!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Tuesday, April 12, 2022

நல்ல மனிதர்கள்


இப்போது ஏதாவது ஒரு செய்தியை கவனித்துவிட்டால், அது நம்மை உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டால், உடனடியாக அதை ஷேர் செய்து பரபரப்பாக்கிவிடுகிறோம். அதாவது இங்கே செய்திகள் நல்லெண்ணத்தை பரப்புகின்றன. ஆனால் அதில் லாஜிக் இருக்கிறதா என்றெல்லாம் யாரும் கவனிப்பதில்லை.

இது சமீபத்திய செய்தி. மணிப்பூரில் 10 வயது சிறுமி தன்னுடைய 1 வயது தங்கையை மடியில் வைத்து கொண்டு பள்ளியில் பாடம் படிக்கிறாளாம்.  பெற்றோர் கூலிகளாம். வேலைக்கு போகும்போது குழந்தையை எடுத்து செல்ல முடியவில்லையாம்! எனவே இந்த சிறுமி குழந்தையோடு பள்ளிக்கூடம் வருகிறாராம்.

என்ன கொடுமை இது. ஒரு தாய் எப்பேர்ப்பட்ட அரைவேக்காடாக இருந்தாலும் இப்படி செய்யமாட்டார். இங்கே காரணம் வேறு ஏதாவது ஒன்றாக இருந்திருக்கும். ஏற்றுக்கொள்ளும் வகையில் இங்கே காரணமும் எதுவும் சொல்லப்படவில்லை.

பொதுவாக குழந்தைகள் அம்மா செய்வதை காப்பி அடிக்கும். இந்த காப்பி அடிக்கும் பழக்கம் சில சமயம் `பாப்பாவை நானே பார்த்துக்கொள்கிறேன்` என அடம்பிடிக்கும் அளவுக்கு போகும். அந்த காலத்தில் மரப்பாச்சி பொம்மையை வாங்கி கொடுத்து `இது உன் பாப்பா, அது அம்மா பாப்பா` என சமாளிப்பார்கள். அதுபோல் இந்த சிறுமியும் ஏதாவது அடம் பிடித்திருக்கும். சமாளிப்பதற்கு இப்படி ஒரு நாள் கூத்தை அரங்கேற்றியிருப்பார்கள். 

10 வயது சிறுமி பள்ளிக்கூடத்திற்கு குழந்தையை அழைத்து போக முடியுமா, பால் கொடுக்க என்ன செய்யும், கக்கா போனால் என்ன செய்யும், அல்லது பள்ளி நிர்வாகம்தான் இந்த அபாயத்தை அனுமதிக்குமா என்ற கேள்விக்கு  பதில் இல்லை. ஆனால் புகைப்படம் மனதை தொட்டுவிட்டதால்  லாஜிக் எல்லாம் பார்க்காமல் எல்லோரும் எமோஷனல் ஏகாம்பரமாக மாறி இந்த செய்தியை பரபரப்பாக்கிவிட்டார்கள்.

காட்சி 2

இது ஒரு CCTV காட்சி. அதாவது மனித நேயம் உள்ளவர்களை பற்றிய ஒரு வீடியோ. 

ஒரு வாழைப்பழ வியாபாரி தள்ளுவண்டியில் வியாபாரம் செய்கிறார். அந்த இடத்தில் பிச்சை எடுக்கும் அல்லது கூலி வேலை செய்யும் ஒரு பெண், குழந்தையோடு நிற்கிறார்.

குழந்தை வாழைப்பழம் கேட்டு அழுகிறது. அந்த பெண்ணிடம் காசில்லை. வாழைப்பழ கடைக்காரர் கொடுக்க மறுக்கிறார். அழும் குழந்தையை கட்டுப்படுத்த முடியாமல், அந்த குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு பணத்திற்கு வேறு வழி தேடி ஓடுகிறார். அந்த குழந்தை தனியாக அழுதுகொண்டிருக்கிறது. அப்போதும் அந்த வியாபாரிக்கு மனம் இரங்கவில்லை.

அப்போது அந்த வழியாக ஒரு வயதான பாட்டி வருகிறார். குழந்தை தனியாக அழுவதை பார்த்து, என்ன என்று கேட்க, அந்த குழந்தை வாழைப்பழத்தை கை காட்டுகிறது. அவர் தன் பணத்தில் அந்த குழந்தைக்கு பழம் வாங்கித்தருகிறார். இதற்கிடையில் அந்த அம்மாவும் வந்துவிட, குழந்தை அம்மாவிடம் போய்விடுகிறது. கதை சுபமாக முடிந்தது. இங்கே அந்த வயதான பெண் கடவுளுக்கு சமமாக உயர்ந்து நிற்கிறார். அந்த வியாபாரி வில்லனாகிவிட்டார்.

ஆனால் நிஜம் என்பது எப்போதும் வேறுவிதமாக இருக்கும். இதே தள்ளுவண்டியை அந்த பாட்டியிடம் கொடுத்து 6 மாதம் வியாபாரம் செய்ய சொல்லுங்கள். இப்போது கதை வேறு மாதிரி இருக்கும். பெண் என்பதால் இரக்க குணம் ஆணை விட பெண்களுக்கு அதிகமாக இருக்கலாம், ஆனாலும் அவரும் அந்த வியாபாரியை போல் நடந்து கொள்ளும் வாய்ப்புதான் அதிகம்.

காரணம், இந்தியா ஏழை நாடு. இங்கே நீங்கள் வியாபாரத்துக்காக ரோட்டில் இறங்கிவிட்டால் தினம் நூறு பிச்சைக்காரர்களை பார்க்க வேண்டும். ஆரம்பத்தில் மனித நேயம் எல்லோருக்கும் பொங்கும். பின்னர் அது மரத்துவிடும். இதுதான் எதார்த்தம்.

ஹீரோக்களை கொண்டாடுவோம்,அதேசமயம் மற்றவர்களை எல்லாம் வில்லனாகவும் சித்தரிக்க வேண்டாம்.  

காட்சி 3

இதுவும் குழந்தைகள் சம்பந்தமாக ஒரு `காட்டப்பட்ட` காட்சி. அதாவது விஷுவலாக நம்மை எமோஷனல் ஆக்கியிருக்கிறார்கள்.

ஒரு பெண் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்கிறார். அப்படி வியாபாரம் செய்யும்போது ஒரு இடத்தில் ஒரு மேடான இடத்தில் வண்டியை தள்ள முடியவில்லை. அப்போது அந்த வழியாக போன சில பள்ளி சிறுமியர் இதை கவனித்து அந்த வண்டியை தள்ள உதவுகிறார்கள். கவனிக்கவும், ரோட்டில் மனிதர்களே இல்லையாம். குழந்தைகளுக்குதான் தற்போது சமூக அக்கறை அதிகமாக இருக்கிறதாம். இதுதான் அந்த காட்சி சொல்லும் செய்தி

சிக்கல் இங்கே என்னவென்றால் தற்போது யூடுப் வீடியோக்கள் வருமானம் தருகிறது. சன் டிவியிலிருந்து கபில்ஷர்மா வரை (கூடுதல்) வருமானத்துக்காக வீடியோக்களை யு டியூபில் வெளியிடுகிறார்கள். 

இதனால் பலர் இப்படி செயற்கையான மனித நேயத்தை மனிதர்களை/குழந்தைகளை நடிக்க வைத்து அதை குறும்படம் என்று சொல்லாமல் வெளியிடுகிறாரகள். ஆனால் இது போன்ற வீடியோக்களில் காட்சி அமைப்பு அதை காட்டிக் கொடுத்துவிடும்.

நல்லவனாக வாழ்வது வேறு நல்லவனாக நடிப்பது வேறு. நல்லவனாக வாழ்பவனை நீங்கள் CCTV கேமராவில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அப்படிப்பட்ட மனிதர்களை நீங்கள் காண நேர்ந்தால் அதை மட்டும் ஷேர் செய்யுங்கள். நடிக்கும் மனிதர்களை நாம் தினம்தோறும் நம் வாழ்வில் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இங்கேயுமா?

 

0 comments:

Post a Comment