சசிகலா அரசியலுக்கு வரவில்லையாம். உறுதியாக சொல்லிவிட்டார். சிலமாதங்களாக நான் இதைத்தான் கணித்தேன். ஆனால் பத்திரிக்கை செய்திகள் நம்மை அநியாயத்துக்கு குழப்பிவிட்டன.
சினிமாவையும் மிஞ்சிய திரைக்கதைகளை பத்திரிக்கைகள் எழுதின. சசிகலா விடுதலையாகி தற்போது பிரம்மனை நோக்கி ஒரு வார கடுந்தவம் இருக்கிறார். இந்த ஒரு வார தவத்துக்கு மிரண்டு பிரம்மன் அவருக்கு ஏதாவது வரம் கொடுப்பார், அதை வாங்கிக்கொண்டு சசிகலா அதிரடியாக களம் இறங்குவார் என ஒரு பக்கம். (நாமும் இப்படி ஏதாவது கொளுத்தி போடுவோம்)
இன்னொரு பக்கம் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதில் பிஜேபி உறுதியாக இருக்கிறது. சமீபத்தில் சென்னை வந்த அமித்ஷா ஒரு ஓட்டலுக்கு எடப்பாடியை வரவழைத்து, சசிகலாவை உங்கள் கட்சியில் சேர்த்தால்தான் நான் இங்கே சாப்பாட்டில் கைவைப்பேன் இல்லையென்றால் ஒரு மணிநேர உண்ணாவிரதம் இருப்பேன் என அவர் எடப்பாடியை மிரட்டினாராம். இந்த மிரட்டலால் அதிர்ந்துபோன எடப்பாடி, வேண்டுமென்றால் பிஜேபிக்கு சீட் அதிகமாக தருகிறோம் அதில் அ ம மு க விற்கு உள் ஒதுக்கீடாக நீங்கள் ஒதுக்குங்கள் என கெஞ்சினாராம். எப்படியெல்லாம் செய்திகள்!
இந்த செய்திகளையெல்லாம் படித்துவிட்டு மறுநாள் பத்திரிகைகளை பார்த்தால் சசிகலாவின் இந்த அறிக்கை. தலைவலிதான் வருகிறது. இனி பத்திரிக்கை செய்திகளை pinch of salt என்ற அடிப்பையில்தான் படிக்கவேண்டும் போலிருக்கிறது.
சரி, என்னதான் நடந்திருக்கும்? இனி நமக்கிருக்கும் சுமாரான அறிவின் அடிப்படையில் நாமே ஓரளவு கணிக்க வேண்டியதுதான்.
தமிழ்நாட்டில் கழகங்கள் ஊழலில் ஊறிப்போய் மூழ்கிப்போன கட்சிகள். ஆனால் மத்திய அளவில் பிஜேபியோ, காங்கிரஸோ இவர்கள் அளவுக்கு மோசம் இல்லை என்பதுதான் என் கருத்து. அவர்கள் (காங்கிரஸ், பிஜேபி ) ஊழலை ஆதரிக்கவில்லை. இந்திய அரசியல் நிர்பந்தம் அவர்களை இந்த விஷயத்தில் அனுசரித்து போகவைக்கிறது. இதை பற்றி எழுத ஆரம்பித்தால் அது வேறு ஒரு நீண்ட பதிவில் போய் நிற்கும்.
இந்த பதிவை எழுதும் போதே சற்று ரிலாக்ஸ்டாக உலக செய்திகளை பார்ப்போம் என பார்த்தால் ஒரு செய்தி என் கவனத்தை ஈர்த்தது. தலைப்பே வித்தியாசம். Why clean hands turn corrupt in Indonesia https://asiatimes.com/2021/03/why-clean-hands-turn-corrupt-in-indonesia/ என்று தலைப்பு. உலகம் முழுக்க இதுதான் நிலைமை. எனவே ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன என்ற காரணத்துக்காக மத்திய தலைவர்களை தவறாக நினைக்க வேண்டாம். அவர்களுக்கு பல தலைவலிகள். எனவே இதை விட்டுவிட்டு இந்த சசிகலா விஷயத்தை மட்டும் பார்ப்போம்.
இங்கே பிஜேபியை பொறுத்தவரையில் தனது கை சுத்தமாக இருப்பதாகத்தான் காட்டிக் கொள்ளும், அல்லது அப்படி நடிக்கும். அப்படி இருக்கையில் ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்று வந்தவரை ஆதரிப்பதாக காட்டிக்கொள்ளுமா? அது வேறு ஒரு கட்சியின் தலைவலியாக இருந்தாலும், அவர்களுடன் கூட்டணி இருக்கையில் அப்படி ஒரு பிம்பத்தை உருவாக்க ஒருபோதும் விரும்பாது.
இது எதிர்கட்சிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துவிடும். தேர்தல் பிரச்சாரங்களில் இது அதிமுகவிற்கு,பிஜேபிக்கு பெரும் தலைவலியாக உருவாகியிருக்கும். தண்டனை பெற்றவர் 5 ஆண்டுகளில் மக்களால் மன்னிக்கப்பட்டு அல்லது மறக்கப்பட்ட நபராக இருந்தாலும் பரவாயில்லை. இப்படி சுடச்சுடவா அவரை முன்னிலைப்படுத்தும். அதற்கான வாய்ப்பே இல்லை. ஆனால் பிஜேபி அப்படி செய்வதாக ஒரு பிம்பத்தை பத்திரிகையாளர்கள் உருவாக்கியிருந்தார்கள். அல்லது ஏதோ ஒரு காரணத்துக்காக பிஜேபி இப்படி ஒரு செய்திகளை உலவ விட்டிருக்க வேண்டும். அதை இவர்களும் நம்பி மக்களையும் முட்டாளாக்கியிருக்கிறார்கள்.
இங்கே எடப்பாடியார் சொன்ன ஒரு விஷயம் உண்மையாக இருக்கக்கூடும். `டோன்ட் இன்குளுட் தட் லேடி இன் யுவர் பார்ட்டி` என பிரதமர் சொன்னதாக எடப்பாடி சொல்லியிருந்தார். அதுதான் உண்மை.
அப்படியென்றால் அவர் சிறையில் இருக்கும்போதே அவரை மிரட்டி அமைதியாக வெளியே அனுப்பியிருக்கலாமே? பிஜேபிக்கு பல மாநில தலைவலிகள். அமித்ஷாவிற்கு கிடைப்பதெல்லாம் இவர் சொன்ன தகவல்கள் அவர் சொன்ன தகவல்கள் என `சொல்லப்படும்` தகவல்கள் மற்றும் உளவுத்துறைகள் கொடுப்பவை போன்றவை. இவற்றை முழுவதும் நம்பமுடியாது.
சசிகலாவின் பலம் என்ன என்பதை தெரிந்து கொள்ள பிஜேபி காத்திருந்திருக்கலாம். எத்தனை எம் எல் ஏக்கள்/ மந்திரிகள் அவர் பக்கம் திரும்புகிறார்கள் என்பதை உறுதியாக தெரிந்து கொள்ள இந்த காலஅவகாசம் அவர்களுக்கு தேவைப்பட்டிருக்கும்.
இந்தியாவில் ஒரு அதிகாரமையம் உருவாகிவிட்டால், எல்லோரும் அதைத்தான் சுற்றுவார்கள் என்பது எடப்பாடி விஷயத்தில் உறுதியாகிவிட்டது. எனவே இனி சசிகலா தனியாக களம் கண்டால் அது ஓட்டுக்களை பிரித்து அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்பதால், அடிக்கவேண்டிய ஆணியை அடித்து பிஜேபி சசிகலாவை அமைதியாக்கிவிட்டது. இதுதான் நடந்திருக்க்கூடும்.
இங்கே இன்னொரு காமெடியும் நடந்தது. ஒரு பத்திரிகை சசிகலாவின் துறவறத்தை பற்றி நாங்கள் முன்கூட்டியே சொன்னோம் என்று சொல்லியது. எனக்கு இங்கே ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. நான் லாட்டரி வியாபாரம் செய்தபோது ஒரு வாடிக்கையாளர் வருவார். பாதி நாட்கள் லாட்டரி கடைகளில்தான் இருப்பார். அவர் கொஞ்சம் டிக்கட் வாங்குவார். மற்றவர்களிடமும் `இந்த நம்பர் வாங்குங்க` பரிசு விழும்` என்று சொல்வார். தினம் 10 பேருக்கு இப்படி ஜோசியம் சொல்வார்.
நீங்கள் ஏதாவது ஒரு மரத்தின் கீழ் நின்றுகொண்டு 10 கல்களை விட்டெறியுங்கள் ஏதாவது ஒன்றில் மாங்காய் விழுந்துவிடும். இது திறமையல்ல, தியரி. அதுபோல்தான் இந்த நபரின் ஆலோசனையும். இவர் வாங்குங்கள் என்று சொன்ன 10 நபர்களில் யாரவது ஒருவருக்கு மறுநாள் பரிசு விழுந்துவிடும். அவர் ஆச்சர்யப்படுவார். `அவர் கரெக்ட்டா சொன்னாருங்க` என சொல்லி அவருக்கு ஒரு டீயும் ஒரு செட் டிக்கெட்டும் வாங்கி கொடுத்துவிடுவார். இந்த வகையிலும் அவர் தினம் நாட்களை ஒட்டிக்கொண்டிருந்தார்.
பத்திரிகைகளும் அப்படிதான் இருக்கின்றன. இந்த வாரம் இந்த செய்தியை போடுவார்கள். அடுத்த வாரம் செய்தியை வேறுமாதிரியாக போடுவார்கள் இப்படி 10 வாரங்களில் பலவிதமான செய்திகளை வெளியிட்டால் அதில் ஏதாவது ஓன்று பலிக்கத்தான் போகிறது. உடனே நாங்கள் அன்றே சொன்னோம் என்று ஒரு பில்டப். எப்படியோ எல்லோரும் வாழ்க்கை ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.
0 comments:
Post a Comment