ஊரிலிருந்து உறவினர்கள் வந்தார்கள். ஸ்டேஷனுக்கு போயிருந்தேன். வந்தது 3 பேர். வரவேற்க போனது 7 பேர். இரண்டு ஆப்சென்ட்.
பொதுவாக பிரயாணம் என்றால், வண்டி ஏற்ற /அழைத்துவர உதவி தேவை. அதற்கு சிலர் போதும். எண்ணிக்கை அதிகமாக இருக்கவே நானும் தேவையா என நினைத்தேன். ஆனால் இப்போது எல்லாரும் புரோட்டகால் பார்க்கிறார்கள். எங்கே ரிசீவ் பண்ணவேண்டும், யார் வீட்டில் முதலில் சாப்பிடவேண்டும் என எல்லாவற்றிலும் கௌரவம் பார்ப்பதால், எதற்கு வம்பு என நானும் ஸ்டேஷனுக்கு போனேன்.
அங்கே எடுத்தவுடன் காமெடிதான். `பிளாட்பார டிக்கெட் வேண்டாம்; ட்ரெயின் டிக்கெட் எடுக்கலாம்` என்றார் ஒருவர். பிளாட்பாரம் டிக்கெட் 5 ரூபாய். ஆனால் இந்த மணிநகர் ஸ்டேஷனிலிருந்து வட்வா என்ற அடுத்த ஸ்டேஷனுக்கு டிக்கெட் 2 ரூபாய்தான். இது எப்படி இருக்கு? இப்படி இருக்கும்போது 5 ரூபாய் கொடுத்து யாரவது டிக்கெட் வாங்குவார்களா?
`கையில் ஏதோ ஒரு டிக்கெட் இருக்கவேண்டும். அது போதும். ஒருவேளை செக்கிங்கில் கேட்டால், `டிரெயின் ஏறலாம்னுதான் வந்தோம். இப்ப பிளான் கேன்சல்`னு சொல்லவேண்டியதுதான்`. அவர் சொல்கிறார். ஆக சட்டத்தை ஏமாற்ற பதில் இருக்கிறது.
இது அவ்வப்போது நாம் கேள்விப்படும் சட்டக் குழப்பம்தான். ரயில் நிலையங்களில் கூட்டத்தை குறைக்க பிளாட்பார டிக்கெட் விலை ஏற்றப்படுகிறது. ஆனால் உள்ளூர் டிரைன்களில் தூரத்தின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இது பிளாட்பாரத்தில் நிற்க கட்டணம் அதிகம், டிரைனில் போக கட்டணம் குறைவு என்ற அபத்தத்தில் போய் முடிந்திருக்கிறது. இதற்கு தீர்வே இல்லை.
புத்தகம்
ஆங்கில நாவல் வந்தது. பிரித்தேன். முன்பு போல் ஆர்வம் இல்லை என்பதை உணரமுடிந்தது. புத்தகம் படிக்கும் பழக்கம் எனக்கு தானாகவே வந்தது. இப்படி படிக்க ஆரம்பித்த நேரத்தில் அரைகுறையாக ஆங்கில அறிவையும் வளர்த்துகொண்டு ஆங்கில நாவல்களில் மூழ்கினேன்.
ஆங்கில நாவல் படிப்பதால் ஆங்கில மொழியை வேகமாக கற்கலாம், வெளிநாட்டு கலாசாரத்தையும் தெரிந்துகொள்ளலாம். இது நான் எதிர்பார்த்த லாபம்.
இப்படி படிக்கும்போது ஒரு டயலாக் படித்துவிட்டேன். If a man empties his purse into his head , no man can take it away from him என்று ஒரு டயலாக். யாரோ ஒரு வீணாப்போனவன் எழுதியது. நானும் அதை உண்மைன்னு நம்பிட்டேன்.
ஏற்கனவே நான் புத்தகங்களின் நண்பனாக இருக்க, இது எனது ஆர்வத்தை அதிகப்படுத்தியது. தற்போது நாற்பதை தொட்டுவிட்ட நிலையில், நிதானமாக யோசித்து பார்த்தால் பர்ஸ் காலியானது மட்டும் தெரிகிறது. காலியான பர்ஸ் மூளையில் ஏறியதா என்ற கேள்விக்கு பதில் இல்லை.
இன்னொரு மேதை ஒரு அருமையான தத்துவம் சொன்னார். Ignorance is Bliss என்று மூன்றே வார்த்தைகளில் நிதர்சனத்தை புரியவைத்தார். அறிவாளிகள் சொன்னால் கேக்கணும். ஆனால் நல்லது யாருக்குமே பிடிக்காதே. நானும் அந்த வகைதான்.
முன்பு புத்தகம் படித்தால் அறிவு வளரும் வாழ்க்கைத்தரம் உயரும் என்ற நம்பிக்கை படிக்க வைத்தது. இப்போது இந்த டிவி சீரியல்களிலிருந்து தப்பிக்கத்தான் இது உதவும்.
அக்க்ஷர்தாம்
வந்த உறவினர்களுடன் ஒரு உள்ளூர் சுற்றுப் பயணம். அக்க்ஷர்தாம் என்ற கோவிலுக்கும் மற்ற சில இடங்களுக்கும் பயணம்.
இந்து மதத்தில் அவ்வப்போது உருவாகும் கிளைச் சாமியார் இவர். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் வந்தவர். அவர் புகழ் பாடும் கோவில். ஒரு சமயம் தீவிரவாதிகள் இந்த கோவிலுக்குள் நுழைந்து அதன் காரணமாகவும் பிரபலமான பெயர்.
இது கோவில் அல்ல. கோவில் மாதிரி. எனக்கு இது பிடித்திருந்தது. பூஜை வகையறாக்கள் இல்லாததால் சுகாதாரமாக இருந்தது. நல்ல வடிவமைப்பு. கோவில் வளாகத்தின் உள்ளேயே தீம்பார்க் போல் குழந்தைகளுக்கு விளையாட விஷயங்களும் இருப்பதால், சுற்றுலாவுக்கு ஏற்றதுதான்.
ஆனால் இவரை பற்றிய பந்தாதான் தாங்கமுடியவில்லை. இவருடைய கால்நகம் முதல் தலைமுடி வரை காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருக்கிறது. அப்படி பாதுகாக்க வேண்டிய அளவுக்கு இவர் என்ன செய்தார் என்று தெரியவில்லை. இனிமேல்தான் தேடிப் படிக்கவேண்டும்.
வழக்கமாக தலைவர்கள் மற்றும் தெய்வப் பிறவிகள்(?) சொன்ன கருத்துக்களை விட்டுவிட்டு, அவருடைய உடைமைகளை மட்டும் பாதுகாப்பார்கள். இதுவும் அப்படித்தான் இருக்கிறது.
கிளைகள்
வியாபாரிகள் பல ஊர்களில் கிளைகளை திறப்பது போல் கடவுள்களும் இந்த வேலையை ஆரம்பித்துவிட்டார்கள். அக்க்ஷர்தாம் போய்விட்டு வரும் வழியில் இரண்டு கோவில்கள். ஓன்று திருப்பதி பாலாஜியுடையது. இன்னொன்று காஷ்மீர் வைஷ்ணவ தேவி கோவில். அதன் மினியேச்சர் மாடலாம்.
இதில் பாலாஜி கோவில் அவர்களின் நேரடி கட்டுபாட்டில். அமர்நாத் பற்றி தெரியவில்லை. வந்தவர்கள் உள்ளே போக நான் வெளியே காத்திருந்தேன். உங்க பக்தி உங்களோட என மறுத்துவிட்டேன். எல்லோரும் நெற்றியில் குங்குமம் வைத்து கொண்டு மங்களகரமாக வந்தார்கள். நான்மட்டும்தான் பிளாட்டாக இருந்தேன்.
வீட்டுக்கு வந்து சேர்ந்த சற்று நேரத்தில் சித்தி வந்தார். இங்கே (அகமதாபாத்) முருகருக்கு கல்யாணமாம். அந்த வைபவத்தில் கலந்துகொண்டுவிட்டு வந்தார். வந்தவர் எல்லோருக்கும் அந்த குங்குமத்தை வைத்தார். எனக்கும்தான். இங்கே மறுக்கமுடியாது. இப்போது நானும் மங்களகரமாக..
எல்லாம் அவன் செயல்.
3 comments:
புத்தகம் : நல்ல அனுபவ கருத்துக்கள்...
தினம் புது அனுபவம் அனுபவிக்கிறீர்கள்.படித்ததில் பிடித்த வசனங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நாங்களும் பலன் அடைவோம்.
வாங்க தனபாலன்
உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
---------------------
ஆரிப்
அனுபவங்களுக்கா பஞ்சம். எழுதும் திறமை வந்துவிட்டால் எல்லாமே அனுபவம்தான்.
என்ன.. நமது அனுபவங்களில் கிடைக்கும் பாடம் நமக்கும், மற்றவர்களுக்கும் வழிகாட்டியாக இருக்கவேண்டும்.
Post a Comment