சமீபத்தில் இரண்டு விஷயங்களை கவனிக்க நேர்ந்தது. ஓன்று, பதிவர் ஜோதிஜி அரசு ஊழியருக்கு (ஆசிரியர்) ஆதரவு தரும் தொனியில் ஒரு பதிவு எழுதினார். மற்றொன்று விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் கோபிநாத் இதே போன்று அவர்களுக்கு தரும் சம்பளத்தை நியாயப்படுத்தும் விதத்தில் பேசினார்.
இவர்களின் இந்த கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என்பது ஒருபக்கம் இருந்தாலும் இவர்கள் ஏன் இப்படி பேசுகிறார்கள் என்று ஆராய்ந்தால் அனேகமாக ஒரே பதில்தான் வரும். அதாவது இவர்களின் பெற்றோர்கள் அரசு ஊழியராக இருந்திருக்கக்கூடும். எனவே இவர்கள் கர்ணனாக இருக்கிறார்கள்.
ஜெயலலிதாவுக்கு அதிமுகவினரும் கலைஞருக்கு திமுகவினருக்கு கோவில் கட்டுவார்கள், காரணம் மக்களுக்கு அவர்கள் சேவை செய்தார்கள் என்பதால் அல்ல, ஏதோ அவர்களால் நாங்கள் வளம் பெற்றோம் என்பதுதான் காரணம். இது ஒரு உளவியல் சிக்கல்.
ஆனால் நிஜம் என்ன? அவர்களுக்கு அளவுக்கு மீறிய சம்பளம் கொடுக்கப்படுகிறது என்பதுதான் உண்மை. இது ஏன் நடந்தது, எப்படி நடந்தது?
இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. அந்த சிக்கலை புரிந்துகொள்ள வாங்க இனி சில எதார்த்தமான சம்பவங்களை பார்ப்போம்.
தனிக்குடித்தனம்
கடலூரில் நான் கடை வைத்திருந்த இடம் பாடலீஸ்வரர் கோவில் தெருவில். இங்கே எனக்கு நான்கு விதமான சிக்கல்கள் இருந்தன. முதல் தலைவலி பிச்சைக்காரர்கள். 15 நிமிடங்களுக்கு ஒரு முறை இவர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். ஆரம்பத்தில் புண்ணியம் தேடுவோம் என ஆரம்பித்தாலும் போக போக சலிப்பு தட்டிவிடும். இந்த தலைவலி எனக்கும் வந்தது. எனவே மூடுக்கு தகுந்தபடி போடுவேன், பல சமயம் துரத்திவிடுவேன்.
இரண்டாவது, ஆடிமாச தலைவலி அல்லது இந்த போலி பக்திமான்களின் தலைவலி. ஆடிமாசம் வந்துவிட்டால் கையில் ஒரு நோட்டீஸோடு வந்துவிடுவார்கள். ஒவ்வொரு தெருவுக்கு ஒரு கோவில் என கடவுளையே தனிக்குடித்தனம் வைத்துவிடுவார்கள். இங்கே பாடலீஸ்வரர் இருக்கிறார், இது புராதனமான பெரிய கோவில், இங்கே போய் வந்தால் நிஜமான கோவிலுக்கு போன உணர்வு வரும்.
ஆனால் இவர்களுக்கு தனியாக கோவில் தேவை. ஒருவேளை கடவுளை இவர்கள் வேறு பெயர் கொண்டு கூப்பிட விரும்பலாம். சரி இது அவர்கள் உரிமை என்றே வைத்துக்கொள்வோம், அதற்கு அவர்கள் தெருவிலேயே வசூலை வைத்துக்கொள்ள வேண்டியதுதானே? வெளிஊருக்கெல்லாம் போய் வசூல் செய்வார்கள். காரணம் அடுத்தவர்கள் பணத்தில் நான் அதை செய்தேன் இதை செய்தேன் என பெருமை கிடைக்கும்.
இப்படி தெருவுக்கு ஒரு கோவில் என எத்தனை தெருக்கள் ஒரு நகரில் இருக்கும். எல்லோருக்கும் பணம் கொடுக்கவா முடியும்? மறுத்தால் `கோவிலுக்கு இல்லைன்னு சொல்லாதீங்க அதுல புண்ணியம் கிடைக்கும்` என்று இப்படி இந்த வசூலில் போனால் நமக்கு டீ கிடைக்கும் என கூட வரும் சில அல்லக்கைகள் வசனம் பேசும்.
அப்போதே நான் நினைத்தேன். மனிதர்களுக்கு குடும்ப கட்டுப்பாடைபோல் கடவுளுக்கும் வைக்கவேண்டும் என்று. அதாவது ஒரு ஊருக்கு ஒரு போலீஸ் ஸ்டேஷன் என்பதுபோல், குறிப்பிட்ட ஏரியாவிற்கு ஓன்று அல்லது சில கோவில்கள்தான் இருக்கவேண்டும் என சட்டம் கொண்டு வரவேண்டும் என்று.
இந்த தலைவலி இந்த பதிவின் கிளை செய்திதான். இனி முக்கியமான செய்திக்கு வருவோம். இங்கே இன்னும் இரண்டு தலைவலிகள் இருந்தன. ஓன்று அரசியல் கட்சிகள், இன்னொன்று ஆதரவற்றோருக்கு சேவை செய்யும் தொண்டு நிறுவனங்கள்.
பெரிய அரசியல் அக்கட்சிகள் நம்மிடம் (சிறுவியாபாரிகள்) வரமாட்டார்கள். ஆனாலும் அதற்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் வருவார்கள். கிட்டத்தட்ட ரவுடிகள்தான். 10 பேர் ஒன்றாக வருவார்கள் `மக்களுக்காகவே போராடுகிறோம், அதற்காகவே நன்றாக சாப்பிட்டு உடம்பை வளர்த்து வைத்திருக்கிறோம் என `காட்டிக்`கொள்வார்கள். `இல்லை` என சொல்ல முடியாது. நாளை ஏதாவது பிரச்சினை என்றால் என்ன பண்ணுவார்கள் என தெரியாது. எனவே 100-200 என் அப்போதைய சூழ்நிலைக்கு வேண்டாவெறுப்பாக தருவோம்.
சிலசமயம் அனாதை ஆசிரமம் நடத்துகிறோம் என சிலர் வருவார்கள். இவர்களிலும் மோசடி பேர்வழிகள் இருக்கலாம். ஆனால் தோற்றம், பேச்சு நம்பும்படியாகவும், தன்மையாகவும் இருக்கும். ஆனால் மேலே சொன்ன பல தலைவலிகளை பார்த்து சலித்துப்போய் இருப்போம். இவர்கள் பலவீனமானவர்கள் என்பதால் 10-20 கொடுத்து அனுப்புவோம்.
கவனிக்கவும் பலம் பொருந்தியவர்களுக்கு, மிரட்ட கூடியவர்களுக்கு அதிகம். கொடுப்பதை வாங்கிக்கொள்ளும் எளியவர்களுக்கு குறைவு. ஆனால் தேவை எல்லோருக்கும்தான். இதுதான் எதார்த்தம்.
அரசு வேலைக்கு `விலை`
அரசு ஊழியர்கள் விஷயத்திலும் இதுதான் நடந்திருக்கிறது. இந்தியாவில் ஏழ்மையும் தேவையும் எல்லா இடத்திலும் இருக்கிறது. ஆனால் இங்கே அரசு ஊழியர்கள் பலமாக இருக்கிறார்கள், ஸ்ட்ரைக் செய்து அரசை மிரட்டும் அளவுக்கு சங்கமும், பலமும் இருக்கிறது. எனவே அவர்கள் வருடா வருடம் அதை சாதித்துக்கொண்டு அவர்களுடைய சம்பளத்தை இந்த அளவுக்கு கொண்டுவந்து நிறுத்திவிட்டார்கள். பலமில்லாதவர்கள் கிடப்பதை வைத்துக் கொண்டு வறுமையில் வாடுகிறார்கள். இதுதான் தமிழ்நாட்டின் இன்றைய நிலை.
இங்கே இன்னொரு காரணமும் இருக்கிறது. பொதுவாக ஒருவன் திருடப்போனால் நகை பணம் மட்டும்தான் திருடுவானா, மொபைல் போனோ அல்லது வேறு விலை உயர்ந்த பொருள் இருந்தால் அதையும்தானே திருடுவான்? அந்த எதார்த்தம்தான் அரசு நிர்வாகத்திலும் நடக்கிறது.
அமைச்சர்கள் திட்டங்களில் கமிஷன் அடிப்பார்கள். மேலும் பல ல ல ல இடங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் அரசு வேலைக்கு `விலை` நிர்ணயம் செய்வது. அரசு சம்பளம் என்பது சந்தையின் டிமாண்ட் அன்ட் சப்ளை என்ற அடிப்படையில் இருந்தால் அவர்களுக்கு ஒன்றும் தேறாது. அது valuable ஆக இருந்தால்தான் அதற்கு premium அதிகமாக கிடைக்கும்.
அதாவது 20000 சம்பளம் என்றால் வேலை உத்திரவாதம் என்ற அடிப்படையில் பலர் விரும்பினாலும், அதற்கு அதிக விலை நிர்ணயம் செய்ய முடியாது. என்னிடம் ஒருவர் (15 வருடம் முன்பு) பேசினார். அரசு வேலைக்கு 3-5 லட்சம் கேட்கிறார்கள். ஒரு வருஷம் சம்பளம் நமக்கில்லைன்னு நினைச்சுக்க வேண்டியதுதான். அதற்குபின் நாம் நிம்மதியாய் இருக்கலாம் என்பது அவருடைய பிளான்.
இதற்கத்தான் இவர்கள் சம்பளத்தை உயர்த்தி இருக்கிறர்கள் என்று சொல்லமுடியாது. ஆனால் நிர்வாக கோளாறில் இப்படி தனியார் துறைக்கும் அரசு துறைக்கும் சம்பளம் வித்தியாசமாக இருக்கிறது என்பதையும், வறுமையில் மக்கள் இருக்க, அரசு நிதி இப்படி அநியாயமாக போகிறது என்பதை கவனித்து அவர்கள் அதை சரி செய்யவேண்டும். ஆனால் செய்யமாட்டார்கள். இது அவர்களின் வருமானத்தை குறைத்துவிடும்.
தற்போது பல கட்டுப்பாடுகள் வந்துகொண்டிருக்கலாம். ஆனால் இன்னமும் அரசு வேலை என்பது மக்களின் கனவாக இருக்கிறது என்றால் அது ஒரு அமுதசுரபியாக இருக்கிறது என்பதுதான் உண்மை.
சந்தைக்கு போகலாமா
அப்படியே நாம் இன்னொரு லாஜிக்கையும் பார்த்துவிடுவோம். உங்களில் பலர் சந்தைக்கு காய்கறி வாங்க அடிக்கடி போவீர்கள். அதே காய்கறியை உங்கள் தெருவிலேயே ஒரு மளிகை கடைக்காரர் விற்பார். அவசரத்துக்கு நாம் அங்கே சிலவற்றை வாங்கலாம். ஆனால் பெரும்பாலோனோர் என்ன செய்வார்கள்? சந்தைக்குத்தான் போவார்கள். அங்கே காய்கறிகள் சற்றே விலைகுறைவாக கிடைக்கும்.
அங்கே விலை குறைவாக இருக்கிறது என்பதால் அவற்றின் தரம் குறைவாக இருக்கும் என நினைக்கமுடியாது. இரண்டு வியாபாரிகளுமே தமிழர்தான். அங்கே விற்பவர் நஷ்டத்துக்கு விற்கவில்லை. அவரும் நன்றாக சம்பாதித்துக்கொண்டுதான் இருக்கிறார். இந்த எதார்த்தம் அரசு ஊழியர்கள் விஷயத்தில் ஏன் பிரதிபலிப்பதில்லை?
இன்று அரசு ஊழியருக்கு கொடுக்கும் சம்பளத்தை கணிசமாக குறைத்து கொடுத்தாலும் வேலை செய்ய ஊழியர்கள் இருக்கிறார்கள். அவர்களும் தமிழர்கள்தான். வேலையும் தரமாகத்தான் இருக்கும்.
ஒருபக்கம் தங்கள் பலத்தை காட்டி மிரட்டி சாதிக்கும் அரசு சங்கங்கள் ஒருபக்கம், இப்படி நல்ல சம்பளம் இருந்தால்தான் நாம் இதை நல்ல விலைக்கு `விற்க` முடியும் என கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசியல்வாதிகள் இந்த பக்கம் என இருப்பதால்தான் இந்த நிலைமை.
இது காலத்தின் கொடுமை. வேறு என்ன சொல்வது?
0 comments:
Post a Comment