!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Monday, April 25, 2022

புல்லட் டிரைன்

இது சமீபத்தில் கவனித்த செய்தி. அகமதாபாத் -மும்பை இடையே புல்லட் டிரைன் இன்னும் 5-7 வருடங்களில் ஓட ஆரம்பிக்குமாம். 

இந்தியாவில் போக்குவரத்து வசதி என்பது படு மொக்கையாக இருப்பது எல்லோருக்கும் தெரியும். எனவே இதுபோன்ற திட்டங்கள் அவசியமாகவும் இருக்கலாம். ஆனால் ஏற்கனவே இருக்கும் பல்வேறு வசதிகளை சரியாக பயன்படுத்தாமல் இதுமட்டும்தான் தீர்வு என்று முன்னிறுத்தவதுதான் தவறு.

முதலில் இந்த திட்டத்தில் உள்ள ஆபத்துகளை பார்த்துவிடுவோம். இங்கே முதல் தலைவலி முதலீடுதான். இந்த திட்டத்திற்கு செலவு 1 லட்சம் கோடிக்கும் மேல் என தெரிகிறது. நாம் ஒரு முதலீடு செய்தால் அது லாபத்தை தருகிறதோ இல்லையோ, போட்ட முதலீடாவது திரும்ப எடுக்கும் அளவுக்கு இருக்க வேண்டும்.

அதாவது நீங்கள் ஒரு டிராவல் பஸ் வாங்கி விட வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள், சில மாதம் கழித்து உங்களுக்கு அது சரிப்பட்டு வரவில்லை என்றால், பஸ்ஸை `இந்தாப்பா பஸ் வாங்கி 3மாதம்தான் ஆகுது, 15 லட்சத்துக்கு வாங்கினேன், 15 ஆயிரம் குறைச்சுக்க` என யாரிடமாவது காது குத்தி பார்க்கலாம். பேரம் படியவில்லை என்றால் தடாலடியா 5 லட்சம் குறைத்தும் விற்கலாம். அது உங்கள் சாமர்த்தியம்.

இங்கே அதற்கான வாய்ப்பே இல்லை. இங்கே ஒருமுறை முதலீடு செய்துவிட்டால் அது கோவிந்தாதான். மறுபடியும் இடிக்கவேண்டும் என்றாலும் அதற்கும் செலவு. புறம்போக்கு நிலம் என்றாலும் பரவாயில்லை, இவை அத்தனையும் தற்போது ஏதோ   வகையில் பயன்பாட்டில் உள்ளவை.

அரசாங்கம் இந்த திட்டங்களை அப்படியே விட்டுவிடாது. இங்கே டிரைன் ஓடிக்கொண்டிருக்கும். மத்திய அரசு பட்ஜெட் மூலம் முக்காடு கொடுத்து, இதோ டிரைன் ஓடுகிறது பார் என `காட்டி`க்கொண்டிருக்கும். அதாவது அரசு ஏர் இந்தியாவை ஓட்டியது போல்.

இங்கே இந்த திட்டத்தை நான் சந்தேகக்கண்ணோடு பார்ப்பதற்கு வேறு சில காரணங்களும் உண்டு. முதல் காரணம் இந்த டிரைனின் உத்தேச டிக்கட் கட்டணம். அது 3000 வரை இருக்குமாம்.

தற்போது மும்பை -அகமதாபாத் பிளைட் கட்டணம் 3000-4000 என்ற அளவில்தான் இருக்கிறது. அது வரும் ஆண்டுகளில் பெரிதாக மாறப்போவதில்லை. எனவே மக்கள் எதற்கு முன்னுரிமை கொடுப்பார்கள்? இந்த கேள்விக்கு விடை இல்லை.

மற்றொன்று, இங்கே அகமதாபாத்தில் நான் அரசின் இரண்டு திட்டங்களை கவனித்தேன். ஓன்று, BRTS சேவை. இது விரைவான போக்குவரத்துக்கு வழி செய்கிறது என சொல்லப்பட்டது.ஆனால் நான் கவனித்தவரையில் இது நிலைமையை மேலும் மோசமாகியதுதான் நிஜம்.

அதாவது இங்கே இருக்கும் 6 வழி பாதையில் 2 வழிப்பாதைகள் இந்த BRTS காக, அதுவும் நடுவில் ஒதுக்கப்பட்டிருந்தது. இங்கே மற்ற வாகனங்கள் செல்ல தடை. இது நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிட்டது. இதில் ஒவ்வொரு 1- 2 கிலோமீட்டருக்கு இவர்களுக்கு பஸ் நிலையம்.

அதாவது நடு ரோட்டில் பிள்ளையார் கோவில் இருந்தால், அந்த பிள்ளையாரை தரிசிக்க மக்கள் அடிக்கடி ரோட்டில் குறுக்கே நடந்தால் எப்படி இருக்கும், அதுபோலத்தான் இந்த BRTS பஸ் ஸ்டாண்டுகள். பிள்ளையாராவது எங்கேயாவது ஒரு இடத்தில்தான் நடுரோட்டில் இருப்பார். இந்த பஸ்  ஓடும் இடமெல்லாம் இந்த தலைவலி. இந்த பஸ்ஸில் ஏறுவதற்காக மக்கள் அடிக்கடி ரோட்டை, அதாவது சிக்கனல் இல்லாத நடுரோட்டை தாண்டுவார்கள்.

ஒருபக்கம் இருக்கும் பொது வழிப்பாதையில் 33 சதவிகிதம் இவர்களுக்கு ஒதுக்கீடு, இன்னொரு பக்கம் இப்படி குறுக்கே போகும் மக்களால் மற்ற பொதுவழியை பயன்படுத்தும் வாகனங்கள் வண்டியை வேகமாக ஒட்டவும் முடியாது.

விளக்கமாக சொல்லவேண்டுமென்றால், முதல்வர் ஸ்டாலின் வேகமாக கோட்டைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக தினம் டிராபிக்கை நிறுத்தி ஆயிரக்கணக்கான மக்களை `1 மணி நேரம் லேட்டா ஆபிஸ் போங்க` என்று சொல்வதைப்போலத்தான் இருக்கிறது இந்த மொக்கை திட்டம். 

இன்னொன்று மெட்ரோ டிரைன். அதுவும் இங்கே இருக்கிறது. இருக்கிறது, அவ்வளவுதான். அங்கே டிரைன் ஓடுகிறதா, தினம் எவ்வளவு மக்கள் பயணிக்கிறார்கள், இந்த திட்டத்தின் வரவு செலவு எப்படி என்ற கேள்விக்கு பதில் தேடினால் கிடைத்த பதிலில் பிபி ஏறியதுதான் மிச்சம். இங்கே இந்த திட்டம் சில கிலோமீட்டர்கள் என்ற அளவில் ஆரம்பத்தில் இருக்கிறது, முழுமை அடைந்தபின் கூட்டம் ஏறும் என்று சொன்னாலும், எனக்கு நம்பிக்கையில்லை.

நிஜத்தில் இது மோடியின் திட்டம் என்று சொல்லி அகமதாபாத்தை தாண்டி வேறு எங்காவது சொல்லி பெருமைபட்டுக்கொள்ளலாம். அவ்வளவுதான்.

இதில் இன்னொரு மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், ஆளே இல்லாத ஊரில் டீக்கடை வைப்பதை கூட நாம் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் சரவணபவன் ஓட்டலே இருந்தால் எப்படி இருக்கும் அப்படி இருக்கிறது இந்த ஸ்டேஷன்களின் நிலைமை.

இங்கே ஒரு ஓடாத மெட்ரோ ஸ்டேஷனுக்கு எஸ்கலேட்டர் வேறு வைத்திருக்கிறார்கள். மற்ற எல்லா ஸ்டேஷன்களிலும் இருக்கலாம். நான் கவனிக்கவில்லை. நான் கவனித்த ஒரு ஸ்டேஷனில் இருந்த எஸ்கலேட்டர் தற்போது ஓடவில்லை. ம்யூஸியத்தில் இருப்பதுபோல், காட்சியாக இருக்கிறது.

இன்னும் 5-10 ஆண்டுகளில் இது சுமாராகவாவது ஓடும் என நம்பிக்கை வைத்தாலும், இப்போதே ஏன்? ஏற்கனவே கவனிப்பாரின்றி இருந்த ஒரு செல்போன் டவரையே நம் ஆட்கள் கழட்டி விற்றுவிட்டார்கள். இது போலீசில் புகாராக பதிவாகி இருக்கிறது.

இது அப்படி போகாது என்றாலும், அதற்குள் துருப்பிடித்து... என்னவென்று சொல்வது. அரசாங்கத்தின் பணம் என்றால் கலைஞர் முதல் மோடி வரை எல்லோரும் பாரி வள்ளல்தான்.

இந்தியாவின் போக்குவரத்து பிரச்சினைக்கு வேறு சில தீர்வுகளும் இருக்கின்றன, அது அடுத்த பதிவில் . 

2 comments:

KILLERGEE Devakottai said...

தங்களது அலசல் கருத்தை அருமையாக பதிவு செய்துள்ளீர்கள் நண்பரே...

ரா.சிவானந்தம் said...

கில்லர்ஜி, வருகைக்கு நன்றி.

பல அரசு திட்டங்கள் இப்படிதான், அதை விலாவரியாக பார்த்தால் இப்படி அபத்தமாகத்தான் இருக்கும்.

Post a Comment