதை குறை சொல்லமுடியாது. ஆனால் இங்கே என்ன நடக்கிறது தெரியுமா? 5 வது முறையாக ஒருவர் ஜெயிலுக்கு போனாலும், அவருக்கும் நன்னடத்தை விதிமுறை அமலுக்கு வருகிறது.
`முதல் முறை வருபவர்களுக்கு மட்டும் `என்று ஒரு வார்த்தை அதில் சேர்க்காததால் வந்த வினை. அதுமட்டுமின்றி கண்கரண்டி என்ற ஒரு கொடுமையும் இருக்கிறது. ஏற்கனவே அந்த அபத்தம் பற்றி ஒரு பதிவு எழுதிவிட்டேன். சுருக்கமாக இங்கே.
ஒருவர் ஒரே குற்றத்தில் மூன்று விதமான குற்றம் செய்திருப்பார். கொலை, திருட்டு, ஆபத்தான ஆயுதத்தை வைத்திருத்தல் என பல பிரிவுகள் வரும். இதற்கு நீதிபதி தனித்தனியாக தண்டனை கொடுத்தாலும், அது ஏககாலத்தில் அனுபவிக்கப்படும். இதை கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் வேறு வேறு வழக்கில், வேறு வேறு நீதிபதிகள் வழங்கும் தண்டனைகள் கூட இப்படி அபத்தமாக முடிவுக்கு வரும்.
நான் ஜெயிலுக்கு போன புதிதில், ஒருவர் வாரத்துக்கு 4 நாள் கோர்ட்டுக்கு போய்வர, `இவ்வளவு கேஸ் இருக்கே, இதில் பாதி தண்டனையில் முடிந்தாலும், 20 வருடத்திற்கு மேல் ஜெயிலில் இருக்கவேண்டி இருக்குமே` என்றேன்.
`அவ்வளவு ஆவாது. 5 வருஷத்துல இது முடிஞ்சிடும்` என்றார். அப்போது அது எப்படி என்று புரியவில்லை. புரியவந்தபோது தலை கிறுகிறுத்தது.
எல்லா வழக்கிலும் இவர் வாரன்ட் வாங்கிவிட்டார். அத்தனை வழக்கிலும், சட்ட கணக்குப்படி இவர் ரிமாண்டில் இருக்கிறார். எனவே எல்லா தண்டனையும் இந்த ரிமாண்டில் கழிக்க முடியும். இடையில் தண்டனை பட்டு இரண்டு முறை புழல் 1 க்கு போய்வந்தார். அந்த தண்டனையும் ரிமாண்ட் கணக்கில் வருவதால் எல்லாமே கழிந்துவிடும்.
அவர் கணக்குப்படி ஏதோ ஒரு வழக்கில் 7 வருடம் வரலாம் என கணக்கு போட்டாலும்., அதில் நன்னடத்தை இரண்டு வருடம் போய்விட 5 வருடம் இருந்தாலே போதும். மற்ற எல்லா குற்றத்துக்கான தண்டனையும் இதிலே சரி பண்ணிவிடலாம்.
திருட வேண்டும் என ஒருவன் முடிவு செய்துவிட்டால் ஒரு குற்றம் செய்தாலும் 5 வருடம், பல குற்றம் செய்தாலும் 5 வருடம் என்ற நிலைதான் இப்போது இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தொடர் குற்றவாளிகள் உருவாவதில் ஆச்சர்யமேதுமில்லை.
ஆனால் இதற்கு திறமையாக திட்டமிட வேண்டும். ஒரு வழக்கில் மாட்டிகொண்டால் மற்ற வழக்குகளிலும் உடனடியாக வாரன்ட் வாங்கிவிட வேண்டும். ஒரு கைதி, `அந்த ஸ்டேஷன்ல ஒரு கேஸ் இருக்குன்னே. வாரன்ட் வைன்னு நான் சொன்னாலும் வைக்க மாட்றாங்க` என்று புலம்ப, எதற்கு இவர் இப்படி துடிக்கிறார் என்று விசாரிக்கும்போதுதான் இந்த அபத்தங்கள் தெரிய வந்தது.
இது எப்படி என்றால், ஒருவர் 2005 ல் இருந்து சிறையில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.அவர் மீது பல வழக்குகள் நடக்கிறது. இதில் செங்கல்பட்டு கோர்டில் 7 வருடம் தண்டனை. `2005 -லிருந்து இவர் ரிமாண்டில் இருப்பதால், இவர் தண்டனையை அனுபவித்துவிட்டார். விடுதலைதான்
ஒருவேளை சென்னை கோர்ட்டில் அவருக்கு 5 வருடம் கிடைத்தாலும், அங்கேயும் இவர் 2005 ல் இருந்து ரிமாண்டில் வந்துவிட்டால், இங்கேயும் அவருடைய தண்டனைக்காலம் முடிந்துவிட்டது.
அப்படியே மதுரை கோர்ட்டிலும் இவருக்கு 5 வருடம் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த வழக்கில் 2006 ல் இவர் மீது ரிமாண்ட் வந்திருக்கலாம். எனவே இப்போதும் அதே காமெடிதான். இப்படியே சொல்ல்லிக்கொண்டே போகலாம். சட்டங்கள் அவ்வளவு அபத்தமாக இருக்கிறது.
சரி, அந்த ஸ்டேஷனில் இவர் மீது வாரன்ட் வைக்காததன் காரணம் என்னவாக இருக்கும்?
அங்கே அந்த வழக்கில், `ஆள் தலைமறைவாக இருக்கிறார்` என்ற குறிப்பில் அது அப்படியே இருக்கும். போலீசாருக்கு தெரியும் இவர் ஜெயிலில் இருக்கிறார் என்று. இருந்தாலும் கைது செய்து கணக்கில் கொண்டுவரமாட்டார்கள்.
இவரை கைது செய்து தண்டனை வாங்கி கொடுத்தாலும், ஏற்கனவே வேறு வழக்கில் உள்ளே இருப்பதால், அந்த தண்டனையிலேயே இதையும் கழித்துவிடுவார். எனவே அது வீண் வேலைதான். `நீ அந்த தண்டனையை முடிச்சிட்டு வா. அப்புறம் வைக்கிறேன்` என்று போலீசார் நினைப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
அடுத்து, இவர் கைது செய்யப்பட்டு கணக்கு காட்டப்பட்டால், அதன்பிறகு 15 அல்லது 30 நாட்களுக்கு ஒருமுறை இவரை வாய்தாவுக்காக கோர்ட்டுக்கு அழைத்துப் போகவேண்டும். அங்கே நீதிபதி பல சமயம் வாய்தா மட்டுமே தருவார்.
கோர்ட்டுக்கு அழைத்துப் போவது இவர்களுடைய வேலை இல்லை என்றாலும், ஸ்டேஷனிலிருந்து ஒரு போலீஸ்காரர் கோர்ட்டுக்கு போகவேண்டும். கால் கடுக்க காத்திருந்துவிட்டு, வெறும் வாய்தா என திரும்பி வரவேண்டும்.
சரி, வாய்தாதானே என்று போகாமல் இருந்தால், அன்று நீதிபதிக்கு ஏதாவது சந்தேகம் வந்துவிடும். அவர் கேள்வி கேட்க, பதில் சொல்ல அந்த ஸ்டேஷன் போலீஸ் இல்லாத பட்சத்தில் நீதிபதி கோபித்துகொள்வார். எனவே இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
சிறைகளில் செல்போன் கைபற்றபட்டால், இந்த ஒரு காரணத்துக்காகவே சிறை போலீசார் வழக்கு போட விரும்புவதில்லை. தண்டனை வாங்கிக் கொடுத்தாலும் பலனில்லை. அனாவசிய டென்ஷன் மற்றும் நேர விரயம்தான்.
என்ன செய்யலாம்?
மேலே சொன்னவை சில சாம்பிள்.சட்டங்கள் அபத்தமாக உருவாக்கப்படுவதில்லை. அது காலமாற்றத்தினால் வந்ததாக இருக்கும். அல்லது சரியாக சொல்லாததால் வந்த குழப்பமாக இருக்கும். `எனக்கு இட்லி மட்டும் போதும்` என்று ஒருவர் சொன்னால், அவர் சொன்ன அர்த்தம் வேறு. அது தவறாக புரிந்துகொள்ளப்படும் என்றால் இங்கே யாரை குறை சொல்வது?
இப்போது கவனத்துக்கு வந்திருப்பதை சரி செய்தாலும், இன்று நாம் சரி என நினைக்கும் பல சட்டங்கள் வருங்காலத்தில் அபத்தமாக தெரியலாம். இதற்கு என்னதான் தீர்வு?
நீதிபதிகளுக்கு ஓரளவு சுதந்திரம் கொடுப்பதுதான் தீர்வு. சட்டங்கள் பொதுவான வழிகாட்டியாக இருந்தாலும், சில வழக்குகளில் அது மனசாட்சியோடு மோதும். அப்போது நீதிபதிகள் மனசாட்சியின்படி முடிவெடுக்கலாம் என அவர்களுக்கு ஒரு (சட்டப் பிரிவு) சுதந்திரம் தேவை.
இப்படி ஒரு சட்டம் இருந்து, நீதிபதிகள் அதை தவறாக பயன்படுத்தினால்?
அனேகமாக நீதிபதிகள் தீர்ப்புகளில் விளையாடுவதில்லை. பெயில் கொடுப்பது, வழக்கை இழுக்க குற்றவாளிகளுக்கு உதவுவது போன்றவற்றில்தான் இவர்கள் தடம் மாறுவார்கள்.
அதுமட்டுமின்றி கிட்டத்தட்ட எல்லா தீர்ப்புகளும் அப்பிலுக்கு போவதால், மேலே கவனிப்பார்கள் என்ற பயம் இருக்கும். சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு குறைவு.
இப்படி ஒரு சுதந்திரம் இருந்தால், இந்த ரவி சீனிவாசன் வழக்கில் மட்டுமின்றி பல முரண்பாடான சட்டங்களில், சட்டம் இதை குற்றம் என வரையறுத்தாலும், எனக்கு இருக்கும் சுதந்திரத்தின் அடிப்படையில் நான் எச்சரித்து/மன்னித்து விடுதலை செய்கிறேன் என நீதிபதிகள் தீர்ப்பு எழுதலாம்.
நீதிபதிகள் மனசாட்சியை தவறாக பயன்படுத்தி இருந்தால், அப்பீலில் அந்த தீர்ப்பு திருத்தப்பட்டு, நீதிபதிக்கும் வி ஆர் எஸ் (அல்லது தண்டனை) என முடித்துவிடலாம்.
திருத்தப்பட்ட தீர்ப்புகளும் தானாகவே சட்டமாக்கலாம். ஆனால் அது அரசியல்வாதிகள் உரிமை. அவர்கள் சண்டைக்கு வருவார்கள்.
எனவே இந்த தீர்ப்புகளை சட்டமன்றத்தில் விவாதத்துக்கு உட்படுத்தி சட்டமாக்கலாம். இப்போதைய முறையில் ஒரு சட்டமியற்றுவது என்பது ரொம்ப தாமதமான வேலை. அதற்கு இது பரவாயில்லை.
4 comments:
காவல்துறை,நீதிதுறைன்னு இரண்டு பணிகளை உங்களிடம் ஒப்படைக்கும் போல தெரியுதே:)
இங்கும் அங்கும் சில ஓட்டைகள்,நீதிபதிகளின் சுயநலங்கள் வெளிப்பட்டாலும்,நீதிதுறையின் முடிவுகள் ஜவ்வு மாதிரி இழுத்தாலும் கூட இந்திய சட்ட தூண் கட்டமைப்பை பாதுகாப்பதில் நீதிதுறையும்,நீதிபதிகளும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
ஒப்படைக்கலாம்!கோணையா வந்துட்டுது.
வாங்க நடராஜன்,
///காவல்துறை,நீதிதுறைன்னு இரண்டு பணிகளை உங்களிடம் ஒப்படைக்கும் போல தெரியுதே///
ம்ஹும்...ஆசை இருக்கு அரசாள, அம்சம் இருக்கு... அவ்வளவுதான்.
///இங்கும் அங்கும் சில ஓட்டைகள்,நீதிபதிகளின் சுயநலங்கள் வெளிப்பட்டாலும்,நீதிதுறையின் முடிவுகள் ஜவ்வு மாதிரி இழுத்தாலும் கூட இந்திய சட்ட தூண் கட்டமைப்பை பாதுகாப்பதில் நீதிதுறையும்,நீதிபதிகளும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.///
இந்தியாவில் அரசியல்வாதிகள் மட்டும் மோசமாக தெரிய அவர்களுக்கு இருக்கும் நிர்பந்தம்தான் காரணம். மூன்று அழுக்கான மனிதர்கள் உட்கார்ந்திருக்கும் போது வெளிச்சம் யார் மீது படுகிறதோ அவர் மட்டுமே நமக்கு அழுக்காக தெரிவார். அதேதான் தியரிதான். அரசியல்வாதிகள் வெளிச்சத்தில் இருக்கிறார்கள்.
இருந்தாலும் அரசியல்வாதிகளுக்கு இவர்கள் ஓரளவு கடிவாளமாக இருக்கிறார்கள் என்பதும் நிஜம்.
Good work Siva..செமையா கிழிச்சிருக்கீங்க... நல்ல ஆழமான சிந்தனைதான்... சிறை உங்களுக்கு நிறைய அனுபவப்பாடங்களைக்கற்றுத்தந்திருக்குமென்று எண்ணுகிறேன்! நமது சட்டங்களில் பெரும்பாலானவை பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்ந சட்டங்களை அப்படியே லைட்டா தூசி தட்டி வடிவமைத்துக்கொண்டார்கள் என்று கேள்விப்பட்டேன்... 60 ஆண்டுகளுக்கும் மேலாய் பழைய சட்டங்கள் பல காலமாற்றத்துக்கு ஏற்ப மெருகேற்றி மாற்றப்படாமல் தொடர்ந்து ஓட்டைகளுடன் இருப்பது நாம் வருந்தவேண்டிய விஷயமே... அதே போல சட்டங்களைத்திருத்துவதும், புது சட்டங்கள் இயற்றும் உரிமையையும் அரசியல்வாதிகளின் கைகளிலேயே வைத்திருக்கும் வரை இங்கே பல சட்ட ஓட்டைகள் அடைக்கப்படப்போவதில்லை என்பதும் நிதர்சனம்தான்... Siva... Pls send me your contact details to subra_be@yahoo.co.in
Post a Comment