!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Wednesday, May 3, 2023

கர்நாடகா - இதை தவிர்க்கலாம்


கர்நாடகாவில் இந்த மாதம் தேர்தல் நடக்கப்போகிறது. இதில் என்ன புது தகவல் என கேட்கவேண்டாம். எனக்கு எதை படித்தாலும் அதில் ஒரு கோளாறு என் கண்ணுக்கு தெரியும். அந்த தகவல்தான் இங்கே.

அதாவது இந்த வருடம் சட்டமன்றம், அடுத்த வருடம் பரராளுமன்றம் தேர்தல் நடக்கப்போகிறது. அதுதான் இங்கே சிக்கல். காங்கிரஸாக இருக்கட்டும் அல்லது பிஜேபியாக இருக்கட்டும், இந்த சட்டமன்ற தேர்தலுக்கு கடுமையாக செலவு செய்து களைத்துப்போய், அடுத்த வருடம் மறுபடியும் அதே செலவு செய்யவேண்டும். இந்த அநியாயத்தை என்னவென்று சொல்வது?

எல்லாம் (ஒருகாலத்தில்) பெண்ணாய் பெற்றவர்கள் அதற்கான செலவுகளை கருத்தில் கொண்டு பணத்தை சேர்த்து வைப்பார்கள். அதேபோல் தற்போது அரசியல் கட்சி தலைவர்கள் இப்படி அடிக்கடி வரும் தேர்தல் செலவுகளை கணக்கில் கொண்டு ஆயிரக்கணக்கான கோடிகளை சேர்த்து வைத்திருக்கிறார்கள். அதை மக்கள் புரிந்துகொள்ளாமல் அவர்களை ஊழல்பேர்வழிகள் என திட்டினால் அது தவறுதானே!

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நம் நாட்டில் சாத்தியமில்லை. எதாவது ஒரு சட்டமன்றம் கலையும் அப்போது மீண்டும் தேர்தல் என்பது தவிர்க்கமுடியாதது. அதேசமயம் இந்தியாவின் ஏதாவது ஒரு முலையில் 3-6 மாதத்துக்கு ஒரு முறை தேர்தல் என்பதும் அபத்தம்தான். இந்த 2023ல் மூன்று தேர்தல்கள், வேறு வேறு காலங்களில். இங்கே அரசியல் கட்சிகளின் நிலை பரிதாபம்தான்.

மாநில தேர்தல்தானே என்று மத்திய அரசு சும்மா இருக்க முடியாது. மாநில அரசுக்கு ஒரு பொண்டாட்டி என்றால் மத்திய அரசுக்கு இரண்டு. அதாவது மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரண்டு. எந்த சட்டம் இயற்றினாலும் இரண்டு பேரிடம் அனுமதி வாங்கவேண்டும். மாநில அரசுக்கு அந்த தலைவலி இல்லை. கவர்னர் மட்டும்தான் தலைவலி. அங்கே அனுமதி வாங்குவது பெரிய சிரமமில்லை. எப்படியும் வாங்கிவிடலாம்.

மத்திய அரசுக்கு மாநிலங்களவை என்று ஒரு தலைவலி இருப்பதால், அங்கே சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி அல்லது மாநில கட்சி ஜெயித்து வந்தால், அதன்முலம் அவர்களுக்கு கிடைக்கும் எம்பி பலம் ஆளுங்கட்சிக்கு தலைவலியாகிவிடும். எனவே இதுபோன்ற தேர்தல்களை உதாசீனப்படுத்தாமல் அங்கேயும் முட்டிமோத வேண்டும். அங்கே மாநில கட்சிகள் `நான் ஊழல் பண்ணுவேன் நீ கேட்கக்கூடாது, அப்போதான் உனக்கு சாக்லேட் ` என பேரம் பேசும். இது கூடுதல் தலைவலி.

இது எப்படி இருக்கு என்றால், ஒற்றை பெற்றோர் வேலைக்கு போனால், அவர்களுடைய சிந்தனை வேலையில் முழுவதும் ஒட்டாமல் வீட்டில் பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள் என்ற கவலையிலேயே இருப்பார்கள். அந்த சூழ்நிலையில்தான் மத்திய அரசு இருக்கிறது. இதையெல்லாம் தாண்டி நிர்வாகம் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும் இது ஆரோக்கியமான ஜனநாயகம் இல்லை என்பதுதான் என் கருத்து.

சரி, என்ன செய்யலாம்?

கட் ஆ ஃ டேட் என ஒரு தேதியை அறிவிக்கலாம். அதாவது வருடத்தில் ஏதாவது ஒரு மாதம் தேர்தல். அந்த ஆண்டு முடிவுக்கு வரும் அனைத்து சட்டமன்ற தேர்தல்களையும், சிலவற்றுக்கு நீட்டிப்பு கொடுக்கப்பட்டு சில முன்கூட்டியே கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தலாம். இது வருடம் ஒரு தேர்தல் என சுமையை ஓரளவு குறைக்கும்.

இது மற்ற வருடங்களுக்கு பொருந்தும். ஆனால் பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் அந்த தேர்தலுக்கு இப்படி ஒரு வருடம் அப்படி ஒரு வருடம் 2023- 2024- 2025 என இழுத்து ஒரே தேர்தலாக்கிவிடுவது இன்னும் சிறப்பு. காரணம், அரசியல் கட்சிகளுக்கு மட்டுமில்லாமல் அரசுக்கும் தேர்தல் நடத்துவதில் பெரும் செலவு இருக்கிறது. மறுபடியும் சொல்கிறேன் அரசின் நிர்வாக செலவுக்குள் பிரமாண்டமானவை, அவை கண்ணுக்கு தெரியாது. 

நிர்வாக செலவை தவிர்த்து இந்த கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடக்கும் சில மாதங்களில் பெட்ரோலிய பொருட்களின் உபயோகத்தை கணக்கில் பார்த்தால் 10 சதவிகிதம் உயர்ந்திருக்கும். இதே தலைவலி அடுத்த ஆண்டும். ஒரு பக்கம் பெட்ரோலிய பொருட்களில் நாம் சுயசார்பு அடையமுடியவில்லை என புலம்பல். இன்னொரு பக்கம் இப்படி அனாவசிய விரயம்.

ஏதோ ரஷ்யாவுடன் நட்புறவு இருந்ததால் நமக்கு பிரச்சினை இல்லை. ஒருவேளை வெளிமார்க்கெட்டில் வாங்கவேண்டிய நிர்பந்தம் இருந்தால் நம் கதி? எப்படியும் சமாளிப்போம் அது வேறு கதை. ஆனால் பொருளாதார முன்னேற்றம் என்பது அனாவசிய செலவினங்களை குறைப்பதும் ஓன்று.

தேர்தல் கமிஷனுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் புத்தி வந்து இப்படி ஏதாவது சீர்திருத்தங்கள் வந்தால் நல்லது. எனவே இதையும் எழுதி வைக்கிறேன்.

0 comments:

Post a Comment