!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Saturday, April 15, 2023

ஆருத்ரா மோசடி - இது அனாவசிய செலவு


ஆருத்திரா கோல்ட் மோசடியை படித்தவுடன் என்ன எழுதுவதென்றே புரியவில்லை, எனவே வாசிப்போடு நிறுத்திவிட்டேன். அதன்பின் பலவிஷயங்கள் அதை மறக்கடித்துவிட்டது. இருந்தாலும் இதில் எதேச்சையாக ஒரு பேட்டியை பார்த்துவிட, இதை குறிப்பிட்டே ஆகவேண்டும் என்ற உந்துதல் எனக்கு வந்துவிட்டது. அதற்காகத்தான் இந்த பதிவு 

நான் கவனித்த அந்த பேட்டி எனக்கு ஒரு வகையில் சந்தோஷத்தை கொடுத்தது. அதை முதலில் குறிப்பிட்டுவிடுகிறேன்.  

நான் நாற்பதை தாண்டிய நேரம். திருமணம் செய்யவில்லை. என் காலே தரையில் வலுவாக பதியாத சூழலில் இந்த சுமை வேண்டாம் என தவிர்த்த நேரம். ஒரு பெண்மணி உபதேசம் என்ற பெயரில் கொஞ்சம் ஓவராகவே சீன் போட்டார். அதாவது நான் திருமணம் செய்யவேண்டுமாம். குடும்பம் செய்தால்தான் அது புத்திசாலித்தனத்தின் அடையாளம் என உலகம் அங்கீகரிக்குமாம்! இப்படியெல்லாம் என்னை பிரைன் வாஷ் செய்தார்.

எல்லோரும் செய்வதா புத்திசாலித்தனம், யாராலும் முடியாததை செய்யவேண்டும் என நான் செவ்வாய் கிரகத்துக்கு சோலோவாக டிராவல் செய்ய எப்போதோ பிளான் செய்துவிட்டேன். இப்படி நான் பிளான் செய்தபோது கூகிள் மேப் வரவில்லை. எனவே அது ரொம்ப தூரம் என அப்போது எனக்கு தெரியாமல் போய்விட்டது. தெரிந்திருந்தால் வண்டியை வீனஸுக்கு திருப்பி இருப்பேன்.

இனி இங்கே விஷயத்துக்கு வருவோம். என்ன சொன்னார் அந்த பெண்மணி, குடும்பம் செய்பவர்கள் புத்திசாலிகளாம்! இங்கே இந்த வேடிக்கையை கவனியுங்கள். அந்த புத்திசாலி குடும்பஸ்தர்கள்தான் இங்கே ஆருத்ராவில் பணம் போட்டு ஏமாந்து பரிதாபமாய் பேட்டி கொடுத்தார்கள்.

ஆக மொத்தத்தில் அறிவு வளர்ச்சிக்கும் குடும்பம் செய்வதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது உலகம் அறிந்த உண்மை. இங்கே 10 முட்டாள்கள் அங்கே 10 முட்டாள்கள். இதுதான் எதார்த்தம். எனக்கு உபதேசம் செய்த பெண்மணியும் சென்னையை சேர்ந்தவர்தான். ஒருவேளை அவரும் இதில் பணம் போட்டு ஏமாந்திருந்தால் நான் இன்னும் சந்தோஷப்படுவேன்.

இனி இந்த மோசடியில் சில முரண்பாடுகளை கவனிப்போம். அதாவது 2438 கோடி மோசடியாம். அதுவும் 1 லட்சம் பேர் ஏமாந்திருக்கிறார்களாம். புள்ளிவிவரத்தை கவனித்தேன். நம்நாட்டில் `சொல்லப்படும்` புள்ளிவிவரங்களை பெரும்பாலும் நான் நம்புவதில்லை.  என்னுடைய தோராய கணக்கில் இதில் 10-20 சதவிகிதம்தான் மோசடி என்ற வரம்புக்குள் வரும். அதாவது 243 அல்லது 486 கோடி. (நானும் புள்ளிவிவரத்தோட எழுதணுமில்லையா அதனாலதான் இந்த புள்ளிவிவரம். மத்தபடி எவ்வளோனு எனக்கும் தெரியாது.)

சரி எப்படி இந்த கணக்கு?

பொதுவாக இப்படி ஏமாற்றுபவர்கள், பலரையும் இந்த வலையில் விழவைக்க, முதலில் முதலீடு செய்பவர்களுக்கு 6 மாதமாவது வட்டி கொடுப்பார்கள். தோராயமாக 3 மாதம் என்று வைத்துக்கொண்டாலும், மாதம் 30 சதவிகித வட்டி என்றால் (நிஜமாகவே என்னால் இதை நம்பமுடியவில்லை), 3 மாதத்தில் உங்கள் பணம் கிட்டத்தட்ட கைக்கு வந்துவிடும். கடைசியாக சேர்ந்த 10-20 சதவிகிதத்தினர் வேண்டுமானால் வட்டியே வாங்காமல் முழுதையும் இழந்திருக்கலாம். அந்த வகையில் 10-30 சதவிகிதத்தினர் முழு தொகையையும் வட்டியாக திரும்ப பெற்றிருப்பார்கள். 30-80 சதவிகிதத்தினர் அவர்களுடைய முதலீட்டில் ஓரளவு வட்டியை பெற்றிருப்பார்கள்.

ஆனால் புகார் அளிக்கையில் முதலீட்டை மட்டும் கணக்கில் காட்டி புகார் அளித்திருப்பார்கள். எனவே புகார் அளிப்பவர்கள் அவர்களுடைய முதலீட்டில் வாங்கிய வட்டியை கழித்துவிட்டு நிகர நஷ்டத்தை மட்டுமே குறிப்பிடவேண்டும் என்று கட்டாயப்படுத்தினால் நிச்சயம் இது 1000 கோடிக்கு கீழேதான் இருக்கும்.

இதில் மற்றவர்களையும் சேர்த்துவிட்டால் உங்களுக்கு இன்சென்டிவ் என எதையாவது கொடுத்திருப்பார்கள். அதையும் கழிக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் செய்யாமல் 10 லட்சம் போட்டேன் (அதில் 6 லட்சம் வட்டியாக வாங்கிவிட்டேன் என்பதை மட்டும் சைலன்ஸ மோடில் போட்டுவிட்டு) முழுபணமும் போய்விட்டது என புகாரும், பேட்டியும் கொடுத்திருப்பார்கள். அதுதான் 2438 கோடியாக உருமாறியிருக்கிறது. 

ஓரு வகையில் இதுவும் எதார்த்தம்தான். ஏனென்றால் நாளை கைப்பற்றப்படும் 100 கோடியில், புகார் அளித்தவர்கள் அனைவர்க்கும் புகாரில் குறிப்பிட்ட தொகையில் 10 சதவிகிதம் கொடுக்கப்படும் என்றால் இப்படி ஏற்றி கொடுத்தால்தான் ஓரளவாவது தேறும்.

இனி அடுத்த முரண்பாட்டை பார்ப்போம். இந்த மோசடி பேர்வழிகள் பணத்தை நேரடியாக வாங்கமுடியுமா? அதற்கு ஏஜென்ட் தேவை. அவர்களுக்கு சம்பளம் /கமிஷன் கொடுத்தாக வேண்டும். பொதுவாக பிராண்டட் பொருளை விற்றால் வியாபாரிகளுக்கு கமிஷன் 10 சதவிகிதம்தான். உறுதியற்ற மற்ற பொருட்களை விற்றால் உங்களுக்கு கமிஷன் 20-40 வரை கூட கிடைக்கும். இங்கேயும் அதேதான். இந்த வட்டிக்கு மக்களை உள்ளே இழுக்க வேண்டுமென்றால் ஏஜெண்டுக்கு 5-10 சதவிகிதம் கமிஷன் இருந்திருக்கும். அல்லது மாதம் 50,000 சம்பளம், 5 லட்ச ரூபாய்க்கு கலெக்சன் காட்டவேண்டும் என்ற இலக்காவது வைத்து வசூலித்திருப்பார்கள். அந்த வகையில் வசூலித்த தொகையில் கணிசமாக கழித்தால் இது இன்னும் குறையும்.

அடுத்து என்னதான் ஏஜென்ட் வைத்தாலும் மக்கள் அப்படியே வந்துவிடுவார்களா? கணிசமான செலவில் விளம்பரம், அப்படியே மக்களை மயக்க அட்டகாசமான அலுவலகம், அங்கே அழகான இளம் பெண் ஊழியர்கள் மற்றும் பலர் என நிர்வாக செலவுகள் போன்றவற்றை கணக்கில் எடுத்தால் இதிலும் சில நூறு கோடிகள் காணாமல் போயிருக்கும்.

சரி, இவர்கள் முதலீடு செய்து பணம் சம்பாதிக்க எங்கே அகல கால் வைத்தார்கள். ஷேர் மார்கெட்டாகத்தான் இருக்கும். அங்கே இவர்கள் எவ்வளவு பணத்தை இழந்தார்களோ? அதையெல்லாம் கணக்கில் எடுத்தால் இவர்களிடம் 200-300 கோடி இருந்தாலே அதிகம். அதிலும் சிக்கலில் மாட்டப்போகிறோம் என தெரிந்தவுடன் அதிலிருந்து தப்பிக்க ரவுடிகள், போலீசார், அரசியல்வாதிகள் என பலருக்கு ஸ்விட்பாக்ஸ் என இங்கேயும் கணிசமாக இழந்திருப்பார்கள். இதெல்லாம் போக அவர்களிடம் என்ன மிச்சமிருக்கப்போகிறது?

இங்கே நான் சொல்லவருவது என்னவென்றால், இங்கே 2438 கோடி மோசடி என்ற பிரமாண்டமான தொகை செய்தியாக சொல்லப்படலாம், ஆனால் நடைமுறை வியாபார (மோசடி) சுழற்சியில் இந்த பணம் பலருக்கு சென்றிருக்கும். அதை திரும்ப பெறுவது மிகவும் சிரமம். அதில் இந்த மோசடி பேர்வழிகளிடம் இருக்கும் 100-200 கோடி பணம் மட்டும்தான் மக்களுக்கு கிடைக்க போகிறது. அதுவும் 10-15 வருடம் கழித்து.

சரி, இதுதானே சட்ட நடைமுறை, அரசு அதைத்தானே செய்யவேண்டும் என நீங்கள் கேட்கலாம். ஆனால் இங்கேயும் சில அபத்தங்கள் இருக்கிறது.

இது அனாவசிய செலவு 

நம் நாட்டு சட்டமுறை குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதை விட பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதில் கொஞ்சம் கூடுதலாகவே அக்கறை காட்டுகிறது. அதுதான் நம்நாட்டில் குற்றங்கள் பெருகுவதன் காரணம். அதாவது இந்த 1 லட்சம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்கள் 1 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்த தொகையில், 1000 ரூபாயாவது செக்காக கொடுத்து `இந்தாப்பா உனக்கு நீதி கிடைத்துவிட்டது இனி நீ சந்தோஷமாக வேறு எங்காவது போய் ஏமாறு` என்று சொல்லவேண்டும். அதற்காக ஏமாந்தவர்கள் அனைவரிடமும் புகார் பெற்று அதன்பிறகுதான் சார்ஜ் சீட் போடவேண்டும். இதற்காக பல போலீசார் இந்த புலனாய்வில் ஈடுபடுத்தப்பட்டு, அது 10,000 பக்க சார்ஜ் சீட்டாக மாறுவதற்கு 5 ஆண்டுகள் கூட  ஆகலாம். 

இதற்கிடையில், `6 மாதம் ஆகிவிட்டது. போலீசார் விரைவாக சார்ஜ் சீட் போடவில்லை, இது மனித உரிமையை மீறிய செயல் எனவே எனது கட்சிக்காரருக்கு ஜாமீன் வேண்டும்' ஒரு வழக்கறிஞ்சர் கோர்ட்டில் கர்ஜிக்க, இந்த குற்றவாளிகளுக்கு ஜாமீனும் கிடைத்துவிடும். இந்த விஷயமெல்லாம் பத்திரிகைகளில் செய்தியாக வராது. மக்களின் சிந்தனையை அப்போது நடந்திருக்கும் ஏதோ ஒரு செய்தி ஆக்கிரமித்திருக்கும்.

இதில் முக்கியமான கொடுமை என்னவென்றால், அப்போலோவில் ஜெயலலிதாவிற்கு இட்லி வாங்கிக்கொடுத்த செலவு 1 கோடி என்பதுபோல், இந்த ஆருத்ரா மோசடி வழக்கை நடத்த நிச்சயம் அரசுக்கு 20-50 கோடி செலவு ஆகும். ஏமாற்றியவன் ஒருவன்; ஏமாந்தவன் வேறு ஒருவன். ஆனால் அரசுக்கு இங்கே தண்ட செலவு. இது எப்படி இருக்கு? 

இதை நான் கற்பனையாக சொல்லவில்லை. நான் சிறைக்கு சென்று நம் நாட்டில் வழக்குகள் நடத்தப்படும் விதங்களை கவனிக்கும் போது, அந்த அளவுக்கு (பல துறைகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால்) செலவுகள் இருக்கக்கூடும் என்பதை உணர்ந்ததால்தான் எழுதுகிறேன்.

எனவே அரசாங்கம் குற்றவாளிகளை தண்டிப்பதை மட்டும் முதல் இலக்காக வைத்துக்கொண்டு போதுமான/ தேவையான ஆதாரங்களை மட்டும் வைத்துக்கொண்டு வழக்கை விரைவாக நடத்த வேண்டும். அதாவது 10-50 புகார் போதுமானது என்ற நிலை.

ஆனால் வழக்கை இழுக்க இழுக்கத்தான் இன்பம் என மும்முர்த்திகளும், அதாவது போலீஸ், நீதிபதிகள், வழக்கறிஞ்சர்கள் நினைக்க, அப்படி நீதி விரைவாக வழங்கப்பட்டால், பெரும்பாலான அரசியல்வாதிகள் கம்பிகளுக்கு பின்னால் இருப்பார்கள் என்ற நிலையும் வரும் என்பதால், இது நடக்கப்போவதில்லை.

வழக்கின் முடிவில் கைப்பற்றப்படும் தொகையை, 'எவ்வளவோ இழந்துட்ட, இந்த 1000-10000 ரூபாயை வச்சி நீ என்ன பண்ணப்போற? அதனால இந்த தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுத்துட்டோம் என்று பாதிக்கப்பட்டவர்களிடன் 15- வருடம் கழித்து சொன்னால், அந்த நாய் வேணான்னா சொல்லப்போவுது. அவர்கள் இதை மறந்து வேறு யாரிடம் நாம் ஏமாறலாம் என யோசித்துக் கொண்டிருப்பார்கள்.

எனவே மக்களுக்கு நீதி என்பது இப்போது அவசியமில்லாத ஓன்று. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் , அவர்களுக்கு பயம் வந்தால் குற்றங்கள் குறையும் என்ற மனநிலையில் நீதிமன்றங்கள் செயல்படவேண்டும்.

இது பகல்கனவுதான். இருந்தாலும், நம்நாட்டில் கனவு காணும் சுதந்திரமாவது இருக்கிறது. அந்த சுதந்திரத்தையாவது அனுபவிப்போம்.     

0 comments:

Post a Comment