!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Tuesday, April 26, 2022

இளையராஜாவும் , மோடியும்

சமீபத்திய சர்ச்சை இளையராஜாவின் மோடி குறித்த கருத்துதான். கிட்டத்தட்ட இது பல ஆண்டுகளுக்கு முன் பாடகி சின்மயி vs டிவிட்டர் என்ற எனது பழைய பதிவை நினைவுபடுத்துகிறது. 

இங்கேயும் அதே கதைதான்.  அங்கே சொன்னதைத்தான் நான் இங்கே மறுபடியும் சொல்லப்போகிறேன். ஒருவர் ஒரு குறிப்பிட்ட துறையில் பிரபலமாக இருக்கிறார் என்றால் அவர் அந்த துறையை மிக ஆழமாக கவனிக்கிறார் என்று அர்த்தம். அதன் காரணமாகவே அவர்களால் பிற துறைகளை கவனிக்கமுடிவதில்லை, அது சாத்தியமும் இல்லை.

எனவே இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நமக்கு அனுபவமில்லாத துறை குறித்து கருத்து சொல்லும்போது கவனமாக இருக்கவேண்டும். ஆனால் சனி நாக்கில், இங்கே பேனா  வடிவில் இளையராஜாவுக்கு வந்துவிட்ட பிறகு என்ன செய்யமுடியும்?

தமிழ்நாட்டில் பெரும்பாலோனோர் சித்தரிப்பதுபோல் மோடியை ஒரு மோசமான தலைவராக நான் நினைக்கவில்லை, அதற்கு சில காரணங்கள் இருக்கிறது. அதை நான் தெளிவாக புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் அதற்கு ஒரு நீண்ட பதிவு தேவை. அந்த பதிவும் நேரமிருந்தால் வரலாம்.

அதேசமயம் அவரை அம்பேத்காருடன் ஒப்பிட்டது அநியாயத்தின் உச்சக்கட்டம். இந்த பிரச்சினை தொடர்பாக ஜாதியை குறிப்பிட்டு காங்கிரஸ் தலைவர் கே வி எஸ் இளங்கோவன் பேசிய கருத்துக்களை பார்த்தீர்களா, இப்போதே ஜாதி ஆணவம் இந்த அளவுக்கு இருக்கிறது என்றால் அம்பேத்கார் வாழ்ந்த காலங்களில் அது எந்த அளவுக்கு இருந்திருக்கும். அதையெல்லாம் மீறி வாழ்ந்து காட்டியவர் அவர். தெளிவாக சொல்லவேண்டும் என்றால் சாதித்து காட்டியவர். எனவே இந்த ஒப்பீடு பொருத்தமில்லாதது, தேவையில்லாததும் கூட.

சரி அதற்காக இளையராஜாவை திட்டி தீர்ப்பதா? 

என் கணிப்பில் இங்கே கொஞ்சம் மொள்ளமாறித்தனம் கொஞ்சம் அறியாமை தெரிகிறது.

அறியாமை என்றால் அது இளையராஜாவிடம் தெரிகிறது. அதாவது அவருக்கே தெரியாமல் அவர் ஒரு எலிப்பொறியில் சிக்கிவிட்டார். அநேகமாக அதுதான் நடந்திருக்கும்.

அதற்கு முன் வழக்கமாக என் ஸ்டைலில் சில அனுபவங்களுக்கு போவோம். 

கடலூரில் ஓட்டலில் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு ஓட்டல் சாப்பாடு எனக்கு சுமாராக பிடித்துவிட்டது. எனவே அங்கே அதிகம் சாப்பிடுவேன்.

இன்னொரு நண்பருக்கு அந்த ஓட்டல் பிடிக்காது. சுவை ஒவ்வொருவருக்கும் வேறு மாதிரி இருக்கும். அது ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது வேறு ஏதோ  ஓன்று அவரை அந்த ஓட்டலை வெறுக்கவைத்தது. ஆனால் நான் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தேன். 

இப்போது நடுவில் மூன்றாவது (அம்பயர்) நபர் ஒருவர் வந்தார். அவரும் ஒரு நாள் அந்த ஓட்டலில் சாப்பிட்டுவிட்டார். இப்போது அவருடைய கருத்துதான் தீர்ப்பை நிர்ணயிக்கபோகிறது. எனவே அவரிடம் நம் நண்பர் கேள்வி கேட்டார்.

இங்கே நீங்கள் நன்கு கவனிக்கவேண்டும். மனிதர்கள் பல இடங்களில் அவர்கள் கேள்வி கேட்கும் முறையில் எதிரியை குழப்புவார்கள் அல்லது அவர்களுடைய கருத்தை திணிப்பார்கள். அதுதான் இங்கேயும் நடந்தது.

இங்கே கேள்விகள் எப்படி இருக்கவேண்டும்? கடலூரில் எந்த ஓட்டல் சாப்பாடு நன்றாக இருக்கும் என கேட்கலாம். அல்லது அந்த ஓட்டலை குறிப்பிட்டு அங்கே  நீங்கள் சாப்பிட்டிருக்கிறீர்களா? சாப்பாடு எப்படி என கேட்கலாம். ஆனால் இவர் கேள்வி கேட்டவிதமே வேறு.

அந்த ஓட்டலை குறிப்பிட்டு, `அந்த ஓட்டலில் சாப்பாடு ரொம்ப மோசம்னு எல்லோரும் சொல்றாங்க, நீங்க என்ன நினைக்கறீங்க? என குண்டை தூக்கி போட்டுவிட்டார்.  எனக்கு இப்போது பதில் தெரிந்துவிட்டது.

வடிவேலு ஒரு படத்தில் சொல்வார், `எவன் பொண்டாட்டி பத்தினியோ அவன் கண்ணுக்குத்தான் கடவுள் தெரிவார்` என்று. இப்போது உங்களுக்கு தெரியவில்லை என்று சொன்னால் உங்கள் பெண்டாட்டி கதை நாறும். எனவே `தெரிகிறது` என சொல்லி தப்பிக்க வேண்டியதுதான்.

அதேதான் இங்கேயும் நடந்தது. என்னது, எல்லோரும் இந்த ஓட்டல் மோசம்னு சொல்றாங்களா, இப்ப நாம என்ன சொல்வது  என யோசித்த அந்த முன்றாவது நபர், `ஆமாங்க நான் கூட அன்னிக்கி சாப்பிடும்போது கவனிச்சேன்.ஏதோ லைட்டா டிஃபரென்ட் தெரிந்தது` என்று சொல்லி கேள்வி கேட்டவரை திருப்திப்படுத்தினார்.

இதுதான் இங்கே நடந்திருக்கிறது. எங்கே அதிகாரமய்யம் இருக்கிறதோ அவர்களுக்கு ஜால்ரா அடித்து அவர்களின் கவனத்தை பெறுவதற்கும் காரியங்களை சாதித்துக் கொள்வதற்கும் ஒரு கூட்டம் எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கும். இவர்கள் ஜால்ரா அடிப்பது போதாது என்று துணைக்கு நாலுபேரை கூப்பிடுவார்கள். அப்படிப்பட்ட அடிமட்ட பிஜேபி மொள்ளமாரிகளால் நடந்த கூத்துதான் இது.

இப்படி அவர்கள் இளையராஜாவை கூப்பிட்டிருக்க வேண்டும். அவர் மறுத்திருக்கலாம். ஆனால் பிரதமர் குறித்த புத்தகம் எனும்போது மறுப்பதற்கு தயக்கம் வரும். ஆக ஏதோ சிந்தனையில் தலையாட்டிவிட்டார்.

எனக்கு இங்கே இன்னொரு சந்தேகம். இதற்கு முன் இளையராஜா ஏதாவது புத்தகம் அல்லது முன்னுரை எழுதியிருக்கிறாரா? அந்த அனுபவம் இல்லாதவர்களுக்கு இப்படி முன்னுரை எழுதுவது சிரமம்.

சில பேச தெரியாத பேச்சாளர்களுக்கு பேச்சு எழுதித் தரப்படும். அவர்களும் அதை வைத்து சமாளிப்பார்கள். அதேபோல் இவரும் எப்படி எழுதுவது என தெரியாமல், தன்னுடைய உதவியாளர் அல்லது வேறு யாரிடமாவது கேட்க, அவர்கள் அவர்களுக்கு தெரிந்த அறிவாளிகளிடம் கேட்க, அந்த அறிவாளி  இந்த புத்தகம் மோடி மற்றும் அம்பேத்கார் குறித்து என்பதால் மோடி + அம்பேத்கார் =முத்தலாக் என எதையோ கிறுக்கி கொடுத்திருக்கவேண்டும்.

இளையராஜாவும் ஓஹோ இப்படிதான் முன்னுரை எழுதுவார்களோ என நினைத்து கையெழுத்து போட்டிருக்கக்கூடும். இப்போது பிரச்சினை என வந்தபிறகு `மாப்பிளை இவர்தான் ஆனா இவர் போட்டிருக்கிற சட்டை என்னுடையது` என்று சொன்னதுபோல், கையெழுத்து என்னுடையதுதான், ஆனால் இப்படி எழுதி கெடுத்தது வேறு ஆள் என்றா சொல்லமுடியும்?  அது இதைவிட அசிங்கமாக இருக்கும். இப்போது ஒரு தவறு நடந்துவிட்டது இனி பின்வாங்கினால் அசிங்கம் என அவர் உறுதியாக இருக்கிறார்.  

மேலே சொன்ன விளக்கங்கள் என் அனுமானம். அதாவது ஒரு குத்துமதிப்பாக சொல்கிறேன். அவரே இதை எழுதியிருக்க வாய்ப்பு குறைவுதான்.

ஆனால் இந்த மோடி எதிர்ப்பாளர்களின்  பேட்டிகள் அபத்தத்தின் உச்சக்கட்டம். ஏதோ இந்தியா உக்ரைனிலிருந்து  ஒரு ஆபரேஷன் என பெயர் வைத்து மூன்று மத்திய அமைச்சர்களையும் களத்தில் இறக்கி செயல்பட்டதுபோல், இளையராஜாவிடம் முன்னுரை வாங்கவேண்டும் என்பதற்காக GST நோட்டீஸ், ரெய்டு என பிளான் பண்ணி இந்த ப்ரொஜெக்டை வெற்றிகரமாக முடித்தார்கள் என கதை விடுவதை என்னவென்று சொல்வது.

இதுபோன்ற காரியங்களை பிஜேபி /காங்கிரஸ் போன்ற கட்சிகள் செய்யும். அது தேர்தல் நேரங்களில் கூட்டணிக்கு இழுக்க அல்லது பாராளுமன்றத்தில் முக்கியமான ஓட்டெடுப்புகளில் தேவைப்படும்போது இவை நடக்கும். ஆனால் ஒரு புத்தகத்தின் முன்னுரைக்காகவா?

அடுத்தமுறை இளையராஜா கச்சேரிக்கு போனால் கண்ணை மூடிக்கொண்டு காதுகளை மட்டும் திறந்துவையுங்கள். அது பேரின்பம். ஆனால் அவர் அங்கேயும் அரசியல் பேச ஆரம்பித்தால், அங்கே காதுகளையும் மூடிக்கொள்ளுங்கள்.

0 comments:

Post a Comment